Saturday, March 20, 2010

ரெஜியின் பூனை...


புசுபுசுவென வெள்ளை நிறத்தில் சோகமாக உலவும் அந்த பூனையை, இதற்கு முன் இங்கு பார்த்ததில்லை.எங்கிருந்தது இது.எப்படி வந்தது இங்கு.யாருக்கும் தெரியவில்லை.இந்த விடுதியை சுற்றி நிறைய பூனைகள் இருக்கின்றன.பூனைகளிடம் உள்ள நல்ல குணம் நாய்களை போல் அவை ஒரு புதிய நபரிடம் சட்டென விரோதம் கொள்வதில்லை.எனினும் சக பூனைகளோடு இந்த புசுபுசு நட்பு கொள்ளவில்லை.பிற பூனைகளை போல் விடுதியாளர்கள் வீசும் மீத உணவுகளுக்கு போட்டியிடுவதில்லை.ஒரு கௌரவமான மனிதரால் வளர்க்கப்பட்ட பூனையாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டேன்.எனக்கு பூனைகளை பிடிக்காது.எனினும் இப்பூனை என்னை போலவே தனித்து விடப்பட்டிருப்பதாக தோன்றியது.பூனைகளின் உலகம் கேலி செய்யப்படுகிறது.பூனைகளை சுலபமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.புரிந்து கொள்ள முடியாதவை எப்பொழுதும் கேலிக்குள்ளாகின்றன.அல்லது கடுமையாக ஒதுக்கப்படுகின்றன.

நேற்றிரவு பெய்த மழையில் தொப்பலாக நனைந்து விட்டது புசுபுசு.குளிரில் வெடவெடத்து ஒண்ட இடமின்றி என் அறைவாசலில் படுத்து கிடந்தது.அதன் கண்கள் பசியில் மிகவும் சோர்ந்திருந்தது.மிருதுவான நனைந்த அதன் ரோமங்களை வாஞ்சையோடு வருடி விட முனைந்தேன்.சட்டென தலை தூக்கி தொடாதே என்றது.பூனைகளின் சுபாவம் அது.அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.நாய்களை போல் பூனைகளை சில ரொட்டி துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது.பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை.கைகளை இழுத்து கொண்டேன்.அறையிலிருந்த கொஞ்சம் பிஸ்கெட்டுகளை எடுத்து வந்து கொடுத்ததும் அமைதியாக வாங்கி கொண்டது.கடுமையான பசியிலும் நளினமாகவே உண்ணும் புசுபுசுவை பார்க்க பரிதாபமாக இருந்தது.ஒரு புதிய நபரிடம் சட்டென உரையாடலை தொடங்குவதில் உள்ள அபத்தங்களில் மௌனமாக இருந்தேன்.மேலும் பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல.அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன.பூனைகளின் மொழி கவிதையால் ஆனது

விரும்பினால் என் அறையில் இன்றிரவு ஓய்வெடுத்து கொள் எனக் கூறி உள்ளே சென்று விட்டேன்.மிகுந்த தயக்கங்களுக்கு பின் அது என் அறை வந்தது.என் சுழல் நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டது.கேள்விகளால் வழியும் என் பார்வையை தவிர்த்து மூலையில் கிடந்த கிதாரை ஏக்கமாக பார்க்க தொடங்கியது.வெளியே மழை அடர்ந்து கொண்டேயிருந்தது.கண்ணாடி சன்னலில் மின்னல் கோடுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறைக்குள் ஒரு மெழுகு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.கிதாரை எடுத்து மீட்ட தொடங்கினேன்.'என் இனிய பொன் நிலாவே' என மெலிதாக பாடியபடி வாசித்து கொண்டிருந்தேன்.அறையின் கூரை மேல் சடசடத்த மழையொலியின் தாளம் விவரிக்க இயலாத கிளர்வுகளை தந்தது. 'பன்னீரை தூவும் மழை' என நான் உருகி கொண்டிருந்தேன்.அருந்தியிருந்த மதுவும் மழைக்குளிரும் ஒரு வித மயக்க நிலையை தந்துவிட்டிருந்தது.புசுபுசுவும் இப்பாடலில் தன் வசமிழந்திருக்க வேண்டும்.அதன் மெல்லிய விசும்பலே என் நினைவை மீட்டது.கிதாரை மூலையில் சாய்த்து விட்டு புசுபுசுவையே பார்த்து கொண்டிருந்தேன்.மன ஓட்டங்களை வாசிக்க தெரிந்திருக்கிறது புசுபுசு.கண்களை துடைத்தபடி,ரெஜி நன்றாக பாடுவான்.அவன் பியானோ வாசித்தால் நாளெல்லாம் கேட்கலாம் என தொடங்கியது.நான் கோப்பையிலிருந்த மீத மதுவை அருந்தியபடி கட்டிலில் சரிந்து கேட்க ஆரம்பித்தேன்.

புசுபுசு எனக்கு மிருதுவை நினைவு படுத்தியது.நான் மெல்ல மெல்ல ரெஜியாக மாறி கொண்டிருந்தேன்.மிருதுவை கிராமத்தில் உள்ள தாமரை குளத்தில் தான் முதலில் சந்தித்தேன்.என்னை போலவே இருண்ட குளக்கரை படிக்கட்டுகளில் தனித்திருந்தாள்.இரவில் நட்சத்திரங்கள் மிதக்கும் அக்குளத்தை நாங்கள் இமைக்காமல் பார்த்திருப்போம்.சொற்களின் பொருளின்மையை உணர்ந்திருந்தோம்.எங்கள் சம்பாஷனை புன்னகைகளால் ஆனது.நாங்கள் குளத்தில் மிதக்கும் நட்சத்திரங்களை விழுங்க முயன்று தோற்று போகும் மீன்களை ரசித்திருந்தோம்.மிருது சிலசமயம் தன்னை மறந்து பாடுவாள்.

நாடோடி நிலவே
எங்கே உன் கூடு
யாரை தேடி திரிகின்றாய்
அறிவாயோ நிலவே
அவன் பெரும் கள்வன்
நீயில்லா நேரம் வருகின்றான்...


நான்கு படித்துறைகளும் அவள் பாடலில் லயித்திருக்கும்.சத்தமெழுப்பாமல் நீர்க்கோழிகளும் தவளைகளும் கூடி ரசித்திருக்கும்.உய் உய் என சுழலும் காற்று அவள் கூந்தலையும் ஆடைகளையும் களைத்து விளையாடும்.ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த அன்றைய இரவில்,அவள் படித்துறையில் அமர்ந்து விரல்களால் நீரை அலைந்தபடி இருந்தாள்.காயும் நிலவொளியில் எங்கிருந்தோ வந்த மீன் கொத்தி ஒன்று நின்ற இடத்தில் சிறகடித்து சட்டென இறங்கி ஒரு மீனை கவ்வி பறந்தது.அவள் என்னிடம் திரும்பி நீயும் அந்த மீன் கொத்தி தான் என்றாள்.நாங்கள் குளத்தில் இறங்கி நீந்த தொடங்கினோம்.நிலவொளியில் மலர்ந்திருந்த தாமரைகளை நோக்கி சென்றோம்.ஆழம் அதிகமிருந்த அக்குளத்துள் அவள் மீனை போல் நீந்தி கொண்டிருந்தாள்.கனநேரமே எனினும் அக்கனவு வந்து போனது.

ஒரு பறவையை போல் மிருதுவாய் என் கைகளில் ஏந்தி கண் மூடி காத்திருக்கும் அவளை பார்த்து கொண்டேயிருக்கிறேன்.மழையில் நனைந்த குருவி போல் வெடவெடத்து கொண்டிருக்கிறாள்.சிலிர்த்து சிலிர்த்து அடங்கும் அவள் பின் கழுத்து பூனை ரோமங்களை வருடியபடி மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்.

'நீயொரு தொட்டாற்சினுங்கி'

மீண்டும் சினுங்க தொடங்கியவள் முஷ்டி மடக்கி வலிக்காமல் என் மார்பில் குத்துகிறாள். 'தொட்டாற்சினுங்கி உன்னை காதலிக்குமா? அது உனக்கு முத்தம் கொடுக்குமா ? சொல்லடா மானங்கெட்டவனே' என புரியாத ஒரு மொழியில் வசை பாடி துரத்துகிறாள்.அவளை மேலும் சீண்டி செந்தமிழில் வையடி என் மறத்தமிழச்சி என்றபடி வெற்றிலை காட்டுக்குள் ஓடுகிறேன்

கண்ணாமூச்சி ஆடி களைத்து நிற்பவளை பின்னால் வந்து கட்டியணைக்கிறேன்.பொய் கோபத்தில் என்னை உதறியபடி 'சீ..சீ வெட்கங்கெட்டவனே...சண்டாளா...கன்னியொருத்தி தன்னந்தனியே சிக்கி கொண்டால் அவளிடம் நீ காட்டும் கண்ணியம் இதுதானா.தொடாதே..தூரச்செல்' என என்னை கோபிக்கும் கணத்தில் உறைக்கிறது.ஏன் எல்லாம் கறுப்பு வெள்ளையாக தெரிகிறது எனக்கு.அவள் நின்ற இடத்திலிருந்து சர்ப்பம் ஒன்று நெளிந்து காற்றில் மறைகிறது.பச்சை கொடிகள் எல்லாம் சாம்பல் நிற சர்ப்பங்களாக நெளிகின்றன.வெற்றிலை கொடிகள்,மண்,மேகம்,வானம் எதிலும் நிறமில்லை.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்கிறேன்.இப்பொழுது மிதந்து அசையும் இரு கறுப்பு வெள்ளை உதடுகளை தவிர வேறு உருவங்களே புலப்படவில்லை.யாவும் சாம்பல் மயம்.நிறக்குருடா? இல்லை முழுக்குருடா? என்னை என்னால் காண முடியவில்லை.அவசரமாக உடலை தடவிப்பார்த்து கொள்கிறேன்.இருக்கிறது.புலப்படவில்லை.

சாம்பல் வெளியில் மிதக்கும் இரு கறுப்பு வெள்ளை உதடுகள்.உதடுகளே இப்பொழுது என் திசைமானி.இவ்வுதடுகளும் மறைந்து விடுமுன் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்.இது சாம்பல் காடு.மரண குழி.நான் அவள் உதடுகளை நெருங்குகிறேன்.மெல்ல புன்னகைத்து போக்கு காட்டி மிதந்தோடும் உதடுகளை வெறி கொண்டவனாய் துரத்த தொடங்குகிறேன்.சாம்பல் குவியலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மூச்சு திணறலோடு புலப்படாத கொடி மரங்களில் மோதி உருண்டெழுந்து வண்ணத்து பூச்சியாய் பறந்தோடும் உதடுகளின் பின்னே நான்...

சட்டென விழித்து கொண்டேன்.இல்லை.இது தாமரை குளம்.இதோ என்னருகே நீந்துகிறாள் மிருதுளா.மிருது..மிருது..அவளை தாவி அணைத்தேன்.சினுங்கியபடி என்னை தள்ளி விடுகிறாள்.இதோ தாமரையின் நிறத்தில் அதே கறுப்பு வெள்ளை உதடுகள்.மூர்க்கம்.மகா மூர்க்கம்.அவளை கொடியென பற்றி படர்ந்தேன்.நாங்கள் சூன்ய வெளியின் ஒரு பின்னமானோம்.நீர் சர்ப்பம் கூடும் நெடுங்கடல் வெளியானது அப்பெருங்குளம்.சுயம் மனம் கர்வம் சர்வ நாசம்.துவண்டு இறுகும் தாவரமானோம்.எங்கோ மிதந்த மேகங்கள் திரண்டு பொழி பொழியென தொடங்கியது பேய் மழை.ஒரு கணம் வெளியே சிதறும் சிறு அலை.அது ஒருபோதும் குளமில்லை.தாமரை கொடிகள் எங்களை பிண்ண தொடங்கியது.நாங்கள் அக்குளத்தின் ஒரே மீனானோம்.மெல்ல ஒரு மீளா வெளிக்குள் மூழ்கி போனோம்.


சுழல் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருக்கும் புசுபுசுவை மெல்ல வருடி கொடுத்தேன்.புசுபுசுவுக்கு ரெஜி இல்லாத உலகம் எவ்வளவு பொருளற்றது.மழையில் நின்று நனையத் தொடங்கினேன்.நன்றி : மார்ச்-2010 அகநாழிகை.

4 comments:

said...

அருமையாய் இருக்கு ராஜேஷ்!!!

பலநேரங்களில் ஆச்சர்ய குறிகளை கொண்டு மனசை நிரப்பி விட முடியாது போகும் தெரியுமா?அப்படி இருக்கிறது ராஜேஷ்,இப்பவும்.

வாழ்த்துக்கள்!

said...

மிக்க நன்றி ராஜா சார் :))

Anonymous said...

நன்றாக இருக்கிறது...

said...

நன்றி இந்திராகிசரவணன்...