Saturday, August 29, 2009

நாச்சியாவும் அமுக்குபிசாசும்...


அப்பொழுது நான் கல்லூரி முதலாமாண்டு படித்து கொண்டிருந்தேன்.காளி கோவில் தான் விடுமுறைகளில் நான் பொழுது போக்குமிடம்.காளி கோவில் ஊர் எல்லையில் சுடுகாட்டை பார்த்தபடி இருக்கும்.உச்சி உறுமும் நேரங்களில்,ஒரு ஈ காக்காயை கூட பார்க்க முடியாது.கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம்.விழுதுகள் தரையை துளைத்து இறங்கியிருக்கும்.அதன் நிழல் கோவிலை சுற்றி கவிந்திருக்கும்.
கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு கோவிலில் படுத்துறங்கிய ஒரு மதிய வேளையில் தான் அது நிகழ்ந்தது.
மரம் அசைவற்று புழுங்க தொடங்கியிருந்தது.மழை வருவது போல் மேகம் இருட்டி கொண்டு வந்தது.
உறக்கமும் சொப்பணமும் அலை கழிக்க திடுமென ஒரு பாரம் உடலை அழுத்தத் தொடங்கியது.மூச்சு விட முடியாத சுமை.கைகால்கள் மரத்து போயின.விழிகளை திறக்க முடியவில்லை.இம்மி கூட அசைய முடியவில்லை.அழுத்தும் பாரத்தோடு போராடி கொண்டிருந்தது என் ஸ்தூல உடல்.விலக்க தோன்றாத இன்பமாகவும் இருந்தது அந்த விசை.சற்றை கெல்லாம் திடுமென விலகிக் கொண்டது அந்த பாரம்.சற்று நேரங் கழித்து கண் விழித்து அயர்ச்சியும் நசநசப்புமாக தலையை உயர்த்தினேன்.தூரத்தில் சுடுகாட்டின் ஒற்றையடி பாதையில் யாரோ ஒருத்தி நடந்து சென்று கொண்டிருந்தாள்.ஒரு கணம் மயிர்கால்கள் சிலிர்த்து கொண்டது.பிறகு என்ன மடத்தனம்,வெறும் பிரமை என என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.
மாலை வீடு திரும்பிய பொழுது,செகதாம்பாள் அவசரமாக என் வீட்டிற்கு வந்தாள்.மருத்துவரை அழைத்து வரக் கூறினாள்.நாச்சியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றாள்.நாச்சியாவுக்கு என்னை விட இரண்டு வயது கூடுதல்.அவளை நாச்சி என்று தான் அழைப்பேன்.நாச்சியா தீமிதி பார்க்க பிறந்தகம் வந்திருந்தாள்.நான் மருத்துவரை கையோடு அழைத்து வந்தேன்.
"என்ன ஆச்சு"
"தெரியலீங்க,சாயங்காலமான என்னமோ மாதிரி ஆயிடுறா,சம்மந்தா
சம்மந்தமில்லாமல் பேசறா,தானா சிரிச்சுக்குறா"
மருத்துவர் பரிசோதித்து விட்டு 'பயப்பட ஒன்னுமில்ல' என்று கூறி ஏதோ மருந்தெழுதி தந்தார்.அவர் பரிசோதிக்கும் பொழுது நாச்சியா இயல்பாகவே இருந்தாள்.லேசா தலைவலி என்று கூறினாள்.அவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் வெறிக்க தொடங்கியது அவள் பார்வை.எனக்கு பொறி தட்டியது.மதியம் கலங்கலாக தூரத்தில் சென்ற உருவம் அணிந்திருந்த அதே மஞ்சள் நிற புடவை.
நான் செகதாம்பாளிடம் நாச்சியா மதியம் எங்கிருந்தாள் என்று கேட்டேன்.அவளுக்கு தெரியவில்லை.வயலில் களையெடுத்து கொண்டிருந்ததால் அங்கு சென்று விட்டாளாம்.நாச்சியா ரொம்ப சாது.தானுண்டு தன் ஜோலியுண்டு ரகம்.மாநிறம், உறுத்தாத அழகு.இரண்டு வருடங்களுக்கு முன் தான் திருமணன் நடந்திருந்தது.குழந்தை குட்டி ஒன்றும் இல்லை.அவளுக்கு மாப்பிள்ளையை சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவளை பெண் பார்த்து சென்ற சமயத்திலேயே கூறினாள்.செகதாம்பாள் அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளவேயில்லை.மாப்பிள்ளை கூட்டுறவு சொசைட்டியில் கணக்காளராக இருந்தார்.ஏன் அவளுக்கு திடீரென்று இப்படி ஆகிறது என்று புரியவில்லை.பொழுது சாய்ந்தால் ஒருவிதமாக நடந்து கொள்கிறாள்.விடிந்ததும் சகஜமாகி விடுகிறாள்.
அடுத்த நாள் நடு ராத்திரியில் தெரு நாய் ஒன்று ஊளையிட்டு கொண்டிருந்தது.அதன் ஓலம் சகிக்காது விழிப்பு தட்டிவிட்டது.மொட்டை மாடியில் கயிற்று கட்டில் போட்டு தூங்கும் வழக்கம் எனக்கு.நாயின் ஊளை வர வர நாராசமாகி கொண்டே போனது.அதன் ஊளைக்கு அடுத்த தெரு நாய்களும் ஊளையிட்டு கோரஸ் கொடுத்து கொண்டிருந்தது.எழுந்து சென்று தெருவை பார்த்தேன்.தெரு முக்கில் யாரோ வருவது மின் கம்ப வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்தது.நாய் முகத்தை மேல் நோக்கி நிமிர்த்தி கொண்டு கர்மமே கண்ணாக நீண்ட ஊளையில் லயித்திருந்தது.மொட்டை மாடியில் ஏதாவது கல் கிடக்கிறதா என துழாவினேன்.சில்லு ஒன்று தட்டுப்பட்டது.எடுத்து கொண்டு விளிம்புக்கு வந்த பொழுது அந்த உருவம் துலங்கியது.அவனொரு குடுகுடுப்பை.
நாய் ஊளையிடுவதை நிறுத்தி குலைக்க தொடங்கியது.அவன் அதை லட்சியம் செய்யாமல் விடுவிடுவென நடந்தான்.நாய் அவனை கடிப்பதற்கு பாய்ந்த பொழுது.அதன் மீது எதையோ எறிந்தான்.சடுதியில் நாய் ஓய்ந்து விட்டது.வாலை சுருட்டி கொண்டு அப்படியே அமர்ந்து விட்டது.என்ன நிகழ்கிறது என உணர்வதற்குள் அவன் என் வீட்டை கடந்து நாச்சியா வீட்டையொட்டி வளையும் சந்திற்குள் நுழைந்தான்.வேலியை ஒட்டிய சந்தில் நடந்து கொண்டிருந்தவன் சட்டென ஒருகணம் நின்று வேலியை உற்று பார்த்தான்.பிறகு மீண்டும் நடக்க தொடங்கிவிட்டான்.
நன்றாக அந்த வேலியை உற்று பார்த்த பொழுது அங்கே யாரோ நிற்பது தெரிந்தது.மெல்ல அவ்வுருவம் அசைவதும்.பிறகு அது கொல்லை புற வேலி படலை திறந்து கொண்டு சந்திற்குள் நுழைந்தது.அது நாச்சியா தான்.அவள் இப்படி நடு சாமங்களில் உலவ கூடியவள் அல்ல.பயந்த சுபாவி.எனக்கு நெஞ்சு படபடவென அடித்து கொண்டது.கூடவே எழுந்த குறுகுறுப்பும்.
நான் மாடியிலிருந்து கீழிறங்கி அவளறியாது அவளை பின் தொடர்ந்தேன்.அவள் மூன்று சந்துகளுக்குள் புகுந்து சுடுகாட்டிற்கு செல்லும் ஒற்றையடி பாதைக்குள் நுழைந்தாள்.எனக்கு கிலியடித்தது.திரும்பி விடலாம் என்ற என் யோசனைக்குள்ளாக அவள் இருளுக்குள் கலந்து விட்டிருந்தாள்.ஒரு டார்ச்லைட் கூட எடுக்காமல் வந்த என் புத்தியை நொந்தபடி நானும் சுடுகாட்டுக்குள் நுழைந்தேன்.வழியெங்கும் ஆடிய காட்டாமணக்கு செடிகள் திகிலை ஏற்படுத்தியது.காலில் தட்டுப்பட்ட மண்டையோடுகள் எந்த பெரிசுனுடையதோ.அதையெல்லாம் யோசிக்க தெம்பில்லாது இருட்டில் அவளை துழாவியது கண்கள்.
அவள் தூரத்தில் ஒத்த பல்பு மங்கலாக ஒளிர்ந்த காளி கோவிலுக்கு சென்று கொண்டிருப்பது தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக காளி கோயிலை நோக்கி விரைந்தேன். பகலிலேயே பயமுறுத்தும் அந்த கோவிலுக்கு நடுசாமத்தில் வரும் என்னை நானே பலவாறு சபித்து கொண்டேன்.கோவிலின் தளத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்தேன்.ஆலமரம் தலைவிரி கோலத்தில் பெரிய பூதம் போல ஆடிக்கொண்டிருந்த்தது.நகர் தோன்றாமல் சற்று நேரம் அப்படியே நின்றேன்.நிலவொளியில் என் முன் ஒரு நிழல் விரிய சப்த நாடியும் ஒடுங்கியது எனக்கு.அப்பொழுது என் தோளை பற்றியது ஒரு கரம்.நான் உச்சபட்ச கிலியில் மூர்ச்சையாகி விழுந்தேன்.நினைவு வந்து பார்த்த பொழுது.என் வீட்டு மொட்டை மாடியிலேயே இருந்தேன்.
மறு நாள் காளி கோவிலில் அமர்ந்து நேற்று நிகழ்ந்தவற்றையெல்லாம் அசை போட்டு கொண்டிருந்தேன்.
ஊருக்குள் இதுவரை நான் கிளப்பியிருந்த புரளிகள் நிறைய."இந்த பிளையார் கோவிலுக்கு இப்பொழுது கூட்டமே வருவதில்லையென" குறை பட்ட அர்ச்சகருக்காக பிள்ளையார் பால் குடிக்கிறார் என ஒரு புரளியை கிளப்பினோம்.அமோக கூட்டம்.ஆதலால் இதை பற்றி யாரிடமேனும் கூறுவது உசிதமாகவில்லை எனக்கு.
முன்பு இந்த கோவிலுக்கு ஒரு சிறுமியை அழைத்து வந்திருந்தனர்.பூசாரி ஒரு தட்டில் சூடம்,வெற்றிலை பாக்கு.ஊதுவத்தி சகிதம் வந்தார்.மறுகையில் கொத்து வேப்பிலை.அந்த சிறுமியின் தாய் அவளை அமரச் செய்தாள்.பூசாரி தூபக்கால் நெருப்பில் சாம்பிராணி இட்டு,ஒரு ராகமான குரலில் பேசினார்.அந்த சிறுமியின் கண்களில் குழந்தை தனத்திற்கு பதிலாக ஒரு பெரிய மனுஷி தனம் தெரிந்தது.புகை சூழ எங்கேயோ வெறித்த சிறுமி அவ்வப்போது பூசாரியை கோபமாக முறைத்தாள்.பற்களை நறநறவென கடித்து கொண்டாள்.
"பூசாரி வந்துருக்கேன்..நான் பூசாரி...எந்த ஊரு உனக்கு..சொல்லு..எந்த ஊரு ஒனக்கு? என்னா வேனும் ஒனக்கு...சொல்லு என்னா வேனும் ஒனக்கு..?ஏன் இந்த பச்சை புள்ளய புடிச்ச..சொல்லு..என்னா வேனும் ஒனக்கு.."என்றபடி வேபிலையை கிறுகிறுவென சுழற்றினார்.நேரம் ஆக ஆக சிறுமியின் முகம் உக்கிரமானது.
பூசாரி சலைக்காமல் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தார்.எனக்கோ படு பைத்தியக்கார தனமாக இருந்தது.திடீரென அச்சிறுமி பேச தொடங்கினாள்.அக்குரல் ஒரு சிறுமிக்குரியதாய் இல்லை.கரகரப்பான ஒரு வயது வந்த பெண்ணினுடையதை ஒத்திருந்தது.என்னை சுவாரஸ்யம் தொற்றி கொண்டது.
"நான் செம்பகண்டா..."
"எந்த செண்பகம்..?"
"சுபேதார் பேத்தி செண்பகண்டா..."
எனக்கு தூக்கி வாரி போட்டது.செண்பகம் இறந்து குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும்.மேலும் கீழத்தெருவில் இருந்த சுபேதாரையோ,அவரது அற்பாயுளில் இறந்த பேத்தியையோ இந்த சிறுமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.என்ன நிகழ்கிறது?
"இப்ப என்னா வேனும் ஒனக்கு..?"
"ரத்தண்டா...என் புருசன் ரத்தம்...அவன் தான் என்னய கொன்னாண்டா"
அட பாவத்தே என சிறுமியின் தாய் பதறினாள்.செண்பகம் மாரடைப்பில் இறந்ததாக தான் கூறினார்கள்.இப்படி செத்து போனவங்கலாம் ஆவியா வந்து சாட்சி சொன்னா கோர்ட் ஏத்துக்குமா? பலவாறு எனக்கு யோசனை ஓடியது.வேடிக்கையாகவும் இருந்தது.பூசாரி அவரது உதவியாளரிடம் ஏதோ சமிக்கை செய்தார்.உடண் அவன் கோவிலுக்கு பின்புறம் சென்று தலை கீழாக கட்டி தொங்க விடப்பட்ட ஒரு சேவலின் கழுத்தை கத்தியால் கரகரவென்று அறுத்தான்.சேவல் கயிற்றில் தலைகீழாக றெக்கையை படபடவென அடித்து கொண்டது.ஒரு சிறிய கொட்டாங்குச்சியில் கொஞ்சம் ரத்தத்தை பிடித்து கொண்டு வந்து அந்த சிறுமியிடம் நீட்டினான்."இந்தா உன் புருசன் ரத்தம்" சிறுமி வெறித்தபடி அதை பார்த்தாள்.பிறகு ஆங்காரமாக அதை வாங்கி மடமடவென குடித்தாள்.பிறகு மூர்ச்சையாகி விழுந்து விட்டாள்.
அது பழைய கதை.ஆனால் எனக்கே இப்படி நிகழும் போது.? நான் கோவிலுக்கு பின்புறமிருந்த பூசாரியின் வீட்டுக்கு வந்தேன்.பூசாரி குடிசைக்கு வெளியே அதே ஆலமர நிழலில் ஒரு கட்டிலில் படுத்திருந்தார்.என்னை பார்த்ததும்," நாச்சி சமாச்சாரந்தானே? தெரியும்.அது நம்ம சாதி இல்ல..நமக்கு கட்டுப்படாது..தர்ஹாவுக்கு கூட்டிட்டு போ...சரியாயிடும்" என்றார். முதலில் இந்த பேய் பூத சமாச்சாரமே எனக்கு உடன்பட முடியாததாக இருந்தது.இதில் பேய் பிசாசுக்கு கூடவா சாதி மதம் லாம் இருக்கு என எரிச்சலாக வந்தது எனக்கு.நிகழும் சம்பவங்கள் அறிவுக்கு புலப்படாமல் அலை கழித்தது.
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்.ஒருநாள் நாச்சியாவின் வீட்டில் ஓலம் பெரிதாக கேட்டது.ஓடிச்சென்று பார்த்தேன்.செகதாம்பாள் புளிய விளாறால் நாச்சியை விளாசிக் கொண்டிருந்தாள்.நாச்சியாவும் பதிலுக்கு தாக்கினாள்.ஆனால் செகதாம்பாளின் ஆவேசத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அங்குமிங்கும் சுற்றி ஓடினாள்.குடுப்பத்துக்கே பேய் புடிச்சிடுச்சோ என்று தோன்றியது.புளிய விளார் கீறி நாச்சிக்கு கை கால் முகத்திலெல்லாம் ரத்த கோடு கண்டிருந்தது.நான் பேயாட்டம் ஆடும் செகதாம்பாளை தடுக்க முனைந்தேன்.இப்பொழுது செகதாம்பாள் என்னை பிடித்து கொண்டாள்.புளிய விளார் என் முதுகில் X,Y எல்லாம் எழுதியது.தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்து விட்டேன்.இத்தனைக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ஏதென்று கேட்காமல் அமைதியாக இருந்தது விசித்திரமாக இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் ஓலம் அடங்கியிருந்தது.நான் மொட்டை மாடிக்கு சென்று நாச்சியா வீட்டை பார்த்தேன்.செகதாம்பாள் நாச்சியாவை கொல்லையில் உட்காரவைத்து வெந்நியில் குளிப்பாட்டினாள்.பிறகு ஒரு டவராவில் அரைத்து வைத்திருந்த மஞ்சல் பொடியை அவளது காயங்களில் பூசி விட்டாள்.நாச்சியா அரை மயக்கத்தில் இருப்பது போல் தெரிந்தது.அதன் பிறகு நாச்சியாவை பார்க்க முடியவில்லை.
நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் மெல்ல மறந்தும் போனேன்.ஒரு வருடமிருக்கும்,மொட்டை மாடியில் அமர்ந்து வாசித்து கொண்டிருந்தேன்.நாச்சியா வீட்டு கொல்லையில் அமர்ந்து பூ தொடுத்தபடி,செகதாம்பாள் எதிர் வீட்டு மல்லிகா அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"நாச்சியும் புள்ளையும் சௌக்கியமா இருக்காங்களா"-மல்லிகா
"ம்ம்..சௌரியத்துக்கென்ன கொறச்ச"
"இந்த பக்கமே வர மாட்டேங்கிறா"
"எங்க ஒழியுது..."
"புள்ள யாரு ஜாடை?"
செகதாம்பாள் மெல்ல நிமிர்ந்து மாடியில் அமர்ந்திருந்த என்னை முறைத்தாள்.

10 comments:

Nathanjagk said...

சபாஷ் சரியான சிறுகதை! நல்லாத்தான் அடிக்கறீங்க -​வேப்பிலை!! ​கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சு எழுதனீங்கன்னா படிக்க சுளுவா இருக்கும்!! வாழ்த்துக்கள் ​ரெளத்ரன்!

ரௌத்ரன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெகநாதன்.பத்தி பிரிக்க முடியல..ஏதோ பிரச்சினை...

//நல்லாத்தான் அடிக்கறீங்க -​வேப்பிலை!! ​//

திட்டுறீங்களா..வாழ்த்துறீங்களா? :)முதல்ல இது சிறுகதை வடிவத்துல இருக்கான்னே எனக்கு தெரியல.மனசுல படறத நேரடியா சொன்னா உதவியா இருக்கும்.நன்றி!

Nathanjagk said...

நல்ல திகிலா,பரபரப்பா கதைப்​போக்கு இருக்கிறததைதான் - ​வேப்பிலை அடிக்கிறதுன்னு சொன்னேன்! //முதல்ல இது சிறுகதை வடிவத்துல இருக்கான்னே எனக்கு தெரியல// சிறுகதைக்குன்ன ஒரு வடிவம் இருக்குதான்.. ஆனா வடிவத்துக்குள்ள ஒடச்சி அடக்க முடியாத கதைகளை அப்படியே அதன் ப்ளோவில விட்டறதும் ஒரு நல்ல டெக்னிக்தான்!
இங்க ​போயி பாருங்க சிறுகதை எழுதுவதற்கு கர்ட் வானகட் ​சொன்ன முக்கிய குறிப்புகள். பொறுமையாக முழுதையும் வாசித்துப் பாருங்கள். வாசித்து விட்டுச் உங்கள் அபிப்பராயத்தை சொல்லுங்கள்.

ரௌத்ரன் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி ஜெகன்..வாசித்து விட்டு சொல்கிறேன்.

பா.ராஜாராம் said...

எனக்கென்னவோ...ரொம்ப நல்லா வந்திருப்பதாகவே தோனுகிறது ராஜேஷ்.எனக்கும் சிறுகதை கட்டமைப்பு குறித்து ஒன்றும் தெரியாது.ஆனால்,சுவராஸ்யமாய் இருக்கு.தொடங்கியதும்,முடித்ததும் தெரியவில்லை.முடிவு மட்டும் எதார்த்த குறைச்சல் தோன்றியது.கிராமத்தின் காட்ச்சியும்,மொழியும் மிக யதார்த்தம் ராஜேஷ்.

ரௌத்ரன் said...

நன்றி ராஜாராம் சார்...எழுத வருகிறதா என்று பார்க்கவே எழுதுகிறேன்.எழுத எழுத வருமென நினைக்கிறேன்.பார்க்கலாம்.

தமிழன்-கறுப்பி... said...

இன்னும் படிக்கல...

ரௌத்ரன் said...

இதெல்லாம் நெம்ப ஓவர் ஆமா...

ரௌத்ரன் said...

வாங்க ஸ்ரீமதி...நீங்களாவது படிச்சீங்களா..இல்ல கறுப்பி கத தானா? :)

Unknown said...

படிச்சேன் :)))