Tuesday, September 8, 2009

மழை குறிப்புகள்...
ன் இந்த இரவு எறும்பின் கால்களை கொண்டு நடக்கிறது? ஏன் இந்த நினைவு மழைக்கால மேகமாய் குமைந்து கிடக்கிறது? உறக்கத்திலும் பால் அருந்துவதாய் இதழ் கூட்டும் குழந்தை போல..ஏதேதோ நினைவுகளை குதப்புகிறது மனசு.மழையே இல்லாத இவ்வூரில்,சதா மழை குறித்தே பேசும் கவிஞனோடு உரையாடுவது இதமாய் தான் இருக்கிறது.மழை என்ற சொல்லுக்குள் உறைந்து கிடக்கிறது தனிமை,தாபம்,தேநீர் மற்றும் பால்யம்.

இன்றும் பெருமழை என்றால் வீதியெங்கும் மழையாறு ஓடும் என் கிராமம் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது.அல்லது தேவதைகள் வாழும்
ஊரில் வாழ நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்.ச்சோவென்று அடிக்கும் அடர் மழையில் உயிர் இற்று விழுந்து விடும் வரையில் களி-ரௌத்ர நடனமிடும் கனவுகள் இருக்கிறது இன்று.அன்றெல்லாம் மழையோடை வீதிகளில் கப்பல் செய்து விடுபவனாக இருந்தேன்.

மாலா 'வெள்ளை காக்கா காட்டுறேன் வா' என அழைத்து மழையில் குளித்த ஒரு குறுமரத்தடியில் நிற்க வைத்து கிளை பிடித்து ஆட்டினாள் ஒருமுறை.சிலுசிலுவென உதிர்ந்தன ஈரதுளிகள்.அழகான கணங்கள் அவை.எனக்கே எனக்காய் பொழிந்த சிறுமழை.மழை காலங்களில் எத்தனை எத்தனை தட்டான் பூச்சிகள் பறந்தன.பச்சை தட்டான்,நீல தட்டான்,யானை தட்டான்,ஊசி தட்டான்.ஒன்றின் வாலை மற்றொன்று பற்றி காற்றிலேயே புணரும் ஜோடி தட்டான்.தட்டான் பிடிப்பது தவறு என்று அறியாத வயது.செடியில் அமரும் தட்டானை லாவகமாய் கைவீசி பிடித்து, வாலில் நூலொன்று கட்டி பறக்க விடுவேன்.என் எல்லைக்குள்ளாக சிறகடித்து சிறகடித்து சோர்ந்த தட்டான்கள் எத்தனையோ.தலை வேறு,கால் வேறு என்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட தட்டான்கள் இக்கொடூரனை எவ்விதமாயெல்லாம் சபித்திருக்குமோ. ?

என் ஓட்டு வீட்டு முற்றத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நாகதகடு வழியாக விழும் அந்த நான்கு குட்டி அருவிகளில் மாறி மாறி நனைவேன்.தீராமல் பொழியும் இந்த மழையின் வீடு எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பேன் அவ்வயதில்.நீலமாய் இருக்கிறதே.. அந்த திரைக்கு பின்னே தான் சொர்க்கமிருப்பதாகவும் கூட்டாளிகளோடு பேசி கழித்திருப்பேன்.நினைத்து நினைத்து அழும் குடிகாரனின் பெண்டாட்டி போல் தோன்றும் பொழுதெல்லாம் பொழிந்து விளையாட்டை கெடுக்கிறதே என்று சபித்திருப்பேன்...அடை மழை என்றால் பள்ளி விடுமுறை.பால்யம் மழைக்கு நிரம்ப நன்றி கடன் பட்டிருக்கிறது.

பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் கொண்டிருக்கிறது.கிட்டிப்பில்,பம்பரம்,உப்பு மூட்டை,முருக்கு,பொறியரிசி என்று மழையோடு கழிந்த பொழுதுகள் மணலடி ஊற்றாய் தளும்பி கொண்டிருக்கின்றன அடிமனதில்.நனைவதில் எறுமைகளுக்கு சகபாடியாயும், பாசியடர்ந்த பழைய படிக்கட்டுகளுடைய அந்த ஆனைகுளத்தில், பிழிய பிழிய மழை பொழிய, அழிச்சாட்டியம் குறையாது கூட்டாளிகளோடு சேகண்டி அடித்ததும், அக்குளத்தில் ஆசாரிகள் ஊறப்போடும் பெரிய மரத்துண்டுகளை படகாய் பாவித்து ராஜகுமாரனாய் குளத்தை வலம் வந்ததும், குளத்தில் மூழ்கி விளையாடும் நீந்தி பிடிச்சான் விளையாட்டில் நீருக்குள் நீந்தி நண்பன் என தெரிந்தும் தெரியாமலும் தாவிப்பிடித்து மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களால் துரத்தப்பட்டதுமென குளிர்ந்து கிடந்தது மழை நீர் வெளிகள்...

பிறகான மழை நாட்கள் தனித்து ஊதலேறி கிடக்கும் அறையை வெப்பமூட்டுவதாய் இருந்தன.பாயை பிராண்டி பிராண்டி நகக்கண்கள் உடைந்தன.மழையிழைகளினூடே சமிக்ஞை பல கிடைத்தன.ஒரு மழை நாளில் தான் அவள் எனக்கு என்னையும் அவளையும் உணர்த்தினாள்.எல்லாம் சித்தித்த நாட்கள் அவை.

அழுகின்ற பொழுதெல்லாம் சுரக்கும் தாய் முலையாய்,கேட்கும் பொழுதெல்லாம் தீராமல் பொழிகிறது இந்த மழை மனசுக்குள்.


நண்ப!

இன்றெல்லாம்...

பெருமழையிரவில்
பிரியமானவளோடு நனைந்தபடி
ஜலமுக்தியாகி விடும்

கனவுகளே எனக்கு...
நண்பனோடு..மழையை ரசித்தபடி..தேநீர் அருந்தும் விருப்பம் உனக்கு...
நாம் மழையை பிரார்த்திப்போம்...