Monday, August 29, 2016

அது முகப்புத்தகம் இல்லாத காலம்...


கரைந்து கொண்டிருந்த சிகரெட் கங்கு விரல்களை சுட்டதும் திடுக்கென நினைவு வந்தவனாக மணியை பார்த்தான்.இன்னும் நாழியிருந்தது.ராவெல்லாம் உறங்காமல் கிடந்தது கண்களை எரித்தது.மலையை குடைந்து சாலை அமைக்கும் பணி என்பதால் எந்த வாரம் எங்கே இருப்போம் என்றே சொல்ல முடியாது.மாதத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ தான் பஜார் போக முடியும்.அதிலும் பத்து பனிரெண்டு பேருக்கு மட்டுமே கம்பெணி வண்டியில் இடம் இருக்குமென்பதால் சக பாடிகள் மாதா மாதம் முறை வைத்து போய் கொள்வது தான்.
அமுதாவிடம் பேசி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.இறுதியாக சோஹார் கேம்பில் இருந்த பொழுது மாமனார் தவறிய செய்தி வந்தது.அப்பொழுது பேசியது தான்.தொடர்ந்து இடம் மாறுவதால் ஊரிலிருந்து வரும் கடிதங்களும் தலைமை அலுவலகத்திலேயே தங்கிவிடும்..யாராவது கேம்பிற்கு வரும் பொழுது மொத்தமாக எடுத்து வருவார்கள்.காலண்டரை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.நாளுங்கிழமை எல்லாம் ஒன்றுமில்லை.டீச்சர் வீட்டில் மட்டும் கோவிலுக்கோ வெளியூருக்கோ எங்கும் போயிருக்க கூடாது என மனம் வேண்டி கொண்டது.வெள்ளி கிழமை என்பதால் அமுதா வீட்டில் தான் இருப்பாள்.சுந்தர் உடண் இருந்தால் பேசலாம்.பள்ளிக்கு போயிருப்பான்.இந்த வருசம் தான் பால்வாடியில் போட்டது.
ஊருக்கு போய் விட்டு வந்த தனபால் தான் தலைமை அலுவலகத்திலேயே தேங்கி கிடந்த ஆறு மாத கடிதங்களையும் கொண்டு வந்தான்.ஒரு கவரில் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவும் இருந்தது.கணேசனுடைய டேப் ரிக்கார்டரில் ஓட விட்டு கேட்டு கொண்டிருந்தான்.அமுதாவின் குரல் அப்படி கம்மி கிடந்தது..அமைந்து அமைந்து பேசினாள்..இடையிடையே டீச்சர் அவரது பிள்ளைகளை விரட்டும் குரல்..வாசலில் கூவி கொண்டிருந்த பெல்லாரி வெங்காயம் என கலவையாக சத்தங்கள் ஒலித்து கொண்டிருந்தது.
கடந்த முறை ஊருக்கு செல்லும் பொழுது ரத்தச்சிவப்பில் பானாசோனிக்கில் ஒரு டேப்ரிக்கார்ட் வாங்கி சென்றான் தான்.ஊரிலிருந்து பார்க்க வந்த தங்கை ஆசையாக கேட்டதால் அப்படியே தூக்கி கொடுத்து விட்டான்.இல்லாவிட்டாலும் வெளி நாட்டு சாமான்களை வாங்கி விற்கும் இந்த தரகர்கள் விடுவதில்லை.கழுகுக்கு வேர்த்தது போல் வீட்டிற்குள் நுழையும் முன்பே வந்து நின்று விடுவான்கள்..செண்டிலிருந்து லங்கோடு வரை எதையும் உறுவி கொண்டு தான் மறுவேளை.
டிரைவர் சரியாக 11.00 மணிக்கு ரூவி பேரூந்து நிலையத்திற்கு அனைவரும் திரும்பி விட வேண்டும் என சொல்லி இறக்கி விட்டான்.இவன் வேகு வேகென்று நடந்து ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான்.பிரிண்ட் போடும்படி சொல்லிவிட்டு தஞ்சாவூர் இட்லிக்கடையருகே உள்ள தொலைபேசி நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினான்..வெள்ளிக்கிழமையாதலால் கூட்ட வரிசை கணிசமாக இருக்கும் என்று நினைத்தான்.நல்லவேளை தொழுகை நேரம் என்பதால் 10 பேர் தான் நின்றார்கள்.நைனா இவனுக்கு கை காட்டியபடியே வரிசையில் நிற்பவருக்கு கால் போட்டு கொடுத்து கொண்டிருந்தார்.
டீச்சர் வீட்டுக்கு தொலைபேசி வந்தது எவ்வளவு சௌகரியமாக போய்விட்டது.இல்லையென்றால் நல்லது கெட்டது எதுவென்றாலும் காகிதம் தான்.அம்புரோஸ் இங்கு மாரடைப்பில் செத்த போது தாக்கல் சொல்ல கூட அவர் ஊரில் யாரிடமும் தொலைபேசி இல்லை.தந்தி தந்து அதை அவர்கள் பெறுவதற்குள் இங்கே காரியமே முடிந்து விட்டது.பிணத்தை பெற உறவுகளிடமிருந்து ஒரு வார காலம் விண்ணப்பம் வராததால்இ்ங்கேயே காரியம் முடிக்க வேண்டியதாகி விட்டது.
இந்த சபர் கூத்து எல்லாம் தெரிந்தும் எம பயலுக்கு இப்படியும் புத்தி வேலை செய்யுமா.யோசிக்க யோசிக்க சுர்ரென்று ரத்தம் மண்டைக்கு ஏறியது.இன்னொருக்கா கண்டா சங்க கடிச்சி துப்பனும் தாயோலி என தன்னிச்சையாக வாய் முனுமுனுத்தது.போன வருசம் வேலை முடிந்து ஓய்வெடுத்த ஒரு ராத்திரியில் சேக்காளிகளுடன் வழமை போல் சீட்டாடும் பொழுது மணியன் தான் ஆரம்பித்தான்.எப்பொழுதும் ஏவிடியம் பேசும் வாய் துடுக்கு தான்.இருந்தாலும் அன்று கொஞ்சம் திரவம் அதிகம் போன தண்டம்.போகிற போக்கில் இங்க நமக்கு சிவராத்திரி ஊருல இருக்குறவளுவோளுக்கு யார் கூட ...திரியோ..என அவன் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் அருகில் அமர்ந்திருந்த இவனுக்கு சல்ல கடுப்பாகி சலுப்பென அறைந்து விட்டான்.கட்டி புரண்டு சேக்காளிகள் விலக்கி விட்டார்கள்.விடிந்ததும் கை நீட்டியதற்காக மாப்பு கேட்டான் தான்.எனினும் வன்மம் தீரவில்லை அவனுக்கு.பார்க்கும் பொழுதெல்லாம் கருவி கிடந்தான்.
முதல் கடிதத்தை வாசிக்க தொடங்கும் பொழுதே புரிந்து விட்டது.நெஞ்சு படபடக்க கேசட்டை ஓட விட்டான்..தீனமாக அமுதாவின் குரல்..
''மாமா..நல்லாருக்கீங்ளா..மெல்ல விசும்பும் குரலினூடாக..காயிதமுலாம் கெடச்சுதுங்ளா..எங்க இருக்கீங்ளோ என்னமா இருக்கீங்ளோனு கெடந்து அல்லாடுறேன் மாமா..நாலு மாசம் முந்தி ஒங்க சேக்காளினு ஒருத்தர் வந்து சொன்னாப்டி..அந்தாளு சொன்னதுலாம் நெசமா பொய்யான்னு இன்னும் புரியாம இப்புடி தெகைச்சு கெடக்கேன்..அந்தாளு சொன்ன மணிகிராமத்துல திரும்ப தேடி போனப்போ அப்படி யாருமில்லன்னு சொல்லிட்டாங்க..நீங்க அப்புடி செய்யுறவரா..எனக்கு தெரியாதா..தேம்ப தொடங்கி வெடித்து வரும் அழுகையை சேலை நுனியை வாய்க்குள் திணித்து விக்கும் ஓசை தான் வெகுநேரம் கேட்டது..பின்னால் டீச்சர் ஆறுதலாக பேசு பேசு அழுவாத ஒன்னும் ஆயிருக்காது என சமதானம் செய்யும் குரல்..நீங்க எப்புடி இருந்தாலும் சீக்கிரம் வந்திருங்க..நாலு வீட்ல வேலை செஞ்ச்சாச்சு நான் பாத்துக்குவே ஒங்கள..''
தாயோலி..தேடி ஊருக்கு போயி நான் எங்கேயோ திருடி மாட்டி ஜெயில்ல இருக்கறதா இவகிட்ட கோலு சொல்லீருக்கான்..அரபு நாட்லலாம் திருடினா மாறுகால் மாறு கை வாங்கிருவாங்க என்னய என்ன செய்ய போறாங்ளோனு வேற பயமுறுத்தி போயிருக்கான்'' என்ன சென்மம்டா நீயெல்லாம்.மனசு குமைந்தது..அதனால் தான் போட்டோ எடுக்கும் பொழுது கூட விரல்கள் எல்லாம் நன்றாக தெரியும் படி விரித்து கொண்டு நின்றான்.பார்த்தால் வாரி கட்டி கொள்வாள் என எண்ணிய பொழுது அவனையறியாமலேயே வெட்கப்பட்டான்.
வரிசையில் இவன் முறை வந்த பொழுது என்ன பேச வேண்டும் என சேகரித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி கொண்டான்.நைனா பொதுவாக குசலம் விசாரித்தபடியே டீச்சர் வீட்டுக்கு எண்களை சுழற்றினார்.அவன் அவன் அங்கு வந்த பொழுதே அமுதாவை வர சொல்லும் படி டீச்சர் வீட்டுக்கு போனில் சொல்லியிருந்தார்.
இவன் நடுங்கும் விரல்களால் ரிசீவரை பற்றினான்..மறுமுனையில் அமுதாவின் குரல் கேட்ட பொழுது எல்லாவற்றையும் மறந்து விட்டான்.அமுதா என அவன் வெடித்தழ..கண்களை துடைத்தபடியே நைனா எழுந்து வெளியே போனார்.
---------
மலையாள FM ஒன்றில் காரில் போகும் பொழுது கேட்டதாக நண்பர் சேகர் சொன்ன சில வருடங்களுக்கு முன் ஒரு அரபு நாட்டில் நடந்த உண்மை சம்பவம் இது.

Wednesday, May 6, 2015

நேற்றிரவு...

நேற்றிரவு
ஒரு கிணற்று தவளை
நிலவுக்குள் குடி புகுந்தது...

நேற்றிரவு...

நேற்றிரவு
என் குளத்து மீன்கள்
களவு போய்விட்டன
அதிகாலை மழையில்
குடை கொண்டு போகாதவர்கள்
கூறினார்கள்
சாலையெங்கும்
நட்சத்திர மீன்கள்
நீந்தியதாக...

Monday, May 5, 2014

எனினும்...

எனினும்
நீ மீண்டும் வார்க்கபடுகிறாய்
உன் ஸ்திரத்தை சோதிக்க அல்ல
ஸ்நேகத்தை நிரூபிக்கவும் அல்ல
நீயற்ற அறையில்
பிம்பமற்று அவர்கள் திகைக்கின்றனர்
நீயற்ற சாலையில்
அவர்களது நிழல்கள்
நகர மறுக்கின்றன
நீ அவர்களுக்கு தேவைப்படுகிறாய்
உனது சமனின்மைகளால்
அவர்களை அளந்து கொள்ள
உனது ஒப்பனைகளை
குறை சொல்ல அல்லது
ஒழுங்காக ஒப்பனை செய்ய கற்று கொள்ள
தற்செயலாய் விழுந்த
பள்ளத்திலிருந்து கை தூக்க
அல்லது  அவர்கள் வலையில்
உன்னையும் ஒரு இழையாக்க
நீ அவர்களுக்கு தேவைப்படுகிறாய்
உனது சாலையின்
எல்லா திசைகளிலிருந்தும்
தம் நிழல்களை ஏவி விட
தமது வளர்ப்பு சாத்தான்களுக்கு
உன் பெயரிட்டு மகிழ
தன்னிருப்பு உணர
தற்பிழைகள் களைய
காரணங்களுடனும்
காரணங்களற்றும்
உன் இருப்பின் துல்லியம்
விகாரங்களால் நிறையும்
தீர்ப்பு நாளில்
ஏதேனும் ஒரு பாழறையில்
சில்லு சில்லாய்
நீ
றுக்நொகிய்ப்றாகடுப
ஓம்.

Tuesday, April 8, 2014

69 SHORT FILM

Monday, April 7, 2014

இதை 'நான்' எழுதவில்லை...

நினைவுகள் ஊர்ந்து போகிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமலும் இருக்க முடியவில்லை..

யார் சுழற்றியது இந்த பம்பரத்தை ?

ஏன்எதற்குஎன்னகசமுசாஇங்கே...லகுதிகுலகுதிகுவென எப்போதும் ஏன் இந்த பேரிரைச்சல்..என்ன தான் வேண்டும் இதற்கு? தொடர்பற்ற தொடர்பாக சொற்கள் படங்கள் இசை இரைச்சல் பித்துக்குளித்தனம் காவாலித்தனம் கருமம் என்ன வஸ்துடா இது என்று எங்காவது குட்டிச்சுவரில் கொண்டு போய் மண்டையை நங்கென முட்டினால் என்ன என தோன்றி யாத்தா ஏண்டி என்ன பெத்தன்னு கத்தாத குறை.The chaser திரைப்படத்தில் அந்த சீரியல் கில்லர் சுத்தியலால அடிச்சே மண்டைய தொறப்பானே அப்டி பொளந்தா தேவலயாட்ருக்கு தலையை.தலை தலையாக அடித்து கொண்டாலும் தலையே தலை.தறுதலை.மலமல மலே மலே மாலே மருத மலை மாமணியே முருகையா...ஆஆஆஆஆஆ

இது தான் இப்பொழுது பிரச்சினை.இப்படி நான் எழுத நினைக்கவில்லை.இது இப்படித்தான் எழுதி கொள்கிறது.

என்ன செய்யனும் இப்போ? மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...அத்தனைக்கும் ஆசைப்படு...கதவை தொற காத்து வரட்டும்...என்ன படிச்சா தகும் இப்போ ? கால தூக்கி சிரசுல வச்சு மூச்ச இழுத்து பொறடி வழியா கொண்டாந்து மண்டைக்குள்ள புகை விட்டா குண்டலினி எழும்பிடும்.அப்புறம் சாவு கிடையாது சத்தம் கடையாது யாவும் அமைதி பேரமைதி.ஓஷோ சொல்றார்.அவர் என்னத்தயாச்சும் சொல்ட்டு போறார்.நான் இப்போ என்ன செய்யட்டும்..நான்? நான்னா என்ன? பின்ன? என்னால சாப்ட முடில தூங்க முடில நிக்க கூட முடில அய்யய்யோ எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சோ? பின்ன காதல்..? சீச்சீச்சீ கருமம் கருமம்.ஏன் இப்டிலாம் தோண்றது.?

"லூசாப்பா நீ"
''நீ லூசே தாண்டா''.
''நீதாண்டா லூசு..''
''உனக்குள் ஒருவன்''
''நீதானா அது''
''நீயே அது...தத்வமஸி''
''மூட்றா மசுரு''

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...முடிலப்பா.

அலுவலகம் அமைதியாக இயங்கி கொண்டிருக்கிறது.ஒரு பிலிப்பைனி சாவகாசமாக மூக்கை நோண்டி கையிலெடுத்து பார்த்து கொண்டிருக்கிறான்.வந்தது சிறுமூளையா
பெருமூளையான்னு சாரு பாணில கேக்க தோணி கேட்காமல் விட்டு விட்டேன்.இன்னொரு லெபனானி யார் கூடவோ ரொம்ப நேரமாக போனில் மொக்கையை போட்டு கொண்டிருக்கிறான்.
பயங்கரமான பேய் படத்தை Mute ல் போட்டு பார்ப்பதை போல் பயந்து போய் பார்த்து கொண்டிருக்கிறேன் நடப்பதை எல்லாம்.இங்கிருந்து உடணடியாக எங்காவது தப்பித்து ஓடி விட வேண்டும் போல் இருக்கிறது.அய்யய்யோ எங்கே ஓடினாலும் கூடவே நானும் வருவேனே.நான் தப்பிக்க நினைப்பது இடத்தை விட்டல்ல.என்னை விட்டு.இந்த நான் நானில்லை.
எனக்கென ஒரு நான் எனக்குள் இதற்கு முன் இருந்ததா என்றும் தெரியவில்லை.

நேற்றிரவு சவரம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடுமென நடந்தது அது.கண்ணாடியில் நன்றாக தெரிந்த என் பிம்பம் திடுக்கென அஷ்ட கோணலாகி எனக்கு பழிப்பு காட்டியது.சில்லென யாரோ முதுகு தண்டில் ஐஸ் வைத்தது போல் விரைத்து விட்டேன்.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தேன்.சில நொடிகளில் மறுபடி அதே போல் சேஷ்டை.இப்பொழுது
நாக்கை வேறு துருத்தி காட்டியது.கை கால் வெலவெலத்து கன்னத்தை தடவி பார்க்கிறேன் பேர்வழி என கை நடுக்கி ரேசர் முகத்தில் ஒரு கோடு போட்டு வெள்ளை ஷேவிங் க்ரீமுக்கு நடுவிலிருந்து கோடாக கொழ கொழ ரத்தம்.

ஸ்ஸ்ஸ்.சிரைத்த வரை போதுமென முகம் கழுவி அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து விட்டேன்.இன்னும் நடுக்கம் குறையவில்லை.யாரிடம் சொல்வது? என்னவென்று
சொல்வது? சில கணங்களில் நடந்து முடிந்த இச்சம்பவம் சொல்ல கூடியதாகவா இருக்கிறது.பித்துக்குளி தனமாக இல்லை?ஒருவேளை இது கனவா? கிள்ளி பார்த்தேன்.வலித்தது.

இப்பொழுது தான் அதி பயங்கரமான சம்பவங்கள் நிகழ தொடங்கியது.சாலையின் மறுபுறத்திற்கு செல்ல காத்திருந்தேன்.கார்கள் வந்து போய் கொண்டிருந்தன.கிடைத்த இடைவெளியில் சாலையை கடக்க
முயன்ற பொழுது நடுச்சாலைக்கு வந்த உடண் உடல் வலு கட்டாயமாக யாரோ பிடித்து கொண்டது போல் நகராமல் சண்டி செய்தது.தூரத்திலிருந்து அதிவேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது.நான் உச்ச பட்ச கிலியில் வெளிறி அலறாத குறையாக என்னை நகர்த்த முயற்சித்தேன்.ம்ஹீம் பாறாங்கல்லை போல் அசையாமல் நின்று கொண்டது என் உடல்.கார் ஓட்டி
பல்பை அணைத்து அணைத்து காட்டி பாம் என ஹாரனை வேறு அலற விட்டு மிக அருகில் வந்து சட்டென ஒடித்து கொண்டு போனான்.எனக்கு வெடக்கால் வெட்டி மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது.வேர்த்து விறுவிறுத்து விட்டது.அவசர வேலையாக செல்கிறான் போல.கையை நீட்டி திட்டி விட்டு மட்டும் போனான்.இறங்கி வந்து செவுளில் அறைவான் என நினைத்தேன்.

ஒரு சில கணங்களில் உடல் மீண்டும் இயக்கத்துக்கு வந்தது.ஒரு வழியாக அறைக்குள் மீண்டும் வந்து புகுந்து கொண்டேன்.இனி அறையை விட்டு வெளியேறுவது ஆபத்து.பதட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.என் மொபைலை தேடினேன்.உடனே யாரிடமாவது இதை சொல்ல வேண்டும்.நிச்சயம் இது கனவல்ல.கிட்டத்தட்ட வேறு விசை என்னை
இயக்குகிறது.யாரின் நடமாடும் சாயை நான்? இனி என்னை என்று சொல்வதில் எவ்வித அர்த்தமுமில்லை.மொழியில் வேறு வழியில்லை.நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? மொபைலை
எங்கோ வைத்து தொலைத்து விட்டேன்.மொபைல் மொபைல்...யாரை அழைப்பது யாரை யாரை? ஆஆஆஆ.

எனக்கு யாருமில்லை.நான் கூட....அய்யோ என்னாகி விட்டது.இந்த மூளைக்கு?என் நினைவுக்கு யாரும் வரவில்லை.ஒரு பெயர்...ஒரு இடம் கூட நினைவில்லை.முகம்,குரல் எதுவும் நினைவிலில்லை.எனக்கு யாரும் இல்லையா?இல்லை.இருக்கிறார்களே.அய்யோ வாரா வாரம் செல்வேனே எங்கோ? அவர்களோடு பேசி சிரித்து சாப்பிட்டு உறங்கியிருக்கிறேனே.முதலில் என் பெயர் என்ன?.என் பெயர்..பெயர்...எங்கே என் அடையாள அட்டை..என் பர்ஸ்..பர்ஸ்.பர்ஸ்.டேபிளில் தானே வைத்தேன்.இல்லை இது என் அறையில்லை.இல்லை இது என் அறை தான்.
என் அறை எண் என்ன? அய்யோ...என்ன நடக்கிறது என் தலைக்குள்.ஏன் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.

இது என்ன இசை? தலையணைக்கடியிலிருந்து ஓ..மொபைல்.அதை எடுத்து இயக்கினேன்.புதிய பெயராய் தோன்றுகிறது.இல்லை,இவள் எனக்கு அறிமுகமானவளாக இருக்க வேண்டும்.இல்லையெனில் பெயரை மொபைலில் சேமித்திருக்க மாட்டேன்.பேசும் குரல் பரிச்சயமில்லாமல் இருக்கிறது.சாவகாசமாக எப்படி இருக்கிறாய் என கேட்கிறாள்.நான் திக்கி திணறி.நலம்...ஒரு உதவி..நீங்கள் யார் என்கிறேன்.அவள் சிரிக்கிறாள்.பின் சற்றே என் நடுக்கத்தை உணர்ந்தவள் போல் என்னாச்சுடா என்கிறாள்.நான் தயவு செய்து என் பெயர் என்ன என சொல்லும் படி கேட்கிறேன்.இப்பொழுது எதிர்முனை கொஞ்சம் கலவரமடைவது போல் படுகிறது.என்னாச்சுடா உனக்கு என சற்று உரத்து கேட்கிறாள்.நான் கெஞ்சும் தொனியில் மன்றாடுகிறேன்.

என் பெயர் என்ன? நான் யார்...தயவு செய்து சொல்...என்னால் எதையும் நினைவு கூற முடியவில்லை.நான் யார்? நான் யார்....??

நீ..நீ ரௌத்ரன்...இரு நான் அங்கே வருகிறேன்.எதிர்முனையில் குரல் அணைந்தது.

ரௌத்ரன்...ஓ என் பெயர் ரௌத்ரன்..நிஜ பெயர்...?? பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியில் பார்த்தேன்.மீண்டும் பழிப்பு காட்டுகிறது.சட்டென வெளியே வந்து விட்டேன்.

போதும்....ரிலாக்ஸ்.ரிலாக்ஸ்.ஏதோ பிசகு.என்னை திரட்டி கொள்ள வேண்டும்.கண்களை மூடினேன்.கலாஸ்...கண்களுக்கு பின்னே ஒன்றுமில்லை...என்னை உணர.எனக்குள் தேட.வெளி...
வெட்ட வெளி...கண்களை திறந்தால் என் எதிரில் இருக்கும் அதே வெளி.

மீண்டும் கண்ணாடி முன் நின்றேன்.கண் சிமிட்டல் கூட இல்லை.வெறும் பிம்பம்.

ஹாரன் சத்தம் கேட்கிறது.வந்துவிட்டாள்.ஆம்,இவள் என் தோழி.நடந்ததை கூறினேன்.சிரித்தாள்.இவள் நம்பவில்லை என தெரிகிறது.ஏதேதோ கூறினாள்.நான் உறங்கி போகும் வரை இருந்ததாக
காலையில் தொலை பேசினாள்.மீண்டும் கண்களை மூடி பார்க்கிறேன்.வெளி.வெட்ட வெளி.நான் கூறியது சுவாரஸ்யமாக இருந்ததாம்.அதை வலையில் எழுதும் படி கூறினாள்.இதை எழுதியது
நானில்லை என நாளை நான் கூறினாள் நீங்கள் நம்ப போவதில்லை.

எனினும் சொல்லி கொள்கிறேன்.

இதை நான் எழுதவில்லை.

ஒரு குட்டிக்கதை...

ஒரு குட்டிக்கதை...அடடா..அந்த குட்டி இல்லப்பா..குறுங்கதை..

ஒரு ஊர்ல ஒரு பண்ணையாரு இருந்தாப்டி..ஆமா..அவரும் ஒரு பத்மினிய வெச்சுருந்தாப்டி...பண்ணையில அஞ்சாறு மாடு, நாலஞ்சு குருத..ஒரு ஆடு..என்னதான் பத்மினி பளபளான்னு இருந்தாலும்..மனுசனுக்கு குருத மேல தான் உசுரு..

ஒருக்கா நாலஞ்சு குருதையில ஒரு குருதைக்கு முடில...நிக்க திராணியில்லாம படுத்துருச்சு..பண்ணை பதறிப்போய் குருத லாக்டேர கூப்டு வந்தாப்டி...லாக்டரு குருதைய பாத்துப்புட்டு ஒதட்ட பிதுக்கிட்டாப்டி...மூனு நாளைக்கு மருந்து தாரேன்...சொகமில்லாட்டி சோலிய முடிச்சு பொதச்சுடனும்..இல்லாட்டி வியாதி எல்லா குருதைக்கும் பரவிடும்னு போற போக்குல ஒரு கார்பண்டை ஆக்ஸைடு பாம் போட்டு போயிட்டாப்டி..பண்ணையும் மூக்க மூடிக்கிட்டு ஒத்துக்கிட்டாப்டி..வேற வழி?

மொத நாள் ஆச்சு..குருத ரவக்கூட அசையுல...ரெண்டா நாள் ஆச்சு...ம்ஹீம்..நஹி அஸ்தா ஹே..நம்ம ஆடு ஒன்னு நின்னுச்சே அதுக்கு பொறுக்கல...குருதக்கிட்ட வந்து...ந்தா பாரு..நாளைக்குள்ள நீ எந்திருக்கலன்னா உன் சோலிய முடிச்சுருவாய்ங்க...எப்டியாச்சும் எந்திரிச்சு நின்னுரு போதும்னுச்சு...எங்க...நம்ம குருத ஊமக்கண்ணீரா வடிக்குது...பாவம் வாலக்கூட சிலுப்ப முடியல..மூணா நாள் ஆச்சு..த்சொ..த்சொ..அந்த மானங்கெட்ட மருந்து மருந்துக்கூட வேல செய்யல...

லாக்டரு வந்து குருத புடுக்க புடிச்சு பாத்துட்டு உறை போடாம ஊர் மேஞ்சா இதான் கெதின்னு ஒதட்ட ஒரே பிதுக்கா பிதுக்கிட்டு போயிட்டாப்டி...ரைட்டு...நம்ம ஆட்டுக்குன்னா செம்ம கடுப்பு..இந்தா..இம்மா சொல்லியும் எந்திரிக்காட்டி என்னா மானங்கெட்ட குருத நீ? கொல்லுல உப்புப்போட்டுத்தான மண்டுறன்னு ஒரே உசுப்பா உசுப்பி குருதய எந்திரிக்க வெச்சுடுத்து..குருதயாலயே நம்ப முடில...நம்ம ஆடு "அப்டித்தான்..நல்லா குதி..ம்..ஓடு" ன்னு மேல மேல உசுப்ப..குருதயும் குதிச்சு குதிச்சு ஓட ஆரம்பிச்சுடுச்சு...ஆட்டுக்குன்னா கொட கொடன்னு ஆனந்த கண்ணீர்..

தூரத்துல இருந்து சாவக் கெடந்த குருத குதிச்சு குதிச்சு ஓடுறத பாத்த பண்ணைக்கு ஒரே குஷி...எங்குருத...எங்குருதன்னு அவரும் பத்மினிய கெட்டிக்கிட்டு துள்ளுறாப்டி...பயபுள்ள அத்தோட உடல..ங்கொய்யால, மீ ஹேப்பி..பண்ணையில இன்னிக்கு எல்லா பயலுக்கும் கறி சோறு...அந்த ஆட்ட வெட்டி உறிங்கடான்னு சொல்ட்டாப்டி...

நீதி: எப்பவும் நம்ம டவுசர டைட்டா புடிக்காம தாத்தா கோமணம் காத்தா பறக்குதேன்னுலாம் வசனம் பேசப்பிடாது...