Monday, July 21, 2008

குறிப்புகள்...

மோனத்தில் ஆழ்ந்திருந்தது காடு.எங்கோ தூரத்தில் விழும் அருவியின் சப்தம்.இரவின் பிசுபிசுப்பில் புழுக்கம் நிறைந்திருந்தது.பாழ் மண்டபத்தின் சுவர்களில் விரவியிருந்த புற்றுக்குள்ளிருந்து கட்டுவிரியன் ஒன்று நழுவிக் கொண்டிருந்தது.
முன்பொரு காலத்தில் இஃதொரு மயானம்.இக்காட்டின் எப்பரப்பில் கால் வைப்பீரோ அங்கே ஆயிரம் மண்டையோடுகள் புதைக்கப்பட்டிருக்கும்.பாழ் மண்டபத் தரை வௌவால்களின் கழிவால் மேடுதட்டியிருந்தது.அதன் வீச்சம் சகிக்கக் கூடியதாய் இல்லை.மண்டபக் கூரை முழுவதும் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன.மீயொலியுணர் அறிவுஜீவிகள்.
கட்டுவிரியன் இப்பொழுது ஒரு தவளையை கவ்வியிருந்தது.தவளை முன்னங்கால்களால் துழாவி வெளியின் புலப்படாத ஒரு மாயக்கரத்தை பற்றிவிட துடித்துக் கொண்டிருந்தது.அதன் கண்களில் மரண தேவனின் நிழல் தென்பட்டது.கட்டுவிரியன் தலையை முன்னோக்கி ஒரு வெட்டு வெட்டியது.இப்பொழுது தவளையின் பெரும்பகுதி கட்டுவிரியனின் வாய்க்குள்.வாழ்விற்கும்,சாவிற்குமான விளையாட்டு மிக வசீகரமாயிருந்தது.
பாழ்மண்டபத்தின் நடுவே பிடிப்புகள் ஏதுமற்று மிதந்து கொண்டிருந்தது அந்த பாறை போன்ற வஸ்து.
* * * * *
அவன் அந்த ரசம் போன பழைய கண்ணாடியை விழி வாங்காது பார்த்தான்.வானம் பொத்தலாய் தெரிந்தது.துணுக்குற்ற சிதறிய மேகம் சூழ்ந்த கையளவு வானம்.அவன் முகம் பார்த்தான்.தசைகள் இறுக்கமடைந்தன.பற்கள் நறநறத்தன.கோபங்கொண்டவனாய் அதை தூர வீசியெறிந்தான்.அஃதொரு கல்லில் பட்டு “கிலுங்”கென்று சிதறியது.அவன் கண்ணாடி விழுந்த திசையை நோக்கி ஓடினான்.கண்ணாடி ஐந்து துண்டுகளாகவும் கொஞ்சம் துணுக்குகளாகவும் சிதறி இருந்தன.அவன் சடைகோர்த்த தன் கேசத்தை சொறிந்தபடி துண்டுகளைப் பார்த்தான்.இப்பொழுது அவனை இன்பம் ஆட்கொண்டது.அவன் கெக்கெலிப்போடு மேலும் கீழுமாய் குதித்தான்.மீண்டும் அந்த துண்டுகளை பார்த்தான்.இப்பொழுது ஐந்து நிலாக்களும் கொஞ்சம் துண்டு நிலாக்களும் தெரிந்தன.
மேகம் திரண்டு கொண்டிருந்தது.வெளி அசைவற்று இருந்தது.பெயர் கூற முடியாத உயரத்தில் பறவையொன்று கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது.அவன் சூன்யம் சூழ்வதாக உணர்ந்தான்.நான்கு திசைகளையும் உன்னித்து அவதானித்தான்.
அவனது பாதங்களுக்கடியில் பூமி கரைந்து கொண்டிருந்தது.தன்னை ஒலி நிறைப்பதை உணர்ந்தான்.உந்தி எழும்ப தளமற்று அந்தரத்தில் இருந்தான்.இப்பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டான்.நெற்றி திரவம் நாசியினூடே இறங்கி உப்பாய் கரித்தது உதட்டில்.செவியையும்,மெல்ல உடலையும் நிறைத்ததந்த ஒலி.
உடலில் அதிர்வுகள் எழத்தொடங்கியிருந்தன.வானம் வெள்ளிக் கோடுகளை இழுத்தது.காற்று அழுத்தம் கொண்டது.மூன்று திசைகளிலிருந்து கடலும்,ஒரு புறமிருந்து புயலும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.வளி சூழ்ந்து மழை கொள்ளத் தொடங்கியது.பரவியெழுந்த அலைகளின் பின்னே லட்சம் தலை நாகமொன்று ஆழி சூழ சீரியெழுந்தது.
அவன் ஆர்ப்பரித்தான்.மின்புலம் சூழ குதூகலித்தான்.மழையை,அலையைக் கண்டு துள்ளினான்.மழையொரு ராட்டினமாய் சுழன்றது.மின்னொளி ஒன்றோடொன்று உராசி பேரொளியாய் ஜ்வலித்தது.இவன் களி கொண்டு நடனமிடத்தொடங்கினான்.
“ஹிய்யா...ஷஹ்ரா...தாஹோக்கா பாதிதா...தாரா..தாரா..ஹாஹாஹா....”
வெளி ஆனந்தமாய் நனைந்தது.....

**********************

3 comments:

said...

கவிதை நயம் கொண்ட உங்கள் எழுது அருமை..மற்றும் ஒரு அழகிய தமிழ் வலைத்தளத்தை கண்ட திருப்தி மேலிடுகிறது!!தொடர்து எழுத வாழ்த்துக்கள்..

said...

வாழ்த்திற்கு நன்றி லேகா....

said...

நல்ல எழுத்து. 'தமிழ் மணம்' மக்களிடமே எப்படி உங்கள் பதிவுகளைச் சேர்ப்பது என்று கேளுங்கள். உதவுவார்கள். நன்றாக எழுதுகிறீர்கள். மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா