Tuesday, March 30, 2010

புத்தன் மிதக்கும் இசைவெளி - 2

நேற்றிரவு அவள் வீட்டிலிருந்து திரும்பும் வழியில் மீண்டுமொரு பறவையின் சடலம் பார்த்தேன்.எந்த கண்டத்திற்கு சொந்தமானதோ.குலைந்து கிடந்த உலர்ந்த சிறகுகள் அதீத பதட்டமடையச் செய்தது.சமீப நாட்களாகவே பறவையின் சடலங்கள் அடிக்கடி தென்படுகின்றன.சில நாட்களாக மீண்டும் மீண்டும் தோன்றுகிறது முடிவற்று ஆழியொன்றுள் மூழ்கும் ஒரு கொடுங்கனவு.கனவுக்கும் தட்டுப்படும் இப்பறவைகளின் சடலத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ? தெரியவில்லை.அறை திரும்பும் எண்ணத்தை கைவிட்டு ஒரு டாக்ஸியை நிறுத்தி ஏறி கொண்டேன்.எங்கே செல்ல வேண்டும் என்ற அவன் கேள்விக்கு எங்காவது..வெகு தூரமாய்... என்ற என் பதில் விநோதமாக இருந்திருக்க கூடும்.

இந்தியா?

ம்ம்...

ஆம்..நான் அவளை நேசிக்கிறேன்.இதை அவளிடம் சொன்ன பொழுது என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள்.அந்த குறுகுறு கண்களை எப்பொழுதும் என்னால் எதிர் கொள்ள முடிந்ததில்லை.வெகு குறும்பாக 'நேசிக்கிறேன்...இதை தமிழில் சொல்' என்றாள்.குற்ற உணர்வும் எங்கிருந்தோ வந்து தொலைத்த குருட்டு வெட்கமும் பிடுங்க நின்றேன்.ஏன் சொற்கள் இப்படி அபத்தமாகி விட்டன.தேய்ந்து போன அந்த சொற்றொடரின் இயலாமையை நானே முன்பு அவளுக்கு தந்திருந்தேன்.அவள் வெகு நிதானமாக என் பதட்டங்களை ரசிப்பவளாக இருந்தாள்.

"என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்திய குடும்பம் இருக்கிறது.ரொம்ப நல்லவர்கள்.நான் அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்."(இதே கதையை கடந்த 90 நாட்களில் பதிமூன்றாவது முறையாக சொல்லும் எட்டாவது பாகிஸ்தானி இவன்)

ம்ம்...

'முஸல்மான் ஹோ?'

ம்ஹீம்.

'ஓ..அவர்களும் உங்கள்...'.

ம்ம்...

'ஏதாவது பேசேன்...'

இழைந்து கொண்டிருந்த பாடலின் ஒலியை கொஞ்சம் துரிதப்படுத்தினேன்.சினுங்கிய குளிரூட்டியை சற்றே முடுக்கினேன்.நுஸ்ரத் ஃபத்தே அலி கான் உருகி கொண்டிருந்தார்.அவன் புன்னகைத்தான்.எதை பேசுவது?எப்படி பேசுவது? ஒவ்வொரு முறையும் நான் உன் எதிரியல்ல என நிரூபிக்க முயலும் துயரங்களை சகிக்க முடியவில்லை.தேவதச்சனின் கவிதையொன்று நினைவு வந்தது.

"இந்த சொல்..இந்த கனத்திற்கானது...உன் தத்துவங்களை இதில் திணிக்காதே"

பின் வெகு நிதானமாக என்னை நெருங்கினாள்.முத்தமிடுமுன் ''என்ன பர்ஃயூம் யூஸ் பண்ற''? என்ற அவள் கேள்விக்கு விடையளிக்கும் நிலையில் நான் இல்லை.இயல்பான தருணங்களிலிருந்தும் சட்டென எல்லை மீறும் என் சுபாவம் அவளை கவர்ந்திருந்தது.மோசமான தருணங்களிலும் சமநிலையில் இருக்கும் அவளை எனக்கு பிடித்திருந்தது.எதற்கு இந்த எல்லைகள்.உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.எல்லைகளால் பிரிக்கப்பட்ட எல்லாம் அதனதன் எல்லைக்குள் நிற்கின்றனவா.

"நவீனா,நீ வாழ லாயக்கற்றவன்.வாழ்க்கை விதவித ர்ங்ள் உடையது.அவைகளைத் தாண்டி நீ ஒரு ஐக்கியம் நாடுகையில் தான் எல்லாம் மறைந்து ஏக வெண்மை புலப்படும்."

அது சரி போல தான் படுகிறது.சரியில்லாதது போலவும்.அவளிடம் கேட்டால்...''உன்சரி என்தவறு என்சரி உன்தவறு எல்லாந்தப்பு தண்டா/தாண்டா
எல்லாஞ்சர்தான்டா..நீ போய் குடி ஜிகிர்தாண்டா " இப்படி பதில் வரலாம்.வேண்டாம்.

".....பின் ஏன் இந்த ராஜேஷ் உடன் மட்டும் இப்படி...சில மனிதர்களுடன் சில பரிமாற்றங்கள்...அவ்வளவே... ஆமா, இந்த பரிவு...வலிகளைப் புரிதல் என்பதெல்லாம்...விலங்குகள்..மரம் செடிகளிடம் மட்டும்தானா...எனக்கெல்லாம் இல்லையா...? உங்கள் பரிவையும் நட்பையும் பெற...நானும் மரம்,செடி,பூனையாகத்தான் இருக்கவேண்டுமா...அப்படினா நானும் உங்க Pet(புச்சி/பப்பி) மாறட்டுமா? "

வண்ணங்கள் மிதக்கும் சாலை கனவின் வரைபடமென பின்னால் விரைந்து கொண்டிருந்தது.இந்த நகரம் இரவில் ஏன் இவ்வளவு அழகாகி விடுகிறது.கடற்கரையில் இறங்கி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.அவளை இந்த கடற்கரையில் தான் முதலில் சந்தித்தேன்.அலைகளேயில்லாத கரையில் அவள் தனித்திருந்தாள்.ஒரு பரஸ்பர புன்னகை.முகத்தில் ஒட்டியிருந்த ஊரின் முகவரி போதுமானதாக இருந்தது இயல்பான ஒரு உரையாடலை தொடங்க.தத்துபித்து வசனங்கள் கூடிய ரசம் பூசிய சொற்களில் கொஞ்சமும் விருப்பமில்லை அவளுக்கு.பிரிந்து வந்த பிறகுதான் உறைத்தது.மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித முஸ்தீபுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கவில்லை.குறைந்தது பரஸ்பரம் பெயர்களை கூட பரிமாறி கொண்டிருக்கவில்லை.பிறகான சந்திப்புகள் திட்டமிட்டவையே எனினும் அதை தற்செயல் என்றே நாங்கள் நம்பிக்கொண்டோம்.

எதிரே நடந்து வந்த ஒரு அரபி இளைஞன் என்னை சற்றே நிறுத்தி லைட்டர் கேட்டான்.கொளுத்தி கொண்டு தன் போக்கில் நடையை கட்டியவனிடம் ஏனோ கேட்க தோன்றவில்லை.இரண்டடி எடுத்து வைத்ததும் மீண்டும் தோளை தொட்டு திரும்ப கொடுத்தான்.கண்சிமிட்டி சிரித்து சென்றான்.கன நேர குறும்பு.லேசான ஒரு புன்னகையில் ஏதோவென்று இளகியது.

இதுபோன்ற தருணங்களில் வாசிக்க நகுலன் தான் லாயக்கு.குத்துமதிப்பாக புரட்டினேன்.61 ம் பக்கத்தில் இப்படி இருந்தது.மூடிவிட்டேன்.இன்னும் கொஞ்சம் மது அருந்தலாம்...அவளை இன்னொரு புணர்ச்சிக்கு வற்புறுத்தலாம்...இருப்பின் அவஸ்தை வேறென்ன செய்ய... மா/ம/யக்கம/து வேண்டுவன இவை 'தான்' அறிதல் அர்த்தம் ஹம்பக்.ஓ..சீர்திருத்த சிகாமணிகளே...எழுத்தாளர்களே...எழவு வாயில் நுழையா பெயர் கொண்ட வஸ்தாதுகளே..வாருங்கள்.வாழ விரும்புகிறேன் நான்.

'பெயரற்ற உன் முகவரிக்கு இந்த இசை குறிப்புகளை எழுதியனுப்புகிறது ஆஷ்ட்ரேயில் கசியும் சிகரெட் துண்டு...'


''இந்த கடற்கரையில் மல்லாந்து படுத்து நிலா பார்க்க கொள்ளை அழகாக இருக்கிறது.''

"பாலை வெளியில் இன்னும் அழகாக இருக்கும்"

''ஓ..இப்பொழுது அருகில் நீ இருந்தால்...........''

"......................."

'ஆயிரம் முத்தங்களுடன்'

இன்று வந்த இக்கடிதத்தை திரும்ப வாசித்து கொண்டிருக்கிறேன்.இப்பொழுதெல்லாம் நிறைய கடிதங்கள் வருகின்றன.பெயரெற்ற முகவரியற்ற கடிதங்கள்.என் இந்த எழுத்தை
போல் பசப்பாத பூச்சுக்கள் இல்லாத...ஏனோ பதில் எழுத தோன்றுவதில்லை.யாருக்கும் ஒரு பதிலோ..புன்னகையோ..முத்தமோ போதுமானதாக இருக்க போவதில்லை.

''ஏதாவது சொல்..''

''ஏதாவது...''

''உனக்கு அலுத்து போய்ட்டேன் இல்ல''

''.............''


ஒவ்வொரு முறையும் ஏன் அன்பை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.அவளது சின்ன சின்ன கரிசனங்களில்,மெல்லிய அசைவுகளில் இந்த அன்பென்ற வன்முறையை என் மீது செலுத்தியபடியே இருப்பாள்.உன் முடிவற்ற அன்பின் சுமைகளால் எடை கூடி தவிக்கிறதென் இதயம்.கொஞ்சம் விட்டு விடேன் ப்ளீஸ்.தப்பி பிழைக்கட்டும் அந்த பட்டாம்பூச்சியென கெஞ்ச தொடங்குவேன்.சொற்கள் கூடி வரும் சில மாய கணங்களில் சிமிட்டி கொண்டு விரியும் அவள் பெரிய கண்களில் கிறங்கி தொலைவதை தவிர்க்க முடிந்ததில்லை.உன் திரவப்பரப்பிலொரு பூவென எனை மிதக்க அனுமதி.தீர்ந்து போவேன் நான்.வலியின்றி...நிழலின்றி...விம்மி விகசித்து எல்லையற்று விரியும் இத்தருணங்களை எப்படி சேமிக்கவென இறைஞ்சும் என்னை ஒரு பூனை குட்டியென அள்ளி தன் மடியில் இட்டு கொள்வாள்.இந்த இதம்,இந்த தலை கோதல் எப்பொழுதும் சாத்தியமா என்பேன்.நிச்சயம்,உனக்கு வழுக்கையே விழாதென நீ உத்தரவாதம் தருவாயெனில்' இதை அவள் சிரிக்காமல் சொல்வாள்.சொற்கள் கொண்டு அவள் திறக்கும் என் மனசீசாவிலிருந்து வெளியேறி, வதைபட்ட பூதமென வாய்பிளக்கும் என்னிடம் மிச்சமின்றி அவள் தன்னை ஒப்படைக்கும் கணங்கள்,தலையொருக்காத சிசுவை முதல் முறையாய் ஏந்தும் சிறுவனென மாற்றிவிடும் என்னை.

அன்புள்ள இவளே...

வேறென்ன சொல்ல?

'இது தரப்படுவதாக இல்லாததால்
பெறப்படுவதாகவும் இல்லை...ஆமென்!'

Saturday, March 20, 2010

ரெஜியின் பூனை...


புசுபுசுவென வெள்ளை நிறத்தில் சோகமாக உலவும் அந்த பூனையை, இதற்கு முன் இங்கு பார்த்ததில்லை.எங்கிருந்தது இது.எப்படி வந்தது இங்கு.யாருக்கும் தெரியவில்லை.இந்த விடுதியை சுற்றி நிறைய பூனைகள் இருக்கின்றன.பூனைகளிடம் உள்ள நல்ல குணம் நாய்களை போல் அவை ஒரு புதிய நபரிடம் சட்டென விரோதம் கொள்வதில்லை.எனினும் சக பூனைகளோடு இந்த புசுபுசு நட்பு கொள்ளவில்லை.பிற பூனைகளை போல் விடுதியாளர்கள் வீசும் மீத உணவுகளுக்கு போட்டியிடுவதில்லை.ஒரு கௌரவமான மனிதரால் வளர்க்கப்பட்ட பூனையாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டேன்.எனக்கு பூனைகளை பிடிக்காது.எனினும் இப்பூனை என்னை போலவே தனித்து விடப்பட்டிருப்பதாக தோன்றியது.பூனைகளின் உலகம் கேலி செய்யப்படுகிறது.பூனைகளை சுலபமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.புரிந்து கொள்ள முடியாதவை எப்பொழுதும் கேலிக்குள்ளாகின்றன.அல்லது கடுமையாக ஒதுக்கப்படுகின்றன.

நேற்றிரவு பெய்த மழையில் தொப்பலாக நனைந்து விட்டது புசுபுசு.குளிரில் வெடவெடத்து ஒண்ட இடமின்றி என் அறைவாசலில் படுத்து கிடந்தது.அதன் கண்கள் பசியில் மிகவும் சோர்ந்திருந்தது.மிருதுவான நனைந்த அதன் ரோமங்களை வாஞ்சையோடு வருடி விட முனைந்தேன்.சட்டென தலை தூக்கி தொடாதே என்றது.பூனைகளின் சுபாவம் அது.அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.நாய்களை போல் பூனைகளை சில ரொட்டி துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது.பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை.கைகளை இழுத்து கொண்டேன்.அறையிலிருந்த கொஞ்சம் பிஸ்கெட்டுகளை எடுத்து வந்து கொடுத்ததும் அமைதியாக வாங்கி கொண்டது.கடுமையான பசியிலும் நளினமாகவே உண்ணும் புசுபுசுவை பார்க்க பரிதாபமாக இருந்தது.ஒரு புதிய நபரிடம் சட்டென உரையாடலை தொடங்குவதில் உள்ள அபத்தங்களில் மௌனமாக இருந்தேன்.மேலும் பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல.அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன.பூனைகளின் மொழி கவிதையால் ஆனது

விரும்பினால் என் அறையில் இன்றிரவு ஓய்வெடுத்து கொள் எனக் கூறி உள்ளே சென்று விட்டேன்.மிகுந்த தயக்கங்களுக்கு பின் அது என் அறை வந்தது.என் சுழல் நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டது.கேள்விகளால் வழியும் என் பார்வையை தவிர்த்து மூலையில் கிடந்த கிதாரை ஏக்கமாக பார்க்க தொடங்கியது.வெளியே மழை அடர்ந்து கொண்டேயிருந்தது.கண்ணாடி சன்னலில் மின்னல் கோடுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறைக்குள் ஒரு மெழுகு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.கிதாரை எடுத்து மீட்ட தொடங்கினேன்.'என் இனிய பொன் நிலாவே' என மெலிதாக பாடியபடி வாசித்து கொண்டிருந்தேன்.அறையின் கூரை மேல் சடசடத்த மழையொலியின் தாளம் விவரிக்க இயலாத கிளர்வுகளை தந்தது. 'பன்னீரை தூவும் மழை' என நான் உருகி கொண்டிருந்தேன்.அருந்தியிருந்த மதுவும் மழைக்குளிரும் ஒரு வித மயக்க நிலையை தந்துவிட்டிருந்தது.புசுபுசுவும் இப்பாடலில் தன் வசமிழந்திருக்க வேண்டும்.அதன் மெல்லிய விசும்பலே என் நினைவை மீட்டது.கிதாரை மூலையில் சாய்த்து விட்டு புசுபுசுவையே பார்த்து கொண்டிருந்தேன்.மன ஓட்டங்களை வாசிக்க தெரிந்திருக்கிறது புசுபுசு.கண்களை துடைத்தபடி,ரெஜி நன்றாக பாடுவான்.அவன் பியானோ வாசித்தால் நாளெல்லாம் கேட்கலாம் என தொடங்கியது.நான் கோப்பையிலிருந்த மீத மதுவை அருந்தியபடி கட்டிலில் சரிந்து கேட்க ஆரம்பித்தேன்.

புசுபுசு எனக்கு மிருதுவை நினைவு படுத்தியது.நான் மெல்ல மெல்ல ரெஜியாக மாறி கொண்டிருந்தேன்.மிருதுவை கிராமத்தில் உள்ள தாமரை குளத்தில் தான் முதலில் சந்தித்தேன்.என்னை போலவே இருண்ட குளக்கரை படிக்கட்டுகளில் தனித்திருந்தாள்.இரவில் நட்சத்திரங்கள் மிதக்கும் அக்குளத்தை நாங்கள் இமைக்காமல் பார்த்திருப்போம்.சொற்களின் பொருளின்மையை உணர்ந்திருந்தோம்.எங்கள் சம்பாஷனை புன்னகைகளால் ஆனது.நாங்கள் குளத்தில் மிதக்கும் நட்சத்திரங்களை விழுங்க முயன்று தோற்று போகும் மீன்களை ரசித்திருந்தோம்.மிருது சிலசமயம் தன்னை மறந்து பாடுவாள்.

நாடோடி நிலவே
எங்கே உன் கூடு
யாரை தேடி திரிகின்றாய்
அறிவாயோ நிலவே
அவன் பெரும் கள்வன்
நீயில்லா நேரம் வருகின்றான்...


நான்கு படித்துறைகளும் அவள் பாடலில் லயித்திருக்கும்.சத்தமெழுப்பாமல் நீர்க்கோழிகளும் தவளைகளும் கூடி ரசித்திருக்கும்.உய் உய் என சுழலும் காற்று அவள் கூந்தலையும் ஆடைகளையும் களைத்து விளையாடும்.ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த அன்றைய இரவில்,அவள் படித்துறையில் அமர்ந்து விரல்களால் நீரை அலைந்தபடி இருந்தாள்.காயும் நிலவொளியில் எங்கிருந்தோ வந்த மீன் கொத்தி ஒன்று நின்ற இடத்தில் சிறகடித்து சட்டென இறங்கி ஒரு மீனை கவ்வி பறந்தது.அவள் என்னிடம் திரும்பி நீயும் அந்த மீன் கொத்தி தான் என்றாள்.நாங்கள் குளத்தில் இறங்கி நீந்த தொடங்கினோம்.நிலவொளியில் மலர்ந்திருந்த தாமரைகளை நோக்கி சென்றோம்.ஆழம் அதிகமிருந்த அக்குளத்துள் அவள் மீனை போல் நீந்தி கொண்டிருந்தாள்.கனநேரமே எனினும் அக்கனவு வந்து போனது.

ஒரு பறவையை போல் மிருதுவாய் என் கைகளில் ஏந்தி கண் மூடி காத்திருக்கும் அவளை பார்த்து கொண்டேயிருக்கிறேன்.மழையில் நனைந்த குருவி போல் வெடவெடத்து கொண்டிருக்கிறாள்.சிலிர்த்து சிலிர்த்து அடங்கும் அவள் பின் கழுத்து பூனை ரோமங்களை வருடியபடி மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்.

'நீயொரு தொட்டாற்சினுங்கி'

மீண்டும் சினுங்க தொடங்கியவள் முஷ்டி மடக்கி வலிக்காமல் என் மார்பில் குத்துகிறாள். 'தொட்டாற்சினுங்கி உன்னை காதலிக்குமா? அது உனக்கு முத்தம் கொடுக்குமா ? சொல்லடா மானங்கெட்டவனே' என புரியாத ஒரு மொழியில் வசை பாடி துரத்துகிறாள்.அவளை மேலும் சீண்டி செந்தமிழில் வையடி என் மறத்தமிழச்சி என்றபடி வெற்றிலை காட்டுக்குள் ஓடுகிறேன்

கண்ணாமூச்சி ஆடி களைத்து நிற்பவளை பின்னால் வந்து கட்டியணைக்கிறேன்.பொய் கோபத்தில் என்னை உதறியபடி 'சீ..சீ வெட்கங்கெட்டவனே...சண்டாளா...கன்னியொருத்தி தன்னந்தனியே சிக்கி கொண்டால் அவளிடம் நீ காட்டும் கண்ணியம் இதுதானா.தொடாதே..தூரச்செல்' என என்னை கோபிக்கும் கணத்தில் உறைக்கிறது.ஏன் எல்லாம் கறுப்பு வெள்ளையாக தெரிகிறது எனக்கு.அவள் நின்ற இடத்திலிருந்து சர்ப்பம் ஒன்று நெளிந்து காற்றில் மறைகிறது.பச்சை கொடிகள் எல்லாம் சாம்பல் நிற சர்ப்பங்களாக நெளிகின்றன.வெற்றிலை கொடிகள்,மண்,மேகம்,வானம் எதிலும் நிறமில்லை.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்கிறேன்.இப்பொழுது மிதந்து அசையும் இரு கறுப்பு வெள்ளை உதடுகளை தவிர வேறு உருவங்களே புலப்படவில்லை.யாவும் சாம்பல் மயம்.நிறக்குருடா? இல்லை முழுக்குருடா? என்னை என்னால் காண முடியவில்லை.அவசரமாக உடலை தடவிப்பார்த்து கொள்கிறேன்.இருக்கிறது.புலப்படவில்லை.

சாம்பல் வெளியில் மிதக்கும் இரு கறுப்பு வெள்ளை உதடுகள்.உதடுகளே இப்பொழுது என் திசைமானி.இவ்வுதடுகளும் மறைந்து விடுமுன் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்.இது சாம்பல் காடு.மரண குழி.நான் அவள் உதடுகளை நெருங்குகிறேன்.மெல்ல புன்னகைத்து போக்கு காட்டி மிதந்தோடும் உதடுகளை வெறி கொண்டவனாய் துரத்த தொடங்குகிறேன்.சாம்பல் குவியலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மூச்சு திணறலோடு புலப்படாத கொடி மரங்களில் மோதி உருண்டெழுந்து வண்ணத்து பூச்சியாய் பறந்தோடும் உதடுகளின் பின்னே நான்...

சட்டென விழித்து கொண்டேன்.இல்லை.இது தாமரை குளம்.இதோ என்னருகே நீந்துகிறாள் மிருதுளா.மிருது..மிருது..அவளை தாவி அணைத்தேன்.சினுங்கியபடி என்னை தள்ளி விடுகிறாள்.இதோ தாமரையின் நிறத்தில் அதே கறுப்பு வெள்ளை உதடுகள்.மூர்க்கம்.மகா மூர்க்கம்.அவளை கொடியென பற்றி படர்ந்தேன்.நாங்கள் சூன்ய வெளியின் ஒரு பின்னமானோம்.நீர் சர்ப்பம் கூடும் நெடுங்கடல் வெளியானது அப்பெருங்குளம்.சுயம் மனம் கர்வம் சர்வ நாசம்.துவண்டு இறுகும் தாவரமானோம்.எங்கோ மிதந்த மேகங்கள் திரண்டு பொழி பொழியென தொடங்கியது பேய் மழை.ஒரு கணம் வெளியே சிதறும் சிறு அலை.அது ஒருபோதும் குளமில்லை.தாமரை கொடிகள் எங்களை பிண்ண தொடங்கியது.நாங்கள் அக்குளத்தின் ஒரே மீனானோம்.மெல்ல ஒரு மீளா வெளிக்குள் மூழ்கி போனோம்.


சுழல் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருக்கும் புசுபுசுவை மெல்ல வருடி கொடுத்தேன்.புசுபுசுவுக்கு ரெஜி இல்லாத உலகம் எவ்வளவு பொருளற்றது.மழையில் நின்று நனையத் தொடங்கினேன்.நன்றி : மார்ச்-2010 அகநாழிகை.

Friday, March 19, 2010

சில பயணங்கள்...சில அனுபவங்கள்...

பள்ளி நாட்களிலிருந்தே பயணங்களின் மீது ஒவ்வாமை தான்.தவிர்க்க முடியாத சூழல் தவிர எங்கு செல்வதானாலும் என் இரு சக்கர வாகனத்தில் தான் செல்வது.பத்தாம் வகுப்பு வரை ஹெர்குலிஸ் சைக்கிள்(அதற்கு டாடா குஜிலி என பெயர் வைத்திருந்தேன்).பிறகு ஒரு டி.வி.எஸ் சேம்ப்.கல்லூரி நாட்களில் ஹோண்டா பேஷன்.வேலையில் சேர்ந்த பிறகு வட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல நேர்ந்ததால் இந்த ஒன் மேன் ஆர்மியிலிருந்து சோசலிஸ சிறைக்குள் மீண்டும் சிக்க வேண்டியதாகி விட்டது.

உலகிலேயே மனித உடலை துச்சமாக மதிக்கும் ஒரே தேசம் நம் தேசமாக தான் இருக்குமோ என நினைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது நம் போக்குவரத்து துறைகளும் சாலைகளும்.பேரூந்து என்றால் முழங்கால் இடிக்கும் இருக்கை.(கதிர் போன்ற ஆறடி ஆஜானுபாகுக்களுக்கு இந்த அவஸ்தை புரியும்).போதாக்குறைக்கு மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று நான்கு பேராக பிதுக்கி கொண்டு அமர்வது.பக்கத்தில் அமர்ந்திருப்பவன் குறித்த எந்த லஜ்ஜையுமின்றி எட்டி எட்டி ஜன்னல் வழியாக பான்பராக்,வெற்றிலை என்று குதப்பி துப்புவது.இதைவிட கொடுமை இடித்து கொண்டு நிற்கும் சாக்கில் இடுக்கில் கைவிட்டு சல்லாபம் செய்வது.

இதில் பெண்களை நோண்டுவது ஒரு வகையினர் என்றால் ஆண்களை நோண்டுபவர்களும் இருக்கிறார்கள்.வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வாகனங்களில் இப்படி வதை பட்டதுண்டு.ஒருமுறை சோலாப்பூரிலிருந்து பரலி செல்லும் வழியில் எசகு பிசகாக இப்படி ஒருத்தன் அருகில் அமர்ந்து விட்டான்.அதுவோ 200 கிலோமீட்டர் தூர பயணம்.அடிக்கடி பேரூந்துகள் கிடையாது அந்த ஊருக்கு.இரவு வேறு.ரொம்ப நல்லவனாக பேசி கொண்டு வந்தவன் தூங்க ஆரம்பித்த பிறகு நோண்ட ஆரம்பித்து விட்டான்.அடுத்தவனுக்கு கர சேவை செய்து விடுவதில் அப்படி என்ன ஆனந்தமோ இவர்களுக்கு.அழாத குறையாக உனக்கு என்ன தாண்டா வேனும் என்றேன்.போர் அடிக்குதே என்றான்.பாவிப்பயல்.


பஸ்ஸில் இப்படியான லோலாயி என்றால் ரயில் பயணங்கள் இன்னும் விஷேசமானவை.முதல் காதல் முதல் முத்தம் போல முதல் பயணங்களும் சுவாரஸ்யமானவை தான்.முதன் முதலாக சென்ற நீண்ட தூர ரயில் பயணம் சென்னையிலிருந்து கோரமண்டலில் ஒரிஸா சென்றது தான்.கட்டக் ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு ரயில் செல்லும் என தெரியவில்லை.கம்பார்ட்மெண்டிலிருந்த ஒரு தமிழரோடு பேசிய படி வந்தேன்.அவருக்கும் கட்டக் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.ஒரு ஒரிஸா இளைஞன் எங்களை பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தான்.பேசிக் கொண்டு வந்த நண்பர் வடநாட்டான்களை ஏதேதோ காரணங்களுக்கு ஏகத்துக்கும் விளாசி கொண்டு வந்தார்.அந்த இளைஞன் வேறு எங்களை அடிக்கடி திரும்பி பார்த்ததால் இவனுக்கு என்ன வேனும்னு தெர்லயே.நாதாறிப்பய நம்மளயே பாக்குறேனே என வேறு சாடை சொன்னார்.பிறகு வழியிலேயே இறங்கி விட்டார்.அவர் இறங்கிய பிறகு அழகாக தமிழில் பேச தொடங்கினான் அவன்.அசந்து விட்டேன்.அவனும் கட்டக்கில் தான் இறங்கினான்.சென்னையில் மென்பொருள் துறையில் இரண்டு வருடங்களாக பணி செய்வதாக கூறினான்.பொறுமையாக ரயில் நிலையம் விட்டு வந்து நான் செல்ல வேண்டிய ஊரின் பேரூந்தை காட்டி விட்டு தான் சென்றான்.அப்பொழுது ஹிந்தி எழுதவோ பேசவோ தெரியாது.


ஹிந்தி தெரியாமல் தனியே வட மாநிலங்களில் பயணம் செய்வது ஒரு அலாதியான அனுபவம்.ஊர் பெயர் ஆங்கிலத்தில் இருக்காது.படித்தும் பட்டிக்காட்டானாக இந்த பஸ் எங்க போவுது எனக்கேட்க கொடுமைகாயக இருக்கும்.சிரித்து கொண்டே மூச்சுக்கு முன்னூறு தரம் சாலா மதராஸி என்று திட்டுவார்கள்.எல்லாம் தார் பூசி அழித்த புரட்சியின் பலன்.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமென பணி நிமித்தம் அங்கே அலைய நேரும் பொழுதுதான் எல்லாம் புரியும்.ரயிலில் வசதியாக முதல் வகுப்பில் பயணிப்பதில் சிக்கல்கள் இருப்பதில்லை.இரண்டாம் வகுப்பு கழிவறைகளில் மலம் கழிப்பது போன்ற துர்பாக்கியம் வேறொன்றுமில்லை.தண்ணீர் ஊற்றி கழுவ டப்பா ஒன்றும் இருக்காது.அடிக்கடி பயணம் செய்பவர்கள் தெளிவாக சோப்பு சீப்பு டப்பா சகிதம் வந்து விடுவார்கள்.எனது முதல் பயணத்தில் இந்த டப்பா இல்லாத பிரச்சினையால் கக்கூஸ் போகக் கூடாதென ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீரையும் தேனீரையும் மட்டுமே குடித்து பயணித்தேன்.பிறகான நாட்களில் முதல்வேளையாக இரண்டு லிட்டர் பாட்டில் ஒன்று வாங்கி கொள்வது.மறக்காமல் பர்ஸில் ஒரு பிளேடு வைத்து கொள்வது.விடிந்ததோ இல்லையோ பாட்டிலை இரண்டாக அறுத்து டப்பாவாக்கி விடுவது.இப்படி எப்பொழுதும் பிளேடோடு மிக இயல்பாக பயணித்த நாட்கள் இப்பொழுது சிரிப்பை வரவழைக்கிறது.


குளிரூட்டப்பட்ட வாகனங்களில் நெடுந்தூரம் செல்வதென்றாலே எனக்கு அடிவயிறு கலக்கும்.அடிக்கடி மூத்திரம் வரும்.அராஜகமாக எங்கேயும் நிறுத்தாமல் வேறு போய் கொண்டிருப்பார்கள்.அப்படியே நிறுத்தினாலும் இன்னொரு தொந்தரவு எனக்கு.சுற்றிலும் கூட்டமாக ஆட்கள் இருந்தால் சிறுநீர் சொட்டு கூட வராது(எனக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட விசித்திர பிரச்சினைகளெல்லாம் வருகிறதா என்ற சந்தேகத்தை கதிர் சமீபத்தில் தான் தீர்த்து வைத்தார்).எவ்வளவு முக்கினாலும் இரக்கமேயில்லாமல் 'ம்ஹீம் வரமாட்டேன் போ' என அழிச்சாட்டியம் செய்யும்.சினிமா கொட்டாய்,பொது/பேரூந்து கழிப்பிடம் இங்கேயெல்லாம் படாத பாடு தான்.நமக்கே இப்படியென்றால் இந்த பெண்கள் பாடெல்லாம் எப்படியோ எனத் தோன்றும்.ஆனாலும் உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம் உள்ளவர்கள் நம் மக்கள் தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.காரணம் வகை தொகையில்லாமல் கோயில்களில் கூடும் கூட்டம் தான்.பொறுமை சகிப்பு தன்மை போன்ற வஸ்துக்களை வளர்த்து கொள்ளவாவது வாழ்வில் ஒரு முறை திருப்பதி சென்று வர வேண்டும் என நண்பர்களிடம் கூறுவேன்.குடும்பத்தோடு திருப்பதிக்கு பயணம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மாரியாத்தாளுக்கு தீமிதிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் வந்தால் தயங்காமல் இரண்டாவதையே தேர்வு செய்வேன்.அவ்வளவு கொடுமையாக இருந்தது அந்த பயணம்.மாட்டை பட்டியில் அடைப்பது போல் ஒரு இரவு முழுக்க கூண்டில் அடைத்து இம்சை செய்தார்கள்.பிறகு தான் பைசா கொடுத்து பெருமாளை சட்டுனா ஷேவிக்கும் டெக்னிக்கெல்லாம் நண்பர்கள் கூறினார்கள்.போங்கடா நீங்களும் உங்க பெருமாளும் என அத்தோடு முழுக்கு போட்டு விட்டேன் கோயில்களுக்கு.


மிகவும் சராசரி மனிதர்களான நமக்கே பயணங்களில் இவ்வளவு தொந்தரவு.திருநங்கைகளை பற்றி யோசித்திருக்கிறோமா? சௌதி கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன்னர் கதிர் தொலைபேசினார்.விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் திருநங்கைகளின் தாலி அறுக்கும் சடங்கு நடக்கப்போகிறதென்று.என் நண்பன் தஷ்னாவை அழைத்து கொண்டு பைக்கில் கிளம்பி விட்டேன்.கூவாகத்தில் கதிர் எங்களுக்காக காத்திருந்தார்.
கூவாகம் ஒரு சின்ன கிராமம்.இங்கே இருக்கும் ஒரு சிறிய கோவிலில் தான் இந்த சடங்கு வருடந்தோறும் நிகழ்கிறது.தெம்பாக முட்ட முட்ட குடித்து விட்டு உள்ளே நுழைந்தால் போதையெல்லாம் தெளிந்து விட்டது.இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து கூடியிருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தியது.

திருநங்கைகள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை(எளியவர்களின் மீதான பரிதாபமும் ஒருவகையில் வன்முறையே என நினைக்கிறேன்)அங்கீகாரத்தை கூடயில்லை.உரிமைகளை மட்டுமே.வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்பதை அங்கே சென்ற பொழுது முழுமையாக உணர முடிந்தது.நாங்களும் மனுஷங்க தாண்டா என்ற குமுறலை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.ஜே ஜே என்று எங்கெங்கும் கூட்டம்.வயல்வெளிகள் சூழ்ந்த அக்கிராமத்தில் முளைத்திருந்த குட்டி குட்டி பனியார கடைகள்.தள்ளு வண்டிகள்.நான் பார்த்து பிரமித்த ஒரே திருவிழா அது தான்.ஆங்காங்கே அழகி போட்டிகள்.ரெக்கார்ட் டேன்ஸ் என களை கட்டியிருந்தது.விடிய விடிய சாரி சாரியாக மக்கள் வருவதும் போவதும்.நேர்த்தி கடனுக்கு தாலி கட்டி கொள்ள வரும் சராசரி கிராம குடியானவர்களுமென அற்புதமான நிகழ்வு அது.அங்கேயும் குறியை கையில் பிடித்தபடி உராய்வுக்கு அலையும் கிழங்கள் சில்வாண்டுகள் இல்லாமல் இல்லை.திருநங்கைகளை சீண்டுவது.ஊசிகளால் குத்துவது என மன வியாதியஸ்தர்கள் இல்லாமல் இல்லை.அலைந்து அலைந்து ஓய்ந்து போய் நானும் கதிரும் நண்பர்களும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம்.எங்கிருந்தோ ஒரு திருநங்கை சரக்கு பாட்டிலோடு ஓடி வந்து எங்களை விரட்டினார்.கதிர் தான் என்ன ஏதென்று விசாரித்தார்.ஆங்காரமும்,அழுகையுமான குரலில் ''நாங்க ஏதோ விதிய நொந்து வரோம்,எங்கள ஏண்டா இம்சை பண்றீங்க,ஊசியால குத்துறீங்க,எங்களுக்கென்ன எரும தோலா,வலிக்குதுல்ல..உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு இப்படி ஆயிருந்தா தாண்டா தெரியும் என பொத்தாம் பொதுவாக வெடித்து விட்டு போனார்.கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவியது எங்களிடையே.

பயணங்கள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொரு தெருமுனை சிறு கல்லும் சொல்ல காத்திருக்கிறது.தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை.