Sunday, August 17, 2008

மழலை விளையாட்டு...

அழுத அக்குழந்தையிடம்
கிலுகிலுப்பை ஒன்றை
கொடுத்தேன்
அது சிரிக்க தொடங்கிய போது
வெடுக்கென பிடுங்கிக் கொண்டேன்
மீண்டும் அழுத அக்குழந்தை
கிலுகிலுப்பையை தூர எறிந்து விட்டு
என்னை எடுத்துக் கொண்டது....

மீனாய் சமைந்தவன்...

துயிலொரு பெருங்கனவான
பின்னிரவில் பற்றியெரியுமென்
குகையறைச் சுவரில் வழியும்
குமிழிரவை விழி பொருத்தி
நிலங்குளிர மழையருள
பிரார்த்தித்தேனவளை...

தடாகம் விட்டெழுந்தாள்
தவங்கலைந்த பெருந்தேவி
நதி சூழ்ந்த என் வீதி வழி
பவனி வந்தாள் யாழதிர
தன் கமல ஓடத்திலமர்ந்து...

தழலிருகும் குருதியின்
நினவாடை நுகர்ந்து
விரகம் கொடிதென முனுமுனுத்தாள்...

பெய்யென்றாள்
பெய்தமழை குகையறையுள்
குளம் வளர்த்தாள்
நீர்வெளிக்குள் மூழ்கியவள்
முகமுரசி அகங்கெடுத்தாள்...

இருளாய் இருக்கிறதென்றேன்
இருவிழியில் அகல் சுடர்ந்தாள்...

கரமொன்றை நீட்டியவள்
வாவென்றாள் வசமிழந்தேன்...

வரமென்ன வேண்டுமென்றாள்
ஒளியுதட்டில் முத்தமென்றேன்...

இதழ்கடையில் சினந்துடிக்க
பெருந்தேவி நானென்றாள்
இருந்துவிட்டுப் போயென்றேன்...

முடிவாய் சொல்லென்றாள்
முத்தம் முத்தமென்றேன்...
மீனாய் கடவ என சபித்து மறைந்துவிட்டாள்...

Wednesday, August 13, 2008

துயர நடனம்....(Dancer in the dark)


கேளடி கண்மணி படத்தில் வரும் கற்பூர பொம்மையொன்று பாடலை எப்பொழுதும் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் பாட முடிந்ததில்லை.சட்டென்று குரல் உடைந்து விடும்.இந்த படத்தையும் இனி என்னால் ஒரு போதும் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.

ரோமன் போலன்ஸ்கியின் oliver twist க்குப் பிறகு நான் பார்த்த மிகச்சிறந்த மெலோடிராமா படம் இதுதான்.கதை அமெரிக்க கிராமமொன்றில் நிகழ்கிறது.செக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த செல்மா தன் மகனது கண் அறுவை சிகிச்சைக்காகவும் அதற்க்கான பணம் திரட்ட வேண்டியும் தன் மகன் ஜீனோடு அமெரிக்காவில் குடியேறி வசிக்கிறாள்.சிறிய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறாள்.தின சம்பளத்தை சேமிக்கிறாள்.
தனது வீட்டின் உரிமையாளன் தன் மனைவியின் ஊதாரித்தனமான செலவினால் தான் கடன் காரன் ஆகிவிட்டதாகவும்,விரைவில் தன் சொத்துக்கள் பறிபோய்விடும் என்றும் கூறுகிறான்.செல்மா அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.மேலும் பரம்பரையாக தொடரும் நோயினால் தான் பார்வை இழந்து கொண்டு வருவதாகவும் விரைவில் முற்றிலும் தனக்கு பார்வை இல்லாது போய்விடுமென்றும் கூறுகிறாள்.இந்நோயிலிருந்து தன் மகனை காக்கவே தான் இரவு பகல் பாராது உழைப்பதாகக் கூறுகிறாள்.
மேலும் இதுவரை பகிர்ந்து கொள்ளப்பட்ட ரகசியங்களை வெளியே கூறுவதில்லையென இருவரும் சத்யம் செய்து கொள்கின்றனர்.செல்மா தினசரி வாழ்வில் நிகழும் இரைச்சல்களில் இசையை கண்டறிகிறாள்.கடந்து போகும் ரயிலோசை,இயந்திரங்கள் எழுப்பும் சப்தம் யாவும் இசைதான் செல்மாவுக்கு.மேலும் பகற்கனவுகளில் மூழ்கி பாடல் பாடுபவளாகவும் இருக்கிறாள்.செல்மாவுக்கு மெல்ல மெல்ல பார்வை முற்றிலுமாக போய்விடுகிறது.இக்குறைபாட்டினால் ஏற்படும் விபத்துக்கள் அவளை வேலையிலிருந்து துரத்துகிறது.தனது இறுதி நாள் சம்பளத்தோடு வரும் செல்மா தனது சேமிப்பு பெட்டியை எடுக்கிறாள்.அதில் பணம் இல்லாதது கண்டு தனது வீட்டின் உரிமையாளரும் நண்பருமான பில் ஐ தேடிப்போகிறாள்.
பில் குற்ற உணர்வோடு அமர்ந்திருக்கிறான்.செல்மா தன் பணத்தை தந்து விடுமாறு வேண்டுகிறாள்.பில் பிறகு தருவதாகக் கூறுகிறான்.தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று பணம் தர வேண்டும்.இனியும் தாமதிக்க முடியாது எனக் கூறுகிறாள்.பில் துப்பாக்கி முனையில் அவளை மிரட்டுகிறான்.எதிர்பாராத விதமாக பில் காயமுறுகிறான்.மேலும் பார்க்க முடியாத செல்மாவிடம்.தன்னை முழுவதுமாக கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச் செல்லும் படி கூறுகிறான்.வேறு வழி இல்லாது செல்மா அவனது விருப்பத்தின் பேரில் அவனைக் கொல்கிறாள்.பிறகு பணத்தை தன் மகனுக்கான அறுவை சிகிச்சை தொகையாக மருத்துவமனையில் கட்டுகிறாள்.வழக்கு நீதி மன்றம் வருகிறது.ஏன் கொலை செய்தாய் என்ற கேள்விக்கு அதை கூற முடியாது.சத்யம் செய்து கொண்டுள்ளோம் என அவள் கூறும் பதில் அவளுக்கு மரண தண்டனை வழங்குகிறது.மரண தண்டனை விதிக்கப் படும் நேரத்திலும் பகற்கனவு கானும் அவளது கள்ளமற்ற பாத்திரம் நம்மை தீராத ஒரு கழிவிரக்கத்திற்குள் தள்ளுகிறது.
படத்தில் இடம் பெறும் பாடல்கள் கனவு காட்சிகள் கதையை ஒட்டி அமைக்கப் பட்டுள்ளன.கனவுகள் தரும் ஆசுவாசமும் அது முடியும் வேலையில் ஏற்படும் நிகழ் குறித்த துக்கமும் ஒருங்கே நம்மை சாய்க்கிறது.
செல்மாவாக நடித்திருக்கும் Bjork நடித்திருக்கிறாரா அல்லது அவரது இயல்பே அது தானா என்பது போல் இருக்கிறது.சிறிய கண் அசைவில் அலட்டிக் கொள்ளாது கண்களில் நீர் வர வைக்கிறார்.2000-ல் வெளியாகி ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் Lors von Trier என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.இறுதி காட்சிகள் நம்மை நிசப்தத்திற்குள் வீசியெறிந்து விடுகின்றன.மறக்கவியல்லாத படம்.

Sunday, August 10, 2008

வித்தை காட்டுபனின் கனவு...

இப்படியாக
அந்த பாடலை பாடத் தொடங்கிய
சர்க்கஸ் கோமாளியொருவன்
சட்டென ஒருநாள்
தன் அரிதாரங்களை கலைத்துவிட்டு
ஆடைகளையும் அவிழ்த்து போட்டுவிட்டான்...

இப்படியாக
ஊஞ்சல் தாவிய
பறக்கும் பாவையொறுத்தி
தன் இணைப்பாவையை
கீழே வீழ்த்தி
மாயமாய் வானமேகிவிட்டாள்...

இப்படியாகவே
சைக்கிள் ஓட்டிய
அந்த சர்க்கஸ் புலியும்
ரிங் மாஸ்டரின்
செவிட்டில் அறைந்துவிட்டு
கானகத்திற்குள் புகுந்துவிட்டது....

Friday, August 8, 2008

கவிதை குறித்த மழையொன்று...

நேற்றிரவு மழைபொழிந்த தாழங்காட்டில்
நட்சத்திரங்கள்
சேகரிப்போம் வாவென்கிறாய்...

பசிய இலையூறும் கூட்டுப்புழுக்களின்
றெக்கை நிறங்குறித்து கனவு பொறுத்தி
நகரும் நத்தையோடுகளில்
கால் பாவாது
முட்புதர்கள் தாண்டுகிறாய்
மின்னல்களை கசியவிட்டு...

திவலைகள் துளிர்த்திருக்கும்
சிலந்தி வலை இடைவெளியின்
வெர்னியர் துல்லியத்தில்
அதிசயிக்கிறாய்
வெகுதூரத்து கிளையொன்றில்
கு கூவெனும்
உன்னினத்திற்கு செவியிருத்தபடி...

நிரம்பி சுரக்கும்
குறுஞ்சுனையின் கெண்டையென
பின்னோடுகிறேன் நானும்
தாகத்திற்கு கொஞ்சம்
வெயிலருந்தியவனாய்...

Wednesday, July 30, 2008

Close-upமுதன் முதலாக பார்த்த ஈரானிய சினிமா “Children of heaven”பிறகு Baran,color of paradise,turtles can fly என நீண்டு அப்பாஸ் கியராஸ்தமியின் படங்கள் பார்க்க கிடைத்தது.”Taste of cherry” தந்த டேஸ்டில் கியராஸ்தமியின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.Close-Up நேற்று முன் தினம் தான் பார்த்தேன். சுயம் என ஒன்றிருக்கிறதே அது ஏன் மரியாதையை எதிர்பார்க்கிறது...?இதோ எழுதிக்கொண்டிருக்கிறேனே இச்செயலைத் தூண்டும் மனதின் நோக்கம் என்ன?ம்ஹீம் இப்படியே கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தா நேத்து போலவே இன்னைக்கும் விடிஞ்சுடும்.கதைக்கு வருவோம். பிரபல (ஈரானிய இயக்குனர்.............) என தன்னை கூறிக்கொண்டு தம் குடும்பத்தினரை ஏமாற்றியதாக ஒருவர் கொடுக்கும் புகார் ஒன்று தினசரியில் செய்தியாகி இயக்குனர் அப்பாஸ் கியராஸ்தமியை ஈர்க்கிறது..குற்றம் சாட்டப்பட்டவனின் நோக்கத்தையும் மனதையும் அறிய விரும்பும் கியராஸ்தமி குற்றம் சாட்டப்பட்டவனை சிறையில் சென்று சந்திக்கிறார்.அப்பாஸ் அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது அவன் நீங்கள் யார்?என்னை உங்களுக்கு தெரியுமா எனக் கேட்கிறான்.பிறகு அப்பாஸ் எனத் தெரிந்ததும் துனுக்குறுகிறான். தன்னை தன் இயலாமையை படமாக்குங்கள் என்பவனிடம் விடைபெறும் கியராஸ்தமி இந்த வழக்கை படமாக பதிவு செய்ய நீதி மன்றத்திடமும் வழக்கு தொடுத்த குடும்பத்தினரிடமும் அனுமதி கோறுகிறார். நிகழும் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவனின் மன உணர்வுகள் நெருக்கமாக பதிவு செய்யப்படுகிறது.உண்மை சம்பவத்தை தழுவிய படம் என டைட்டிலில் வருகிறது.ஆனால் படம் பார்க்கிறோமா?அல்லது ஈரான் நீதி மன்றத்தில் இருக்கிறோமா? என சந்தேகம் கொள்ளும் படி இருக்கிறது படம் செய்யப்பட்ட விதம்.Climax தரும் சில நொடி பரவசம் தான் படம் என்பதால் எனது கத்தரியை இங்கேயே போட்டுவிடுகிறேன்.

Monday, July 21, 2008

குறிப்புகள்...

மோனத்தில் ஆழ்ந்திருந்தது காடு.எங்கோ தூரத்தில் விழும் அருவியின் சப்தம்.இரவின் பிசுபிசுப்பில் புழுக்கம் நிறைந்திருந்தது.பாழ் மண்டபத்தின் சுவர்களில் விரவியிருந்த புற்றுக்குள்ளிருந்து கட்டுவிரியன் ஒன்று நழுவிக் கொண்டிருந்தது.
முன்பொரு காலத்தில் இஃதொரு மயானம்.இக்காட்டின் எப்பரப்பில் கால் வைப்பீரோ அங்கே ஆயிரம் மண்டையோடுகள் புதைக்கப்பட்டிருக்கும்.பாழ் மண்டபத் தரை வௌவால்களின் கழிவால் மேடுதட்டியிருந்தது.அதன் வீச்சம் சகிக்கக் கூடியதாய் இல்லை.மண்டபக் கூரை முழுவதும் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன.மீயொலியுணர் அறிவுஜீவிகள்.
கட்டுவிரியன் இப்பொழுது ஒரு தவளையை கவ்வியிருந்தது.தவளை முன்னங்கால்களால் துழாவி வெளியின் புலப்படாத ஒரு மாயக்கரத்தை பற்றிவிட துடித்துக் கொண்டிருந்தது.அதன் கண்களில் மரண தேவனின் நிழல் தென்பட்டது.கட்டுவிரியன் தலையை முன்னோக்கி ஒரு வெட்டு வெட்டியது.இப்பொழுது தவளையின் பெரும்பகுதி கட்டுவிரியனின் வாய்க்குள்.வாழ்விற்கும்,சாவிற்குமான விளையாட்டு மிக வசீகரமாயிருந்தது.
பாழ்மண்டபத்தின் நடுவே பிடிப்புகள் ஏதுமற்று மிதந்து கொண்டிருந்தது அந்த பாறை போன்ற வஸ்து.
* * * * *
அவன் அந்த ரசம் போன பழைய கண்ணாடியை விழி வாங்காது பார்த்தான்.வானம் பொத்தலாய் தெரிந்தது.துணுக்குற்ற சிதறிய மேகம் சூழ்ந்த கையளவு வானம்.அவன் முகம் பார்த்தான்.தசைகள் இறுக்கமடைந்தன.பற்கள் நறநறத்தன.கோபங்கொண்டவனாய் அதை தூர வீசியெறிந்தான்.அஃதொரு கல்லில் பட்டு “கிலுங்”கென்று சிதறியது.அவன் கண்ணாடி விழுந்த திசையை நோக்கி ஓடினான்.கண்ணாடி ஐந்து துண்டுகளாகவும் கொஞ்சம் துணுக்குகளாகவும் சிதறி இருந்தன.அவன் சடைகோர்த்த தன் கேசத்தை சொறிந்தபடி துண்டுகளைப் பார்த்தான்.இப்பொழுது அவனை இன்பம் ஆட்கொண்டது.அவன் கெக்கெலிப்போடு மேலும் கீழுமாய் குதித்தான்.மீண்டும் அந்த துண்டுகளை பார்த்தான்.இப்பொழுது ஐந்து நிலாக்களும் கொஞ்சம் துண்டு நிலாக்களும் தெரிந்தன.
மேகம் திரண்டு கொண்டிருந்தது.வெளி அசைவற்று இருந்தது.பெயர் கூற முடியாத உயரத்தில் பறவையொன்று கிழக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது.அவன் சூன்யம் சூழ்வதாக உணர்ந்தான்.நான்கு திசைகளையும் உன்னித்து அவதானித்தான்.
அவனது பாதங்களுக்கடியில் பூமி கரைந்து கொண்டிருந்தது.தன்னை ஒலி நிறைப்பதை உணர்ந்தான்.உந்தி எழும்ப தளமற்று அந்தரத்தில் இருந்தான்.இப்பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டான்.நெற்றி திரவம் நாசியினூடே இறங்கி உப்பாய் கரித்தது உதட்டில்.செவியையும்,மெல்ல உடலையும் நிறைத்ததந்த ஒலி.
உடலில் அதிர்வுகள் எழத்தொடங்கியிருந்தன.வானம் வெள்ளிக் கோடுகளை இழுத்தது.காற்று அழுத்தம் கொண்டது.மூன்று திசைகளிலிருந்து கடலும்,ஒரு புறமிருந்து புயலும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.வளி சூழ்ந்து மழை கொள்ளத் தொடங்கியது.பரவியெழுந்த அலைகளின் பின்னே லட்சம் தலை நாகமொன்று ஆழி சூழ சீரியெழுந்தது.
அவன் ஆர்ப்பரித்தான்.மின்புலம் சூழ குதூகலித்தான்.மழையை,அலையைக் கண்டு துள்ளினான்.மழையொரு ராட்டினமாய் சுழன்றது.மின்னொளி ஒன்றோடொன்று உராசி பேரொளியாய் ஜ்வலித்தது.இவன் களி கொண்டு நடனமிடத்தொடங்கினான்.
“ஹிய்யா...ஷஹ்ரா...தாஹோக்கா பாதிதா...தாரா..தாரா..ஹாஹாஹா....”
வெளி ஆனந்தமாய் நனைந்தது.....

**********************

Sunday, March 16, 2008

ஒரு கோடைமழையும் இரண்டு சிக்கிமுக்கி கல்லும்...

கோடை மழைபோல் நிகழ்கிறது
நம் தனிமைப் பொழுதுகள்
முன்னறிவிப்பு ஏதுமின்றி...

குளிரூட்டப்பட்ட எனதறையின்
சன்னலிடுக்கு வழி கசியும் வெயிலாய்
கிசுகிசுக்கின்றன
கனவில் நாம் முயங்கிய கணங்கள்...

நெற்றியில் துளிர்க்குமுன் வியர்வையும்
உள்ளடங்கும் தொண்டைக்குழியும்
நிச்சயிக்கின்றன உன் தாபத்தை...

தாழிட்ட கதவின் சாவிதுவாரமும்
சிமிட்டாத சுவர்க்கண்களும்
பரிகசிக்கின்றன நம் பயத்தையும்
துடித்ததிரும்
மார்பொலியின் துல்லியத்தையும்...

கூடிப்பிரிந்த சுவர்க்கோழிகள்
இரை தேடி நகருமோர் நொடியில்,

உனக்கும் எனக்குமிடையே
கனத்து நிற்கும் மௌனச்சுவரை
தகர்க்க முடியாது நானும்,
மார்பிலுருத்துமுன் தாலிச்சரடை
கடக்க முடியாது நீயும்
தவிர்க்கிறோம்
விழியுரசலின் சிக்கிமுக்கி நெருப்பை...

வீணே நழுவும் பொழுதின்
துயரங்கலந்தவுன் பெருமூச்சும்
பிசிரடர்ந்த என் சொற்களும்
மோதி உடையும் கதவு திறந்து
நடக்கிறாய் நீ...

வருகிறான் பார் ஒழுக்கசீலனென
நகைக்கும் கண்ணாடி கடந்து
கழிப்பறை கதவு திறக்கிறேன்
நனையாத கழிவிரக்கத்துடன்...

Wednesday, March 12, 2008

தாத்தா...

தகவலறிந்து வீடு வந்த பொழுது சங்கூதி தின்னையில் வாசித்து கொண்டிருந்தான்.கூடத்திலிருந்து அத்தை மற்றும் உறவினர்களின் விசும்பலுடன் கூடிய சன்னமான புலம்பல் கேட்டுக்கொண்டிருந்தது.உள்ளே நுழைந்தவுடன் அத்தை எழுந்து வந்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.சிறிது நேரம் மௌனமாக நின்றேன். தாத்தாவை நாற்காலியில் அமரவைத்து வாயையும் கால்கட்டை விரல்களையும் வெள்ளை துணியால் கட்டியிருந்தனர்.கடிகாரம் நிறுத்தப் பட்டு அவர் இறந்த நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது.எனக்கு அழத்தோன்றவில்லை.6 மாதங்களாக எதிபார்க்கப்பட்ட மரணம்.மூலையில் விள்க்கு ஏற்றப்பட்டிருந்தது.ஊதுவத்தி வாடையோடு செண்ட் மணம் கலந்து வந்தது.எனக்கு இர்ண்டும் ஒவ்வாது.மெல்ல விலகி திண்னைக்கு வந்தமர்ந்தேன். சென்ற வருடம் பாட்டி இறந்து போனாள்.புற்றுநோய்.நீண்ட நாட்களாக யாரிடமும் கூறாமல் உள்ளூர் மருத்துவரிடம் வயிற்று வலி மாத்திரை வாங்கி உண்டிருக்கிறாள்.கண்டுபிடிக்கப்பட்டபோது அபாய கட்டத்தை நெருங்கியிருந்தாள்.இறக்கும் வயதெல்லாம் இல்லை.வெறும் 58.அவளுக்கு இறக்க மனமுமில்லை.5 மகன் 4 மகள்,பேரன் பேத்திகள்,நிலம்நீட்சி,என நிறைந்த அதிகாரத்தோடு வாழ்ந்தவள்.இறக்கும் அன்று வரை வங்கியில் அவள் பெயரில் இருந்த பணத்தை எடுக்க சம்மதிக்கவில்லை."ஏன்?எனக்கொன்றுமில்லை.சரியாகிவிடும்" என்று கூறினாள். நான் தாத்தாவையே கவனித்து கொண்டிருந்தேன்.வாழ்ந்த காலங்களில் அவர்களுடைய தினப்படி சண்டைகளை பார்க்கும் பொழுது இவர்களுக்கு எப்படி 9 குழந்தைகள் பிறந்தன என எனக்கு சிரிப்பு வரும்.பாட்டி தாத்தாவை அழைத்து நடுங்கும் கரங்களால் அவரது விரல் பற்றியபோது குலுங்கி அழுதார்.எனது 25 வதில் அவர் அழுது அன்று தான் பார்த்தேன்.பாட்டி எந்த ஷனத்தில் இறந்தாள் என எனக்கு தெரியாது. தாத்தா வேடிக்கை குணம் கொண்டவர்.அவருடன் தச்சு வேலைக்கு வரும் சிறுவன் கூட அவரை கேலி செய்வான் எனினும் அவருக்கான மரியாதையையும் தரத்தவறியதில்லை ஒருவரும். பாட்டி இறந்த 6 மாதங்களில் அவர் காலில் ஆணி ஒன்று குத்திவிட்டது.தொடர்ந்து காய்ச்சல் வந்தது.கோடையில் குளிர்கிறதென அவர் கம்பளி போர்த்தி படுத்திருந்தார்.தாத்தாவின் நண்பொருவர் இருக்கிறார்.அவரும் நகைச்சுவை உணர்வுள்ளவர்தான்.தாத்தாவை பற்றி நிறையக்கூறுவார்.சிறுவயதில் தாத்தா மிகவும் துஷ்டனாம்.வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு தரவில்லையெனில் தண்ணீர் பாம்புகளை பிடித்து வந்து வீட்டுக்குள் விடுவாராம்.நிறைய பெண்தொடர்பு.திருமணமாகும் வரை ஒரு விதவையோடு வாழ்ந்திருக்கிறார். தாத்தாவின் உடல் நலம் குறைந்து கொண்டேயிருந்தது.மருத்துவர்கள் நோய் ஒன்றுமில்லையென்றனர்.கேள்விகளுக்கெல்லாம் மருந்தெழுதித் தந்தனர்.மரணத்தின் விசித்திரம் புரியாதது.சில வருடங்களுக்கு முன்பு கார்த்தியொன்றொருவன் ஊரில் இருந்தான்.அவன் நண்பன் இறந்த இரண்டே நாட்களில் இவனும் தற்கொலை செய்துகொண்டான்.உங்களால் நம்ப முடியாதுதான்.ஆனாலும் உண்மை.கார்த்தி அவன் நண்பன் இறந்த பொழுது அழவில்லையாம்.எங்கோ வெறித்தபடி யாருக்கோ பதில் கூறும் தோரணையில்"ம்..ம்..சரி.."என தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தானாம்.அவன் அம்மா கூறினாள்.இறந்த அன்று காலையில் எல்லோரிடமும் அன்பாக பேசியிருக்கிறான்.அவன் தங்கைக்கு புது சுடிதார் வாங்கி தந்திருக்கிறான்.மிக நிதானமாக இரவு உணவு கொண்டிருக்கிறான்.நடு இரவில் தோப்பிற்கு சென்று(அங்குதான் அவன் நண்பன் இறந்து கிடந்திருக்கிறான்) உயர்ந்த புளிய மரமொன்றில் உச்சிக்கிளையில் தூக்குப் போட்டுக்கொண்டான்.கயிற்றை அவன் பல கிளைகளின் குறுக்கே கட்டியிருந்தான்.எந்த வகையிலும் அறுந்து விடாதபடி.கார்த்தியை தேடிய பொழுது விஷ்னு மட்டும் இழுக்கப்பட்டவன் போல் தோப்பிற்கு ஓடினான்.நாங்கள் சென்ற பொழுது கார்த்தி இடவலமாக ஆடிக்கொண்டிருந்தான்.5 நிமிடம் முன்னதாக வந்திருந்தால் கூட காப்பாற்றியிருக்க முடியும்.விஷ்னு விருவிருவென்று ஏறி கத்தியால் கயிற்றை துண்டித்து கார்த்தியை தோளில் சுமந்து இறக்கினான்..நாக்கு வெளியேறி மிகக்கோரமாக காட்சி தந்தான்.இறந்து விட்டிருந்தான்.
தாத்தா உடல்நலம் மோசமாகிக் கொண்டே வந்தது.அதுகுறித்து துக்கம் எதுமின்றி இருந்தார் அவர்.அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.மாடியில் உள்ள எனதறைக்கு அருகில் கூடத்தில் அவருக்கு கட்டில் சகிதம் சகல வசதிகளும் வழங்கப்பட்டிருந்தது.இரவு முழுதும் விழித்திருந்து பகலில் உறங்குவார்.அவ்வப்போது பீடி பற்ற வைத்து கேட்பார்.இரண்டு இழுப்பிற்கு மேல் முடியாமல் போட்டுவிடுவார். ஒரு நாள் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தேன்.தாத்தா எனதறைவாசலில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.என் உடல் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.அவரால் தனியாக நடக்க முடியாது."என்ன தாத்தா"? என்றேன்.பதிலேதும் கூறாமல் அவர் திரும்பி சென்று படுத்துக் கொண்டார்.எப்படி நடக்கிறார் என்ற கேள்வி எனக்கு பயத்தை உண்டாக்கி இருந்தது. அவரது இயற்கை உபாதைகளை அம்மாதான் கவனித்துக் கொண்டாள்.மாமனாருக்கு சேவையில் ஒருபோதும் முகம் சுளிக்கவில்லை.மாறாக படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார் என்ற என் வசைக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பாள்.பெண்களின் மீதான மரியாதை புத்தகத்திலிருந்து வரவில்லையெனக்கு.என் அம்மாவிடமிருந்து. நடுயிரவில் எழுந்து சிறுநீர் கழிக்க செல்லும் பொழுது கவனிப்பேன்.தாத்தா இருளில் வெற்றிடத்தோடு பேசிக்கொண்டிருப்பார்.வெகு தீவிரமாக.சில சமயம் அவரை கைத்தாங்கலாக கழிவறை கூட்டிச்செல்லும் முன்னரே என் மீது சிறுநீர் கழித்து விடுவார்.மெல்ல மெல்ல அவர் என்னிடமிருந்த அசூயை உணர்வை அவரது சிறுநீரால் கழிவி விட்டார். கல்லூரி தேர்வு விடுமுறை நாட்களில் நிகழ்ந்தவை இவையெல்லாம்.அவர் இறுதியாக என்னிடம் கேட்டது மெது பகோடா.இப்பொழுது என் சிந்தனையெல்லாம் பாட்டி ஒருமுறை என்னிடம் தீவிரமாக கூறியதைப் பற்றித்தான்."தாத்தாவுக்கு முன்னாடி நான் போய்ட்டேன்னா தாத்தாவையும் எங்கூட கூப்டுக்குவேண்டா.நான் போயிட்டா அவர யாரு பாத்துப்பா" ?

Tuesday, March 11, 2008

வலியை பொழியும் மழை...

மழையில் நனைந்தாடிய குழந்தையை
பிரம்பால் அடிக்கிறாள் அம்மா
மழையில் நனைவது குற்றமா
எனக் கேட்பவளிடம் எப்படிச் சொல்வது
வயலில் அறுத்துக் கிடக்கும்
உளுந்து ஒரு படி எவ்வளவென்று...

Sunday, March 9, 2008

தனித்தலையும் கவிதை...

இதோ
என் பொழுதின் மீது
கசிகிறது இரவு...

ஒரு யுக துக்கமென
ஊளையிடுகிறது
நாயொன்று...

இப்பெருந் தெருவை
நிறைக்கிறது
பேய்களின் நடனம்...

எப்பொருளுமற்று கணக்கும்
இருப்பை லகுவாக்கும் பொருட்டு
நடக்கிறேன்
அப்பேரழகியின்
குடிலுக்கு...

நேற்று அவள்
சாவி துவார வழி
நட்சத்திரம் ரசிக்கும்
குழந்தை குறித்து பாடினாள்...

இன்று அநேகமாக
வயலின் வாசிக்கக் கூடும்...

Thursday, March 6, 2008

ஒரு காந்தமும் திசைமுள்ளும்...

மிதந்து இறங்குகிறாய்
என் இரவின் தாழ்திறந்து...

உன் சிறகசைவின் மீயொலியில்
சடசடக்கின்றன வௌவால்கள்
எனதறைவிட்டு வெளியே...

உனது நறுமணத்திற் கூடும்
மின்மினிகளால்
நிறைகிறதென் அறை...

மொழியற்றதிருமுன்
உத்தரவில் அவிழ்கின்றன
சன்னலோர மொட்டுக்கள்...

உன் புலம் நோக்கி
விரியுமென் விசைக்கோடுகளில்
சுழல்கிறது திசைமுள்...

கண்டறியா கிரகமென
உன் ஒளி நிறைந்து
ஜொலிக்கிறதென் அறை...

பிறைவிழி சொக்க
உள் நுழைகிறாய்
என் போர்வை அகழ்ந்து...

மிதக்கிறேன் நானும்
உனது கனவில்
ஆசீர்வதிக்கப்பட்டவனாய்...

Tuesday, February 5, 2008

சுழலும் இசைத்தட்டு...

தினம் சுழலும்
இந்த இசைத்தட்டின்
அப ஸ்வரங்களினின்று
தப்பி ஓடுகிறேன்....

பாம்புகள் நெளியும்
இந்த பள்ளதாக்குகளின்
பாதைகளெல்லாம்
மீண்டும் என் அறைக்கே
அழைத்து வருகின்றன என்னை...

காடியேறிய
இந்த மதுரசத்தின்
கற்பனை வீதிகள் என்னை
வெறுமைக்குள்
துப்பிவிடுகின்றன....

நிதர்சன நெருப்பில்
வெந்த பாதங்களை
ஊசியால் வருடுகின்றன
கனவுகள்...

ஓர் உச்சம்
ஓர் வீழ்ச்சி
மாபெரும் கடலில்
இடம் தேடும் சிற்றலையாய்
என் ஷனங்கள்...

என் அறைக்குள்
சிக்கிக்கொண்ட
சிட்டுக் குருவியைப் போல
எனக்குள் சிக்கிக்கொண்ட
என்னை விடுவிக்க
ஜன்னல் தேடுகின்றன
என் கண்கள்........

காலத்தின் மீதூறும் நொடிமுட்கள்...

இக்காலப் புரவியின் லகான்
என் கைவசமில்லை...

இலக்கற்ற பயணத்தினின்று
மருண்டு விழுந்ததில்
வலக்கால் சிக்குண்டது
அதன் கற்றை வாலில்...

பாதையின் மூர்க்கம்
பதம் பார்க்க
இழுத்து செல்லப்படுகிறேன்
ஓர் அடிமையைப் போல...

உத்தேசமாக
இப்பயணத்தின்
மீத நாட்கள் 9855
மணி நேரம் 236520
நொடிகள் 85147200...

இடையில்
விபத்து...வியாதி...
இத்யாதி...இத்யாதி...

நிகழ் பயணம்
வசந்த கால வனத்தினூடே
என்பதால்
ஓர் கனவு...

"என் 3 1/2 வயது
முகச் சாயல் கொண்ட சிறுவன்
ஓடுகிறான் ஓர் வயோதிகனிடம்"

அது.....?
அந்த வயோதிகன்..............?

விதிர்விதிர்த்து
கடிகாரம் பார்த்தேன்...
நொடி முட்கள் ஊர்ந்து கொண்டிருந்தது.....

Tuesday, January 29, 2008

ஒரு வழி யாத்திரை...


நீண்டதொரு தவத்திற்கு பின்னாக
தெய்வம் நானென்றறிந்தயிரவில்
உடல் விட்டு வெளியேறியது நான்...

நானின் உடல் அயர்ந்துறங்க
எதிர் வீட்டு அழகியின்
அறை சென்றது,
அழகி தோட்டக்காரனோடு
முயங்கியிருந்தாள் கனவில்
நானுக்கு யாரின் கனவுள்ளும் உட்புகும் சாத்தியமிருப்பதறியாமல்....

நான்
ஓர் ரோஜாவுக்குள் சென்றது
அதிகாலையில் தோட்டக்காரி
ரோஜாவை கொய்து
காம்பினின்று குருதி சொட்டவும்
பதறி ஓடினாள்...

செடியினின்று
ஓர் பத்திரிக்கையாளனின்
எழுதுகோலுக்குள் சென்றது
பிற்பகலில் அவன்
கொலை செய்யப்பட்டான்...

நானானது
நானுக்கு விருப்பமான
நடிகையின் யோனிக்குள் சென்றது,
காப்பர்-டி-க்கும் ஆண்குறிகளுக்கும்
நடுவில் நசுங்கி
சிறுநீர் கழிக்க அவள் ஒதுங்கிய
சிறுநொடிப் பொழுதில்
காயங்களோடு வெளியேறி கடற்கரை சென்றது....

அலைநுரை துய்த்த நானானது
கடல் மட்டம் மீதாக
வட்டமிடும் வல்லூறுள் சென்றது...

நீரின் மேல் துள்ளும்
மீனின் மீதிருந்தது
வல்லூறின் கவனம்,
வல்லூறை விடுத்து
மீனுக்குள் தாவியது நான்..

வல்லூறின் சிறகுகள்
பழுதடைய பிரார்த்தித்தது மீன்...
நானுக்கு சலித்தது
உடல் திரும்ப எண்ணி
அறை வந்தது....

நானின் உடலை
தகனித்த சாம்பல்
பானையில் இருந்தது........