தூரமாக போகும் துயரத்தை நானாகவே தூக்கி தோளில் போட்டு கொள்கிறேனா அல்லது தானாகவே அது என் மீது வந்து ஏறி கொள்கிறதா என தெரியவில்லை.சில நாட்களாக எத்தனை கர்ம சிரத்தையாக காரியங்களை திட்டமிட்டாலும் கட்ட கடைசியில் அது வெளக்கெண்ணையில் குண்டி கழுவிய கதையாகவே ஆகி விடுகிறது.இன்று காலையில் அலுவலகம் வந்து அமர்ந்ததும் உடன் பணி புரியும் நண்பர் சேகரிடமிருந்து போன்.நண்பா ஒரு 50 ரியால் இருக்குமா...ட்ரெயினருக்கு கொடுக்க வேண்டும்..காரில் வந்து கொண்டிருக்கிறேன்..அலுவலம் அருகே வந்ததும் அழைக்கிறேன் என கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.இன்று டிரைவிங் டெஸ்ட் போல.
காசிருந்தால்..அட காலணா இல்லாவிட்டாலும் கூட இங்கு கார் வாங்குவது சுலபம்.ஆனால் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது என்பது முன்னோர்கள் வகை தொகையற்று புண்ணிய மழை பொழிந்திருந்தாலோ அல்லது ஓமன் அரபாப்புகளோடு முன் ஜென்ம கடனேதும் இல்லாதிருந்தாலொழிய ஒரு நெடுங்கொடுங்கனவாகவே இருக்கும்..அதற்கு முன் ஒரு நல்ல ஓட்டுனர் பயிற்சியாளர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினையன்றி வேறில்லை என்றே கொள்ள வேண்டும்.பெரும்பாலான பயிற்சியாளர்களுக்கே சாலை விதிகள் தெரியாது.
நேரடியாகவோ பயிற்சி பள்ளி மூலமாகவோ போவதற்கான வழிமுறைகளும் இங்கு கிடையாது.அதனால் தான் ஓமானி டிரெயினர்கள் சிக்கினால் கெட்டியாக கொட்டையை பிடித்து கொண்டு தொங்குகிறார்கள்.இப்படியாக திருவாளர் சனீஸ்வர் தன் கடைக்கண்ணை என் திசையில் திருப்ப ஏக மனதாக முடிவெடுத்து ஜாதக கட்டத்தில் எட்டு விட்டு ஏழரைக்கு இறங்கி ஈசானி மூலையில் துண்டு போட்டிருப்பதறியாமல் ஒரு அசுபயோக அசுப தினத்தில் உச்சபட்ச ராகு காலத்தில் அஷ்டமிக்கு மூன்றாம் நாளாம் நிறை பாட்டி முகத்தில் தன் போக்கில் கவலையற்று எங்கேயோ டொயாட்டாவில் சுற்றி கொண்டிருந்த என் டிரெயினர் சையதை வலிய போனில் அழைத்து நான் குட் மார்னிங் சொன்னேன்.
இரண்டரை வருடங்கள் சௌதியில் கொட்டிய குப்பையில் ஒரு குட்டி காரை வாங்கி நான் ஆல்டோகாரன் ஆல்டோகாரன் என்று ஊரில் கொஞ்சம் ஓட்டிய அனுபவம் இருந்தாலும் திடுமென இங்கே இடது பக்கம் ஸ்டியரிங் பிடித்த பொழுது குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டுவது போலவே இருந்தது.ஓமனில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களுள் வலக்கரத்தில் காபி கோப்பை ஏந்தி இடது கை விரலால் ஸ்டியரிங் சுழற்றி வனப்பாய் பூங்கொடியாய் காரில் கடந்து போகும் ஓமானி ஃபிகர்களும், கழுகு பார்வையில் கரட்டு மலையின் மீது ஊரும் முரட்டு பாம்பை போல் நெளிந்தூறும் பளபளா சாலையும் அடக்கம்..இப்படியாக ஓமனின் மலையழகில் சபலித்து கார் ஓட்ட தொடங்கிய பிறகுதான் எமன் எருமையை விட்டு அவ்வப்போது இவ்வூர் டொயாட்டாக்களில் சுற்றுவது புரிந்தது என்பது வேறு விஷயம்..6 மாதங்கள்...ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஒரு வழியாக லைசென்ஸ் வாங்கிய அன்று ஆனந்தத்தில் கண்ணீர் பொங்கியது..இறுதி செமஸ்டரில் ஏழு அரியரோடு மொத்தமாக 12 பேப்பர் எழுதி முதல் வகுப்பில் பொறியாளர் பட்டம் வாங்கிய பொழுது கூட இப்படி எனக்கு பொங்கியதில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது.
3 மாதங்களுக்கு முன் உடண் பணி புரிந்த நண்பர் மணி இங்கேயே வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்து ஊருக்கு செல்ல வேண்டிய சூழலில் இருந்த பொழுது அவருடைய காரை விற்று விட போவதாக கூறினார்.அதை நான் வாங்கி கொள்வதாக கூறியிருந்தேன்.அடுத்த 15 நாளில் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் காரை என்னிடம் ஒப்படைத்து பெயர் மாற்றமெல்லாம் பிறகு செய்து கொள்வோம் என கூறி சென்றார்.அவர் ஊருக்கு சென்ற அடுத்த நாளே இங்கு நான் காரை ஆள் வைத்து தள்ள வேண்டியிருந்தது.பேட்டரி காலி...பேட்டரியை மாற்றி இரண்டு நாட்கள் ஓட்டியிருப்பேன்....எதேச்சையாக அவருக்கு தொலைபேசிய பொழுது சப்த நாடியும் ஒடுங்கியது எனக்கு..அவர் உலகத்தை விட்டே போயிருந்தார்.எதிர்பாராத மாரடைப்பு..
3 வயதில் ஒரு பெண் குழந்தை அவருக்கு..தேவதர்ஷினி என பெயர்.தேவதையை போல் அவ்வளவு அழகு...நான் இங்கு வந்த புதிதில் அவரது மாமானாருக்கு திதி கொடுக்கும் பொருட்டு வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார்.நானும் சேகரும் சென்றிருந்தோம்.மகளுக்காகவே புதிய கார் வாங்க வேண்டும் இன்னும் சற்று வசதியான புதிய வீட்டிற்கு மாற வேண்டும் என கூறி கொண்டிருந்தார் மணி...மணி விட்டு சென்றிருந்த அவர் வீட்டின் பொருட்களை விற்க மீத உடைமைகளை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப என அவருடைய காரையே நான் அடிக்கடி அங்கு எடுத்து கொண்டு போக வேண்டியிருந்த போது கலங்கியது மனசு.சாவு தான் அவரை ஊருக்கு அழைச்சுட்டு போயிருக்கு..இங்கே இருந்து இப்படி நடந்திருந்தா நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும் என அனுபவஸ்தர் ஒருவர் கூறியதை எப்படி எடுத்து கொள்வதென தெரியவில்லை.இங்கு இறந்திருந்தால் குறைந்த பட்சம் அலுவலக காப்பீடாக ஒரு கணிசமான தொகை அவரது குடும்பத்தினருக்கு கிடைத்திருக்கும்...துரதிர்ஷ்டம்.
உரிமையாளர் இன்றி அந்த காரை ஓட்டுவது தவறு...விபத்து ஏதும் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது என்பதால் வெளியே எங்கும் எடுத்து செல்ல கூடாது.இறப்பு சான்றிதழ் மற்றும் பெயர் மாற்ற ஒப்புதல் சான்றிதழ் இன்றி அந்த காரை வேறு யாருக்கும் விற்கவும் முடியாது.மணி அவர் கார் லோனை அடைக்கும் பொருட்டு பிற நண்பர்களிடம் வாங்கிய கடனை அந்த காரை விற்றே அடைக்க வேண்டிய சூழல்..சான்றிதழ்கள் வரும் வரை காரை உபயோகிக்காதிருந்தால் காயலான் கடைக்கு கூட போட முடியாதென்பதாலும் ஊருக்கு செல்லும் முன் மணி காரை எனக்கு விற்று விடும் உத்தேசத்தில் இருந்தார் என்பதாலும் வேறு வழியின்றி அந்த காரை இப்பொழுது நானே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்...
கடந்த 3 மாதங்களாக இந்திய உள் துறை அமைச்சகத்தின் உறுதி முத்திரையோடு கூடிய அவரது இறப்பு சான்றிதழுக்காக காத்திருக்கிறேன்.நான் சையதிடம் கார் பயிற்சிக்காக சேர்ந்த அன்று தானும் வருவதாக கூறி சேர்ந்த நண்பர் சேகர் தான் காலையில் போன் செய்தார்..பணம் கேட்ட உடண் லைசென்ஸ் கிடைத்து விட்டது போல என எண்ணி கொண்டேன்..அலுவலக நண்பர்களிடம் வேறு இசை கேடாக சொல்லி தொலைத்து விட்டேன்.பணம் கொடுக்கு முன்பாக கை குலுக்க சென்ற பொழுது தான் இந்த முறையும் தோல்வி என தெரிந்தது...அவர் டிரெயினரிடம் பணம் தர செல்வதற்குள் நான் திரும்ப ஓடி வந்து நண்பர்களிடம் அவசரமாக அவரிடம் ஒன்றும் கேட்டு விடாதீர்கள் என்று கூறி அமர்ந்து கொண்டேன்...டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதை விட கடினமானது இப்படி குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டுவது...
Thursday, December 5, 2013
Subscribe to:
Posts (Atom)