Wednesday, December 26, 2007

மூழ்கும் சொல்...

ஓர் எழுதுகோலுக்காக
ஏங்கிக் கிடக்கிறதென்
கவிதை...

உளியுறும் நடுக்கத்தில்
சிதைவுறுகிறதென்
சிற்பம்...

சிலிர்த்த மேகம்
சிலுப்பி விட்டதில்
மண்ணில் வீழ்ந்து
மரித்துவிட்டதென் மழை...

சிறகின் விடுதலை...

கனவின் ஸ்கலிதமாய்
நிகழ்ந்துவிடும்
இத்துயரங்களினின்று
தப்பிவிடும் வேட்கையில்
தெறித்து விண்டும்
வீணையின் நரம்பென
வேர்கள் அறுபட
சுழித்துவரும்
நதிப்பிரவாகத்து
மண்டையோடுகளின் மீதாக
கால்பாவி விரைகையில்
விரலிடுக்கின் சூட்சும கயிற்றோடு
ஒட்டிக்கொண்டு உடன் வருகிறது
பால்ய ஸ்நேகத்து
நிலாப்பட்டம்.....

கடலில் மிதக்கும் சருகு....


ஒலித்தடங்களினூடே
இழைந்து வருகிறாய் நீ
இசையின் புகைப்படமென....

உனது நகங்களின் ஸ்பரிசத்தால்
வழியும் குருதி குறித்த
யாதொரு பிரக்ஞையுமின்றி
ஸ்வாதீனமாய் இறங்குகிறாய்
என் இமைகளின் பிளவில்...

குளத்தளத்தின் வட்டலைகளின் மீதாக
அலைவுரும் மரத்துண்டென
என்னுள் பயணிக்கிறய் நீ...

உனது நிர்வானத்தின் முன்
உருமாறுகிறேன் நான்
புழுவென....

உனது முலைமுகடுகளில்
ஊறும் என்னை
எறும்பென நசுக்கி
தூர வீசுகிறாய்...

நா வறளும் என்முன்
விரிகிறாய் நீ
பெருங்கடலென....

இரவின் பிற்பொழுதில்
இச்சை தீர்ந்த காற்றென
ஓடிவிடுகிறாய்..

உன் நிராகரிப்பின்
நினைவு சின்னமாய்
வெளியே வழிகிறதென்
உயிர்.....

Tuesday, December 25, 2007

ஒர் கனவுலகவாசியின் இருப்பு....

இந்திரியம் நழுவிய
இரவுகளில்...

குருதி வகை பாராமல்
தானம் பெறும்
கொசுக்களின் சிறகசைவுகளில்.....

வாகன வீதிகளில்
ஜன்னல் நிலா
அடிக்கொருமுறை தப்பிவிடும்
துண்டு நொடிகளில்....

என்றேனும் எதிர்ப்படும்
சவ ஊர்வலத்தின்
பறையொலிகளில்...

கடந்து போகும்
அழகிகளின்
விநோதப்பார்வைகளில்....

நண்பர்களின்
"பைத்தியக்காரன்"
பட்டமளிப்பு விழாக்களில்....

அம்மாவின் கண்ணீரில்...

அவ்வப்போது
உணர்கிறேன்
இருத்தலின் வலியை.....

Monday, December 24, 2007

மானுடம்....

சொற்களின் வீதிகளினின்று
வீசியெறியப்படுகிறதோர்
மௌனம்...

வேர்கள் அறுபட
கிளைக்கூட்டினின்று
தெறித்தோடுமோர் பறவை...

காலமற்றதோர் புள்ளியில்
கரையும் நினைவுகள்....

அனுக்களென
அதை சிதைக்குமோர்
கூர்கத்தி....

காற்றோடு
கலக்கின்றன
சில அதிர்வுகள்...

மூச்சையடக்கி
முயங்கும் இரவில்
குழலின் துளைக்குள்
இசையென பயணம்...

ஈரக்காற்றில்
உயிர்க்குமோர் விதை...

மீண்டும்
அலகினைத் தீட்டிக்கொண்டு
காத்திருக்கிறதோர்
மரங்கொத்திப் பறவை....