Tuesday, September 13, 2011

சாட்சி...

நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.

கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது''
என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.

நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.


4 comments:

said...

welcome back ..

said...

பிழைப்பு. காதுகளை அடித்துக் கொள்ளவேண்டிருக்கிறது.

said...

அரபி தெரியாது ஆனா பாக்கிஸ்தானி தெரியும் இல்லையா :-)))

யோவ் என்ன நினைவு இருக்கா !!!!!!!!

said...

பத்மா,சத்ரியன்..நன்றி !

யோவ் கார்த்திக்..எனக்கு அரபியும் தெரியாது..உருதுவும் தெரியாது..ஆனா ஹிந்தி தெரியும்.

என்னையே எனக்கு வர வர நியாபகம் இருக்கறதில்லய்யா...பொறவு..சௌக்கியமா ராசா :)