
எதேச்சை


சுதந்திரம் என்பதை ஒரு சொல்லாகவே அறிந்திருக்கிறோம்.உடலென்னும் சிறைக்குள் வெளியேற தவிக்கும் பட்டாம்பூச்சி குறித்த பிரக்ஞை எதுவும் இல்லை நமக்கு.எங்கே என்று தெரியாத ஒரு எலி ஓட்ட பந்தயத்தில் அசுர கதியில் கடந்து போகிறது வாழ்வு.அரசியல்,ஒழுக்கம்,மதம் என கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கண்ணாடி சிறைகளால் சூழப்பட்டிருக்கிறது இருப்பு.நவீன மனிதன் என்பவன் இன்று ஒரு நடமாடும் சிறைச்சாலை.இடைவிடாத அசைவில் இருப்பின் அவஸ்தைகள் மறக்கப்படுகின்றன.
விபத்தொன்றில் சிக்கி அசையா முடியாத படி படுத்தபடுக்கையில் கிடக்கும் ஒருவனது வாழ்வு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்.இருப்பு எப்பொழுது அர்த்தம் கொள்கிறது என அடுக்கடுக்காக கேள்விகளுக்குள் புதைத்தது The Sea Inside திரைப்படம்.கருணை கொலைக்கு மனு செய்பவனது துயரம்..அறம்,பாவம்,கருணை என்ற கற்பிதங்களோடு அவன் நிகழ்த்தும் போராட்டம் நிலை குலைய வைத்தது.நிதர்சனம் சினிமாவை விட கொடூரமாகவே இருக்கிறது.ஒரு பண்பட்ட சமூகம் தற்கொலையை அங்கீகரிப்பதாக இருக்கும்.மேலும் வலியின்றி உயிரை போக்கி கொள்ள வசதிகள் செய்து கொடுக்கும்.தற்கொலை கோழைத்தனமென்றும் போராட்டமே வாழ்க்கையென்றும் வசனம் பேசும் கோரமான உலகில் இருக்கிறோம்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு காமுகனால் கற்பழிக்கப்பட்டு மூளை அதிர்ச்சிக்குள்ளாகி கிட்டத்தட்ட 37 வருடங்களாக கோமாவில் பிரக்ஞையின்றி அவதியுறும் அருணா ஷான்பாக்கை கருணை கொலை செய்யும்படி பல மனிதாபிமானிகள் அரசுக்கு மனு செய்தும் ஆவண செய்யப்படவில்லை இன்னும்.மனிதாபிமானம் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாது என்பது தான் இதன் பொருள்.கருணை கொலை அங்கீகரிக்கப்படாத உலகில் தற்கொலை முட்டாள்தனமாகவே தோன்றும்.முதுமக்கள் தாழி செய்த மரபு நம்முடையது.
உடல்/இருப்பு சார்ந்து உன்னதம் என எல்லா ஒழுக்க மதிப்பீடுகைகளையும் கவிழ்த்து பார்த்தவை பாசோலினியின் திரைப்படங்கள்,உடல்/மனம் மீதான சமூகம் மதம் மற்றும் அரசியலின் ஒடுக்குமுறைகளை பகடி செய்தவை அவை.இறுதியாக பார்த்த அவரது 120 Days of sodom மனக் கொடூரத்தின் வரைபடம் போல் இருந்தது.மண்டைக்குள் வண்டு புகுந்ததான நமைச்சலில் வெகு நேரம் நெளிய வைத்தது.ஒரு கட்டிடத்திற்குள் அடைக்கபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் மீதான அதிகாரத்தின் பாலியல் வன்முறையை முழு திரைப்படமாக்கியிருக்கிறார்.காமத்தின் மீதான மதங்களின்/அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள்,காமம் குறித்த குற்ற உணர்வுகளை கட்டமைப்பதன் மூலம் இருப்பை ஒரு புள்ளிக்குள் ஒடுக்கும் சமூக தந்திரம்.பாவம்,மறுமை போன்ற சொல்லாடல்கள் மூலம் விளிம்புக்கு நகர்த்தப்பட்ட இருப்பை மையத்திற்கு இழுத்து வருகின்றன இவரது படங்கள்.தனி மனித மனச்சிக்கல்களுக்கு பெரும்பாலும் காமம் சார்ந்த குற்ற உணர்வுகளே காரணங்களாக இருக்கின்றன.குற்ற உணர்வுகளோ தீர்ப்புகளோ அற்ற மனித வாழ்வு எப்படியிருக்கும்.Perfume படத்தில் வரும் பொது வெளியில் நூற்று கணக்கில் கவலையின்றி மக்கள் புணர்ந்து திளைக்கும் இறுதி காட்சி தான் மனத்திரையில் ஓடுகிறது.சொர்க்கம் பற்றிய கதையாடலை காட்சியாக்கி பார்த்த படம் அது.
Anti christ - ல் கணவனுடனான புணர்ச்சியின் உச்ச கட்ட பொழுதில் கண்ணெதிரே சன்னல் வழி தவறி விழுந்து இறந்து போகும் தன் குழந்தையின் மரணத்திற்கு தன் உடலின்ப விழைவே காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் தாய் தன் கிளிட்டோரியசை வெட்டி எறிவதன் மூலம் அதை கடக்க முனைகிறாள்.துரோகம் என்ற கண்ணியுனூடாக உடலை/இருப்பை விசாரிக்கும் நகிசா ஒஷிமாவின் in the realm of passion ம், உடலை அதன் எல்லை வரை செலுத்தி இறுதியில் வெறுமையில் தன் காதலனின் குறியை அறுத்தெறியும் in the realm of senses ம் தந்த அயர்ச்சியும் மன உளைச்சலும் கேள்விகளும் தாங்கொணாதவை.நிதர்சனத்தை பேசும் எந்த பிரதியும் லகுவான இருப்பின் சமநிலையை அந்தகாரத்தில் வீசி நடுங்க செய்வதாகவே இருக்கிறது.எல்லாம் யோசிக்கும் வேளையில் பெரியார் ஏன் அடிக்கடி வெங்காயம் என்றார் என்பது மட்டும் புரிகிறது.
டெஸ்க்டாப்பில் இருந்த இந்த பத்தியை சற்று முன் வாசித்த என் நண்பன் ,'என்ன ஒரே கொலை தற்கொலைன்னு எழுதிருக்க..சூசைட் எதாவது பண்ணிக்க போறியா?' என கலவரமாக கேட்டான்.சிரிப்பை அடக்கி கொண்டு ஆமாம் என பாவமாக சொல்லி வைத்தேன்.பேயறைந்தது போல் பார்த்தவன் பின் 'நீ ஒரு முக் மாஃபி' என திட்டிவிட்டு போனான்.முக் மாஃபி என்றால் அரபியில் மூளையில்லாதவன் என பொருள்.
9 comments:
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே.
கோர்த்திருக்கும் விதம், வெளிப்பாடு
மற்றும் சொல்லாட்சி நன்றாக இருக்கிறது ரௌத்ரன்
Whose life is it anyway? கேள்வியல்ல.. இன்னொரு படம்!
மிக்க நன்றி சுரேஷ் கண்ணன்...
இல்லை நேசன்,சொல்ல நினைத்த விதத்தில் இங்கு சொல்லப்படவில்லை.எழுத எழுத சரியாகும் போல...
மிக்க நன்றி நேசன்...
நன்றி தமிழினி...
நன்றி உமா,தேடிப்பார்த்தேன் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படத்தை.. கிடைக்கவில்லை.எப்படியும் பார்த்து விடுவேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி...
ம்ம்ம் இந்தத் திருப்தியற்ற நிலை அல்லது தேடல்தான் படைப்பாளிகளை செலுத்திக் கொண்டிருக்கிறது போலும்
"வாழ்வு.அரசியல்,ஒழுக்கம்,மதம் என கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கண்ணாடி சிறைகளால் சூழப்பட்டிருக்கிறது இருப்பு."
உங்கள் எழுத்தை இப்போதுதான் முதற்தடவையாக வாசிக்கிறேன். ஆழ்மனப் பயணப் பதிவு போலிருக்கிறது. உள்விசாரணைகளில் நாம் ஈடுபடுவதில்லையே... எப்போதும் மேலோட்டமான வன்மம் பொதிந்த வாழ்வு. அயர்ச்சியாக இருக்கிறது.
'திருப்தி'இந்த ஒரு சொல் தான் எல்லாவற்றையுமே செலுத்தி கொண்டிருக்கிறது நேசன்!
மீண்டும் நன்றி :)
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ்நதி...
மேலோட்டமான வாழ்வு தானே கற்பிக்கப்பட்டுள்ளது,அதுவே சரியெனவும் நம்பப்படுகிறது.உள்/வெளி விசாரணையாளர்களுக்கு நறுவிசான ஒரு பெயர் இருக்கிறது 'பொழைக்க தெரியாதவன்' :)
அவ்வப்போது கண்களில் படும் சிறைத்துறை வாகனங்களும் அதனில் பிரயாணிக்கும் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் கைதிகளையும் காணும்போது ஏற்படும் எண்ணங்களில்,தண்டிக்கப்பட்டு வெளியேற்றப்படும் அந்த காலகட்டங்கள்- உறவுகளுடன் தொடர்பு கொண்டோ அல்லது தொடர்புகொள்ளாமலோ- நிச்சயம் ரணம் மிகுந்தவைதான்!அதைவிட பொருளாதார ரீதியில் படுமோசமாகிவிடும் வாழ்க்கை :(
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ண, ன வித்தியாசங்களை மட்டும் சற்று கவனிக்கவும்.
Post a Comment