Friday, March 19, 2010

சில பயணங்கள்...சில அனுபவங்கள்...

பள்ளி நாட்களிலிருந்தே பயணங்களின் மீது ஒவ்வாமை தான்.தவிர்க்க முடியாத சூழல் தவிர எங்கு செல்வதானாலும் என் இரு சக்கர வாகனத்தில் தான் செல்வது.பத்தாம் வகுப்பு வரை ஹெர்குலிஸ் சைக்கிள்(அதற்கு டாடா குஜிலி என பெயர் வைத்திருந்தேன்).பிறகு ஒரு டி.வி.எஸ் சேம்ப்.கல்லூரி நாட்களில் ஹோண்டா பேஷன்.வேலையில் சேர்ந்த பிறகு வட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல நேர்ந்ததால் இந்த ஒன் மேன் ஆர்மியிலிருந்து சோசலிஸ சிறைக்குள் மீண்டும் சிக்க வேண்டியதாகி விட்டது.

உலகிலேயே மனித உடலை துச்சமாக மதிக்கும் ஒரே தேசம் நம் தேசமாக தான் இருக்குமோ என நினைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது நம் போக்குவரத்து துறைகளும் சாலைகளும்.பேரூந்து என்றால் முழங்கால் இடிக்கும் இருக்கை.(கதிர் போன்ற ஆறடி ஆஜானுபாகுக்களுக்கு இந்த அவஸ்தை புரியும்).போதாக்குறைக்கு மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று நான்கு பேராக பிதுக்கி கொண்டு அமர்வது.பக்கத்தில் அமர்ந்திருப்பவன் குறித்த எந்த லஜ்ஜையுமின்றி எட்டி எட்டி ஜன்னல் வழியாக பான்பராக்,வெற்றிலை என்று குதப்பி துப்புவது.இதைவிட கொடுமை இடித்து கொண்டு நிற்கும் சாக்கில் இடுக்கில் கைவிட்டு சல்லாபம் செய்வது.

இதில் பெண்களை நோண்டுவது ஒரு வகையினர் என்றால் ஆண்களை நோண்டுபவர்களும் இருக்கிறார்கள்.வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வாகனங்களில் இப்படி வதை பட்டதுண்டு.ஒருமுறை சோலாப்பூரிலிருந்து பரலி செல்லும் வழியில் எசகு பிசகாக இப்படி ஒருத்தன் அருகில் அமர்ந்து விட்டான்.அதுவோ 200 கிலோமீட்டர் தூர பயணம்.அடிக்கடி பேரூந்துகள் கிடையாது அந்த ஊருக்கு.இரவு வேறு.ரொம்ப நல்லவனாக பேசி கொண்டு வந்தவன் தூங்க ஆரம்பித்த பிறகு நோண்ட ஆரம்பித்து விட்டான்.அடுத்தவனுக்கு கர சேவை செய்து விடுவதில் அப்படி என்ன ஆனந்தமோ இவர்களுக்கு.அழாத குறையாக உனக்கு என்ன தாண்டா வேனும் என்றேன்.போர் அடிக்குதே என்றான்.பாவிப்பயல்.


பஸ்ஸில் இப்படியான லோலாயி என்றால் ரயில் பயணங்கள் இன்னும் விஷேசமானவை.முதல் காதல் முதல் முத்தம் போல முதல் பயணங்களும் சுவாரஸ்யமானவை தான்.முதன் முதலாக சென்ற நீண்ட தூர ரயில் பயணம் சென்னையிலிருந்து கோரமண்டலில் ஒரிஸா சென்றது தான்.கட்டக் ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு ரயில் செல்லும் என தெரியவில்லை.கம்பார்ட்மெண்டிலிருந்த ஒரு தமிழரோடு பேசிய படி வந்தேன்.அவருக்கும் கட்டக் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.ஒரு ஒரிஸா இளைஞன் எங்களை பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தான்.பேசிக் கொண்டு வந்த நண்பர் வடநாட்டான்களை ஏதேதோ காரணங்களுக்கு ஏகத்துக்கும் விளாசி கொண்டு வந்தார்.அந்த இளைஞன் வேறு எங்களை அடிக்கடி திரும்பி பார்த்ததால் இவனுக்கு என்ன வேனும்னு தெர்லயே.நாதாறிப்பய நம்மளயே பாக்குறேனே என வேறு சாடை சொன்னார்.பிறகு வழியிலேயே இறங்கி விட்டார்.அவர் இறங்கிய பிறகு அழகாக தமிழில் பேச தொடங்கினான் அவன்.அசந்து விட்டேன்.அவனும் கட்டக்கில் தான் இறங்கினான்.சென்னையில் மென்பொருள் துறையில் இரண்டு வருடங்களாக பணி செய்வதாக கூறினான்.பொறுமையாக ரயில் நிலையம் விட்டு வந்து நான் செல்ல வேண்டிய ஊரின் பேரூந்தை காட்டி விட்டு தான் சென்றான்.அப்பொழுது ஹிந்தி எழுதவோ பேசவோ தெரியாது.


ஹிந்தி தெரியாமல் தனியே வட மாநிலங்களில் பயணம் செய்வது ஒரு அலாதியான அனுபவம்.ஊர் பெயர் ஆங்கிலத்தில் இருக்காது.படித்தும் பட்டிக்காட்டானாக இந்த பஸ் எங்க போவுது எனக்கேட்க கொடுமைகாயக இருக்கும்.சிரித்து கொண்டே மூச்சுக்கு முன்னூறு தரம் சாலா மதராஸி என்று திட்டுவார்கள்.எல்லாம் தார் பூசி அழித்த புரட்சியின் பலன்.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமென பணி நிமித்தம் அங்கே அலைய நேரும் பொழுதுதான் எல்லாம் புரியும்.ரயிலில் வசதியாக முதல் வகுப்பில் பயணிப்பதில் சிக்கல்கள் இருப்பதில்லை.இரண்டாம் வகுப்பு கழிவறைகளில் மலம் கழிப்பது போன்ற துர்பாக்கியம் வேறொன்றுமில்லை.தண்ணீர் ஊற்றி கழுவ டப்பா ஒன்றும் இருக்காது.அடிக்கடி பயணம் செய்பவர்கள் தெளிவாக சோப்பு சீப்பு டப்பா சகிதம் வந்து விடுவார்கள்.எனது முதல் பயணத்தில் இந்த டப்பா இல்லாத பிரச்சினையால் கக்கூஸ் போகக் கூடாதென ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீரையும் தேனீரையும் மட்டுமே குடித்து பயணித்தேன்.பிறகான நாட்களில் முதல்வேளையாக இரண்டு லிட்டர் பாட்டில் ஒன்று வாங்கி கொள்வது.மறக்காமல் பர்ஸில் ஒரு பிளேடு வைத்து கொள்வது.விடிந்ததோ இல்லையோ பாட்டிலை இரண்டாக அறுத்து டப்பாவாக்கி விடுவது.இப்படி எப்பொழுதும் பிளேடோடு மிக இயல்பாக பயணித்த நாட்கள் இப்பொழுது சிரிப்பை வரவழைக்கிறது.


குளிரூட்டப்பட்ட வாகனங்களில் நெடுந்தூரம் செல்வதென்றாலே எனக்கு அடிவயிறு கலக்கும்.அடிக்கடி மூத்திரம் வரும்.அராஜகமாக எங்கேயும் நிறுத்தாமல் வேறு போய் கொண்டிருப்பார்கள்.அப்படியே நிறுத்தினாலும் இன்னொரு தொந்தரவு எனக்கு.சுற்றிலும் கூட்டமாக ஆட்கள் இருந்தால் சிறுநீர் சொட்டு கூட வராது(எனக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட விசித்திர பிரச்சினைகளெல்லாம் வருகிறதா என்ற சந்தேகத்தை கதிர் சமீபத்தில் தான் தீர்த்து வைத்தார்).எவ்வளவு முக்கினாலும் இரக்கமேயில்லாமல் 'ம்ஹீம் வரமாட்டேன் போ' என அழிச்சாட்டியம் செய்யும்.சினிமா கொட்டாய்,பொது/பேரூந்து கழிப்பிடம் இங்கேயெல்லாம் படாத பாடு தான்.நமக்கே இப்படியென்றால் இந்த பெண்கள் பாடெல்லாம் எப்படியோ எனத் தோன்றும்.ஆனாலும் உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம் உள்ளவர்கள் நம் மக்கள் தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.காரணம் வகை தொகையில்லாமல் கோயில்களில் கூடும் கூட்டம் தான்.பொறுமை சகிப்பு தன்மை போன்ற வஸ்துக்களை வளர்த்து கொள்ளவாவது வாழ்வில் ஒரு முறை திருப்பதி சென்று வர வேண்டும் என நண்பர்களிடம் கூறுவேன்.குடும்பத்தோடு திருப்பதிக்கு பயணம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மாரியாத்தாளுக்கு தீமிதிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் வந்தால் தயங்காமல் இரண்டாவதையே தேர்வு செய்வேன்.அவ்வளவு கொடுமையாக இருந்தது அந்த பயணம்.மாட்டை பட்டியில் அடைப்பது போல் ஒரு இரவு முழுக்க கூண்டில் அடைத்து இம்சை செய்தார்கள்.பிறகு தான் பைசா கொடுத்து பெருமாளை சட்டுனா ஷேவிக்கும் டெக்னிக்கெல்லாம் நண்பர்கள் கூறினார்கள்.போங்கடா நீங்களும் உங்க பெருமாளும் என அத்தோடு முழுக்கு போட்டு விட்டேன் கோயில்களுக்கு.


மிகவும் சராசரி மனிதர்களான நமக்கே பயணங்களில் இவ்வளவு தொந்தரவு.திருநங்கைகளை பற்றி யோசித்திருக்கிறோமா? சௌதி கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன்னர் கதிர் தொலைபேசினார்.விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் திருநங்கைகளின் தாலி அறுக்கும் சடங்கு நடக்கப்போகிறதென்று.என் நண்பன் தஷ்னாவை அழைத்து கொண்டு பைக்கில் கிளம்பி விட்டேன்.கூவாகத்தில் கதிர் எங்களுக்காக காத்திருந்தார்.
கூவாகம் ஒரு சின்ன கிராமம்.இங்கே இருக்கும் ஒரு சிறிய கோவிலில் தான் இந்த சடங்கு வருடந்தோறும் நிகழ்கிறது.தெம்பாக முட்ட முட்ட குடித்து விட்டு உள்ளே நுழைந்தால் போதையெல்லாம் தெளிந்து விட்டது.இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து கூடியிருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தியது.

திருநங்கைகள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை(எளியவர்களின் மீதான பரிதாபமும் ஒருவகையில் வன்முறையே என நினைக்கிறேன்)அங்கீகாரத்தை கூடயில்லை.உரிமைகளை மட்டுமே.வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்பதை அங்கே சென்ற பொழுது முழுமையாக உணர முடிந்தது.நாங்களும் மனுஷங்க தாண்டா என்ற குமுறலை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.ஜே ஜே என்று எங்கெங்கும் கூட்டம்.வயல்வெளிகள் சூழ்ந்த அக்கிராமத்தில் முளைத்திருந்த குட்டி குட்டி பனியார கடைகள்.தள்ளு வண்டிகள்.நான் பார்த்து பிரமித்த ஒரே திருவிழா அது தான்.ஆங்காங்கே அழகி போட்டிகள்.ரெக்கார்ட் டேன்ஸ் என களை கட்டியிருந்தது.விடிய விடிய சாரி சாரியாக மக்கள் வருவதும் போவதும்.நேர்த்தி கடனுக்கு தாலி கட்டி கொள்ள வரும் சராசரி கிராம குடியானவர்களுமென அற்புதமான நிகழ்வு அது.அங்கேயும் குறியை கையில் பிடித்தபடி உராய்வுக்கு அலையும் கிழங்கள் சில்வாண்டுகள் இல்லாமல் இல்லை.திருநங்கைகளை சீண்டுவது.ஊசிகளால் குத்துவது என மன வியாதியஸ்தர்கள் இல்லாமல் இல்லை.அலைந்து அலைந்து ஓய்ந்து போய் நானும் கதிரும் நண்பர்களும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம்.எங்கிருந்தோ ஒரு திருநங்கை சரக்கு பாட்டிலோடு ஓடி வந்து எங்களை விரட்டினார்.கதிர் தான் என்ன ஏதென்று விசாரித்தார்.ஆங்காரமும்,அழுகையுமான குரலில் ''நாங்க ஏதோ விதிய நொந்து வரோம்,எங்கள ஏண்டா இம்சை பண்றீங்க,ஊசியால குத்துறீங்க,எங்களுக்கென்ன எரும தோலா,வலிக்குதுல்ல..உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு இப்படி ஆயிருந்தா தாண்டா தெரியும் என பொத்தாம் பொதுவாக வெடித்து விட்டு போனார்.கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவியது எங்களிடையே.

பயணங்கள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொரு தெருமுனை சிறு கல்லும் சொல்ல காத்திருக்கிறது.தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை.


15 comments:

said...

///பயணங்கள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொரு தெருமுனை சிறு கல்லும் சொல்ல காத்திருக்கிறது.தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை. ///

மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்த வரிகள். அகநாழிகையில் வந்த உங்களின் புதிய இடுகையையும் வாசித்தேன். வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, நன்றி.

said...

வாசித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி செல்வநாயகி...

said...

கிட்டத்தட்ட ஒருவருடம் கழித்து இதைப்பற்றி எழுதியிருக்கிங்க. ஒவ்வொரு வருடமும் கூவாகம் போகணும்னு தோன்றினாலும் முதல்முறையா போனபோதே இனிமே அங்க போகக்கூடாதுன்னு முடிவுபண்ணினேன் அவ்வளவு கொடூரமா இருந்தது நிகழ்வுகள். சகமனிதர்கள் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை அந்த ஒரு நாளில் அதிகம் என்றே நினைக்கிறேன். சமீபத்திய டெல்லி பயணம் செல்கையில் ஒரு திருநங்கை காசுகொடுக்காமல் போனதற்காக என்னை திட்டினார் கூடியிருந்த அத்தனைபேரும் சிரித்தனர். வரும்போதும் அப்படியே ஆனால் இந்த திருநங்கை முத்தம் ஒன்றை தந்துவிட்டுப்போனாள்.

பயணங்கள்னு சொல்லிட்டு கொஞ்சமா எழுதிருக்கிங்க. அவ்ளோதானா...

said...

வாங்க கதிர்...ரொம்ப நாள் கழிச்சு ஏரியாக்குள்ள வர்றீங்க...உங்கள உள்ள கொண்டு வர எவ்ளோ அக்கப்போர எழுத வேண்டியிருக்கு பாருங்க :)

அட அடிவாசல்ல இப்டி ஒரு ஊர வச்சுக்கிட்டு...வர மாசம் அங்க போய் ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்க முயற்சி பண்ணுங்க...மே மாசம் தானே அந்த விழா வரும்...

டெல்லில உம்மா வாங்குனத சொல்லவேஏஏஏஎயில்ல்ல்ல :)

அதுசரி...நாலு வரி எழுதுனதுக்கே படிக்க நாதியில்ல...இப்போல்லாம் எது சொன்னாலும் 3 வரில முடிச்சுடனுங்றாய்ங்க :))

said...

//உலகிலேயே மனித உடலை துச்சமாக மதிக்கும் ஒரே தேசம் நம் தேசமாக தான் இருக்குமோ//

நல்லா இருந்தது உங்க பதிவு.

said...

வருகைக்கு நன்றி சுரேஷ் கண்ணன்...

said...

நாங்க ஏதோ விதிய நொந்து வரோம்,எங்கள ஏண்டா இம்சை பண்றீங்க,ஊசியால குத்துறீங்க,எங்களுக்கென்ன எரும தோலா,வலிக்குதுல்ல..உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு இப்படி ஆயிருந்தா தாண்டா தெரியும் - Too painful :(

said...

வருகைக்கு நன்றி தோழி...

said...

அருமையான அட்டகாசமான நடை உங்களது
mark it u will go places

said...

நன்றி பத்மா...ஆரூடத்திற்கும் :)

said...

//திருநங்கைகள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை(எளியவர்களின் மீதான பரிதாபமும் ஒருவகையில் வன்முறையே என நினைக்கிறேன்).....நாங்களும் மனுஷங்க தாண்டா என்ற குமுறலை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.// ஆழமான வரிகள். நல்ல இடுகை.

said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உமா...

said...

// அழாத குறையாக உனக்கு என்ன தாண்டா வேனும் என்றேன்.போர் அடிக்குதே என்றான்.பாவிப்பயல்.//

தல பசங்க பிரச்சனை தண்ணில மீன் அழுவுரமாதிரி கேக்க நாதி இல்லை
இதே பொண்ணா இருந்தா எத்தன பேர் கேப்பானுங்க

அடி பலமோ விடுங்க தல

//தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை. ///

நீங்க தான்யா உண்மையான எலக்கியவாதி :-))

said...

//தல பசங்க பிரச்சனை தண்ணில மீன் அழுவுரமாதிரி கேக்க நாதி இல்லை
இதே பொண்ணா இருந்தா எத்தன பேர் கேப்பானுங்க//

ஆனா கேக்குறதோட நிறுத்த மாட்டானுங்களே :)

உங்க வருத்தம் புரியுது நண்பா...நம்ம வருத்தத்த புரிஞ்சுக்கிட்டதுக்கும் நன்றி...உங்களுக்கும் இப்டி ஊரப்பட்ட அனுபவம் உண்டு போல..தண்ணீல மீன் அழுவுதா..ஏன் நண்பா டி.ராஜேந்தர் பாட்டா கேக்குறீங்களா :))

//நீங்க தான்யா உண்மையான எலக்கியவாதி //

இப்டிலாம் குனிய வச்சு கும்மி அடிக்காட்டி தூக்கம் வராதாய்யா உங்களுக்கு :))

நன்றி கார்த்திக்...வெறும் புள்ளய்வோ பிளாக்கா படிக்காதீங்கய்யா..அப்பப்போ கடை பக்கம் வந்து போவ இருங்க :)

said...

//தல பசங்க பிரச்சனை தண்ணில மீன் அழுவுரமாதிரி கேக்க நாதி இல்லை
இதே பொண்ணா இருந்தா எத்தன பேர் கேப்பானுங்க//

ஆனா கேக்குறதோட நிறுத்த மாட்டானுங்களே :)

உங்க வருத்தம் புரியுது நண்பா...நம்ம வருத்தத்த புரிஞ்சுக்கிட்டதுக்கும் நன்றி...உங்களுக்கும் இப்டி ஊரப்பட்ட அனுபவம் உண்டு போல..தண்ணீல மீன் அழுவுதா..ஏன் நண்பா டி.ராஜேந்தர் பாட்டா கேக்குறீங்களா :))

//நீங்க தான்யா உண்மையான எலக்கியவாதி //

இப்டிலாம் குனிய வச்சு கும்மி அடிக்காட்டி தூக்கம் வராதாய்யா உங்களுக்கு :))

நன்றி கார்த்திக்...வெறும் புள்ளய்வோ பிளாக்கா படிக்காதீங்கய்யா..அப்பப்போ கடை பக்கம் வந்து போவ இருங்க :)