Friday, February 26, 2010

Baraka - ஓர் அற்புத ஆவணம்.



Ron Fricke இயக்கிய இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது வாழ்வு ஒரு சுத்தமான பரிசு என்ற ஓஷோவின் சொற்கள் தான் நினைவிற்கு வந்தது.ஒரு துறவியென தியானம் கொண்டிருக்கும் இமயமலை சாரலும் அவ்வெளியில் மிதக்கும் பறவையும், அகவெளியினை மயில் தூவியென வருடும் Michel stearns ன் உன்னதமான பிண்ணனி இசையுமாக விரியும் இப்படம் ஒரு அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.இப்படத்தை பெரிய திரையில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Baraka என்ற சூஃபி சொல்லுக்கு ஆசிர்வாதம் என பொருள் கொள்ளலாம்.விளக்கங்களோ,காட்சிபடுத்தப்பட்ட பிரதேசங்கள் குறித்த குறிப்புகளோ கூட இல்லாமல் நாடோடி போல் அலைந்து திரியும் இப்படத்தின் திரைக்கண்கள் ஓரங்குலமும் நகராமல் ஓர் உன்னத ஆன்மீக யாத்திரையை உள்ளே நிகழ்த்திவிட்டதான அனுபவத்தையே தருகிறது.மாபெரும் படைப்புகள் மௌனங்களால் செய்யப்பட்டவையாகவே இருக்க வேண்டும்.அவை நமக்கு தரும் மேலான பரிசுகளும் இந்த மௌனத்தையே.

பனிப்புகை சூழ விரியும் ஜப்பானிய பனிமலை பிரதேச ஏரியொன்றில் அமிழ்ந்தபடி தியானிக்கும் குரங்கும்,அந்தகார நட்சந்திரங்களுமாக திரையில் விரியத்தொடங்குகிறது கனவு வெளி.மெல்ல நேபாளத்தின் காட்மண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயரின் புராதண நகருக்குள் நுழைந்து பழைய கோயில்கள் ஸ்தூபிகள் என காட்சி படுத்தி நகர்கிறது.நேபாளம் பெரும்பாண்மை ஹிந்து மத நெறியாள்கைக்கு உட்பட்டது என செய்தியாகவே அறிந்திருக்கிறோம்.படத்தில் பார்க்கும் பொழுது குறைந்தது அருகில் இருக்கும் இந்த நாட்டிற்காவது சென்று வந்திருக்கலாமே என்றே எண்ண தோன்றியது.காட்சிபடுத்தப்பட்டிருக்கும் கோயில்களும் அந்நகரின் எளிய மக்களும் மிகவும் வசீகரிக்கின்றனர்.எவ்வித தொடர்புமின்றி சட்டென திபெத்திய புத்த விகாரைக்குள் நுழைந்து பிக்குகளும் அவர்களது சடங்குகளுமான நிலவெளிக்கு அழைத்து செல்கிறது கேமரா.

புனித நூலை வாசிக்கும் ஒரு ஹிந்து சாதுவின் சமஸ்கிருத எழுத்துக்கள் ஹீப்ரு மொழியாகி இஸ்ரேலின் பாதிரி கைகளுக்குள் அமிழ்ந்து பின் ஜெருசலத்தில் உள்ள யூத வழி பாட்டில் என கிளை மாறி கொண்டேயிருக்கிறது படத்தொகுப்பு.சூஃபிக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுழல் நடனம் ஆடும் துருக்கி டெர்விஷ்கள்,இந்த நடனத்தை கற்று மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர் என குருட்ஜீஃபை சொல்ல வேண்டும்.ஜெருசலத்தில் உள்ள மாபெரும் கிறிஸ்தவாலயம்,திபெத்திய மடாலயமொன்றில் தீபங்களேற்றி தியானிக்கும் பிக்கு என மாறியபடி நகரும் காட்சிகள் உலகின் வெவ்வேறு நிலவெளிகளில் தோன்றிய புனித நூல்கள் மதங்கள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் என பரிணமித்திருக்கும் மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன என்ற கேள்வியை வழியெங்கும் இரைத்தபடியே நகர்கிறது.

இயற்கை வளம் நிறைந்த இந்தோனேஷிய மலைப்பிரதேசங்களும்,நெல்வயல்களும் ஒரு கணம் ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவலை நினைவு படுத்தியது.கம்போடியாவின் அங்கோர் வாட்டில் இரண்டாம் சூர்யவர்மனால் 12ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மிக பிரமாண்டமான கோயில் பிரமிக்க வைக்கிறது.இந்தோனேஷிய பாலி தீவில் உள்ள மக்களால் நிகழ்த்தப்படும் Kecak எனப்படும் ஒருவகை குரங்கு நடனம் சிலிர்க்க வைக்கிறது.ராமாயண காதையின் வானரர்கள் ராமனுக்கு உதவிய நிகழ்வின் வெளிப்பாடு என கூறப்படும் இந்நடனம் அல்லது வழிபாடு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.ஆண்களின் கூட்டம் ஒரு காதில் பூ சகிதம் கூட்டமாக அமர்ந்து வினோத ஒலிகளையும் உடல் மொழியையும் வெளிபடுத்துகின்றனர்.இந்தோனேஷியா,தாய்லாந்து என ராமாயணம் பல நாம ரூபங்களில் பல நாடுகளில் உலவுகிறது என ஜமாலன் சார் ஒருமுறை கூறியது நினைவு வருகிறது.

கம்போடிய புத்த விகாரகைகள்,பிக்குகள்,வெடித்து ஆறாத அந்நிலவெளியின் எரிமலை,ஆஸ்த்ரேலிய பழங்குடியினரின் விநோத நடனம் மற்றும் வழிபாடு என மாறி மாறி வியப்பிலாழ்த்தியபடி பயணம் செய்கிறது படம். பிரேசிலின் அமேசான் காட்டு பழங்குடியினர்,ஆஸ்த்ரேலிய குகை மனிதர்களின் சுவரோவியங்கள் மற்றும் அபோரிஜின் பழங்குடியினர்,காயோபா பழங்குடியினர் என எளிதில் காண கிடைக்காத பழங்குடியினரின் காட்சிபதிவுகளின் தொகுப்பாக உள்ளது இப்படம்.

எங்கோ இந்தோனேஷிய தொழிற்சாலையில் சிகரெட்டிற்கு புகையிலை சுருட்டும் பெண்கள் அடுத்த காட்சியில் ஜப்பானின் ஏதோ ஒரு நெரிசலான பேரூந்து நிலையத்தில் நின்று புகைத்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானியன் என படத்தொகுப்பில் குறுங்கவிதைகளும் முயன்றுள்ளனர்.கம்போடிய சித்ரவதை கூடங்கள்,சித்ரவதை முகாமில் இருந்தோரின் புகைப்படங்கள்,ஜப்பானிய குண்டு வீச்சின் பாதிப்புகளை மௌனமாக நடித்து காட்டும் Butob கலைஞர்,ஆயுதம் ஏந்தி நிற்கும் காவலர்கள்,சித்ரவதை முகாமில் குவிந்து கிடக்கும் மண்டையோடுகள்,எங்கோ ஒரு நகரத்தில் சாலையில் செல்பவனை அழைக்கும் ஒரு பாலியல் தொழிலாளி,கல்கத்தாவின் குப்பை பொறுக்கும் விளிம்புநிலை மனிதர்கள்,பிளாட்பார பிரஜைகள் என மானுட துயரையும் காட்சி படுத்தியபடி விரியும் விவரணைகள் நம்மை நிசப்தமாக்குகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த சௌதி அரேபியாவின் மக்கா போன்ற பிரதேசங்களிலும் அங்கு நிகழும் தொழுகைகளையும் எப்படி அனுமதி பெற்று படம் பிடித்தார்கள் என்றே வியப்பாக இருக்கிறது.

இந்தியாவில் வாரணாசி போன்ற கங்கை கரையோர சடங்குகளையும் வழிபாடுகளையும் படம் பிடித்துள்ளனர்.ஆப்ரிக்கா,கென்யா,தான்சானியா,அர்ஜெண்டைனா,எகிப்து உட்பட மொத்தம் 24 நாடுகளில் உள்ள மிகப்பழமையான மடாலயங்களையும்,ஸ்தூபிகளையும்,சடங்கு வழிபாடுகளையும் பதிவு செய்திருக்கும் இப்படம் 14 மாத கடுமையான உழைப்பில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிலவெளிகளையும், மனிதர்களையும், நாகரீகங்களையும்,துயரங்களையும் ஒருங்கே காணும் மனதில் வறட்டு நாத்திகத்தை புறந்தள்ளி எழுப்பும் அழுத்தமான கேள்வி இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன?

அவசியம் காண வேண்டிய ஒரு அரிய ஆவணப்படம்.




1 comments:

said...

பகிர்வுக்கு நன்றி ரௌத்ரன்.