Wednesday, December 23, 2009

ஒரு மழை மேகம்...

கண்ணாடி பதித்த
உன் ஸ்டிக்கர் பொட்டு தேர்வுகளோ
நாட்களுள் சுழலும் உன் அவஸ்தை குறித்தோ
யாதொரு கவனமும் இல்லை எனக்கு...

வாயிலா காட்டனா
மோஸ்தர் என்ன இப்பொழுது
சுங்கிடி? சுரிதார்?
என்ன பிடிக்கும் உனக்கு
ஒன்றும் புரிவதில்லை...

என் தேவைகள்
சொற்பம்...

நான் போதும் எனக்கு

எனினும்

நிக்கோடின் படிந்த
உதடுகளை
முத்தமிட மறுத்து

நீ
தொடை குறுக்கும்
இரவுகளில்

என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது...

Wednesday, December 2, 2009

அவர்கள் பேசட்டும்...

உன்
நானும்
என்
நீயும்
பேசும் அறையில்
ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்...

Thursday, November 26, 2009

புத்தன் மிதக்கும் இசைவெளி...

என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்.பேச யாருமற்ற பின்னிரவுகளில் அம்மரத்தோடு பேசத் தொடங்கியிருந்தேன்.திக்கி திக்கித் தான் பேச வரும் எனக்கு தேவ மொழி.அம்மரத்திற்கு என்னையும் என் திக்கு மொழியும் மிகவும் பிடித்து போனது.என் மோசமான ஜோக்குகளுக்கும் கூட அம்மரம் குலுங்கி குலுங்கி சிரித்தது.

ஏங்கி விரவும் என் நேசத்தின் ஆக்டோபஸ் விரல்கள் கானும் பொருண்மைகளை கபளீகரம் செய்கிறது.ராத்திரியின் ரணங்களை,என் கேவல்களை பகிர்ந்து கொள்ள தோழியற்ற இப்பாலை நிலத்தில் அம்மரத்தின் ஸ்நேகம் ஆசுவாசமளித்தது.மெல்ல என் நட்பின் ஸ்திரத்தை மரத்திடம் நிறுவிக் கொண்டேன்.அவ்வப்போது வெளியை துழாவும் அதன் விரல்களை முத்தமிடுவேன்.வெட்கத்தில் பூரிக்குமது.

பார்க்க சொரசொரப்பாய்,கடினமாய் தடித்திருக்கும் அதன் தோலுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கும் உயிர் வெள்ளத்தை உணரத் தொடங்கினேன்.நிகழின் கொடுங்கனவுகள் சருகைப் போல் என்னை புரட்டும் பொழுதெல்லாம் அம்மரத்தடிக்கு சென்று விடுவேன்.தாய்மையோடு என் தலைகோதுமது.

இப்பரந்த பிரபஞ்சத்தில் தன் மூதாதையர் வசித்த அநாதி காலங்களையும்,நிலவெளிகளையும்,கானகங்களையும் குறித்த தீரா கதைகளை மிக உவப்போடு கூறுமது.ஓரிரவில் தூர தேசமொன்றில் வசிக்கும் தன் காதலன் குறித்து நாணத்தோடு கூறியது.பறவைகள் மூலம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்றது.

விதையாய் ஒரு பறவையின் வயிற்றில் தான் பறந்தலைந்த பொழுதையும்,மண்ணில் விழுந்து உயிர் தரித்த நிகழ்வையும்,இங்கு நடப்பட்ட நாளையும்,இவ்வெப்ப பிரதேசத்தில் தான் வேர் கொள்ளும் வரை நீரூற்றி காத்த அரபிக்கிழவனையும் வாஞ்சையோடு நினைவு கூர்ந்தது.

காலம்,இடம்,திசை,வடிவம் என தீர்மானிக்கும் பேரிறையின் கருணையை நன்றியோடு பாடியது.நான் என் மனித சுபாவத்தோடு நின்ற இடத்திலேயே நிற்கிறாயே, அலுப்பாக இல்லையா? தனிமையை எப்படி எதிர்கொள்கிறாய்? எனக்கேட்டேன்.

முட்டாளே,உலகில் யாரும் தனியில்லை.நீயும் நானும் ஒன்று தான்.உனக்கு முடி உதிர்கிறது,எனக்கு இலை உதிர்கிறது.அவ்வளவுதான் என கூறி சிரித்தது.

"அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீயும் புத்தனாகலாம்.புத்தன் உன்னைப்போல் புலம்புவதில்லை" என்றது.

"நீ மரமானதற்கும்,நான் மனிதனானதற்கும் தேவை என்ன?" என்றேன் அது அடக்க மாட்டாமல் சிரித்தது.பிறகு,

"சிருஷ்டி" என்றது.

புரியவில்லை என்றேன்.

"நீ மறதியில் இருக்கிறாய்,நினைவு கொள்ளும் தருணமொன்றில் நீயும் என்னைப் போல் சிரிப்பாய்" என்றது.அதன் பூடக பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.புரியாத போதும்.உறக்கம் அழைக்கும் வரை மரத்தோடு பேசி சிரிக்கும் என்னை பைத்தியம் என்றனர் நண்பர்கள்.அதை மரத்திடமே கூறி சிரித்தேன்.

"மனிதர்களை நேசம் கொள்,மனிதன் மட்டுமே புத்தனாகலாம்,பிரபஞ்சம் புத்தர்களுக்காக காத்திருக்கிறது" என்றது மரம்.

"ஏன் மனிதன் புத்தனாக வேண்டும்?" என்றேன்.

"புத்தன் பிரபஞ்சத்தின் கண்ணாடி.பிரபஞ்சம் புத்தனின் கண்ணாடி.ஆனால் அதில் இடவல மயக்கங்கள் இருக்காது.

யாருமற்ற உன் அறைக்குள்
யாரை பார்க்கிறதுன்
கண்ணாடி?

யோசி...யோசி..." என்றது.

இப்படியாக இந்த ஆறு மாதங்களில் நான் அம்மரத்தோடு பேசாத இரவுகளே இல்லை.

அன்று அலுவலகம் செல்லும் முன்,வழக்கம் போல மரத்திடம் கையசைத்தேன்.நேரவிருக்கும் அசம்பாவிதம் அறியாமல்.குழப்பமாக கையசைத்தான் விடுதியை பராமரிக்கும் ஜசிம்,என் மரத்தடியில் நின்று கொண்டு.மாலை திரும்பி வரும் பொழுது என் மரத்தின் கிளைகள் துண்டாடப்பட்டு ஒரு மூலையில் அடுக்கப்பட்டிருந்தது.என் கால்கள் பலமிழந்து விட்டன.கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

"அய்யோ..யார்? யாருன்னை..? என்று கதறலாக குழறினேன்.

தன் சோர்ந்த விரல்களால் என் விழி துடைத்தது கிளை இலைகள்.கனன்று உக்கிரமேறிய என் கண்ணெதிரே குறுக்கும் நெடுக்குமாக கோடாரியோடு அலைந்து கொண்டிருந்தான் ஜசீம்.மரக்கிளைகளை வெட்ட அவனுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.அவனை வெட்ட எனக்கு வேறு காரணங்கள் தேவைப்படவில்லை.காட்டுமிராண்டி போல் அவன் மீது பாய்ந்தேன்.பாகல்..பாகல் என அலறியபடி ஓடியவனை துரத்தி துரத்தி நையப்புடைத்தேன்.

அவன் மொட்டையடித்திருந்த என் மரத்தடியில் விழுந்து சில்லு மூக்குடைந்து கோரமாக காட்சியளித்தான்.கிளைகளை இழந்து துயரத்தில் நின்றிருந்த என் மரத்திடமிருந்து பிசிரான தொனியில் வந்தது அந்த அசரீரீ.

"வாழும் எவ்வுயிர்க்கும் உயிர் பொது.வலி பொது..விடு".

விட்டுவிட்டேன்.கழிப்பறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு அழுது தீர்த்தேன்.மீண்டும் என்னை தனிமைக்கு தின்ன கொடுத்தேன்.மௌனமாய் நின்ற மரத்தை காண சகிக்காமல் மரம் இருந்த திசையையே தவிர்த்தேன்.

ஆயிற்று சில நாட்கள்.இரவு பூராணாய் குறுகுறுத்த ஒரு தருணத்தில் காற்றில் மிதந்து வந்தது அந்த குரல்.அது என் மரத்தின் குரல்.ஓடிச் சென்று பார்த்தேன்.இயற்கையெனும் பெருமுலைக்காரி கருணையோடு சுரக்கும் பச்சை தத்துவம்.ஈரத்தின் துளிர்ப்பு.கொத்து கொத்தாய் பசும் இலைகள் துளிர்த்திருந்தன.கண்கள் ஈரம் கோர்த்துக் கொள்ள என் மரத்தை இறுகத் தழுவிக் கொண்டேன்.சொற்கள் கரைந்து சாரமாக மனசுக்குள் ஓடியது மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்று. ஆம்,கவிதைகள் சொற்களற்றவை.

Sunday, November 22, 2009

பிறை மூக்குத்திக்காரிக்கு தந்த முத்தங்களும் சில கொலைகளும்...

கறுப்பு சிறகணிந்து தேவதைகள் பறக்கும் இவ்வானத்தில் மேகங்களே இல்லை.சொட்ட சொட்ட நனைந்து நிற்கும் என் தாய்மொழியான ஜிப்பரிஷ் யாருக்கும் புரிவதில்லை.எனை தினம் கூடும் ராட்சஷி இன்று பிறை மூக்குத்தி அணிந்திருந்தாள்.

'
தருணத்தின் தருணி
மோன தர்சினி
...' **

என இவளைத்தான் வருணித்தானோ அவன்.இழுத்தணைத்து எத்தனை முத்தமிட்டும் அவள் கன்னம் சிவக்காததில் உலர்ந்து திரும்பி கொண்டிருந்தேன்.வழியில் 'பறவைகள் எங்கே சென்று மரிக்கின்றன' என்ற கவிதையொன்று காலில் இடறியது. அதன் பழுப்பு நிற இறகிலொன்றை பிடுங்கி வெளியில் எழுதினேன்.சவம்..தவம்...சூன்யம்.

அறை திரும்பி சோர்ந்து அமர்கிறேன்.படபடக்கின்றன என் டைரியின் நிர்வாண பக்கங்கள்.ஒவ்வொரு முறை பிரிக்கும் பொழுதும் எழுதப்பட்ட சில பக்கங்களை கிழித்தெறிகிறேன்.துருத்தி நிற்கும் இச்சொற்களை சகிக்க முடிவதில்லை.குளிப்பாட்டி,உடைமாற்றி,சீவி,சிங்காரித்து யார் மெச்ச இந்த ஆட்டமெல்லாம்.ஊற்றுக்கண் உடையும் வரை கொப்பளிப்பது சேறும் சகதியும் தான்.இதை மேடையேற்றுவானேன்?

பக்கங்களை போல் நினைவுகளையும் கிழித்தெறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணி பேனாவின் கொப்பியை உருவுகிறேன்.உறை விட்டெழும் வாளென அமைதியாகின்றன தாள்கள்.நிச்சயம் நிகழப்போவது கொலை தான்...

இதுவரை முன்னூற்றி இருபத்தியிரண்டு சொற்கள் எழுதி அடித்த பிறகும் கிடைக்கவில்லை ஒரு சொல்.எழுதப்படும் சொல்லுக்கும் அடிக்கப்படும் சொல்லுக்கும் நடுவிலிருந்து நழுவி நழுவிச் செல்கிறது சொல்ல நினைக்கும் சொல்.

சொற்கள் சொற்களாக சேர்ந்து என் மேசையை அடைத்து கொண்டிருக்கும் புத்தகங்கள் மெல்ல புன்னகைக்கின்றன.எத்தனை சொற்களை தின்றுமிழ்கிறான் புனைவாளன்.கடைத்தெரு செல்லுமுன் லேசாய் புடவை தலைப்பை சரி செய்து கொள்ளும் யுவதியென சில சொற்கள்.திட்டு திட்டாய் உதட்டு சாயம் பூசிய விடலையாய் சில சொற்கள்.அலங்கார தளுக்கிகளாய் சில சொற்கள்.நான் வாசித்த புத்தகங்கள்...எனை வாசித்த புத்தகங்கள்...அய்யோஓஓஓஒ... யாரேனும் எனை இந்த சொற்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.

பூட்டி விஷ வாயு செலுத்தப்பட்ட அறைக்குள்ளிருந்து வெளிப்படும் கூக்குரலாய் புத்தகங்களிலிருந்து கேட்க தொடங்குகின்றன சப்தங்கள்.எல்லா புத்தகங்களையும் கொட்டி கவிழ்த்து சிறைப்பட்ட சொற்களை விடுவிக்கிறேன்.வண்ணத்து பூச்சிகளென அவை சிறகடிக்கின்றன.சில முத்தமிடுகின்றன.முதிரா கூட்டு புழுக்கள் சில என் மேலூர்ந்து துவாரங்களுள் புக எத்தனிக்கின்றன.சடசடவென வௌவாலாய் ஈஷியபடி எனைக் கடிக்க தொடங்கும் சில சொற்களை துவம்சம் செய்ய தொடங்குகிறேன்.எழுத்துக்களாய் சிதைந்து அவை மோதி விழும் சுவரில் வழிகின்றது பல வண்ண நிற குருதி.

யூமாவின் ஓவியத்தில் அப்பி கொண்ட பூச்சியொன்று நகராமல் சண்டி செய்கிறது.அறை முழுவதும் வீசும் குருதி கவிச்சையில் குடல் புரட்டுகிறது.கருப்பு வெள்ளை கவிதையொன்றுக்குள் கிடத்தப்பட்ட பியானோ மீது நடந்து செல்லும் பூனை பிரேதா-மியாவ்...பிரேதன்-மியாவ் என என் மீது பாய்கிறது.துழாவலுக்கு அகப்பட்ட மாயாண்டி கொத்தனின் ரசமட்டத்தை அதன் நடுமண்டையில் பிரயோகிக்கிறேன்.அலறியபடி அது புத்தன் தியானிக்கும் குளத்தாழ நிலவில் குதித்து விட்டது.'சுசீலா சுசீலா'..'எனக்கு யாருமில்லை' என பிதற்றியபடி சுவர் மூலையில் ஒண்டுமொரு சொல்லை உணர்வு கொம்பால் நிமிண்டி பார்க்கிறது கரப்பானாய் உருமாறிய இன்னொரு சொல்.

கிழிந்த அட்டைகள் இறந்த புறாக்களென றெக்கை பரப்பி கிடக்கும் அறையில் சுழல்கிறது மின்விசிறி.வட்டம்..மாயவட்டம்...சடக்கென நிறுத்திவிடலாம்.என் வட்டம் விட்டு வெளியேறிவிடலாம்.குற்றுயிராய் கிடக்கும் சொற்களையெல்லாம் திரட்டி கோணியொன்றுள் அடைத்து கொண்டு நடக்கிறேன்.வெளி சலனமற்றிருக்கிறது.வழி தவறிய மானொன்று மருண்டு பார்க்கிறது.இவற்றை எரிப்பதா புதைப்பதா என்ற குழப்பத்தினூடே நான்.பின் தொடரும் என் சுவடுகளை பாலைக்காற்று மூடிக்கொண்டு வருகிறது.**லா.ச.ரா


குறிப்பு:

புத்தகங்கள் வேண்டுமென கேட்டவுடன் திருவண்ணாமலை வரை அலைந்து வாங்கி அனுப்பிய கதிருக்கும்,சிரமம் பார்க்காமல் புத்தகங்களை திரட்டி தந்த பவா அவர்களுக்கும்,எடுத்து வந்த முபாரக்கிற்கும் மிக்க நன்றி நன்றி.

Saturday, October 31, 2009

ஒரு ரோஜாவை...

ஒரு ரோஜாவை
ரோஜாவாய் நான்
பார்ப்பது எப்போது?
இதழடுக்கில் உருளும்
பனித்துளியோடு
இக்கனத்தின் ஒளியோடு
ரோஜாவாய் இருக்கிறது அது...
என் சொற்களால்
அதன் சுமை கூடாமல்
ஒரு புன்னகைக்கு வற்புறுத்தாமல்
கொஞ்சமும் அவிழாமல்
என் நேசத்தை எப்படி சொல்வது?
ஒரு கனம்
தன் புலம் விட்டு
என்னை நகர்த்தி விடும் முன்
இந்த ரோஜாவை
ரோஜாவாய் நான்
பார்ப்பது எப்போது?

Saturday, October 10, 2009

மௌன சினுங்கல்கள்...

கற்பக விநாயகர்
குறுக்கு சந்தில்
நீ குடியிருந்த அந்த
பழைய ஓட்டு வீட்டு
வாசலிலிருந்து
பொறுக்கி வந்தேன்
ஒரு பச்சை நிற
வளையல் துண்டை...

இனி எங்கிருந்து
சேகரிப்பேன்
எனை கூவி கூவியழைத்த
அதன் சினுங்கலை?

Friday, October 9, 2009

மந்தையிலிருந்து...

மந்தையிலிருந்து
விலகி நடக்கிறது
ஒரு வெள்ளாடு...

உமிழ்நீர் சொட்ட
கோரப்பல் காட்டும்
ஓநாய்களுக்கு நடுவே
சாவகாசமாய்
நடந்து போகிறது அது...

வீரய்யன் கருப்பசாமி
பெயரில் என்ன ஏதொவொரு
குலசாமி நேர்த்தி கடன்
ஓசியில் முடியலாம்...

கரீம் பாய்
கடை வெளியே
தலைகீழாய் தொடைகறிக்கு
கல்லா நிரப்பலாம்...

கூட்டில் கல்லெறிந்தவன்
முகமூடி போட்டிருக்க
கொடுக்குகள் துளைத்தது
வெள்ளாட்டை...

சொட்டு சொட்டாய்
தேனீக்களின்
உதிரம் கொட்டும்
காடு விட்டு...

மந்தை விட்டு
மேய்ப்பன் விட்டு...

வேறென்ன செய்யும் அது...?

Friday, October 2, 2009

குருட்ஜீஃப்...சூஃபிஸம்....சில திரைப்படங்கள்...

ரமலான் விடுமுறைகளில் ஒரு நாளை அழகாக்கிச் சென்றது 'In to the wild' திரைப்படம்.ஒரு சாமானியனின் அகத்தேடல்.அதன் பொருட்டு அவன் மேற்கொள்ளும் நீண்ட பயணம்.சந்திக்கும் மனிதர்கள்...வெகு சிலரால் மட்டுமே செக்குமாட்டு வாழ்வின் நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள முடிகிறது.ரத்தமும் சதையுமாய் வாழ்வின் நறுமணங்களை நுகரத் துடித்த ஒரு இளைஞனின் நாட்குறிப்பு இப்படம்.வெகு நாட்களுக்கு பிறகு ஆழமான அகநெகிழ்வு தந்த ஒரு அற்புதமான திரைப்படம்.இறுதி காட்சிகள் வெறுமைக்குள் துப்பி விட ஏதும் செய்ய தோன்றாமல் வெகு நேரம் உட்கார வைத்து விட்டது.


சூஃபிகள் குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக சிக்கியது குருட்ஜீஃப் ன் 'Meetings with Remarkable Men' என்ற திரைப்படம்.ஓஷோவின் 'Books I have Loved' ல் இப்புத்தகமும் ஒன்று.மின்னூலாக வெகுநாள் கைவசம் இருந்தும் வாசித்திருக்க வில்லை.அப்புத்தகமே திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.மர்மங்கள் நிறைந்த ஒரு சாகச நாவலை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது படம்.


பள்ளி வயது மாணவனான குருட்ஜீஃப் தன்னை சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளையும் அதிசயிக்கிறார்.கேள்விகளால் நிரம்பி வழிகிறது அவர் மனம்.விடையளிப்போர் யாருமில்லை.அளிக்கப்படும் விடைகள் அவருக்கு போதுமானதாக இல்லை.20 வருடங்களுக்கு ஒரு முறை அக்கிராமத்தின் மலையடிவாரத்தில் 'Ashoks' என்றழைக்கப்படும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள்.அங்கே ஒரு போட்டி நிகழ்த்தப்படுகிறது.எல்லா இசைக்கலைஞர்களும் தனித்தனியே தம் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.யாருடைய இசையை மலைகள் எதிரொலிக்கின்றனவோ அவரே வென்றவர்.பலரும் தமது இசைக்கருவிகளை இசைக்கின்றனர்.இறுதியாக ஒரு புல்லாங்குழல் கலைஞருடைய இசையை மலைகள் எதிரொலிக்கின்றன.('Masaru Emoto' என்ற ஒரு சப்பை மூக்கு காரரின் 'Messages from water' என்ற நூல் இருக்கிறது.சப்தங்கள் தண்ணீரை அதன் மூலக்கூறுகளை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான ஆய்வு நூல் அது.தகவல் உபயம்-நித்யானந்த பரமஹம்சர்)குருட்ஜீஃப் தன் தந்தையை, தன் மீது பிரியம் கொண்டுள்ள ஆசிரியரை கேள்விகளால் குடைகிறார்.பதில்களால் அவரை திருப்தி செய்ய முடிவதில்லை.

காகாசியன் நாடோடிகள் சூழ்ந்த அப்பிராந்தியத்தில் குருட்ஜீஃப் பயமற்றவராக வளர்கிறார்.வலிமையானவராகவும்.ஒருமுறை ஒரு சிறுவன் சிறிய வட்டம் ஒன்றிலிருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.சாக்பீஸால் வரையப்பட்டது போன்ற அவ்வட்டத்தை yezide circle என்று கூறுகிறார்கள்.(காகாசிய நாடோடிகள் ஹிப்னாடிசம் போன்ற தந்திர வித்தைகள் பல அறிந்திருந்தனர்.அவர்களுடைய வாழ்வு முறை புதிர்களும் விசித்திரங்களும் நிறைந்தவை என்று ஓஷோ குறிப்பிடுகிறார்) குருட்ஜீஃப் அவ்வட்டத்தை அழித்து விட அச்சிறுவன் ஓடிவிடுகிறான்.குருட்ஜீஃப் அவ்வட்டம் குறித்து தம் ஆசிரியர்களிடம் கேட்கிறார்.அவர்களுடைய பதில்களும் அவருக்கு சமாதானம் தருவதில்லை.

மற்றொருமுறை புதைக்கப்பட்ட ஒருவரின் சிதை மறுபடியும் பிணக்குழிவிட்டு வெளியே வந்து கிடக்கிறது.பிறகு சடங்குகள் நிகழ்கின்றன.இது போன்ற விசித்திர நிகழ்வுகள் அவரை தொடர்ந்து அலை கழிக்கின்றன.இளைஞனாகும் குருட்ஜீஃப் கூலித்தொழிலாளியாக தம் வாழ்வை தொடர்ந்தபடி ஒத்த அலைவரிசை உடைய சில நண்பர்களோடு தம் தேடலை தொடர்கிறார்.ஒருமுறை அவர்களுக்கு ஒரு புதை பொருள் கிடைக்கிறது.அதில் ஒரு துறவியின் கடிதம் இருக்கிறது.அதில் சார்மோங் சகோதரர்கள் பற்றிய குறிப்பு இருக்கின்றன.கிறிஸ்துவுக்கு 2500 வருடங்கள் முந்தைய பாபிலோனில் இருந்த ஒரு ரகசிய பள்ளி அது.சார்மோங் சகோதரர்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே ஒரு பழைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிகிறார்கள்.மேலும் சார்மோங் சகோதரர்களின் பள்ளி இன்றும் இருப்பதாகவும் எங்கேயென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய புரட்சியின் பின்னணியில் பல அபாயங்களோடு தன் நண்பருடன் எகிப்தை நோக்கி பயணப்படுகிறார் குருட்ஜீஃப்.வழியில் குறிப்பிடத்தகுந்த பலரது நட்பும்,எதிர்பாராத உதவிகளும் அவருக்கு கிடைக்கின்றன.இறுதியாக பல முயற்சிகளுக்கு பின் அவரது வாழ்நாள் கேள்விகளுக்கு விடையளிக்கப்போகும் சார்மோங் சகோதரர்களை அவர் சந்திப்பதோடு படம் முடிகிறது.

இங்கிருந்து தான் குருட்ஜீஃப் 'Sufis Whirling', நடன கலையையும் மற்றும் பல ஆன்ம சாதனாக்களையும் கற்றுக் கொள்கிறார்.சூஃபிகளால் ரகசியமாகவே பரிமாறிக் கொள்ளப்படும் ஞான மரபை பின்னாட்களில் குருட்ஜீஃப் உலகறியச் செய்ததில் சூஃபிகளுக்கு இவர் மீது கசப்பிருந்ததாக ஓஷோ குறிப்பிட்டிருக்கிறார்.மிகப்பழமையான இத்தியான முறை பரவலாக எல்லா ஞான மரபுகளாலும் பின்பற்றப்பட்டுள்ளது.சிவ சூத்திரம் எனப்படும் தந்த்ராவில் இந்த சுலோகமும் இருக்கிறது.('நிறுத்து' என்ற உத்தி).ஈஸாவில் நானும் இத்தியான முறைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.ஆக கருவிகள் தான் வேறுபடுகின்றன.தேடப்படும் இசை எங்கும் ஒன்றே தான்.

குருட்ஜீஃப் தன் தேடலின் பொருட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு சுற்றியலைந்திருக்கிறார்.பின்னாட்களில் இவருடைய சீடர்களுள் ஒருவரான PD Ouspensky எழுதிய 'In search of the Miraculous' என்ற புத்தகமே குருட்ஜீஃப் ஐ உலகறியச் செய்திருக்கிறது.

கலை,இலக்கியம்,விஞ்ஞானமென அசுர கதியில் உலகம் சுழலும் இவ்வேளையில் குருட்ஜீஃப் போன்ற Mystic களை பற்றி வாசிப்பதும் எழுதுவதும் ஒரு Fantacy போல் தோன்றுகிறது.எனினும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அக ஆழத்தில் படிந்து கிடக்கும் இந்த உணர்வை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது என்பதே என் அனுபவம்.ஆழமான புரிதலில் வாழ்வின் பரிமாணங்கள் விளங்கக்கூடும்.சூழ்ந்திருக்கும் விரோத மேகங்கள் விலகக்கூடும்.தேவையெல்லாம் சரியான புரிதல் மட்டுமே.இப்படம் Nomads,Yezides என பல தளங்களுக்கு அழைத்து சென்றது.விளைவாக Bab'Aziz என்ற படத்தையும் பார்க்க முடிந்தது.ஒரு சூஃபி ஃபக்கீர் பற்றிய அழகான படமது.அப்படத்தில் வரும் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

மூன்று வண்ணத்து பூச்சிகள்

மெழுகொளிக்கு வந்தன...

ஒன்று ஒளியருகே வந்து

அன்பை கண்டேன் என்றது..

மற்றொன்று இன்னும் அருகே வந்து

லேசாய் சிறகை பொசுக்கி கொண்டது...

மூன்றாம் வண்ணத்து பூச்சி

தீபம் நடுவே புகுந்தது

ஒளியில் கரைந்தது...

அது ஒன்றே அன்பை அறிந்தது...

(தகவல்களுக்கு நன்றி-விக்கிபீடியா)

Tuesday, September 8, 2009

மழை குறிப்புகள்...
ன் இந்த இரவு எறும்பின் கால்களை கொண்டு நடக்கிறது? ஏன் இந்த நினைவு மழைக்கால மேகமாய் குமைந்து கிடக்கிறது? உறக்கத்திலும் பால் அருந்துவதாய் இதழ் கூட்டும் குழந்தை போல..ஏதேதோ நினைவுகளை குதப்புகிறது மனசு.மழையே இல்லாத இவ்வூரில்,சதா மழை குறித்தே பேசும் கவிஞனோடு உரையாடுவது இதமாய் தான் இருக்கிறது.மழை என்ற சொல்லுக்குள் உறைந்து கிடக்கிறது தனிமை,தாபம்,தேநீர் மற்றும் பால்யம்.

இன்றும் பெருமழை என்றால் வீதியெங்கும் மழையாறு ஓடும் என் கிராமம் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது.அல்லது தேவதைகள் வாழும்
ஊரில் வாழ நான் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தேன்.ச்சோவென்று அடிக்கும் அடர் மழையில் உயிர் இற்று விழுந்து விடும் வரையில் களி-ரௌத்ர நடனமிடும் கனவுகள் இருக்கிறது இன்று.அன்றெல்லாம் மழையோடை வீதிகளில் கப்பல் செய்து விடுபவனாக இருந்தேன்.

மாலா 'வெள்ளை காக்கா காட்டுறேன் வா' என அழைத்து மழையில் குளித்த ஒரு குறுமரத்தடியில் நிற்க வைத்து கிளை பிடித்து ஆட்டினாள் ஒருமுறை.சிலுசிலுவென உதிர்ந்தன ஈரதுளிகள்.அழகான கணங்கள் அவை.எனக்கே எனக்காய் பொழிந்த சிறுமழை.மழை காலங்களில் எத்தனை எத்தனை தட்டான் பூச்சிகள் பறந்தன.பச்சை தட்டான்,நீல தட்டான்,யானை தட்டான்,ஊசி தட்டான்.ஒன்றின் வாலை மற்றொன்று பற்றி காற்றிலேயே புணரும் ஜோடி தட்டான்.தட்டான் பிடிப்பது தவறு என்று அறியாத வயது.செடியில் அமரும் தட்டானை லாவகமாய் கைவீசி பிடித்து, வாலில் நூலொன்று கட்டி பறக்க விடுவேன்.என் எல்லைக்குள்ளாக சிறகடித்து சிறகடித்து சோர்ந்த தட்டான்கள் எத்தனையோ.தலை வேறு,கால் வேறு என்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட தட்டான்கள் இக்கொடூரனை எவ்விதமாயெல்லாம் சபித்திருக்குமோ. ?

என் ஓட்டு வீட்டு முற்றத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நாகதகடு வழியாக விழும் அந்த நான்கு குட்டி அருவிகளில் மாறி மாறி நனைவேன்.தீராமல் பொழியும் இந்த மழையின் வீடு எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பேன் அவ்வயதில்.நீலமாய் இருக்கிறதே.. அந்த திரைக்கு பின்னே தான் சொர்க்கமிருப்பதாகவும் கூட்டாளிகளோடு பேசி கழித்திருப்பேன்.நினைத்து நினைத்து அழும் குடிகாரனின் பெண்டாட்டி போல் தோன்றும் பொழுதெல்லாம் பொழிந்து விளையாட்டை கெடுக்கிறதே என்று சபித்திருப்பேன்...அடை மழை என்றால் பள்ளி விடுமுறை.பால்யம் மழைக்கு நிரம்ப நன்றி கடன் பட்டிருக்கிறது.

பருவம் தோறும் மழை வெவ்வேறு வண்ணங்களையும் வாசனைகளையும் கொண்டிருக்கிறது.கிட்டிப்பில்,பம்பரம்,உப்பு மூட்டை,முருக்கு,பொறியரிசி என்று மழையோடு கழிந்த பொழுதுகள் மணலடி ஊற்றாய் தளும்பி கொண்டிருக்கின்றன அடிமனதில்.நனைவதில் எறுமைகளுக்கு சகபாடியாயும், பாசியடர்ந்த பழைய படிக்கட்டுகளுடைய அந்த ஆனைகுளத்தில், பிழிய பிழிய மழை பொழிய, அழிச்சாட்டியம் குறையாது கூட்டாளிகளோடு சேகண்டி அடித்ததும், அக்குளத்தில் ஆசாரிகள் ஊறப்போடும் பெரிய மரத்துண்டுகளை படகாய் பாவித்து ராஜகுமாரனாய் குளத்தை வலம் வந்ததும், குளத்தில் மூழ்கி விளையாடும் நீந்தி பிடிச்சான் விளையாட்டில் நீருக்குள் நீந்தி நண்பன் என தெரிந்தும் தெரியாமலும் தாவிப்பிடித்து மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களால் துரத்தப்பட்டதுமென குளிர்ந்து கிடந்தது மழை நீர் வெளிகள்...

பிறகான மழை நாட்கள் தனித்து ஊதலேறி கிடக்கும் அறையை வெப்பமூட்டுவதாய் இருந்தன.பாயை பிராண்டி பிராண்டி நகக்கண்கள் உடைந்தன.மழையிழைகளினூடே சமிக்ஞை பல கிடைத்தன.ஒரு மழை நாளில் தான் அவள் எனக்கு என்னையும் அவளையும் உணர்த்தினாள்.எல்லாம் சித்தித்த நாட்கள் அவை.

அழுகின்ற பொழுதெல்லாம் சுரக்கும் தாய் முலையாய்,கேட்கும் பொழுதெல்லாம் தீராமல் பொழிகிறது இந்த மழை மனசுக்குள்.


நண்ப!

இன்றெல்லாம்...

பெருமழையிரவில்
பிரியமானவளோடு நனைந்தபடி
ஜலமுக்தியாகி விடும்

கனவுகளே எனக்கு...
நண்பனோடு..மழையை ரசித்தபடி..தேநீர் அருந்தும் விருப்பம் உனக்கு...
நாம் மழையை பிரார்த்திப்போம்...

Monday, August 31, 2009

தலைப்பற்றவை...தூரத்தில் சரசரக்கும்
அவள் காலடியோசையில்
விழித்து விடுகிறதென் புலன்கள்
விழிக்காது நடிக்கிறேன் கொஞ்சம்...

என்னருகே அமர்ந்து
எடுத்து வாசிக்கிறாள்
அவளுக்கான என் கவிதையை...

ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
ஓரோர் எழுத்தாய்
எடுத்து உண்ணுபவளை...

எழுந்து போனபின்
எடுத்து வாசிக்கிறேன்
வெற்று காகிதத்தில்
அவள் விட்டுச் சென்ற கவிதையை...

Saturday, August 29, 2009

நாச்சியாவும் அமுக்குபிசாசும்...


அப்பொழுது நான் கல்லூரி முதலாமாண்டு படித்து கொண்டிருந்தேன்.காளி கோவில் தான் விடுமுறைகளில் நான் பொழுது போக்குமிடம்.காளி கோவில் ஊர் எல்லையில் சுடுகாட்டை பார்த்தபடி இருக்கும்.உச்சி உறுமும் நேரங்களில்,ஒரு ஈ காக்காயை கூட பார்க்க முடியாது.கோவிலை ஒட்டி ஒரு பெரிய ஆலமரம்.விழுதுகள் தரையை துளைத்து இறங்கியிருக்கும்.அதன் நிழல் கோவிலை சுற்றி கவிந்திருக்கும்.
கல்லூரிக்கு மட்டம் போட்டு விட்டு கோவிலில் படுத்துறங்கிய ஒரு மதிய வேளையில் தான் அது நிகழ்ந்தது.
மரம் அசைவற்று புழுங்க தொடங்கியிருந்தது.மழை வருவது போல் மேகம் இருட்டி கொண்டு வந்தது.
உறக்கமும் சொப்பணமும் அலை கழிக்க திடுமென ஒரு பாரம் உடலை அழுத்தத் தொடங்கியது.மூச்சு விட முடியாத சுமை.கைகால்கள் மரத்து போயின.விழிகளை திறக்க முடியவில்லை.இம்மி கூட அசைய முடியவில்லை.அழுத்தும் பாரத்தோடு போராடி கொண்டிருந்தது என் ஸ்தூல உடல்.விலக்க தோன்றாத இன்பமாகவும் இருந்தது அந்த விசை.சற்றை கெல்லாம் திடுமென விலகிக் கொண்டது அந்த பாரம்.சற்று நேரங் கழித்து கண் விழித்து அயர்ச்சியும் நசநசப்புமாக தலையை உயர்த்தினேன்.தூரத்தில் சுடுகாட்டின் ஒற்றையடி பாதையில் யாரோ ஒருத்தி நடந்து சென்று கொண்டிருந்தாள்.ஒரு கணம் மயிர்கால்கள் சிலிர்த்து கொண்டது.பிறகு என்ன மடத்தனம்,வெறும் பிரமை என என்னையே சமாதானம் செய்து கொண்டேன்.
மாலை வீடு திரும்பிய பொழுது,செகதாம்பாள் அவசரமாக என் வீட்டிற்கு வந்தாள்.மருத்துவரை அழைத்து வரக் கூறினாள்.நாச்சியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றாள்.நாச்சியாவுக்கு என்னை விட இரண்டு வயது கூடுதல்.அவளை நாச்சி என்று தான் அழைப்பேன்.நாச்சியா தீமிதி பார்க்க பிறந்தகம் வந்திருந்தாள்.நான் மருத்துவரை கையோடு அழைத்து வந்தேன்.
"என்ன ஆச்சு"
"தெரியலீங்க,சாயங்காலமான என்னமோ மாதிரி ஆயிடுறா,சம்மந்தா
சம்மந்தமில்லாமல் பேசறா,தானா சிரிச்சுக்குறா"
மருத்துவர் பரிசோதித்து விட்டு 'பயப்பட ஒன்னுமில்ல' என்று கூறி ஏதோ மருந்தெழுதி தந்தார்.அவர் பரிசோதிக்கும் பொழுது நாச்சியா இயல்பாகவே இருந்தாள்.லேசா தலைவலி என்று கூறினாள்.அவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் வெறிக்க தொடங்கியது அவள் பார்வை.எனக்கு பொறி தட்டியது.மதியம் கலங்கலாக தூரத்தில் சென்ற உருவம் அணிந்திருந்த அதே மஞ்சள் நிற புடவை.
நான் செகதாம்பாளிடம் நாச்சியா மதியம் எங்கிருந்தாள் என்று கேட்டேன்.அவளுக்கு தெரியவில்லை.வயலில் களையெடுத்து கொண்டிருந்ததால் அங்கு சென்று விட்டாளாம்.நாச்சியா ரொம்ப சாது.தானுண்டு தன் ஜோலியுண்டு ரகம்.மாநிறம், உறுத்தாத அழகு.இரண்டு வருடங்களுக்கு முன் தான் திருமணன் நடந்திருந்தது.குழந்தை குட்டி ஒன்றும் இல்லை.அவளுக்கு மாப்பிள்ளையை சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவளை பெண் பார்த்து சென்ற சமயத்திலேயே கூறினாள்.செகதாம்பாள் அதையெல்லாம் காதில் போட்டு கொள்ளவேயில்லை.மாப்பிள்ளை கூட்டுறவு சொசைட்டியில் கணக்காளராக இருந்தார்.ஏன் அவளுக்கு திடீரென்று இப்படி ஆகிறது என்று புரியவில்லை.பொழுது சாய்ந்தால் ஒருவிதமாக நடந்து கொள்கிறாள்.விடிந்ததும் சகஜமாகி விடுகிறாள்.
அடுத்த நாள் நடு ராத்திரியில் தெரு நாய் ஒன்று ஊளையிட்டு கொண்டிருந்தது.அதன் ஓலம் சகிக்காது விழிப்பு தட்டிவிட்டது.மொட்டை மாடியில் கயிற்று கட்டில் போட்டு தூங்கும் வழக்கம் எனக்கு.நாயின் ஊளை வர வர நாராசமாகி கொண்டே போனது.அதன் ஊளைக்கு அடுத்த தெரு நாய்களும் ஊளையிட்டு கோரஸ் கொடுத்து கொண்டிருந்தது.எழுந்து சென்று தெருவை பார்த்தேன்.தெரு முக்கில் யாரோ வருவது மின் கம்ப வெளிச்சத்தில் மங்கலாக தெரிந்தது.நாய் முகத்தை மேல் நோக்கி நிமிர்த்தி கொண்டு கர்மமே கண்ணாக நீண்ட ஊளையில் லயித்திருந்தது.மொட்டை மாடியில் ஏதாவது கல் கிடக்கிறதா என துழாவினேன்.சில்லு ஒன்று தட்டுப்பட்டது.எடுத்து கொண்டு விளிம்புக்கு வந்த பொழுது அந்த உருவம் துலங்கியது.அவனொரு குடுகுடுப்பை.
நாய் ஊளையிடுவதை நிறுத்தி குலைக்க தொடங்கியது.அவன் அதை லட்சியம் செய்யாமல் விடுவிடுவென நடந்தான்.நாய் அவனை கடிப்பதற்கு பாய்ந்த பொழுது.அதன் மீது எதையோ எறிந்தான்.சடுதியில் நாய் ஓய்ந்து விட்டது.வாலை சுருட்டி கொண்டு அப்படியே அமர்ந்து விட்டது.என்ன நிகழ்கிறது என உணர்வதற்குள் அவன் என் வீட்டை கடந்து நாச்சியா வீட்டையொட்டி வளையும் சந்திற்குள் நுழைந்தான்.வேலியை ஒட்டிய சந்தில் நடந்து கொண்டிருந்தவன் சட்டென ஒருகணம் நின்று வேலியை உற்று பார்த்தான்.பிறகு மீண்டும் நடக்க தொடங்கிவிட்டான்.
நன்றாக அந்த வேலியை உற்று பார்த்த பொழுது அங்கே யாரோ நிற்பது தெரிந்தது.மெல்ல அவ்வுருவம் அசைவதும்.பிறகு அது கொல்லை புற வேலி படலை திறந்து கொண்டு சந்திற்குள் நுழைந்தது.அது நாச்சியா தான்.அவள் இப்படி நடு சாமங்களில் உலவ கூடியவள் அல்ல.பயந்த சுபாவி.எனக்கு நெஞ்சு படபடவென அடித்து கொண்டது.கூடவே எழுந்த குறுகுறுப்பும்.
நான் மாடியிலிருந்து கீழிறங்கி அவளறியாது அவளை பின் தொடர்ந்தேன்.அவள் மூன்று சந்துகளுக்குள் புகுந்து சுடுகாட்டிற்கு செல்லும் ஒற்றையடி பாதைக்குள் நுழைந்தாள்.எனக்கு கிலியடித்தது.திரும்பி விடலாம் என்ற என் யோசனைக்குள்ளாக அவள் இருளுக்குள் கலந்து விட்டிருந்தாள்.ஒரு டார்ச்லைட் கூட எடுக்காமல் வந்த என் புத்தியை நொந்தபடி நானும் சுடுகாட்டுக்குள் நுழைந்தேன்.வழியெங்கும் ஆடிய காட்டாமணக்கு செடிகள் திகிலை ஏற்படுத்தியது.காலில் தட்டுப்பட்ட மண்டையோடுகள் எந்த பெரிசுனுடையதோ.அதையெல்லாம் யோசிக்க தெம்பில்லாது இருட்டில் அவளை துழாவியது கண்கள்.
அவள் தூரத்தில் ஒத்த பல்பு மங்கலாக ஒளிர்ந்த காளி கோவிலுக்கு சென்று கொண்டிருப்பது தெரிந்தது.ஓட்டமும் நடையுமாக காளி கோயிலை நோக்கி விரைந்தேன். பகலிலேயே பயமுறுத்தும் அந்த கோவிலுக்கு நடுசாமத்தில் வரும் என்னை நானே பலவாறு சபித்து கொண்டேன்.கோவிலின் தளத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்தேன்.ஆலமரம் தலைவிரி கோலத்தில் பெரிய பூதம் போல ஆடிக்கொண்டிருந்த்தது.நகர் தோன்றாமல் சற்று நேரம் அப்படியே நின்றேன்.நிலவொளியில் என் முன் ஒரு நிழல் விரிய சப்த நாடியும் ஒடுங்கியது எனக்கு.அப்பொழுது என் தோளை பற்றியது ஒரு கரம்.நான் உச்சபட்ச கிலியில் மூர்ச்சையாகி விழுந்தேன்.நினைவு வந்து பார்த்த பொழுது.என் வீட்டு மொட்டை மாடியிலேயே இருந்தேன்.
மறு நாள் காளி கோவிலில் அமர்ந்து நேற்று நிகழ்ந்தவற்றையெல்லாம் அசை போட்டு கொண்டிருந்தேன்.
ஊருக்குள் இதுவரை நான் கிளப்பியிருந்த புரளிகள் நிறைய."இந்த பிளையார் கோவிலுக்கு இப்பொழுது கூட்டமே வருவதில்லையென" குறை பட்ட அர்ச்சகருக்காக பிள்ளையார் பால் குடிக்கிறார் என ஒரு புரளியை கிளப்பினோம்.அமோக கூட்டம்.ஆதலால் இதை பற்றி யாரிடமேனும் கூறுவது உசிதமாகவில்லை எனக்கு.
முன்பு இந்த கோவிலுக்கு ஒரு சிறுமியை அழைத்து வந்திருந்தனர்.பூசாரி ஒரு தட்டில் சூடம்,வெற்றிலை பாக்கு.ஊதுவத்தி சகிதம் வந்தார்.மறுகையில் கொத்து வேப்பிலை.அந்த சிறுமியின் தாய் அவளை அமரச் செய்தாள்.பூசாரி தூபக்கால் நெருப்பில் சாம்பிராணி இட்டு,ஒரு ராகமான குரலில் பேசினார்.அந்த சிறுமியின் கண்களில் குழந்தை தனத்திற்கு பதிலாக ஒரு பெரிய மனுஷி தனம் தெரிந்தது.புகை சூழ எங்கேயோ வெறித்த சிறுமி அவ்வப்போது பூசாரியை கோபமாக முறைத்தாள்.பற்களை நறநறவென கடித்து கொண்டாள்.
"பூசாரி வந்துருக்கேன்..நான் பூசாரி...எந்த ஊரு உனக்கு..சொல்லு..எந்த ஊரு ஒனக்கு? என்னா வேனும் ஒனக்கு...சொல்லு என்னா வேனும் ஒனக்கு..?ஏன் இந்த பச்சை புள்ளய புடிச்ச..சொல்லு..என்னா வேனும் ஒனக்கு.."என்றபடி வேபிலையை கிறுகிறுவென சுழற்றினார்.நேரம் ஆக ஆக சிறுமியின் முகம் உக்கிரமானது.
பூசாரி சலைக்காமல் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு கொண்டிருந்தார்.எனக்கோ படு பைத்தியக்கார தனமாக இருந்தது.திடீரென அச்சிறுமி பேச தொடங்கினாள்.அக்குரல் ஒரு சிறுமிக்குரியதாய் இல்லை.கரகரப்பான ஒரு வயது வந்த பெண்ணினுடையதை ஒத்திருந்தது.என்னை சுவாரஸ்யம் தொற்றி கொண்டது.
"நான் செம்பகண்டா..."
"எந்த செண்பகம்..?"
"சுபேதார் பேத்தி செண்பகண்டா..."
எனக்கு தூக்கி வாரி போட்டது.செண்பகம் இறந்து குறைந்தது நான்கு வருடங்கள் இருக்கும்.மேலும் கீழத்தெருவில் இருந்த சுபேதாரையோ,அவரது அற்பாயுளில் இறந்த பேத்தியையோ இந்த சிறுமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.என்ன நிகழ்கிறது?
"இப்ப என்னா வேனும் ஒனக்கு..?"
"ரத்தண்டா...என் புருசன் ரத்தம்...அவன் தான் என்னய கொன்னாண்டா"
அட பாவத்தே என சிறுமியின் தாய் பதறினாள்.செண்பகம் மாரடைப்பில் இறந்ததாக தான் கூறினார்கள்.இப்படி செத்து போனவங்கலாம் ஆவியா வந்து சாட்சி சொன்னா கோர்ட் ஏத்துக்குமா? பலவாறு எனக்கு யோசனை ஓடியது.வேடிக்கையாகவும் இருந்தது.பூசாரி அவரது உதவியாளரிடம் ஏதோ சமிக்கை செய்தார்.உடண் அவன் கோவிலுக்கு பின்புறம் சென்று தலை கீழாக கட்டி தொங்க விடப்பட்ட ஒரு சேவலின் கழுத்தை கத்தியால் கரகரவென்று அறுத்தான்.சேவல் கயிற்றில் தலைகீழாக றெக்கையை படபடவென அடித்து கொண்டது.ஒரு சிறிய கொட்டாங்குச்சியில் கொஞ்சம் ரத்தத்தை பிடித்து கொண்டு வந்து அந்த சிறுமியிடம் நீட்டினான்."இந்தா உன் புருசன் ரத்தம்" சிறுமி வெறித்தபடி அதை பார்த்தாள்.பிறகு ஆங்காரமாக அதை வாங்கி மடமடவென குடித்தாள்.பிறகு மூர்ச்சையாகி விழுந்து விட்டாள்.
அது பழைய கதை.ஆனால் எனக்கே இப்படி நிகழும் போது.? நான் கோவிலுக்கு பின்புறமிருந்த பூசாரியின் வீட்டுக்கு வந்தேன்.பூசாரி குடிசைக்கு வெளியே அதே ஆலமர நிழலில் ஒரு கட்டிலில் படுத்திருந்தார்.என்னை பார்த்ததும்," நாச்சி சமாச்சாரந்தானே? தெரியும்.அது நம்ம சாதி இல்ல..நமக்கு கட்டுப்படாது..தர்ஹாவுக்கு கூட்டிட்டு போ...சரியாயிடும்" என்றார். முதலில் இந்த பேய் பூத சமாச்சாரமே எனக்கு உடன்பட முடியாததாக இருந்தது.இதில் பேய் பிசாசுக்கு கூடவா சாதி மதம் லாம் இருக்கு என எரிச்சலாக வந்தது எனக்கு.நிகழும் சம்பவங்கள் அறிவுக்கு புலப்படாமல் அலை கழித்தது.
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்.ஒருநாள் நாச்சியாவின் வீட்டில் ஓலம் பெரிதாக கேட்டது.ஓடிச்சென்று பார்த்தேன்.செகதாம்பாள் புளிய விளாறால் நாச்சியை விளாசிக் கொண்டிருந்தாள்.நாச்சியாவும் பதிலுக்கு தாக்கினாள்.ஆனால் செகதாம்பாளின் ஆவேசத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அங்குமிங்கும் சுற்றி ஓடினாள்.குடுப்பத்துக்கே பேய் புடிச்சிடுச்சோ என்று தோன்றியது.புளிய விளார் கீறி நாச்சிக்கு கை கால் முகத்திலெல்லாம் ரத்த கோடு கண்டிருந்தது.நான் பேயாட்டம் ஆடும் செகதாம்பாளை தடுக்க முனைந்தேன்.இப்பொழுது செகதாம்பாள் என்னை பிடித்து கொண்டாள்.புளிய விளார் என் முதுகில் X,Y எல்லாம் எழுதியது.தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்து விட்டேன்.இத்தனைக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ஏதென்று கேட்காமல் அமைதியாக இருந்தது விசித்திரமாக இருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் ஓலம் அடங்கியிருந்தது.நான் மொட்டை மாடிக்கு சென்று நாச்சியா வீட்டை பார்த்தேன்.செகதாம்பாள் நாச்சியாவை கொல்லையில் உட்காரவைத்து வெந்நியில் குளிப்பாட்டினாள்.பிறகு ஒரு டவராவில் அரைத்து வைத்திருந்த மஞ்சல் பொடியை அவளது காயங்களில் பூசி விட்டாள்.நாச்சியா அரை மயக்கத்தில் இருப்பது போல் தெரிந்தது.அதன் பிறகு நாச்சியாவை பார்க்க முடியவில்லை.
நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் மெல்ல மறந்தும் போனேன்.ஒரு வருடமிருக்கும்,மொட்டை மாடியில் அமர்ந்து வாசித்து கொண்டிருந்தேன்.நாச்சியா வீட்டு கொல்லையில் அமர்ந்து பூ தொடுத்தபடி,செகதாம்பாள் எதிர் வீட்டு மல்லிகா அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"நாச்சியும் புள்ளையும் சௌக்கியமா இருக்காங்களா"-மல்லிகா
"ம்ம்..சௌரியத்துக்கென்ன கொறச்ச"
"இந்த பக்கமே வர மாட்டேங்கிறா"
"எங்க ஒழியுது..."
"புள்ள யாரு ஜாடை?"
செகதாம்பாள் மெல்ல நிமிர்ந்து மாடியில் அமர்ந்திருந்த என்னை முறைத்தாள்.

Monday, August 3, 2009

இசை குறிப்பு...

காற்றில் படபடக்கிறது
என்றோ நிலவொளியில்
நீ எழுதிய இசைகுறிப்பு...

மூலையில் கிடக்கிறதென் கிதார்
கம்பியிழை தொய்ந்து...

இவ்விரவை
மழையால் நனைக்கவும்
ஒளியால் நிறைக்கவும்
கூடுமவை...

நீயும் நானுமற்ற
நம் அறைக்குள்

எங்கிருந்தோ

உன் இசை குறிப்பிலும்
என் கிதாரிலுமாய்
வந்தமரும்
வண்ணத்து பூச்சிகள்

பறந்தோடுகின்றன
வெளியே
றெக்கை வெடவெடத்து...

Thursday, March 12, 2009

நீல வெயில்...


கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...

உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...

வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...

இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...

Tuesday, February 10, 2009

துண்டு கவிதைகள்...

மீன்கொத்தியின் அலகினின்று
நழுவி விட்ட மீனொன்று
வெளியில் நீந்தி
விழுந்து கொண்டிருந்தது,
இரவில்
எறும்புகளாய் உருமாறும்
எழுத்துக்கள் என்னை
இழுத்து சென்று போடும்
அதே குளத்தில்....

*************************

மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...

போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...

கழுதை காட்டிய திசையில்
ஓடிக்கொண்டிருந்தார் அய்யனார்
அரிவாள் சுத்தியல்
என ஆயுதங்கள் துரத்த...

*****************************

என் கட்டிலின் அடியில்
படுத்து கிடக்குமந்த சாதுவான
கறுப்பு பூனை
நடுச்சாமங்களில்
ஒளிரும் அதன் கண்கள்
உலுக்கியெழுப்பும் தருணங்களில்
விளக்கு பொருத்துவேன் பதறி
ஒய்யாரமாய் மதிலேறுமது
இரவை சுவைத்தபடி...

Friday, January 16, 2009

எனினும் புலரும் பொழுது....

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

Thursday, January 8, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....