Tuesday, May 25, 2010

தீராதது...



எவ்வளவு நேரம்
உன் உள்ளங்கைக்குள்
மூடி வைப்பாய்
விட்டு விடு
சுடர்
இரவை அருந்தட்டும்
சுடரை
இரவு அருந்தட்டும்
நீ
யார் சொல்ல கூடும்
மீண்டும் ஒரு இரவு வருமென்று
அந்த மெழுகை அணைத்து விடு
நான்...

Saturday, May 22, 2010

காட்டை வரைபவன்...

தன் தூரிகையில் பச்சையம் நனைத்து காட்டை வரைபவன் மரங்களை உயிர்ப்பிக்கிறான்.மெல்ல மெல்ல இலைகள் அசைந்து அவன் தலை கோதின.சூரியன் நிறமிழக்க தொடங்கியது.மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வனப்பட்சிகளின் ரீங்காரத்தினூடே அவன் ஓவியத்தை வளர்த்தான்.நகர்ந்து கொண்டேயிருந்த நிலவை கொடிகளால் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டான்.கூடு திரும்பும் பச்சைக்கிளிகள் கொத்தி உடைத்தன அதன் விளிம்பை.இரவையும் பகலையும் அவன் நிறங்களால் நனைத்தபடி அவ்வனத்துள் கரைந்து போனான்.நீலியொருத்தியை வரைந்து அவளோடு வாழ்ந்தான்.பின்னொரு காலை பொழுதின் கடைசி நட்சத்திர மினுக்கலில் தன் அறை திரும்ப எண்ணினான்.அவ்வனம் விட்டு காணாமல் போன வண்ணத்து பூச்சியொன்று சிறகொடுங்கி அமர்ந்திருந்தது அவன் அறை மேசையின் ஒரு பிளாஸ்டிக் பூ மீது.மீண்டும் வனம் புகுந்தவன் பிறகு ஒரு போதும் தன் ஓவியம் விட்டு வெளியேற விரும்பவில்லை...

Thursday, April 29, 2010

எழுத்தும் இயக்கமும்...


written & Directed by

கல்லூரி நாட்களில் டைரி தொடங்கி கையில் சிக்கும் காகிதங்களில் எல்லாம் இப்படி தான் கிறுக்கியிருப்பேன்.சினிமா தவிர்த்த ஒரு எதிர்காலத்தை கற்பனை கூட செய்ததில்லை.எப்பொழுதும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் தான்.அடிஷனல் குவாலிஃபிகேஷனாக இருக்கட்டும் என்று அவ்வப்போது வகுப்பில் பெஞ்சை தட்டி டியூன் போட்டு பாட்டும் எழுதுவேன்.தோழிகள் டேய் காலையில குளிக்கும் போது ஒரு பாட்ட ஹம் பண்ணிட்டு இருந்தேன்டா.அப்புறம் தான் அது உன் பாட்டுன்
னே ஞாபகம் வந்தது என உசுப்பேற்றும் பொழுது கொஞ்சம் கிளுகிளுப்பாக தான் இருக்கும்.ஆனால் பசங்க மட்டும் தெளிவு.மறந்து போய் கூட அருகில் வர மாட்டார்கள்.தப்பி தவறி எவனாவது சிக்கினால் ஒரே அமுக்காக அமுக்கி வசனம் சகிதம் திரைக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவேன்.தமிழ் சினிமா கனவுகளில் இருந்ததாலோ என்னவோ இன்று வரை எதார்த்தம் கிலோ எவ்ளோ தான்.எந்த கதை சொன்னாலும் மச்சி இந்த கதை ஏற்கெனவே அந்த படத்துல வந்துடிச்சிடா என கடுப்பேத்துவான்கள்.அதனால் கதை சொல்ல நம் இலக்கு எப்பொழுதும் தோழிகள் தான்.கடலைக்கு கடலையும் ஆச்சு.மேலும் என் தோழிகள் எல்லாம் எலக்கிய மற்றும் சினிமா செனரல் நாலேஜில் பெரிய முட்டை சைபர் வாங்குபவர்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் கவலைப்படாமல் அவிழ்த்து விடலாம்.எப்படி தான் இவ்வளவு சகிப்பு தன்மை இவர்களுக்கு உள்ளதோ.

கனவுகளாலான கல்லூரி நாட்கள் கனவை போலவே திடுமென முடிந்த நாளில் எதார்த்தம் பூதம் போல் கோர முகம் காட்டி நின்றது.எனினும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக நான் முயன்று கொண்டிருந்தேன்.நண்பர்கள் வேலைக்கு மனு போட்டு கொண்டிருந்த பொழுது,நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்தேன்.கே.ஏ குணசேகரனை ஒரு முறை பாண்டியில் சந்திக்க நேர்ந்தது.அவர் நாடகம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.(அழகி படம் பார்த்து தங்கர் பச்சான் மேல் ஒரு அபிப்ராயம் இருந்தது.)தங்கர் பச்சானிடம் சேர சிபாரிசு கேக்கலாமா என அனுகினேன்.'தம்பி,இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அதெல்லாம் உங்களுக்கு சுத்தப்படாது.ரொம்ப மோசமான ஃபீல்டு.எதிர்காலத்தை வீணா பணயம் வெக்காதீங்க என அறிவுரை கூறினார்.வேனுமின்னா நம்ம நாடகத்துல அப்பப்போ வந்து கலந்துக்குங்க என தொடர்பு எண்ணெல்லாம் கொடுத்து சென்றார்.அருமை தெரியாமல் அப்பொழுது விட்டு விட்டேன்.பிறகு நாசர் தொடங்கி சிலரும் இதே பதிலை கூறிய பொழுது சோர்வாக இருந்தது.
பொறியியல் விரும்பி படித்ததல்ல.ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்க்க சொல்லி வீட்டில் பிடித்த அடம் ஒன்றும் பலிக்கவில்லை.நாலு எரும வாங்கி வேனா தரேன்.நெதம் நாலு படி பால் கறக்கும்.சினிமா கினிமான்னு கெளம்புனா சோறு கெடைக்காது பாத்துக்க என தந்தைகுலம் கை விரித்து விட்டதால் வேறு வழியின்றி சேர்ந்ததுதான்.

விரும்பிய வாழ்வெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்ற யதார்த்த விதிக்கு மிக மோசமாக பலியான பின் வேலை தேடுதல்,அலைச்சல் என கனவுகள் எல்லாம் காலாவதியானது.உலக சினிமா,இலக்கியம் என கொஞ்சம் மனசை திருப்பிய பிறகு அப்படியொன்றும் இழக்க கூடாததை இழந்து விட வில்லை என்றும் தோன்றியது.தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சினிமா ஆசையோ அரசியலில் புகும் எண்ணமோ இருக்கிறது.முதலீடு இல்லாமல் குறுகிய காலத்தில் லாபம்/புகழை ஈட்டி தரும் வணிகமாக இவை தானே இருக்கின்றன.லட்சியம்,வெற்றி போன்ற மோஸ்தர்களை விட்டு விலகி வந்து விட்ட பிறகு, நம் வாரமலர்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் எவ்வளவு அபத்தமான ஒரு
மேடையை கவர்ச்சிகரமாக நமக்கு காட்டுகின்றன என்பதை உணர முடிகிறது.கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆக விரும்பிய நானாக இப்பொழுது இல்லை நான்.இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு ஆக வேண்டிய நானை பற்றிய எவ்வித கனவுகளும் இல்லை இப்பொழுது.நேதி நேதி என எதையும் நிராகரிக்க பழகிய பிறகு வாழ்வு இலகுவாகவும் சுலபமாகவும் தெரிகிறது.எல்லா அலைவுகளுக்கும் வலிகளுக்கும் பின்னால் இருப்பது என்ன? பிரபலமாகும் ஆசை என்பது அப்படியொன்றும் சுலபமாக விலக்கி செல்ல கூடிய ஒன்றல்ல.ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் தன்முனைப்பு எதை தேடி என உணர்வது சுவாரஸ்யமான அனுபவம்.ஒன்றை உண்டு மற்றொன்று வாழும் ஓலம்.எந்த உரிமையில் நான் என என்னை இங்கு முன் வைக்கிறேன் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.

பின்னர் இந்த சினிமா குறித்த அலட்டல்களிலிருந்து ஒரு சினிமாவே மீட்டெடுக்கவும் உதவியது.The Star maker என்றொரு படம்.சினிமாவில் நடிக்க ஆள் எடுப்பதாக கூறி ஊர் ஊராக சென்று சபலப்படுபவர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவனை பற்றிய மிக சுவாரஸ்யமான படம்.காலணா இன்றி இந்த சினிமாவை நம்பி பஸ் ஏறிய சொற்ப பிரபலங்களின் அடியொற்றி வாழ்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.இன்று இருக்கும் குறைந்த பட்ச சினிமா புரிதல்கள் எதுவுமின்றி ஒருவேளை சினிமாவுக்கு சென்றிருந்தால் என்ன விதமான படங்கள் செய்திருப்பேன் என்ற கற்பனை சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.இப்பொழுது எல்லாம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறன.விரும்பினால் ஒரு சில வருடங்களுக்குள்ளாக ஒரு படம் செய்து விட முடியும் தூரம் தான்.எனினும் தொலைந்து போன அந்த நானை தேடுவது இனி சிரமம்.திருமணம் முடிந்தால் கதம் கதம்.நண்பர் கதிர் மிஷ்கின் பற்றி சொன்ன போது விளையாட்டாக கூறினேன்.நீங்க படம் எடுத்தா நான் தான் வில்லன் என்று.

புத்தகங்களோடு திரு.பவா அவர்கள் அனுப்பியிருந்த பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுந்தகட்டில் பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி' சிறுகதை படமாக்கப்பட்டிருந்தது.கதை படித்தவர்களுக்கு மேலே உள்ள ஃபிளாஷ்பேக் ஏன் என புரிந்திருக்கும்.சினிமா என்ற மையத்தை சுற்றி வாழும் கனவுஜீவிகளின் கதை.படம் பார்த்து முடித்தவுடன் கதையையும் வாசித்தேன்.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதையை வாசித்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.படம் பார்க்காது இருந்திருந்தால் முதல் வாசிப்போடு எளிதாக கடந்திருக்க கூடிய ஒன்றாகவே பட்டது.எளிய கதை.அக்கதையின் முன்னும் பின்னும் நுண்ணுணர்வோடு நகர்ந்து கதையின் உயிரை ஸ்பஷ்டமாக 'பூ' வாக வெளி கொணர்ந்திருந்த இயக்குனர் சசியின் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.அந்த அனுபவத்திலேயே பா.மகேந்திராவின் கதைநேரத்தையும் அனுகினேன்.ஒரு கதை எப்படி படமாக்கப்படுகிறது மற்றும் திரைக்கதை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் அளிக்க கூடிய ஒன்று இந்த குறும்பட தொகுப்பு.பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி ' கதை எழுதப்பட்ட காலத்தில் உச்சத்திலிருந்த அமலா,நதியாவெல்லாம் படமாக்கப்பட்ட பொழுது சிம்ரனாகவும்,தேவயானியாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள்.நடப்பில் சிம்ரனும் தேவயானியும் ஃபீல்ட் அவுட் ஆகி விட்ட பிறகும் சினிமா மோகத்தில் பஸ் ஏறியவர்களும்,ஏறி கொண்டிருப்பவர்களும்,கனவுகளும்,ஏமாற்றங்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றன என்ற உண்மை சுள்ளென அறைகிறது.

ஜெயந்தனின் 'காயம்' என்ற கதையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.வாசிக்கலாம் என்றால் கைவசம் தொகுப்பு இல்லை.சுஜாதாவின் 'நிலம்' சுமாராக இருந்தது.சு.ரா வின் பிரசாதம் சிறுகதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.ஜீனியர் பாலையா அற்புதமாக நடித்திருக்கிறார்.மேல்பார்வை என்ற சு.ரா வின் சிறுகதை தொகுப்பு வீட்டில் கிடக்கிறது.கதைகள் இப்பொழுது மறந்தும் போய்விட்டது.சு.சமுத்திரத்தின் கதை 'காத்திருப்பு' அவரது மற்ற கதைகளை தேடும் ஆர்வத்தை தந்திருக்கிறது.திலகவதியின் ஒரு முக்கோண காதல் கதையும் நன்றாகவேயிருந்தது.பட்ஜெட் மற்றும் அதிகம் வசன வாய்ப்புள்ள கதையாகவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தோன்றியது.எல்லோருக்கும் அப்படி தோன்றும் என்பதில்லை.தற்பொழுது ஒரு தொகுதி மட்டுமே வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.பிறவற்றையும் பார்க்க வேண்டும்.நல்ல படைப்புகளை தேடி தேடி வெளியிடும் வம்சிக்கு நன்றி.

சு.ராவின் சன்னல் என்ற சிறுகதை வாசித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.மிகவும் பாதித்த அந்த கதையை படமாக்கி பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.கொஞ்சம் சவாலானதும் கூட.ஒரு பயிற்சியாக குறும்படமாக எடுக்க முயல வேண்டும்.மனோஜின் கச்சை என்ற சிறுகதை,ஜே.பி சாணக்யாவின் பெயர் மறந்து போன ஒரு கதை..இப்படி இந்த குறுந்தகடு பார்க்கும் முன்னாக படமாக்க தோன்றிய பல கதைகள் இப்பொழுது படம் செய்து பார்க்க ஆசையூட்டுகின்றன.பார்க்கலாம்.

இரண்டாம் முறையாக சிரமம் பார்க்காமல் புத்தகம் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி வைத்த திரு.பவா அவர்களுக்கும் கதிருக்கும் என் நன்றியும் அன்பும்.

Thursday, April 22, 2010

இந்த சூர்யோதயம்...

இந்த சூர்யோதயம்
நினைவூட்டுகிறது
ஒரு தபோவன குடிலை
நிசி பிசுபிசுப்பை
பின்னிரவில் நிறமிழந்த நிலவை
இனி
உதட்டு சாயம் பூசி
முறுவலிக்கும் அந்தி
நினைவூட்ட கூடும்
தேகத்தில் ஊர்ந்து சென்ற வெயிலையும்
தாகத்தையும்
இரு துண்டு ஆரஞ்சு சுளைகளையும்...

Monday, April 19, 2010

ஸென் கவிதைகள்...

ஸென்...

ஒன்றுமில்லாதது குறித்து பேச என்ன இருக்கிறது.

பெயரற்ற யாத்ரீகனிலிருந்து மிகவும் பிடித்த சில கவிதைகள்...

சடாரென்று அறையும் காற்றில்
கடைசி இலை
முடிவெடுக்கிறது:
போய்விட்டது.

0---0---0---0

புல்லாங்குழலின் ஓசை
திரும்பி விட்டது
மூங்கில்
காட்டுக்கு.

0---0---0---0

அதே இடத்தில்
மீண்டும் மீண்டும்
கொத்துகிறது மரங்கொத்தி;
தீரவிருக்கிறது
பகற் பொழுது.

0---0---0---0

காற்று எங்கே
தள்ளிச் செல்லுமென
அறிவதில்லை
தாழ மிதக்கும் மேகங்கள்.

0---0---0---0

நெல்வயலில் தேங்கிய நீர்
வெளியேறுகிறது-ஒரு
மீனும் திரும்புகிறது
தன் வீட்டுக்கு.

0---0---0---0

சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுக சிறுக
விட்டுச் செல்வது
சாம்பலை மட்டுமே.

0---0---0---0

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே.மலர்கிறது
ஒரு தாமரை.

0---0---0---0

நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிக்கொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்.

0---0---0---0

வெள்ளிப் பனித்
துளிகளிலும்
இப்படியேதான்,
சிறியதைப் பெரியது
உட்கொண்டு விடுகிறது.

0---0---0---0

கருநிறக் கூந்தலும் செந்நிற முகமும்
எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்?
ஒரு கணத்தில்
நரை முடிகள் நூல்கண்டுபோலச்
சிடுக்காகும்.
ஜன்னல் மறைப்பைத் திறக்கும்
போது, ஆப்ரிக்காட் மலர்கள்
பூத்திருப்பதைக் காண்கிறேன் :
இதோ இருக்கிறது,
வசந்தத்தின் காட்சி.
தாமதம் செய்யாதே.

0---0---0---0

திட்டவட்டமான விதிகள் இல்லை,
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி.
இதெல்லாம்,
நிலவோ பனியோ
தம் நிழல்களை எவ்விதம்
படியவைக்கின்றன என்பதைப்
பொறுத்தது.

0---0---0---0

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

0---0---0---0

நினைக்க வேண்டாம் அதை
என்றுதான் நினைக்கிறேன்.ஆனாலும்
நினைத்துவிடுகிறேன்
அதை நினைக்கும்
போது
கண்ணீர் சிந்துகிறேன்.

0---0---0---0

வீழும் இலைகள்
படிகின்றன
ஒன்றின் மேல் ஒன்றாய்;
மழையின் மேல்
பொழிகிறது மழை.

0---0---0---0

காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதியவைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.

0---0---0---0

அவன்
வனத்தில் நுழையும் போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை.

0---0---0---0

தமிழில் : யுவன் சந்திர சேகர்

உயிர்மை பதிப்பகம்.


Thursday, April 8, 2010

பின்னிரவு புழுக்கங்களும் ஒரு முக் மாஃபியும்...

முடிவிலியில் மிதக்கும் குருவிகளை போல் இல்லையே வாழ்வு என அடிக்கடி எண்ணத் தோன்றும்.குஞ்சு பொறிக்க மட்டுமே கூடு சமைக்கின்றன அவை.ஒரு பொந்துக்குள் சுருங்கி, சதா வருத்தும் வீடு குறித்த நினைவேக்கங்களோடு,வறண்ட இப்பாலை பரப்பில் தனக்கே அந்நியனாக உலவும் இந்நாட்கள் இழந்தவை குறித்த கழிவிரக்கங்களை தருவதாக இருக்கின்றன.வீடு என்பது வெறும் மணல் மற்றும் கற்களால் மட்டுமே ஆனதா என்ன? .தேவைகளின் பொருட்டு வீட்டை துறப்பவன்/ள் நத்தையை போல் சதா சுமந்து திரிகிறான்/ள் சொந்த வீட்டின் நினைவுகளை.எப்பொழுதும் தூரங்களின் மீதான கவர்ச்சியும்,அருகாமையின் மீதான அலட்சியங்களுமாக கழிந்த பொழுதுகள் குற்ற உணர்வுகளை தூண்டுகிறது.தனிமையின் நெறிப்புகளிலிருந்து திரைப்படங்களும் புத்தகங்களும் மட்டுமே சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.வெகு நாட்களாக கைவசமிருந்தும் பார்த்திராத House of sand and Fog நேற்றைய இரவின் மீது நீண்ட வெறுமையை போர்த்தியது.வீட்டின் புகைப்படத்தை தேடி எடுத்து வெகுநேரம் பார்த்து கொண்டிருந்தேன்.


எதேச்சை
யாக வாசிக்க தொடங்கிய வைக்கம் முகம்மது பஷீரின் 'மதில்கள்' அற்புதமான வாசிப்பனுபவமாக இருந்தது.யாரோ போல் நாட்களை கடத்த பழக வேண்டும் இனி.நல்ல திரைப்படமோ,புத்தகமோ உள்ளேறி நிகழ்த்தும் ரசவாதம் எப்பொழுதும் உறக்கமின்மையிலும் பிறழ்வு நிலையிலுமாக முடிகின்றது.மனம் தான் எவ்வளவு விசித்திரமானது.எப்பொழுதும் சூழல் குறித்த புகார்களை முனுமுனுத்தபடி கச்சிதமாக அதில் பொருந்தவும் பழகி கொள்கிறது.கதையில் நீண்ட மதிலொன்றால் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பிரிக்கப்பட்ட சிறைக்குள் பூக்கும் இரு கைதிகளின் காதல் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது.முகமறியாத அந்த காதலியை பார்க்க இருக்கும் நாளில் அவன் விடுவிக்கப்படும் பொழுது ஆற்றாமையோடு கேட்பான் 'யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்'?.The Shashank Redemption திரைப்படத்தில் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து மூப்பெய்திய காலத்தில் விடுவிக்கப்படும் ஒரு வயோதிகர் வெளியேறி வெளி உலகில் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொள்வார்.மதிலுகளில் ஓரிடத்தில் நாயகன் கூறுவான் இது சின்ன சிறை.இதற்கு வெளியே பெரிய சிறை இருக்கிறதென.சற்று முன் உணவருந்தி கொண்டிருந்த பொழுது ஒரு மலையாளி நண்பன் ராஜீவ் கொலை-சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி குறித்து கேட்டு கொண்டிருந்தான்.நீண்ட பத்தொன்பது வருடங்கள்.அவர் குழந்தை என்னவாயிற்று.இனி விடுதலை என்பது என்ன விதமாக பொருள் படும் அவருக்கு.என்ன விதமான காட்டுமிராண்டி சமூகம் இது.

சுதந்திரம் என்பதை ஒரு சொல்லாகவே அறிந்திருக்கிறோம்.உடலென்னும் சிறைக்குள் வெளியேற தவிக்கும் பட்டாம்பூச்சி குறித்த பிரக்ஞை எதுவும் இல்லை நமக்கு.எங்கே என்று தெரியாத ஒரு எலி ஓட்ட பந்தயத்தில் அசுர கதியில் கடந்து போகிறது வாழ்வு.அரசியல்,ஒழுக்கம்,மம் என கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கண்ணாடி சிறைகளால் சூழப்பட்டிருக்கிறது இருப்பு.நவீன மனிதன் என்பவன் இன்று ஒரு நடமாடும் சிறைச்சாலை.இடைவிடாத அசைவில் இருப்பின் அவஸ்தைகள் மறக்கப்படுகின்றன.

விபத்தொன்றில் சிக்கி அசையா முடியாத படி படுத்தபடுக்கையில் கிடக்கும் ஒருவனது வாழ்வு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்.இருப்பு எப்பொழுது அர்த்தம் கொள்கிறது என அடுக்கடுக்காக கேள்விகளுக்குள் புதைத்தது The Sea Inside திரைப்படம்.கருணை கொலைக்கு மனு செய்பவனது துயரம்..அறம்,பாவம்,கருணை என்ற கற்பிதங்களோடு அவன் நிகழ்த்தும் போராட்டம் நிலை குலைய வைத்தது.நிதர்சனம் சினிமாவை விட கொடூரமாகவே இருக்கிறது.ஒரு பண்பட்ட சமூகம் தற்கொலையை அங்கீகரிப்பதாக இருக்கும்.மேலும் வலியின்றி உயிரை போக்கி கொள்ள வசதிகள் செய்து கொடுக்கும்.தற்கொலை கோழைத்தனமென்றும் போராட்டமே வாழ்க்கையென்றும் வசனம் பேசும் கோரமான உலகில் இருக்கிறோம்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு காமுகனால் கற்பழிக்கப்பட்டு மூளை அதிர்ச்சிக்குள்ளாகி கிட்டத்தட்ட 37 வருடங்களாக கோமாவில் பிரக்ஞையின்றி அவதியுறும் அருணா ஷான்பாக்கை கருணை கொலை செய்யும்படி பல மனிதாபிமானிகள் அரசுக்கு மனு செய்தும் ஆவண செய்யப்படவில்லை இன்னும்.மனிதாபிமானம் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாது என்பது தான் இதன் பொருள்.கருணை கொலை அங்கீகரிக்கப்படாத உலகில் தற்கொலை முட்டாள்தனமாகவே தோன்றும்.முதுமக்கள் தாழி செய்த மரபு நம்முடையது.

உடல்/இருப்பு சார்ந்து உன்னதம் என எல்லா ஒழுக்க மதிப்பீடுகைகளையும் கவிழ்த்து பார்த்தவை பாசோலினியின் திரைப்படங்கள்,உடல்/மனம் மீதான சமூகம் மதம் மற்றும் அரசியலின் ஒடுக்குமுறைகளை பகடி செய்தவை அவை.இறுதியாக பார்த்த அவரது 120 Days of sodom மனக் கொடூரத்தின் வரைபடம் போல் இருந்தது.மண்டைக்குள் வண்டு புகுந்ததான நமைச்சலில் வெகு நேரம் நெளிய வைத்தது.ஒரு கட்டிடத்திற்குள் அடைக்கபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் மீதான அதிகாரத்தின் பாலியல் வன்முறையை முழு திரைப்படமாக்கியிருக்கிறார்.காமத்தின் மீதான மதங்களின்/அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள்,காமம் குறித்த குற்ற உணர்வுகளை கட்டமைப்பதன் மூலம் இருப்பை ஒரு புள்ளிக்குள் ஒடுக்கும் சமூக தந்திரம்.பாவம்,மறுமை போன்ற சொல்லாடல்கள் மூலம் விளிம்புக்கு நகர்த்தப்பட்ட இருப்பை மையத்திற்கு இழுத்து வருகின்றன இவரது படங்கள்.தனி மனித மனச்சிக்கல்களுக்கு பெரும்பாலும் காமம் சார்ந்த குற்ற உணர்வுகளே காரணங்களாக இருக்கின்றன.குற்ற உணர்வுகளோ தீர்ப்புகளோ அற்ற மனித வாழ்வு எப்படியிருக்கும்.Perfume படத்தில் வரும் பொது வெளியில் நூற்று கணக்கில் கவலையின்றி மக்கள் புணர்ந்து திளைக்கும் இறுதி காட்சி தான் மனத்திரையில் ஓடுகிறது.சொர்க்கம் பற்றிய கதையாடலை காட்சியாக்கி பார்த்த படம் அது.

Anti christ - ல் கணவனுடனான புணர்ச்சியின் உச்ச கட்ட பொழுதில் கண்ணெதிரே சன்னல் வழி தவறி விழுந்து இறந்து போகும் தன் குழந்தையின் மரணத்திற்கு தன் உடலின்ப விழைவே காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் தாய் தன் கிளிட்டோரியசை வெட்டி எறிவதன் மூலம் அதை கடக்க முனைகிறாள்.துரோகம் என்ற கண்ணியுனூடாக உடலை/இருப்பை விசாரிக்கும் நகிசா ஒஷிமாவின் in the realm of passion ம், உடலை அதன் எல்லை வரை செலுத்தி இறுதியில் வெறுமையில் தன் காதலனின் குறியை அறுத்தெறியும் in the realm of senses ம் தந்த அயர்ச்சியும் மன உளைச்சலும் கேள்விகளும் தாங்கொணாதவை.நிதர்சனத்தை பேசும் எந்த பிரதியும் லகுவான இருப்பின் சமநிலையை அந்தகாரத்தில் வீசி நடுங்க செய்வதாகவே இருக்கிறது.எல்லாம் யோசிக்கும் வேளையில் பெரியார் ஏன் அடிக்கடி வெங்காயம் என்றார் என்பது மட்டும் புரிகிறது.

டெஸ்க்டாப்பில் இருந்த இந்த பத்தியை சற்று முன் வாசித்த என் நண்பன் ,'என்ன ஒரே கொலை தற்கொலைன்னு எழுதிருக்க..சூசைட் எதாவது பண்ணிக்க போறியா?' என கலவரமாக கேட்டான்.சிரிப்பை அடக்கி கொண்டு ஆமாம் என பாவமாக சொல்லி வைத்தேன்.பேயறைந்தது போல் பார்த்தவன் பின் 'நீ ஒரு முக் மாஃபி' என திட்டிவிட்டு போனான்.முக் மாஃபி என்றால் அரபியில் மூளையில்லாதவன் என பொருள்.


Tuesday, March 30, 2010

புத்தன் மிதக்கும் இசைவெளி - 2

நேற்றிரவு அவள் வீட்டிலிருந்து திரும்பும் வழியில் மீண்டுமொரு பறவையின் சடலம் பார்த்தேன்.எந்த கண்டத்திற்கு சொந்தமானதோ.குலைந்து கிடந்த உலர்ந்த சிறகுகள் அதீத பதட்டமடையச் செய்தது.சமீப நாட்களாகவே பறவையின் சடலங்கள் அடிக்கடி தென்படுகின்றன.சில நாட்களாக மீண்டும் மீண்டும் தோன்றுகிறது முடிவற்று ஆழியொன்றுள் மூழ்கும் ஒரு கொடுங்கனவு.கனவுக்கும் தட்டுப்படும் இப்பறவைகளின் சடலத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ? தெரியவில்லை.அறை திரும்பும் எண்ணத்தை கைவிட்டு ஒரு டாக்ஸியை நிறுத்தி ஏறி கொண்டேன்.எங்கே செல்ல வேண்டும் என்ற அவன் கேள்விக்கு எங்காவது..வெகு தூரமாய்... என்ற என் பதில் விநோதமாக இருந்திருக்க கூடும்.

இந்தியா?

ம்ம்...

ஆம்..நான் அவளை நேசிக்கிறேன்.இதை அவளிடம் சொன்ன பொழுது என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள்.அந்த குறுகுறு கண்களை எப்பொழுதும் என்னால் எதிர் கொள்ள முடிந்ததில்லை.வெகு குறும்பாக 'நேசிக்கிறேன்...இதை தமிழில் சொல்' என்றாள்.குற்ற உணர்வும் எங்கிருந்தோ வந்து தொலைத்த குருட்டு வெட்கமும் பிடுங்க நின்றேன்.ஏன் சொற்கள் இப்படி அபத்தமாகி விட்டன.தேய்ந்து போன அந்த சொற்றொடரின் இயலாமையை நானே முன்பு அவளுக்கு தந்திருந்தேன்.அவள் வெகு நிதானமாக என் பதட்டங்களை ரசிப்பவளாக இருந்தாள்.

"என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்திய குடும்பம் இருக்கிறது.ரொம்ப நல்லவர்கள்.நான் அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்."(இதே கதையை கடந்த 90 நாட்களில் பதிமூன்றாவது முறையாக சொல்லும் எட்டாவது பாகிஸ்தானி இவன்)

ம்ம்...

'முஸல்மான் ஹோ?'

ம்ஹீம்.

'ஓ..அவர்களும் உங்கள்...'.

ம்ம்...

'ஏதாவது பேசேன்...'

இழைந்து கொண்டிருந்த பாடலின் ஒலியை கொஞ்சம் துரிதப்படுத்தினேன்.சினுங்கிய குளிரூட்டியை சற்றே முடுக்கினேன்.நுஸ்ரத் ஃபத்தே அலி கான் உருகி கொண்டிருந்தார்.அவன் புன்னகைத்தான்.எதை பேசுவது?எப்படி பேசுவது? ஒவ்வொரு முறையும் நான் உன் எதிரியல்ல என நிரூபிக்க முயலும் துயரங்களை சகிக்க முடியவில்லை.தேவதச்சனின் கவிதையொன்று நினைவு வந்தது.

"இந்த சொல்..இந்த கனத்திற்கானது...உன் தத்துவங்களை இதில் திணிக்காதே"

பின் வெகு நிதானமாக என்னை நெருங்கினாள்.முத்தமிடுமுன் ''என்ன பர்ஃயூம் யூஸ் பண்ற''? என்ற அவள் கேள்விக்கு விடையளிக்கும் நிலையில் நான் இல்லை.இயல்பான தருணங்களிலிருந்தும் சட்டென எல்லை மீறும் என் சுபாவம் அவளை கவர்ந்திருந்தது.மோசமான தருணங்களிலும் சமநிலையில் இருக்கும் அவளை எனக்கு பிடித்திருந்தது.எதற்கு இந்த எல்லைகள்.உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.எல்லைகளால் பிரிக்கப்பட்ட எல்லாம் அதனதன் எல்லைக்குள் நிற்கின்றனவா.

"நவீனா,நீ வாழ லாயக்கற்றவன்.வாழ்க்கை விதவித ர்ங்ள் உடையது.அவைகளைத் தாண்டி நீ ஒரு ஐக்கியம் நாடுகையில் தான் எல்லாம் மறைந்து ஏக வெண்மை புலப்படும்."

அது சரி போல தான் படுகிறது.சரியில்லாதது போலவும்.அவளிடம் கேட்டால்...''உன்சரி என்தவறு என்சரி உன்தவறு எல்லாந்தப்பு தண்டா/தாண்டா
எல்லாஞ்சர்தான்டா..நீ போய் குடி ஜிகிர்தாண்டா " இப்படி பதில் வரலாம்.வேண்டாம்.

".....பின் ஏன் இந்த ராஜேஷ் உடன் மட்டும் இப்படி...சில மனிதர்களுடன் சில பரிமாற்றங்கள்...அவ்வளவே... ஆமா, இந்த பரிவு...வலிகளைப் புரிதல் என்பதெல்லாம்...விலங்குகள்..மரம் செடிகளிடம் மட்டும்தானா...எனக்கெல்லாம் இல்லையா...? உங்கள் பரிவையும் நட்பையும் பெற...நானும் மரம்,செடி,பூனையாகத்தான் இருக்கவேண்டுமா...அப்படினா நானும் உங்க Pet(புச்சி/பப்பி) மாறட்டுமா? "

வண்ணங்கள் மிதக்கும் சாலை கனவின் வரைபடமென பின்னால் விரைந்து கொண்டிருந்தது.இந்த நகரம் இரவில் ஏன் இவ்வளவு அழகாகி விடுகிறது.கடற்கரையில் இறங்கி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.அவளை இந்த கடற்கரையில் தான் முதலில் சந்தித்தேன்.அலைகளேயில்லாத கரையில் அவள் தனித்திருந்தாள்.ஒரு பரஸ்பர புன்னகை.முகத்தில் ஒட்டியிருந்த ஊரின் முகவரி போதுமானதாக இருந்தது இயல்பான ஒரு உரையாடலை தொடங்க.தத்துபித்து வசனங்கள் கூடிய ரசம் பூசிய சொற்களில் கொஞ்சமும் விருப்பமில்லை அவளுக்கு.பிரிந்து வந்த பிறகுதான் உறைத்தது.மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித முஸ்தீபுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கவில்லை.குறைந்தது பரஸ்பரம் பெயர்களை கூட பரிமாறி கொண்டிருக்கவில்லை.பிறகான சந்திப்புகள் திட்டமிட்டவையே எனினும் அதை தற்செயல் என்றே நாங்கள் நம்பிக்கொண்டோம்.

எதிரே நடந்து வந்த ஒரு அரபி இளைஞன் என்னை சற்றே நிறுத்தி லைட்டர் கேட்டான்.கொளுத்தி கொண்டு தன் போக்கில் நடையை கட்டியவனிடம் ஏனோ கேட்க தோன்றவில்லை.இரண்டடி எடுத்து வைத்ததும் மீண்டும் தோளை தொட்டு திரும்ப கொடுத்தான்.கண்சிமிட்டி சிரித்து சென்றான்.கன நேர குறும்பு.லேசான ஒரு புன்னகையில் ஏதோவென்று இளகியது.

இதுபோன்ற தருணங்களில் வாசிக்க நகுலன் தான் லாயக்கு.குத்துமதிப்பாக புரட்டினேன்.61 ம் பக்கத்தில் இப்படி இருந்தது.மூடிவிட்டேன்.இன்னும் கொஞ்சம் மது அருந்தலாம்...அவளை இன்னொரு புணர்ச்சிக்கு வற்புறுத்தலாம்...இருப்பின் அவஸ்தை வேறென்ன செய்ய... மா/ம/யக்கம/து வேண்டுவன இவை 'தான்' அறிதல் அர்த்தம் ஹம்பக்.ஓ..சீர்திருத்த சிகாமணிகளே...எழுத்தாளர்களே...எழவு வாயில் நுழையா பெயர் கொண்ட வஸ்தாதுகளே..வாருங்கள்.வாழ விரும்புகிறேன் நான்.

'பெயரற்ற உன் முகவரிக்கு இந்த இசை குறிப்புகளை எழுதியனுப்புகிறது ஆஷ்ட்ரேயில் கசியும் சிகரெட் துண்டு...'


''இந்த கடற்கரையில் மல்லாந்து படுத்து நிலா பார்க்க கொள்ளை அழகாக இருக்கிறது.''

"பாலை வெளியில் இன்னும் அழகாக இருக்கும்"

''ஓ..இப்பொழுது அருகில் நீ இருந்தால்...........''

"......................."

'ஆயிரம் முத்தங்களுடன்'

இன்று வந்த இக்கடிதத்தை திரும்ப வாசித்து கொண்டிருக்கிறேன்.இப்பொழுதெல்லாம் நிறைய கடிதங்கள் வருகின்றன.பெயரெற்ற முகவரியற்ற கடிதங்கள்.என் இந்த எழுத்தை
போல் பசப்பாத பூச்சுக்கள் இல்லாத...ஏனோ பதில் எழுத தோன்றுவதில்லை.யாருக்கும் ஒரு பதிலோ..புன்னகையோ..முத்தமோ போதுமானதாக இருக்க போவதில்லை.

''ஏதாவது சொல்..''

''ஏதாவது...''

''உனக்கு அலுத்து போய்ட்டேன் இல்ல''

''.............''


ஒவ்வொரு முறையும் ஏன் அன்பை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.அவளது சின்ன சின்ன கரிசனங்களில்,மெல்லிய அசைவுகளில் இந்த அன்பென்ற வன்முறையை என் மீது செலுத்தியபடியே இருப்பாள்.உன் முடிவற்ற அன்பின் சுமைகளால் எடை கூடி தவிக்கிறதென் இதயம்.கொஞ்சம் விட்டு விடேன் ப்ளீஸ்.தப்பி பிழைக்கட்டும் அந்த பட்டாம்பூச்சியென கெஞ்ச தொடங்குவேன்.சொற்கள் கூடி வரும் சில மாய கணங்களில் சிமிட்டி கொண்டு விரியும் அவள் பெரிய கண்களில் கிறங்கி தொலைவதை தவிர்க்க முடிந்ததில்லை.உன் திரவப்பரப்பிலொரு பூவென எனை மிதக்க அனுமதி.தீர்ந்து போவேன் நான்.வலியின்றி...நிழலின்றி...விம்மி விகசித்து எல்லையற்று விரியும் இத்தருணங்களை எப்படி சேமிக்கவென இறைஞ்சும் என்னை ஒரு பூனை குட்டியென அள்ளி தன் மடியில் இட்டு கொள்வாள்.இந்த இதம்,இந்த தலை கோதல் எப்பொழுதும் சாத்தியமா என்பேன்.நிச்சயம்,உனக்கு வழுக்கையே விழாதென நீ உத்தரவாதம் தருவாயெனில்' இதை அவள் சிரிக்காமல் சொல்வாள்.சொற்கள் கொண்டு அவள் திறக்கும் என் மனசீசாவிலிருந்து வெளியேறி, வதைபட்ட பூதமென வாய்பிளக்கும் என்னிடம் மிச்சமின்றி அவள் தன்னை ஒப்படைக்கும் கணங்கள்,தலையொருக்காத சிசுவை முதல் முறையாய் ஏந்தும் சிறுவனென மாற்றிவிடும் என்னை.

அன்புள்ள இவளே...

வேறென்ன சொல்ல?

'இது தரப்படுவதாக இல்லாததால்
பெறப்படுவதாகவும் இல்லை...ஆமென்!'

Saturday, March 20, 2010

ரெஜியின் பூனை...


புசுபுசுவென வெள்ளை நிறத்தில் சோகமாக உலவும் அந்த பூனையை, இதற்கு முன் இங்கு பார்த்ததில்லை.எங்கிருந்தது இது.எப்படி வந்தது இங்கு.யாருக்கும் தெரியவில்லை.இந்த விடுதியை சுற்றி நிறைய பூனைகள் இருக்கின்றன.பூனைகளிடம் உள்ள நல்ல குணம் நாய்களை போல் அவை ஒரு புதிய நபரிடம் சட்டென விரோதம் கொள்வதில்லை.எனினும் சக பூனைகளோடு இந்த புசுபுசு நட்பு கொள்ளவில்லை.பிற பூனைகளை போல் விடுதியாளர்கள் வீசும் மீத உணவுகளுக்கு போட்டியிடுவதில்லை.ஒரு கௌரவமான மனிதரால் வளர்க்கப்பட்ட பூனையாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டேன்.எனக்கு பூனைகளை பிடிக்காது.எனினும் இப்பூனை என்னை போலவே தனித்து விடப்பட்டிருப்பதாக தோன்றியது.பூனைகளின் உலகம் கேலி செய்யப்படுகிறது.பூனைகளை சுலபமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.புரிந்து கொள்ள முடியாதவை எப்பொழுதும் கேலிக்குள்ளாகின்றன.அல்லது கடுமையாக ஒதுக்கப்படுகின்றன.

நேற்றிரவு பெய்த மழையில் தொப்பலாக நனைந்து விட்டது புசுபுசு.குளிரில் வெடவெடத்து ஒண்ட இடமின்றி என் அறைவாசலில் படுத்து கிடந்தது.அதன் கண்கள் பசியில் மிகவும் சோர்ந்திருந்தது.மிருதுவான நனைந்த அதன் ரோமங்களை வாஞ்சையோடு வருடி விட முனைந்தேன்.சட்டென தலை தூக்கி தொடாதே என்றது.பூனைகளின் சுபாவம் அது.அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.நாய்களை போல் பூனைகளை சில ரொட்டி துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது.பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை.கைகளை இழுத்து கொண்டேன்.அறையிலிருந்த கொஞ்சம் பிஸ்கெட்டுகளை எடுத்து வந்து கொடுத்ததும் அமைதியாக வாங்கி கொண்டது.கடுமையான பசியிலும் நளினமாகவே உண்ணும் புசுபுசுவை பார்க்க பரிதாபமாக இருந்தது.ஒரு புதிய நபரிடம் சட்டென உரையாடலை தொடங்குவதில் உள்ள அபத்தங்களில் மௌனமாக இருந்தேன்.மேலும் பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல.அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன.பூனைகளின் மொழி கவிதையால் ஆனது

விரும்பினால் என் அறையில் இன்றிரவு ஓய்வெடுத்து கொள் எனக் கூறி உள்ளே சென்று விட்டேன்.மிகுந்த தயக்கங்களுக்கு பின் அது என் அறை வந்தது.என் சுழல் நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டது.கேள்விகளால் வழியும் என் பார்வையை தவிர்த்து மூலையில் கிடந்த கிதாரை ஏக்கமாக பார்க்க தொடங்கியது.வெளியே மழை அடர்ந்து கொண்டேயிருந்தது.கண்ணாடி சன்னலில் மின்னல் கோடுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறைக்குள் ஒரு மெழுகு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.கிதாரை எடுத்து மீட்ட தொடங்கினேன்.'என் இனிய பொன் நிலாவே' என மெலிதாக பாடியபடி வாசித்து கொண்டிருந்தேன்.அறையின் கூரை மேல் சடசடத்த மழையொலியின் தாளம் விவரிக்க இயலாத கிளர்வுகளை தந்தது. 'பன்னீரை தூவும் மழை' என நான் உருகி கொண்டிருந்தேன்.அருந்தியிருந்த மதுவும் மழைக்குளிரும் ஒரு வித மயக்க நிலையை தந்துவிட்டிருந்தது.புசுபுசுவும் இப்பாடலில் தன் வசமிழந்திருக்க வேண்டும்.அதன் மெல்லிய விசும்பலே என் நினைவை மீட்டது.கிதாரை மூலையில் சாய்த்து விட்டு புசுபுசுவையே பார்த்து கொண்டிருந்தேன்.மன ஓட்டங்களை வாசிக்க தெரிந்திருக்கிறது புசுபுசு.கண்களை துடைத்தபடி,ரெஜி நன்றாக பாடுவான்.அவன் பியானோ வாசித்தால் நாளெல்லாம் கேட்கலாம் என தொடங்கியது.நான் கோப்பையிலிருந்த மீத மதுவை அருந்தியபடி கட்டிலில் சரிந்து கேட்க ஆரம்பித்தேன்.

புசுபுசு எனக்கு மிருதுவை நினைவு படுத்தியது.நான் மெல்ல மெல்ல ரெஜியாக மாறி கொண்டிருந்தேன்.மிருதுவை கிராமத்தில் உள்ள தாமரை குளத்தில் தான் முதலில் சந்தித்தேன்.என்னை போலவே இருண்ட குளக்கரை படிக்கட்டுகளில் தனித்திருந்தாள்.இரவில் நட்சத்திரங்கள் மிதக்கும் அக்குளத்தை நாங்கள் இமைக்காமல் பார்த்திருப்போம்.சொற்களின் பொருளின்மையை உணர்ந்திருந்தோம்.எங்கள் சம்பாஷனை புன்னகைகளால் ஆனது.நாங்கள் குளத்தில் மிதக்கும் நட்சத்திரங்களை விழுங்க முயன்று தோற்று போகும் மீன்களை ரசித்திருந்தோம்.மிருது சிலசமயம் தன்னை மறந்து பாடுவாள்.

நாடோடி நிலவே
எங்கே உன் கூடு
யாரை தேடி திரிகின்றாய்
அறிவாயோ நிலவே
அவன் பெரும் கள்வன்
நீயில்லா நேரம் வருகின்றான்...


நான்கு படித்துறைகளும் அவள் பாடலில் லயித்திருக்கும்.சத்தமெழுப்பாமல் நீர்க்கோழிகளும் தவளைகளும் கூடி ரசித்திருக்கும்.உய் உய் என சுழலும் காற்று அவள் கூந்தலையும் ஆடைகளையும் களைத்து விளையாடும்.ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த அன்றைய இரவில்,அவள் படித்துறையில் அமர்ந்து விரல்களால் நீரை அலைந்தபடி இருந்தாள்.காயும் நிலவொளியில் எங்கிருந்தோ வந்த மீன் கொத்தி ஒன்று நின்ற இடத்தில் சிறகடித்து சட்டென இறங்கி ஒரு மீனை கவ்வி பறந்தது.அவள் என்னிடம் திரும்பி நீயும் அந்த மீன் கொத்தி தான் என்றாள்.நாங்கள் குளத்தில் இறங்கி நீந்த தொடங்கினோம்.நிலவொளியில் மலர்ந்திருந்த தாமரைகளை நோக்கி சென்றோம்.ஆழம் அதிகமிருந்த அக்குளத்துள் அவள் மீனை போல் நீந்தி கொண்டிருந்தாள்.கனநேரமே எனினும் அக்கனவு வந்து போனது.

ஒரு பறவையை போல் மிருதுவாய் என் கைகளில் ஏந்தி கண் மூடி காத்திருக்கும் அவளை பார்த்து கொண்டேயிருக்கிறேன்.மழையில் நனைந்த குருவி போல் வெடவெடத்து கொண்டிருக்கிறாள்.சிலிர்த்து சிலிர்த்து அடங்கும் அவள் பின் கழுத்து பூனை ரோமங்களை வருடியபடி மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்.

'நீயொரு தொட்டாற்சினுங்கி'

மீண்டும் சினுங்க தொடங்கியவள் முஷ்டி மடக்கி வலிக்காமல் என் மார்பில் குத்துகிறாள். 'தொட்டாற்சினுங்கி உன்னை காதலிக்குமா? அது உனக்கு முத்தம் கொடுக்குமா ? சொல்லடா மானங்கெட்டவனே' என புரியாத ஒரு மொழியில் வசை பாடி துரத்துகிறாள்.அவளை மேலும் சீண்டி செந்தமிழில் வையடி என் மறத்தமிழச்சி என்றபடி வெற்றிலை காட்டுக்குள் ஓடுகிறேன்

கண்ணாமூச்சி ஆடி களைத்து நிற்பவளை பின்னால் வந்து கட்டியணைக்கிறேன்.பொய் கோபத்தில் என்னை உதறியபடி 'சீ..சீ வெட்கங்கெட்டவனே...சண்டாளா...கன்னியொருத்தி தன்னந்தனியே சிக்கி கொண்டால் அவளிடம் நீ காட்டும் கண்ணியம் இதுதானா.தொடாதே..தூரச்செல்' என என்னை கோபிக்கும் கணத்தில் உறைக்கிறது.ஏன் எல்லாம் கறுப்பு வெள்ளையாக தெரிகிறது எனக்கு.அவள் நின்ற இடத்திலிருந்து சர்ப்பம் ஒன்று நெளிந்து காற்றில் மறைகிறது.பச்சை கொடிகள் எல்லாம் சாம்பல் நிற சர்ப்பங்களாக நெளிகின்றன.வெற்றிலை கொடிகள்,மண்,மேகம்,வானம் எதிலும் நிறமில்லை.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்கிறேன்.இப்பொழுது மிதந்து அசையும் இரு கறுப்பு வெள்ளை உதடுகளை தவிர வேறு உருவங்களே புலப்படவில்லை.யாவும் சாம்பல் மயம்.நிறக்குருடா? இல்லை முழுக்குருடா? என்னை என்னால் காண முடியவில்லை.அவசரமாக உடலை தடவிப்பார்த்து கொள்கிறேன்.இருக்கிறது.புலப்படவில்லை.

சாம்பல் வெளியில் மிதக்கும் இரு கறுப்பு வெள்ளை உதடுகள்.உதடுகளே இப்பொழுது என் திசைமானி.இவ்வுதடுகளும் மறைந்து விடுமுன் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்.இது சாம்பல் காடு.மரண குழி.நான் அவள் உதடுகளை நெருங்குகிறேன்.மெல்ல புன்னகைத்து போக்கு காட்டி மிதந்தோடும் உதடுகளை வெறி கொண்டவனாய் துரத்த தொடங்குகிறேன்.சாம்பல் குவியலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மூச்சு திணறலோடு புலப்படாத கொடி மரங்களில் மோதி உருண்டெழுந்து வண்ணத்து பூச்சியாய் பறந்தோடும் உதடுகளின் பின்னே நான்...

சட்டென விழித்து கொண்டேன்.இல்லை.இது தாமரை குளம்.இதோ என்னருகே நீந்துகிறாள் மிருதுளா.மிருது..மிருது..அவளை தாவி அணைத்தேன்.சினுங்கியபடி என்னை தள்ளி விடுகிறாள்.இதோ தாமரையின் நிறத்தில் அதே கறுப்பு வெள்ளை உதடுகள்.மூர்க்கம்.மகா மூர்க்கம்.அவளை கொடியென பற்றி படர்ந்தேன்.நாங்கள் சூன்ய வெளியின் ஒரு பின்னமானோம்.நீர் சர்ப்பம் கூடும் நெடுங்கடல் வெளியானது அப்பெருங்குளம்.சுயம் மனம் கர்வம் சர்வ நாசம்.துவண்டு இறுகும் தாவரமானோம்.எங்கோ மிதந்த மேகங்கள் திரண்டு பொழி பொழியென தொடங்கியது பேய் மழை.ஒரு கணம் வெளியே சிதறும் சிறு அலை.அது ஒருபோதும் குளமில்லை.தாமரை கொடிகள் எங்களை பிண்ண தொடங்கியது.நாங்கள் அக்குளத்தின் ஒரே மீனானோம்.மெல்ல ஒரு மீளா வெளிக்குள் மூழ்கி போனோம்.


சுழல் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருக்கும் புசுபுசுவை மெல்ல வருடி கொடுத்தேன்.புசுபுசுவுக்கு ரெஜி இல்லாத உலகம் எவ்வளவு பொருளற்றது.மழையில் நின்று நனையத் தொடங்கினேன்.



நன்றி : மார்ச்-2010 அகநாழிகை.

Friday, March 19, 2010

சில பயணங்கள்...சில அனுபவங்கள்...

பள்ளி நாட்களிலிருந்தே பயணங்களின் மீது ஒவ்வாமை தான்.தவிர்க்க முடியாத சூழல் தவிர எங்கு செல்வதானாலும் என் இரு சக்கர வாகனத்தில் தான் செல்வது.பத்தாம் வகுப்பு வரை ஹெர்குலிஸ் சைக்கிள்(அதற்கு டாடா குஜிலி என பெயர் வைத்திருந்தேன்).பிறகு ஒரு டி.வி.எஸ் சேம்ப்.கல்லூரி நாட்களில் ஹோண்டா பேஷன்.வேலையில் சேர்ந்த பிறகு வட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல நேர்ந்ததால் இந்த ஒன் மேன் ஆர்மியிலிருந்து சோசலிஸ சிறைக்குள் மீண்டும் சிக்க வேண்டியதாகி விட்டது.

உலகிலேயே மனித உடலை துச்சமாக மதிக்கும் ஒரே தேசம் நம் தேசமாக தான் இருக்குமோ என நினைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது நம் போக்குவரத்து துறைகளும் சாலைகளும்.பேரூந்து என்றால் முழங்கால் இடிக்கும் இருக்கை.(கதிர் போன்ற ஆறடி ஆஜானுபாகுக்களுக்கு இந்த அவஸ்தை புரியும்).போதாக்குறைக்கு மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று நான்கு பேராக பிதுக்கி கொண்டு அமர்வது.பக்கத்தில் அமர்ந்திருப்பவன் குறித்த எந்த லஜ்ஜையுமின்றி எட்டி எட்டி ஜன்னல் வழியாக பான்பராக்,வெற்றிலை என்று குதப்பி துப்புவது.இதைவிட கொடுமை இடித்து கொண்டு நிற்கும் சாக்கில் இடுக்கில் கைவிட்டு சல்லாபம் செய்வது.

இதில் பெண்களை நோண்டுவது ஒரு வகையினர் என்றால் ஆண்களை நோண்டுபவர்களும் இருக்கிறார்கள்.வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வாகனங்களில் இப்படி வதை பட்டதுண்டு.ஒருமுறை சோலாப்பூரிலிருந்து பரலி செல்லும் வழியில் எசகு பிசகாக இப்படி ஒருத்தன் அருகில் அமர்ந்து விட்டான்.அதுவோ 200 கிலோமீட்டர் தூர பயணம்.அடிக்கடி பேரூந்துகள் கிடையாது அந்த ஊருக்கு.இரவு வேறு.ரொம்ப நல்லவனாக பேசி கொண்டு வந்தவன் தூங்க ஆரம்பித்த பிறகு நோண்ட ஆரம்பித்து விட்டான்.அடுத்தவனுக்கு கர சேவை செய்து விடுவதில் அப்படி என்ன ஆனந்தமோ இவர்களுக்கு.அழாத குறையாக உனக்கு என்ன தாண்டா வேனும் என்றேன்.போர் அடிக்குதே என்றான்.பாவிப்பயல்.


பஸ்ஸில் இப்படியான லோலாயி என்றால் ரயில் பயணங்கள் இன்னும் விஷேசமானவை.முதல் காதல் முதல் முத்தம் போல முதல் பயணங்களும் சுவாரஸ்யமானவை தான்.முதன் முதலாக சென்ற நீண்ட தூர ரயில் பயணம் சென்னையிலிருந்து கோரமண்டலில் ஒரிஸா சென்றது தான்.கட்டக் ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு ரயில் செல்லும் என தெரியவில்லை.கம்பார்ட்மெண்டிலிருந்த ஒரு தமிழரோடு பேசிய படி வந்தேன்.அவருக்கும் கட்டக் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.ஒரு ஒரிஸா இளைஞன் எங்களை பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தான்.பேசிக் கொண்டு வந்த நண்பர் வடநாட்டான்களை ஏதேதோ காரணங்களுக்கு ஏகத்துக்கும் விளாசி கொண்டு வந்தார்.அந்த இளைஞன் வேறு எங்களை அடிக்கடி திரும்பி பார்த்ததால் இவனுக்கு என்ன வேனும்னு தெர்லயே.நாதாறிப்பய நம்மளயே பாக்குறேனே என வேறு சாடை சொன்னார்.பிறகு வழியிலேயே இறங்கி விட்டார்.அவர் இறங்கிய பிறகு அழகாக தமிழில் பேச தொடங்கினான் அவன்.அசந்து விட்டேன்.அவனும் கட்டக்கில் தான் இறங்கினான்.சென்னையில் மென்பொருள் துறையில் இரண்டு வருடங்களாக பணி செய்வதாக கூறினான்.பொறுமையாக ரயில் நிலையம் விட்டு வந்து நான் செல்ல வேண்டிய ஊரின் பேரூந்தை காட்டி விட்டு தான் சென்றான்.அப்பொழுது ஹிந்தி எழுதவோ பேசவோ தெரியாது.


ஹிந்தி தெரியாமல் தனியே வட மாநிலங்களில் பயணம் செய்வது ஒரு அலாதியான அனுபவம்.ஊர் பெயர் ஆங்கிலத்தில் இருக்காது.படித்தும் பட்டிக்காட்டானாக இந்த பஸ் எங்க போவுது எனக்கேட்க கொடுமைகாயக இருக்கும்.சிரித்து கொண்டே மூச்சுக்கு முன்னூறு தரம் சாலா மதராஸி என்று திட்டுவார்கள்.எல்லாம் தார் பூசி அழித்த புரட்சியின் பலன்.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமென பணி நிமித்தம் அங்கே அலைய நேரும் பொழுதுதான் எல்லாம் புரியும்.ரயிலில் வசதியாக முதல் வகுப்பில் பயணிப்பதில் சிக்கல்கள் இருப்பதில்லை.இரண்டாம் வகுப்பு கழிவறைகளில் மலம் கழிப்பது போன்ற துர்பாக்கியம் வேறொன்றுமில்லை.தண்ணீர் ஊற்றி கழுவ டப்பா ஒன்றும் இருக்காது.அடிக்கடி பயணம் செய்பவர்கள் தெளிவாக சோப்பு சீப்பு டப்பா சகிதம் வந்து விடுவார்கள்.எனது முதல் பயணத்தில் இந்த டப்பா இல்லாத பிரச்சினையால் கக்கூஸ் போகக் கூடாதென ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீரையும் தேனீரையும் மட்டுமே குடித்து பயணித்தேன்.பிறகான நாட்களில் முதல்வேளையாக இரண்டு லிட்டர் பாட்டில் ஒன்று வாங்கி கொள்வது.மறக்காமல் பர்ஸில் ஒரு பிளேடு வைத்து கொள்வது.விடிந்ததோ இல்லையோ பாட்டிலை இரண்டாக அறுத்து டப்பாவாக்கி விடுவது.இப்படி எப்பொழுதும் பிளேடோடு மிக இயல்பாக பயணித்த நாட்கள் இப்பொழுது சிரிப்பை வரவழைக்கிறது.


குளிரூட்டப்பட்ட வாகனங்களில் நெடுந்தூரம் செல்வதென்றாலே எனக்கு அடிவயிறு கலக்கும்.அடிக்கடி மூத்திரம் வரும்.அராஜகமாக எங்கேயும் நிறுத்தாமல் வேறு போய் கொண்டிருப்பார்கள்.அப்படியே நிறுத்தினாலும் இன்னொரு தொந்தரவு எனக்கு.சுற்றிலும் கூட்டமாக ஆட்கள் இருந்தால் சிறுநீர் சொட்டு கூட வராது(எனக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட விசித்திர பிரச்சினைகளெல்லாம் வருகிறதா என்ற சந்தேகத்தை கதிர் சமீபத்தில் தான் தீர்த்து வைத்தார்).எவ்வளவு முக்கினாலும் இரக்கமேயில்லாமல் 'ம்ஹீம் வரமாட்டேன் போ' என அழிச்சாட்டியம் செய்யும்.சினிமா கொட்டாய்,பொது/பேரூந்து கழிப்பிடம் இங்கேயெல்லாம் படாத பாடு தான்.நமக்கே இப்படியென்றால் இந்த பெண்கள் பாடெல்லாம் எப்படியோ எனத் தோன்றும்.ஆனாலும் உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம் உள்ளவர்கள் நம் மக்கள் தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.காரணம் வகை தொகையில்லாமல் கோயில்களில் கூடும் கூட்டம் தான்.பொறுமை சகிப்பு தன்மை போன்ற வஸ்துக்களை வளர்த்து கொள்ளவாவது வாழ்வில் ஒரு முறை திருப்பதி சென்று வர வேண்டும் என நண்பர்களிடம் கூறுவேன்.குடும்பத்தோடு திருப்பதிக்கு பயணம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மாரியாத்தாளுக்கு தீமிதிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் வந்தால் தயங்காமல் இரண்டாவதையே தேர்வு செய்வேன்.அவ்வளவு கொடுமையாக இருந்தது அந்த பயணம்.மாட்டை பட்டியில் அடைப்பது போல் ஒரு இரவு முழுக்க கூண்டில் அடைத்து இம்சை செய்தார்கள்.பிறகு தான் பைசா கொடுத்து பெருமாளை சட்டுனா ஷேவிக்கும் டெக்னிக்கெல்லாம் நண்பர்கள் கூறினார்கள்.போங்கடா நீங்களும் உங்க பெருமாளும் என அத்தோடு முழுக்கு போட்டு விட்டேன் கோயில்களுக்கு.


மிகவும் சராசரி மனிதர்களான நமக்கே பயணங்களில் இவ்வளவு தொந்தரவு.திருநங்கைகளை பற்றி யோசித்திருக்கிறோமா? சௌதி கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன்னர் கதிர் தொலைபேசினார்.விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் திருநங்கைகளின் தாலி அறுக்கும் சடங்கு நடக்கப்போகிறதென்று.என் நண்பன் தஷ்னாவை அழைத்து கொண்டு பைக்கில் கிளம்பி விட்டேன்.கூவாகத்தில் கதிர் எங்களுக்காக காத்திருந்தார்.
கூவாகம் ஒரு சின்ன கிராமம்.இங்கே இருக்கும் ஒரு சிறிய கோவிலில் தான் இந்த சடங்கு வருடந்தோறும் நிகழ்கிறது.தெம்பாக முட்ட முட்ட குடித்து விட்டு உள்ளே நுழைந்தால் போதையெல்லாம் தெளிந்து விட்டது.இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து கூடியிருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தியது.

திருநங்கைகள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை(எளியவர்களின் மீதான பரிதாபமும் ஒருவகையில் வன்முறையே என நினைக்கிறேன்)அங்கீகாரத்தை கூடயில்லை.உரிமைகளை மட்டுமே.வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்பதை அங்கே சென்ற பொழுது முழுமையாக உணர முடிந்தது.நாங்களும் மனுஷங்க தாண்டா என்ற குமுறலை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.ஜே ஜே என்று எங்கெங்கும் கூட்டம்.வயல்வெளிகள் சூழ்ந்த அக்கிராமத்தில் முளைத்திருந்த குட்டி குட்டி பனியார கடைகள்.தள்ளு வண்டிகள்.நான் பார்த்து பிரமித்த ஒரே திருவிழா அது தான்.ஆங்காங்கே அழகி போட்டிகள்.ரெக்கார்ட் டேன்ஸ் என களை கட்டியிருந்தது.விடிய விடிய சாரி சாரியாக மக்கள் வருவதும் போவதும்.நேர்த்தி கடனுக்கு தாலி கட்டி கொள்ள வரும் சராசரி கிராம குடியானவர்களுமென அற்புதமான நிகழ்வு அது.அங்கேயும் குறியை கையில் பிடித்தபடி உராய்வுக்கு அலையும் கிழங்கள் சில்வாண்டுகள் இல்லாமல் இல்லை.திருநங்கைகளை சீண்டுவது.ஊசிகளால் குத்துவது என மன வியாதியஸ்தர்கள் இல்லாமல் இல்லை.அலைந்து அலைந்து ஓய்ந்து போய் நானும் கதிரும் நண்பர்களும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம்.எங்கிருந்தோ ஒரு திருநங்கை சரக்கு பாட்டிலோடு ஓடி வந்து எங்களை விரட்டினார்.கதிர் தான் என்ன ஏதென்று விசாரித்தார்.ஆங்காரமும்,அழுகையுமான குரலில் ''நாங்க ஏதோ விதிய நொந்து வரோம்,எங்கள ஏண்டா இம்சை பண்றீங்க,ஊசியால குத்துறீங்க,எங்களுக்கென்ன எரும தோலா,வலிக்குதுல்ல..உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு இப்படி ஆயிருந்தா தாண்டா தெரியும் என பொத்தாம் பொதுவாக வெடித்து விட்டு போனார்.கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவியது எங்களிடையே.

பயணங்கள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொரு தெருமுனை சிறு கல்லும் சொல்ல காத்திருக்கிறது.தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை.






Friday, February 26, 2010

Baraka - ஓர் அற்புத ஆவணம்.



Ron Fricke இயக்கிய இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது வாழ்வு ஒரு சுத்தமான பரிசு என்ற ஓஷோவின் சொற்கள் தான் நினைவிற்கு வந்தது.ஒரு துறவியென தியானம் கொண்டிருக்கும் இமயமலை சாரலும் அவ்வெளியில் மிதக்கும் பறவையும், அகவெளியினை மயில் தூவியென வருடும் Michel stearns ன் உன்னதமான பிண்ணனி இசையுமாக விரியும் இப்படம் ஒரு அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.இப்படத்தை பெரிய திரையில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Baraka என்ற சூஃபி சொல்லுக்கு ஆசிர்வாதம் என பொருள் கொள்ளலாம்.விளக்கங்களோ,காட்சிபடுத்தப்பட்ட பிரதேசங்கள் குறித்த குறிப்புகளோ கூட இல்லாமல் நாடோடி போல் அலைந்து திரியும் இப்படத்தின் திரைக்கண்கள் ஓரங்குலமும் நகராமல் ஓர் உன்னத ஆன்மீக யாத்திரையை உள்ளே நிகழ்த்திவிட்டதான அனுபவத்தையே தருகிறது.மாபெரும் படைப்புகள் மௌனங்களால் செய்யப்பட்டவையாகவே இருக்க வேண்டும்.அவை நமக்கு தரும் மேலான பரிசுகளும் இந்த மௌனத்தையே.

பனிப்புகை சூழ விரியும் ஜப்பானிய பனிமலை பிரதேச ஏரியொன்றில் அமிழ்ந்தபடி தியானிக்கும் குரங்கும்,அந்தகார நட்சந்திரங்களுமாக திரையில் விரியத்தொடங்குகிறது கனவு வெளி.மெல்ல நேபாளத்தின் காட்மண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயரின் புராதண நகருக்குள் நுழைந்து பழைய கோயில்கள் ஸ்தூபிகள் என காட்சி படுத்தி நகர்கிறது.நேபாளம் பெரும்பாண்மை ஹிந்து மத நெறியாள்கைக்கு உட்பட்டது என செய்தியாகவே அறிந்திருக்கிறோம்.படத்தில் பார்க்கும் பொழுது குறைந்தது அருகில் இருக்கும் இந்த நாட்டிற்காவது சென்று வந்திருக்கலாமே என்றே எண்ண தோன்றியது.காட்சிபடுத்தப்பட்டிருக்கும் கோயில்களும் அந்நகரின் எளிய மக்களும் மிகவும் வசீகரிக்கின்றனர்.எவ்வித தொடர்புமின்றி சட்டென திபெத்திய புத்த விகாரைக்குள் நுழைந்து பிக்குகளும் அவர்களது சடங்குகளுமான நிலவெளிக்கு அழைத்து செல்கிறது கேமரா.

புனித நூலை வாசிக்கும் ஒரு ஹிந்து சாதுவின் சமஸ்கிருத எழுத்துக்கள் ஹீப்ரு மொழியாகி இஸ்ரேலின் பாதிரி கைகளுக்குள் அமிழ்ந்து பின் ஜெருசலத்தில் உள்ள யூத வழி பாட்டில் என கிளை மாறி கொண்டேயிருக்கிறது படத்தொகுப்பு.சூஃபிக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுழல் நடனம் ஆடும் துருக்கி டெர்விஷ்கள்,இந்த நடனத்தை கற்று மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர் என குருட்ஜீஃபை சொல்ல வேண்டும்.ஜெருசலத்தில் உள்ள மாபெரும் கிறிஸ்தவாலயம்,திபெத்திய மடாலயமொன்றில் தீபங்களேற்றி தியானிக்கும் பிக்கு என மாறியபடி நகரும் காட்சிகள் உலகின் வெவ்வேறு நிலவெளிகளில் தோன்றிய புனித நூல்கள் மதங்கள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் என பரிணமித்திருக்கும் மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன என்ற கேள்வியை வழியெங்கும் இரைத்தபடியே நகர்கிறது.

இயற்கை வளம் நிறைந்த இந்தோனேஷிய மலைப்பிரதேசங்களும்,நெல்வயல்களும் ஒரு கணம் ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவலை நினைவு படுத்தியது.கம்போடியாவின் அங்கோர் வாட்டில் இரண்டாம் சூர்யவர்மனால் 12ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மிக பிரமாண்டமான கோயில் பிரமிக்க வைக்கிறது.இந்தோனேஷிய பாலி தீவில் உள்ள மக்களால் நிகழ்த்தப்படும் Kecak எனப்படும் ஒருவகை குரங்கு நடனம் சிலிர்க்க வைக்கிறது.ராமாயண காதையின் வானரர்கள் ராமனுக்கு உதவிய நிகழ்வின் வெளிப்பாடு என கூறப்படும் இந்நடனம் அல்லது வழிபாடு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.ஆண்களின் கூட்டம் ஒரு காதில் பூ சகிதம் கூட்டமாக அமர்ந்து வினோத ஒலிகளையும் உடல் மொழியையும் வெளிபடுத்துகின்றனர்.இந்தோனேஷியா,தாய்லாந்து என ராமாயணம் பல நாம ரூபங்களில் பல நாடுகளில் உலவுகிறது என ஜமாலன் சார் ஒருமுறை கூறியது நினைவு வருகிறது.

கம்போடிய புத்த விகாரகைகள்,பிக்குகள்,வெடித்து ஆறாத அந்நிலவெளியின் எரிமலை,ஆஸ்த்ரேலிய பழங்குடியினரின் விநோத நடனம் மற்றும் வழிபாடு என மாறி மாறி வியப்பிலாழ்த்தியபடி பயணம் செய்கிறது படம். பிரேசிலின் அமேசான் காட்டு பழங்குடியினர்,ஆஸ்த்ரேலிய குகை மனிதர்களின் சுவரோவியங்கள் மற்றும் அபோரிஜின் பழங்குடியினர்,காயோபா பழங்குடியினர் என எளிதில் காண கிடைக்காத பழங்குடியினரின் காட்சிபதிவுகளின் தொகுப்பாக உள்ளது இப்படம்.

எங்கோ இந்தோனேஷிய தொழிற்சாலையில் சிகரெட்டிற்கு புகையிலை சுருட்டும் பெண்கள் அடுத்த காட்சியில் ஜப்பானின் ஏதோ ஒரு நெரிசலான பேரூந்து நிலையத்தில் நின்று புகைத்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானியன் என படத்தொகுப்பில் குறுங்கவிதைகளும் முயன்றுள்ளனர்.கம்போடிய சித்ரவதை கூடங்கள்,சித்ரவதை முகாமில் இருந்தோரின் புகைப்படங்கள்,ஜப்பானிய குண்டு வீச்சின் பாதிப்புகளை மௌனமாக நடித்து காட்டும் Butob கலைஞர்,ஆயுதம் ஏந்தி நிற்கும் காவலர்கள்,சித்ரவதை முகாமில் குவிந்து கிடக்கும் மண்டையோடுகள்,எங்கோ ஒரு நகரத்தில் சாலையில் செல்பவனை அழைக்கும் ஒரு பாலியல் தொழிலாளி,கல்கத்தாவின் குப்பை பொறுக்கும் விளிம்புநிலை மனிதர்கள்,பிளாட்பார பிரஜைகள் என மானுட துயரையும் காட்சி படுத்தியபடி விரியும் விவரணைகள் நம்மை நிசப்தமாக்குகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த சௌதி அரேபியாவின் மக்கா போன்ற பிரதேசங்களிலும் அங்கு நிகழும் தொழுகைகளையும் எப்படி அனுமதி பெற்று படம் பிடித்தார்கள் என்றே வியப்பாக இருக்கிறது.

இந்தியாவில் வாரணாசி போன்ற கங்கை கரையோர சடங்குகளையும் வழிபாடுகளையும் படம் பிடித்துள்ளனர்.ஆப்ரிக்கா,கென்யா,தான்சானியா,அர்ஜெண்டைனா,எகிப்து உட்பட மொத்தம் 24 நாடுகளில் உள்ள மிகப்பழமையான மடாலயங்களையும்,ஸ்தூபிகளையும்,சடங்கு வழிபாடுகளையும் பதிவு செய்திருக்கும் இப்படம் 14 மாத கடுமையான உழைப்பில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிலவெளிகளையும், மனிதர்களையும், நாகரீகங்களையும்,துயரங்களையும் ஒருங்கே காணும் மனதில் வறட்டு நாத்திகத்தை புறந்தள்ளி எழுப்பும் அழுத்தமான கேள்வி இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன?

அவசியம் காண வேண்டிய ஒரு அரிய ஆவணப்படம்.




Saturday, February 6, 2010

நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராமன்


தி.ஜா,கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி,மௌனி,கரிச்சான் குஞ்சு என தொடங்கி தமிழின் சில முக்கிய இலக்கிய மாயாவிகளை உருவாக்கியதில் கும்பகோணத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.என் ஊரிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தொலைவே கும்பகோணம்.அவ்வூரின் மீது ஒரு ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.இவர்களின் வரிசையில் எம்.வி.வி என அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனும் இருக்கிறார் என நித்யகன்னி நாவலை திறக்கும் போது தான் தெரிந்தது.அவரை ஏதோ கன்னட எழுத்தாளர் என்று குழப்பி கொண்டிருந்திருக்கிறேன்.
வியாச முனியின் மகாபாரத பெருஞ்சுரங்கத்திலிருந்து நித்யகன்னி என்ற சிறு பாத்திரத்தை எடுத்து கொண்டு கன்னிமை என்ற பரப்புக்குள் நீந்தி எழுந்திருக்கிறார் ஆசிரியர்.யாரையும் போல் எனக்கும் மகாபாரதம் மிகுதியும் செவி வழி கதை தான்.சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த நாட்களில் அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து சில நாட்கள் பாரத வியாக்கியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது.கர்ண கொடூரமான ஒலி பெறுக்கி இம்சையையும் மீறி அந்த வியாக்கியானம் உள்ளே ஏறி கொண்டேயிருந்தது.இதுபோல் அவ்வப்போது கேட்க வாசிக்க நேரிடும் பாரத கதாபாத்திரங்களும்,பாத்திர சூழ்நிலைகளும்,அக கொந்தளிப்புகளும் பாரதத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிய வண்ணமேயிருக்கிறது.
இன்று வரை நவீன தத்துவங்கள் மற்றும் உளவியல் தீண்டியதும் தீண்டாததுமான பல்வேறு தளங்களை உணர்வு நிலைகளின் பல்வேறு அடுக்குகளை சிகரங்களை அநாயசமாக தீண்டியும் தாண்டியிருக்கும் இப்பெருங்கதையாடல் சமகாலம் வரை ஒரு சராசரி இந்தியனின் அன்றாட வாழ்வையும் போக்கையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது சுலபமாக தவிர்த்து விடக்கூடிய ஒன்றல்ல.மேலும் பாரத வாசிப்பு வெறுமனே கதையின்பத்திற்கானது மட்டும் அல்ல.உலக தத்துவங்களும் விஞ்ஞானமும் காலமெல்லாம் தேடி வரும் மனித இருப்பின் அர்த்தங்களை ஆராயும் ஆய்வு நூல் என்றும் இந்திய நவீன மனதை கட்டமைத்திருக்கும் தொன்ம நினைவின் சத்தும் சாரங்களும் நிரம்பியது என்றும் கூறப்படுகிறது.

கன்னிமை என்றால் என்ன? ஏன் அதன் மீதான கதையாடல்கள் இவ்வளவு நிகழ்ந்திருக்கிறது.வெட்டுதல்,ஒட்டுதல்,கிழித்தல்,தைத்தல் என சரித்திர தையல்காரனின் எந்திரத்தில் நசுங்காத பெண்ணுடல்கள் எத்தனை? புனிதம் என்பது ஏன் பெண்குறியின் நுன் திரையால் நெய்யப்பட்டிருக்கிறது? உலகையே ரட்சிக்க பிறந்தவன் என்பவனை கூட அவனது தாய் ஒரு கன்னி என்ற கதையாடல் மூலம் மட்டுமே நிறுவ முடிகிறது.மேரி எப்படி ஒரு சராசரி பெண்ணை போல் ஆடவனோடு கூடி குலவியொரு ரட்சகனை ஈன்றெடுக்க முடியும்.ரட்சகனை ஈன்று தருபவள் புனிதமானவளாக,ஆளப்படாதவளாக,களங்கப்படாதவளாக,கன்னி மேரியாக மட்டுமே இருக்க முடியும்.புனித ஆவியால் புணரப்பட்டே ரட்சகன் அவதரிக்க முடியும்.அவனை மட்டுமே நம்மால் சிலுவையிலும் அறைய முடியும்.இங்மார் பெர்க்மன் இயக்கிய Virgin Spring கன்னிமையை மையங்கொண்டு கடவுள் விசாரணையாக விரியும் ஒரு அற்புதமான திரைப்படம்.
இதன் உளவியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.கன்னிமையை அதன் மீதான புனித கற்பிதங்களை புராணங்களும் இதிகாசங்களும் ஒவ்வொரு விதமாய் ஸ்திரமாய் நிறுவியிருக்கிறது.இதில் பாரத பெருங்கதையாடலின் போக்கை ஆசிரியர் அவதானித்துள்ளார்.அதன் ஓட்டத்தில் நிரடும் சிடுக்கிலொன்றை தெரிவு செய்கிறார்.அவள் நித்யகன்னி.நித்யகன்னி என்றும் பதினாறாய் சிவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மார்கண்டேயன் போல் என்றென்றும் கன்னியாக இருக்க தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.அவளொரு ஆடவனை கூடலாம்.கரு தரிக்கலாம்.ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவள் கன்னியாகவே மாறி விடுவாள்.அவள்
ஒரு போதும் தன் சிசுவுக்கு முலை ஈன முடியாது.ஒரு போதும் அவள் தாய்மையை அடைய முடியாது.அவள் நிரந்தர-நித்ய கன்னி.எனில் இது வரமா ? சாபமா ?

குறிப்பு: நாவலை வாசிக்காதவர்கள் வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் மூன்று பத்திகளை தவிர்த்து நான்காம் பத்திக்கு தாவி விடவும்.

காலவ முனிவன் விசுவாமித்திரரின் மாணவன்.குருதட்சனையாக அவர் கேட்கும் ஒரு காது மட்டும் கறுப்பாக உள்ள 800 வெள்ளை குதிரைகளை யாசகம் பெற வேண்டி தர்ம ரூபி யயாதியிடம் செல்கிறான்.நித்யகன்னியான மாதவி அவன் நோக்கம் அறியாமலே அவன் மீது காதல் கொள்கிறாள்.குதிரைகளை யாசகம் தர முடியாத யயாதி காலவனிடம் தன் மகளை தர உறுதியளிக்கிறார்.இவளை கொண்டு உன் குதிரைகளை சம்பாதித்து கொள் எனக்கூறி விடுகிறார்.தான் தேடி வந்த நித்யகன்னி மாதவி என அறியாமலேயே காலவனும் மாதவி மீது காதல் கொண்டு விடுகிறான்.மூன்று மன்னர்களிடம் உள்ள 600 குதிரைகளை பெற வேண்டி அவளை அவர்களுக்கு மணம் செய்வித்து ஒரு குழந்தை பிறந்ததும் அவளை மீட்டு மணம் செய்து கொள்ளும் உத்தேசத்தோடு பயணம் செய்யும் காலவன் மற்றும் மாதவியின் உணர்வுகளை பகடையாக உருட்டியிருக்கிறார் ஆசிரியர்.
குதிரைகளை பெற வேண்டி அவள் மணம் செய்யும் மூன்று கணவர்களில் ஒருவன் சம்போக பிரியன்,மற்றொருவன் தத்துவ வியாக்கியானன்,மூன்றாமவன் மட்டுமே அவளை உள்ளும் புறமுமாக நேசிப்பவன்.உசீநரன் அழகின் உபாசகனாக இருக்கிறான்.நித்யகன்னியின் உடலே நித்ய சௌந்தர்யத்தில் இருக்கிறது.மனோ ரீதியில் அவள் சௌந்தர்யம் இழந்து கொண்டிருப்பவள் என்பதை அவன் மட்டுமே கண்டு கொள்கிறான்.தர்மம் பேனும் யயாதியை,காலவனை,விஸ்வாமித்திரரை என அறத்தின் தர்மத்தின் மனசாட்சியை உலுக்கும் நவீன மனமாக உசீநரன் உருக்கொள்கிறான்.பிறகு அவள் பொருட்டே அவன் கொலையும் செய்யப்படுகிறான்.

இதில் நித்யகன்னியான மாதவியின் நிலை என்ன? மனதில் ஒருவனை காதலனாக வரித்த பிறகும் மூன்று மன்னர்களை மணக்கும் அவள் மன நிலை என்ன? கன்னிமை மீண்டும் கிடைத்து விடும் என்றில்லாத நிலையில் அவளை பிற ஆடவனோடு மணம் செய்விக்கும் எண்ணம் காலவனுக்கோ,யயாதிக்கோ தோன்றுமா? அல்லது மன்னர்கள் தான் அவளை மணப்பார்களா? எனில் கன்னித்தன்மை என்பது வெறும் உடல் சம்மந்தப்பட்டதா? இதை ஒரு கட்டத்தில் மீத குதிரைகளுக்காக விஸ்வாமித்திரரே அவளை மணம் செது கொள்ளும் இடத்தில் ஆழமாக்குகிறார் ஆசிரியர்.மாதவி நீராடுகையில் ரிஷி குல பெண்கள் தெளிவாகவே அதை கூறி விடுகின்றனர்.மாதவிக்கு சித்த பிரமை ஏற்படும் நேரத்தில் வெளிப்படும் அவளது ஆழ் மன உரையாடல்கள் அல்லது உளறல்கள் மூலம் நம்மை உரசுகிறார் ஆசிரியர்.எது அறம்? எது தர்மம் ?

இந்நாவல் உருக்கொண்ட காலமும் சுணங்காத எழுத்தின் வீச்சும் கிளர்வை தந்தது.கன்னிமை குறித்த பிறிதொரு விசாரணையாக ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் இருக்கிறது.காதலித்த பெண் கண்ணெதிரே வேறு ஆடவர்களால் சூறையாடப் பட்ட பின்னர் அவ்வுடல் மீது தோன்றும் அசூயையை மையமாக கொண்டது அந்நாவல்.உடல் மீதான மனம் கொள்ளும் உரிமை அதன் மீதான அதிகாரம் விளைவான அரசியல் என்பதெல்லாம் சுலபமாக சிதைவு கொண்டு விடாது என்பதாலேயே நித்யகன்னி கிளாசிக்காக இருக்கிறது போலும்.இவருடைய பிரசித்தி பெற்ற மற்றொரு நாவல் காதுகள்.அதை தேடி வாசிக்கும் ஆவலை உருவாக்கியிருக்கிறது இந்நாவல்.
நாவல் முன் வைக்கும் கேள்விகள் நுட்பமானவை .நாட்பட்டு புரையோடிய முள்ளாய் இருந்து வலி தர வல்லவை.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூ

Friday, January 22, 2010

The bridges of madison county...

"முன்பின் தெரியாத ஒருவனுடன் நம்மை பிணைத்துக் கொண்டு திடீரென்று அவனுடன் எப்படி வாழ்க்கையைத் தொடங்குவது? ரசிக உணர்ச்சி இல்லாதவனாகவோ ஹாஸ்ய உணர்ச்சி இல்லாதவனாகவோ,முன் கோபக்காரணாகவோ அல்லது அரைக் கிறுக்காகவோ அசடாகவோ - இப்படி யாராவது ஒருவனுக்கு தீர விசாரிக்காமல் வாழ்க்கைப்பட்டு விட்டால்,அப்புறம் என்ன செய்ய முடியும்? கழற்றவே முடியாத விலங்கு - மாற்றவே முடியாத ஆயுள் தண்டனை."

என்ன பயங்கரம்!

-
ஆதவனின் 'சிறகுகள் ' என்ற குறு நாவலிலிருந்து...



கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த இயக்கிய சில திரைப்படங்கள் அற்புதமானவை.அவரது அலட்டலற்ற நடிப்பும் சன்னமான உணர்வுகளையும் பார்வையாளனிடம் கடத்திவிடும் இயக்க திறனும் வியக்க வைப்பவை.இணையம்,புத்தகம் என யாவும் வெறுப்பேற்றிய சில நாட்களுக்கு பிறகு மிதமான போதையுடனான இரவு துழாவலில் சிக்கியது இப்படம்.Million dollar baby க்கு பிறகு நெகிழ வைத்த மற்றொரு படம்.

ஒரு புதிய உறவு துளிர்க்கும் நொடியில் நம்மால் உணர முடிவதில்லை.இவ்வுறவு இறுதி வரை நீடிக்குமா அல்லது பாதியிலேயே இம்சிக்குமா என்றெல்லாம்.யாரோ வருவார்,யாரோ போவார் எனினும் இவர் நமக்கானவர் என ஒருவரை மனம் இனம் கானும் நிகழ்வு ஒரு அழகான புதிர்.சில சமயம் தோன்றும்.ஒவ்வொரு தனி மனிதனும் அன்பிற்காகவே ஏங்கிச் சாகிறான் என்று.என்னை புரிந்து கொள்,ஏற்று கொள்,மன்னித்து கொள் என்று கதறி மன்றாடுபவனது அகவலிகள் சொல்லி தீராததாகவே இருக்கிறது.
The Bridges of madison county...

நாற்பதுகளில் இருக்கும் ஃபிரான்செஸ்கா தனது 17 வயது மகன்,மகள் மற்றும் கணவனோடு அமெரிக்காவின் மேடிசன் பகுதியிலுள்ள லோவா என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறாள்.தன் கணவனின் விருப்பப்படி தனது ஆசிரியை தொழிலையும் விட்டு விட்டவள்,தன் குழந்தைகளின் வளர்ச்சியிலும்,சிறிய பண்ணையையும் கவனித்து கொள்வதில் பொழுதை செலவிடுகிறாள்.ஏதோ ஒரு காரணம் பொருட்டு தன் குழந்தைகள் மற்றும் கணவன் நான்கு நாட்கள் பயணமாக வெளியூர் செல்லும் நாளொன்றின் தனிமை பொழுதில்,அவ்வூரில் உள்ள பெயர் பெற்ற பாலங்களை புகைப்படம் எடுக்க வருகிறார் ஐம்பதுகளில் உள்ள ராபர்ட்.

பாலத்திற்கு செல்ல வழி கேட்கும் ராபர்ட்டோடு பாலம் வரை அவனோடு காரில் பயணிக்கும் ஃபிரான்செஸ்கோ அவனது முதிர்ந்த உரையாடல்களால் ஈர்க்கப்படுகிறாள்.திரும்பும் வழியில் தேனீர் அருந்த அழைக்கும் அவளது நட்பு ராபர்ட்டையும் ஈர்க்கிறது.திருமண பந்தத்தில் சிக்கி கொள்ளாமல் புகைப்படக் கருவியோடு மனம் போன போக்கில் நாடு நாடாக அலையும் அவனது ஆளுமை அவளை அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு கொள்ள செய்கிறது.குடும்பம் என்ற பொறுப்புகளுள் சிக்குண்ட பின் நிறமிழந்து போன தன் கனவுகளை,எதிர்பார்புகளை பகிர்ந்து கொள்ளப்படாத அகத்தனிமையை யதார்த்தமாக அவனிடம் கூறுகிறாள்.

ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் அவளை சற்றே உரசி விடும் உரையாடலின் த்வனியை தவிர்க்கும் பொருட்டு அவன் அவளுக்கு நன்றி கூறி வெளியேறுகிறான்.குற்ற உணர்வு கொள்ளும் அவள் மீண்டும் அவனை சந்திக்க விரும்புகிறாள்.உடற் கிளர்ச்சி என்ற சிறு புள்ளிக்குள் முடங்காத தவிப்பொன்று இருவருக்கும் இடையே தோன்றுகிறது.மெல்ல தன் வசமிழக்கும் இருவருக்குமிடையேயான மனக்கொந்தளிப்புகள் நம்மையும் உருக்க தொடங்குகிறது.இன்னும் இரண்டு நாட்களில் ராபர்ட் சென்று விடுவான் என்ற ஏக்கமும்,காதலற்ற ஒரு சராசரி குடும்ப தலைவி வேடத்திற்குள் மீண்டும் புதைய போகும் வருத்தங்களும் அவளை அலை கழிக்கிறது.போலவே ராபர்ட்டும் உணர்கிறான்.

அவளது கணவனிடம் தான் பேசுவதாகவும்,தன்னோடு வந்து விடும் படியும் கூறும் அவனது அழைப்பை மறுக்கிறாள்.பொறுப்புள்ள ஒரு தாயாக,மனைவியாக,சொந்த விருப்பு வெறுப்புள்ள ஒரு பெண்ணாக அவளுள் நிகழும் மனப்போராட்டங்கள் உறைய வைக்கின்றன.

Meryl Streep
தன் அபாரமான நடிப்பின் மூலம் கலங்கடித்திருக்கிறார்.நீ போய்விடுவாய்,காலமெல்லாம் காதலை சுமந்தபடி நான் இங்கே சாக வேண்டும் என கொந்தளிக்கும் போதும்,அவன் சென்ற பின் ஊரிலிருந்து திரும்ப வரும் தன் கணவனையும் குழந்தைகளையும் வரவேற்று சுவருக்கு பின்னே சென்று குமுறும் பொழுதும்,மீண்டும் சாலையில் பார்க்க நேரும் ராபர்ட்டை கண்டு அருகில் அமர்ந்திருக்கும் கணவனிடம் கூற முடியாது,கார் கதவை திறந்து விட தவித்து மருகும் பொழுதும் நொறுக்கி விடுகிறார்.

மத்திய வயதில் ஏற்படும் காதலை இதன் அளவிற்கு அழுத்தமாக சொன்ன வேறு படங்களை நான் பார்த்திருக்கவில்லை.
ராபர்ட் ஜேம்ஸ் வாலர் எழுதிய இந்நாவலையும் அவசியம் வாசித்து விட வேண்டும்

கற்பு,ஒழுக்கம் என்ற சமூக தீர்ப்புகள் தனி மனித விருப்புகளை கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை.திருமணங்கள் அற்புதமானதாய் இருக்கக்கூடும்.ஆழமான ஒரு புரிந்துணர்வில்.இப்பொழுது என் கழுத்திற்கு மேலேயும் ஒரு நுகத்தடி தொங்க காத்திருக்கும் பீதி.வாழ்க்கை வெறும் வட்டி தொழில் தானோ...நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே என்று பாடத்தொடங்கினால் வேற என்ன பொரட்சி செய்றதா உத்தேசம் தொரைக்கு என்று மிரட்டுகிறது தந்தை குலம்.ம்..இருக்கட்டும்.

பார்க்க வேண்டிய படம்.