Thursday, March 12, 2009

நீல வெயில்...


கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...

உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...

வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...

இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...

Tuesday, February 10, 2009

துண்டு கவிதைகள்...

மீன்கொத்தியின் அலகினின்று
நழுவி விட்ட மீனொன்று
வெளியில் நீந்தி
விழுந்து கொண்டிருந்தது,
இரவில்
எறும்புகளாய் உருமாறும்
எழுத்துக்கள் என்னை
இழுத்து சென்று போடும்
அதே குளத்தில்....

*************************

மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...

போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...

கழுதை காட்டிய திசையில்
ஓடிக்கொண்டிருந்தார் அய்யனார்
அரிவாள் சுத்தியல்
என ஆயுதங்கள் துரத்த...

*****************************

என் கட்டிலின் அடியில்
படுத்து கிடக்குமந்த சாதுவான
கறுப்பு பூனை
நடுச்சாமங்களில்
ஒளிரும் அதன் கண்கள்
உலுக்கியெழுப்பும் தருணங்களில்
விளக்கு பொருத்துவேன் பதறி
ஒய்யாரமாய் மதிலேறுமது
இரவை சுவைத்தபடி...

Friday, January 16, 2009

எனினும் புலரும் பொழுது....

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

Thursday, January 8, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....

Sunday, August 17, 2008

மழலை விளையாட்டு...

அழுத அக்குழந்தையிடம்
கிலுகிலுப்பை ஒன்றை
கொடுத்தேன்
அது சிரிக்க தொடங்கிய போது
வெடுக்கென பிடுங்கிக் கொண்டேன்
மீண்டும் அழுத அக்குழந்தை
கிலுகிலுப்பையை தூர எறிந்து விட்டு
என்னை எடுத்துக் கொண்டது....

மீனாய் சமைந்தவன்...

துயிலொரு பெருங்கனவான
பின்னிரவில் பற்றியெரியுமென்
குகையறைச் சுவரில் வழியும்
குமிழிரவை விழி பொருத்தி
நிலங்குளிர மழையருள
பிரார்த்தித்தேனவளை...

தடாகம் விட்டெழுந்தாள்
தவங்கலைந்த பெருந்தேவி
நதி சூழ்ந்த என் வீதி வழி
பவனி வந்தாள் யாழதிர
தன் கமல ஓடத்திலமர்ந்து...

தழலிருகும் குருதியின்
நினவாடை நுகர்ந்து
விரகம் கொடிதென முனுமுனுத்தாள்...

பெய்யென்றாள்
பெய்தமழை குகையறையுள்
குளம் வளர்த்தாள்
நீர்வெளிக்குள் மூழ்கியவள்
முகமுரசி அகங்கெடுத்தாள்...

இருளாய் இருக்கிறதென்றேன்
இருவிழியில் அகல் சுடர்ந்தாள்...

கரமொன்றை நீட்டியவள்
வாவென்றாள் வசமிழந்தேன்...

வரமென்ன வேண்டுமென்றாள்
ஒளியுதட்டில் முத்தமென்றேன்...

இதழ்கடையில் சினந்துடிக்க
பெருந்தேவி நானென்றாள்
இருந்துவிட்டுப் போயென்றேன்...

முடிவாய் சொல்லென்றாள்
முத்தம் முத்தமென்றேன்...
மீனாய் கடவ என சபித்து மறைந்துவிட்டாள்...

Wednesday, August 13, 2008

துயர நடனம்....(Dancer in the dark)


கேளடி கண்மணி படத்தில் வரும் கற்பூர பொம்மையொன்று பாடலை எப்பொழுதும் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் பாட முடிந்ததில்லை.சட்டென்று குரல் உடைந்து விடும்.இந்த படத்தையும் இனி என்னால் ஒரு போதும் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.

ரோமன் போலன்ஸ்கியின் oliver twist க்குப் பிறகு நான் பார்த்த மிகச்சிறந்த மெலோடிராமா படம் இதுதான்.கதை அமெரிக்க கிராமமொன்றில் நிகழ்கிறது.செக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த செல்மா தன் மகனது கண் அறுவை சிகிச்சைக்காகவும் அதற்க்கான பணம் திரட்ட வேண்டியும் தன் மகன் ஜீனோடு அமெரிக்காவில் குடியேறி வசிக்கிறாள்.சிறிய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறாள்.தின சம்பளத்தை சேமிக்கிறாள்.
தனது வீட்டின் உரிமையாளன் தன் மனைவியின் ஊதாரித்தனமான செலவினால் தான் கடன் காரன் ஆகிவிட்டதாகவும்,விரைவில் தன் சொத்துக்கள் பறிபோய்விடும் என்றும் கூறுகிறான்.செல்மா அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.மேலும் பரம்பரையாக தொடரும் நோயினால் தான் பார்வை இழந்து கொண்டு வருவதாகவும் விரைவில் முற்றிலும் தனக்கு பார்வை இல்லாது போய்விடுமென்றும் கூறுகிறாள்.இந்நோயிலிருந்து தன் மகனை காக்கவே தான் இரவு பகல் பாராது உழைப்பதாகக் கூறுகிறாள்.
மேலும் இதுவரை பகிர்ந்து கொள்ளப்பட்ட ரகசியங்களை வெளியே கூறுவதில்லையென இருவரும் சத்யம் செய்து கொள்கின்றனர்.செல்மா தினசரி வாழ்வில் நிகழும் இரைச்சல்களில் இசையை கண்டறிகிறாள்.கடந்து போகும் ரயிலோசை,இயந்திரங்கள் எழுப்பும் சப்தம் யாவும் இசைதான் செல்மாவுக்கு.மேலும் பகற்கனவுகளில் மூழ்கி பாடல் பாடுபவளாகவும் இருக்கிறாள்.செல்மாவுக்கு மெல்ல மெல்ல பார்வை முற்றிலுமாக போய்விடுகிறது.இக்குறைபாட்டினால் ஏற்படும் விபத்துக்கள் அவளை வேலையிலிருந்து துரத்துகிறது.தனது இறுதி நாள் சம்பளத்தோடு வரும் செல்மா தனது சேமிப்பு பெட்டியை எடுக்கிறாள்.அதில் பணம் இல்லாதது கண்டு தனது வீட்டின் உரிமையாளரும் நண்பருமான பில் ஐ தேடிப்போகிறாள்.
பில் குற்ற உணர்வோடு அமர்ந்திருக்கிறான்.செல்மா தன் பணத்தை தந்து விடுமாறு வேண்டுகிறாள்.பில் பிறகு தருவதாகக் கூறுகிறான்.தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று பணம் தர வேண்டும்.இனியும் தாமதிக்க முடியாது எனக் கூறுகிறாள்.பில் துப்பாக்கி முனையில் அவளை மிரட்டுகிறான்.எதிர்பாராத விதமாக பில் காயமுறுகிறான்.மேலும் பார்க்க முடியாத செல்மாவிடம்.தன்னை முழுவதுமாக கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச் செல்லும் படி கூறுகிறான்.வேறு வழி இல்லாது செல்மா அவனது விருப்பத்தின் பேரில் அவனைக் கொல்கிறாள்.பிறகு பணத்தை தன் மகனுக்கான அறுவை சிகிச்சை தொகையாக மருத்துவமனையில் கட்டுகிறாள்.வழக்கு நீதி மன்றம் வருகிறது.ஏன் கொலை செய்தாய் என்ற கேள்விக்கு அதை கூற முடியாது.சத்யம் செய்து கொண்டுள்ளோம் என அவள் கூறும் பதில் அவளுக்கு மரண தண்டனை வழங்குகிறது.மரண தண்டனை விதிக்கப் படும் நேரத்திலும் பகற்கனவு கானும் அவளது கள்ளமற்ற பாத்திரம் நம்மை தீராத ஒரு கழிவிரக்கத்திற்குள் தள்ளுகிறது.
படத்தில் இடம் பெறும் பாடல்கள் கனவு காட்சிகள் கதையை ஒட்டி அமைக்கப் பட்டுள்ளன.கனவுகள் தரும் ஆசுவாசமும் அது முடியும் வேலையில் ஏற்படும் நிகழ் குறித்த துக்கமும் ஒருங்கே நம்மை சாய்க்கிறது.
செல்மாவாக நடித்திருக்கும் Bjork நடித்திருக்கிறாரா அல்லது அவரது இயல்பே அது தானா என்பது போல் இருக்கிறது.சிறிய கண் அசைவில் அலட்டிக் கொள்ளாது கண்களில் நீர் வர வைக்கிறார்.2000-ல் வெளியாகி ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் Lors von Trier என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.இறுதி காட்சிகள் நம்மை நிசப்தத்திற்குள் வீசியெறிந்து விடுகின்றன.மறக்கவியல்லாத படம்.