Thursday, November 26, 2009

புத்தன் மிதக்கும் இசைவெளி...

என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்.பேச யாருமற்ற பின்னிரவுகளில் அம்மரத்தோடு பேசத் தொடங்கியிருந்தேன்.திக்கி திக்கித் தான் பேச வரும் எனக்கு தேவ மொழி.அம்மரத்திற்கு என்னையும் என் திக்கு மொழியும் மிகவும் பிடித்து போனது.என் மோசமான ஜோக்குகளுக்கும் கூட அம்மரம் குலுங்கி குலுங்கி சிரித்தது.

ஏங்கி விரவும் என் நேசத்தின் ஆக்டோபஸ் விரல்கள் கானும் பொருண்மைகளை கபளீகரம் செய்கிறது.ராத்திரியின் ரணங்களை,என் கேவல்களை பகிர்ந்து கொள்ள தோழியற்ற இப்பாலை நிலத்தில் அம்மரத்தின் ஸ்நேகம் ஆசுவாசமளித்தது.மெல்ல என் நட்பின் ஸ்திரத்தை மரத்திடம் நிறுவிக் கொண்டேன்.அவ்வப்போது வெளியை துழாவும் அதன் விரல்களை முத்தமிடுவேன்.வெட்கத்தில் பூரிக்குமது.

பார்க்க சொரசொரப்பாய்,கடினமாய் தடித்திருக்கும் அதன் தோலுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கும் உயிர் வெள்ளத்தை உணரத் தொடங்கினேன்.நிகழின் கொடுங்கனவுகள் சருகைப் போல் என்னை புரட்டும் பொழுதெல்லாம் அம்மரத்தடிக்கு சென்று விடுவேன்.தாய்மையோடு என் தலைகோதுமது.

இப்பரந்த பிரபஞ்சத்தில் தன் மூதாதையர் வசித்த அநாதி காலங்களையும்,நிலவெளிகளையும்,கானகங்களையும் குறித்த தீரா கதைகளை மிக உவப்போடு கூறுமது.ஓரிரவில் தூர தேசமொன்றில் வசிக்கும் தன் காதலன் குறித்து நாணத்தோடு கூறியது.பறவைகள் மூலம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்றது.

விதையாய் ஒரு பறவையின் வயிற்றில் தான் பறந்தலைந்த பொழுதையும்,மண்ணில் விழுந்து உயிர் தரித்த நிகழ்வையும்,இங்கு நடப்பட்ட நாளையும்,இவ்வெப்ப பிரதேசத்தில் தான் வேர் கொள்ளும் வரை நீரூற்றி காத்த அரபிக்கிழவனையும் வாஞ்சையோடு நினைவு கூர்ந்தது.

காலம்,இடம்,திசை,வடிவம் என தீர்மானிக்கும் பேரிறையின் கருணையை நன்றியோடு பாடியது.நான் என் மனித சுபாவத்தோடு நின்ற இடத்திலேயே நிற்கிறாயே, அலுப்பாக இல்லையா? தனிமையை எப்படி எதிர்கொள்கிறாய்? எனக்கேட்டேன்.

முட்டாளே,உலகில் யாரும் தனியில்லை.நீயும் நானும் ஒன்று தான்.உனக்கு முடி உதிர்கிறது,எனக்கு இலை உதிர்கிறது.அவ்வளவுதான் என கூறி சிரித்தது.

"அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீயும் புத்தனாகலாம்.புத்தன் உன்னைப்போல் புலம்புவதில்லை" என்றது.

"நீ மரமானதற்கும்,நான் மனிதனானதற்கும் தேவை என்ன?" என்றேன் அது அடக்க மாட்டாமல் சிரித்தது.பிறகு,

"சிருஷ்டி" என்றது.

புரியவில்லை என்றேன்.

"நீ மறதியில் இருக்கிறாய்,நினைவு கொள்ளும் தருணமொன்றில் நீயும் என்னைப் போல் சிரிப்பாய்" என்றது.அதன் பூடக பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.புரியாத போதும்.உறக்கம் அழைக்கும் வரை மரத்தோடு பேசி சிரிக்கும் என்னை பைத்தியம் என்றனர் நண்பர்கள்.அதை மரத்திடமே கூறி சிரித்தேன்.

"மனிதர்களை நேசம் கொள்,மனிதன் மட்டுமே புத்தனாகலாம்,பிரபஞ்சம் புத்தர்களுக்காக காத்திருக்கிறது" என்றது மரம்.

"ஏன் மனிதன் புத்தனாக வேண்டும்?" என்றேன்.

"புத்தன் பிரபஞ்சத்தின் கண்ணாடி.பிரபஞ்சம் புத்தனின் கண்ணாடி.ஆனால் அதில் இடவல மயக்கங்கள் இருக்காது.

யாருமற்ற உன் அறைக்குள்
யாரை பார்க்கிறதுன்
கண்ணாடி?

யோசி...யோசி..." என்றது.

இப்படியாக இந்த ஆறு மாதங்களில் நான் அம்மரத்தோடு பேசாத இரவுகளே இல்லை.

அன்று அலுவலகம் செல்லும் முன்,வழக்கம் போல மரத்திடம் கையசைத்தேன்.நேரவிருக்கும் அசம்பாவிதம் அறியாமல்.குழப்பமாக கையசைத்தான் விடுதியை பராமரிக்கும் ஜசிம்,என் மரத்தடியில் நின்று கொண்டு.மாலை திரும்பி வரும் பொழுது என் மரத்தின் கிளைகள் துண்டாடப்பட்டு ஒரு மூலையில் அடுக்கப்பட்டிருந்தது.என் கால்கள் பலமிழந்து விட்டன.கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

"அய்யோ..யார்? யாருன்னை..? என்று கதறலாக குழறினேன்.

தன் சோர்ந்த விரல்களால் என் விழி துடைத்தது கிளை இலைகள்.கனன்று உக்கிரமேறிய என் கண்ணெதிரே குறுக்கும் நெடுக்குமாக கோடாரியோடு அலைந்து கொண்டிருந்தான் ஜசீம்.மரக்கிளைகளை வெட்ட அவனுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.அவனை வெட்ட எனக்கு வேறு காரணங்கள் தேவைப்படவில்லை.காட்டுமிராண்டி போல் அவன் மீது பாய்ந்தேன்.பாகல்..பாகல் என அலறியபடி ஓடியவனை துரத்தி துரத்தி நையப்புடைத்தேன்.

அவன் மொட்டையடித்திருந்த என் மரத்தடியில் விழுந்து சில்லு மூக்குடைந்து கோரமாக காட்சியளித்தான்.கிளைகளை இழந்து துயரத்தில் நின்றிருந்த என் மரத்திடமிருந்து பிசிரான தொனியில் வந்தது அந்த அசரீரீ.

"வாழும் எவ்வுயிர்க்கும் உயிர் பொது.வலி பொது..விடு".

விட்டுவிட்டேன்.கழிப்பறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு அழுது தீர்த்தேன்.மீண்டும் என்னை தனிமைக்கு தின்ன கொடுத்தேன்.மௌனமாய் நின்ற மரத்தை காண சகிக்காமல் மரம் இருந்த திசையையே தவிர்த்தேன்.

ஆயிற்று சில நாட்கள்.இரவு பூராணாய் குறுகுறுத்த ஒரு தருணத்தில் காற்றில் மிதந்து வந்தது அந்த குரல்.அது என் மரத்தின் குரல்.ஓடிச் சென்று பார்த்தேன்.இயற்கையெனும் பெருமுலைக்காரி கருணையோடு சுரக்கும் பச்சை தத்துவம்.ஈரத்தின் துளிர்ப்பு.கொத்து கொத்தாய் பசும் இலைகள் துளிர்த்திருந்தன.கண்கள் ஈரம் கோர்த்துக் கொள்ள என் மரத்தை இறுகத் தழுவிக் கொண்டேன்.சொற்கள் கரைந்து சாரமாக மனசுக்குள் ஓடியது மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்று. ஆம்,கவிதைகள் சொற்களற்றவை.

Sunday, November 22, 2009

பிறை மூக்குத்திக்காரிக்கு தந்த முத்தங்களும் சில கொலைகளும்...

கறுப்பு சிறகணிந்து தேவதைகள் பறக்கும் இவ்வானத்தில் மேகங்களே இல்லை.சொட்ட சொட்ட நனைந்து நிற்கும் என் தாய்மொழியான ஜிப்பரிஷ் யாருக்கும் புரிவதில்லை.எனை தினம் கூடும் ராட்சஷி இன்று பிறை மூக்குத்தி அணிந்திருந்தாள்.

'
தருணத்தின் தருணி
மோன தர்சினி
...' **

என இவளைத்தான் வருணித்தானோ அவன்.இழுத்தணைத்து எத்தனை முத்தமிட்டும் அவள் கன்னம் சிவக்காததில் உலர்ந்து திரும்பி கொண்டிருந்தேன்.வழியில் 'பறவைகள் எங்கே சென்று மரிக்கின்றன' என்ற கவிதையொன்று காலில் இடறியது. அதன் பழுப்பு நிற இறகிலொன்றை பிடுங்கி வெளியில் எழுதினேன்.சவம்..தவம்...சூன்யம்.

அறை திரும்பி சோர்ந்து அமர்கிறேன்.படபடக்கின்றன என் டைரியின் நிர்வாண பக்கங்கள்.ஒவ்வொரு முறை பிரிக்கும் பொழுதும் எழுதப்பட்ட சில பக்கங்களை கிழித்தெறிகிறேன்.துருத்தி நிற்கும் இச்சொற்களை சகிக்க முடிவதில்லை.குளிப்பாட்டி,உடைமாற்றி,சீவி,சிங்காரித்து யார் மெச்ச இந்த ஆட்டமெல்லாம்.ஊற்றுக்கண் உடையும் வரை கொப்பளிப்பது சேறும் சகதியும் தான்.இதை மேடையேற்றுவானேன்?

பக்கங்களை போல் நினைவுகளையும் கிழித்தெறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணி பேனாவின் கொப்பியை உருவுகிறேன்.உறை விட்டெழும் வாளென அமைதியாகின்றன தாள்கள்.நிச்சயம் நிகழப்போவது கொலை தான்...

இதுவரை முன்னூற்றி இருபத்தியிரண்டு சொற்கள் எழுதி அடித்த பிறகும் கிடைக்கவில்லை ஒரு சொல்.எழுதப்படும் சொல்லுக்கும் அடிக்கப்படும் சொல்லுக்கும் நடுவிலிருந்து நழுவி நழுவிச் செல்கிறது சொல்ல நினைக்கும் சொல்.

சொற்கள் சொற்களாக சேர்ந்து என் மேசையை அடைத்து கொண்டிருக்கும் புத்தகங்கள் மெல்ல புன்னகைக்கின்றன.எத்தனை சொற்களை தின்றுமிழ்கிறான் புனைவாளன்.கடைத்தெரு செல்லுமுன் லேசாய் புடவை தலைப்பை சரி செய்து கொள்ளும் யுவதியென சில சொற்கள்.திட்டு திட்டாய் உதட்டு சாயம் பூசிய விடலையாய் சில சொற்கள்.அலங்கார தளுக்கிகளாய் சில சொற்கள்.நான் வாசித்த புத்தகங்கள்...எனை வாசித்த புத்தகங்கள்...அய்யோஓஓஓஒ... யாரேனும் எனை இந்த சொற்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.

பூட்டி விஷ வாயு செலுத்தப்பட்ட அறைக்குள்ளிருந்து வெளிப்படும் கூக்குரலாய் புத்தகங்களிலிருந்து கேட்க தொடங்குகின்றன சப்தங்கள்.எல்லா புத்தகங்களையும் கொட்டி கவிழ்த்து சிறைப்பட்ட சொற்களை விடுவிக்கிறேன்.வண்ணத்து பூச்சிகளென அவை சிறகடிக்கின்றன.சில முத்தமிடுகின்றன.முதிரா கூட்டு புழுக்கள் சில என் மேலூர்ந்து துவாரங்களுள் புக எத்தனிக்கின்றன.சடசடவென வௌவாலாய் ஈஷியபடி எனைக் கடிக்க தொடங்கும் சில சொற்களை துவம்சம் செய்ய தொடங்குகிறேன்.எழுத்துக்களாய் சிதைந்து அவை மோதி விழும் சுவரில் வழிகின்றது பல வண்ண நிற குருதி.

யூமாவின் ஓவியத்தில் அப்பி கொண்ட பூச்சியொன்று நகராமல் சண்டி செய்கிறது.அறை முழுவதும் வீசும் குருதி கவிச்சையில் குடல் புரட்டுகிறது.கருப்பு வெள்ளை கவிதையொன்றுக்குள் கிடத்தப்பட்ட பியானோ மீது நடந்து செல்லும் பூனை பிரேதா-மியாவ்...பிரேதன்-மியாவ் என என் மீது பாய்கிறது.துழாவலுக்கு அகப்பட்ட மாயாண்டி கொத்தனின் ரசமட்டத்தை அதன் நடுமண்டையில் பிரயோகிக்கிறேன்.அலறியபடி அது புத்தன் தியானிக்கும் குளத்தாழ நிலவில் குதித்து விட்டது.'சுசீலா சுசீலா'..'எனக்கு யாருமில்லை' என பிதற்றியபடி சுவர் மூலையில் ஒண்டுமொரு சொல்லை உணர்வு கொம்பால் நிமிண்டி பார்க்கிறது கரப்பானாய் உருமாறிய இன்னொரு சொல்.

கிழிந்த அட்டைகள் இறந்த புறாக்களென றெக்கை பரப்பி கிடக்கும் அறையில் சுழல்கிறது மின்விசிறி.வட்டம்..மாயவட்டம்...சடக்கென நிறுத்திவிடலாம்.என் வட்டம் விட்டு வெளியேறிவிடலாம்.குற்றுயிராய் கிடக்கும் சொற்களையெல்லாம் திரட்டி கோணியொன்றுள் அடைத்து கொண்டு நடக்கிறேன்.வெளி சலனமற்றிருக்கிறது.வழி தவறிய மானொன்று மருண்டு பார்க்கிறது.இவற்றை எரிப்பதா புதைப்பதா என்ற குழப்பத்தினூடே நான்.பின் தொடரும் என் சுவடுகளை பாலைக்காற்று மூடிக்கொண்டு வருகிறது.



**லா.ச.ரா


குறிப்பு:

புத்தகங்கள் வேண்டுமென கேட்டவுடன் திருவண்ணாமலை வரை அலைந்து வாங்கி அனுப்பிய கதிருக்கும்,சிரமம் பார்க்காமல் புத்தகங்களை திரட்டி தந்த பவா அவர்களுக்கும்,எடுத்து வந்த முபாரக்கிற்கும் மிக்க நன்றி நன்றி.