எவ்வளவு நேரம் உன் உள்ளங்கைக்குள் மூடி வைப்பாய் விட்டு விடு சுடர் இரவை அருந்தட்டும் சுடரை இரவு அருந்தட்டும் நீ யார் சொல்ல கூடும் மீண்டும் ஒரு இரவு வருமென்று அந்த மெழுகை அணைத்து விடு நான்...
தன் தூரிகையில் பச்சையம் நனைத்து காட்டை வரைபவன் மரங்களை உயிர்ப்பிக்கிறான்.மெல்ல மெல்ல இலைகள் அசைந்து அவன் தலை கோதின.சூரியன் நிறமிழக்க தொடங்கியது.மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வனப்பட்சிகளின் ரீங்காரத்தினூடே அவன் ஓவியத்தை வளர்த்தான்.நகர்ந்து கொண்டேயிருந்த நிலவை கொடிகளால் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டான்.கூடு திரும்பும் பச்சைக்கிளிகள் கொத்தி உடைத்தன அதன் விளிம்பை.இரவையும் பகலையும் அவன் நிறங்களால் நனைத்தபடி அவ்வனத்துள் கரைந்து போனான்.நீலியொருத்தியை வரைந்து அவளோடு வாழ்ந்தான்.பின்னொரு காலை பொழுதின் கடைசி நட்சத்திர மினுக்கலில் தன் அறை திரும்ப எண்ணினான்.அவ்வனம் விட்டு காணாமல் போன வண்ணத்து பூச்சியொன்று சிறகொடுங்கி அமர்ந்திருந்தது அவன் அறை மேசையின் ஒரு பிளாஸ்டிக் பூ மீது.மீண்டும் வனம் புகுந்தவன் பிறகு ஒரு போதும் தன் ஓவியம் விட்டு வெளியேற விரும்பவில்லை...