Showing posts with label குறிப்புகள்.... Show all posts
Showing posts with label குறிப்புகள்.... Show all posts

Monday, July 30, 2012

ரொம்ப நாளாயிட்டுது இந்த பக்கம் வந்து...


வாங்கி மாதங்களாகியும் பிரிக்கப்படாமல் கிடந்த விஷ்னுபுரத்தை ஓமனில் ஏதேனும் ஒரு உலர் போதில் வாசிக்க கூடலாம் என தூக்கி வந்தேன்.வந்தே 6 மாதங்களாகி விட்டது.சொச்ச மிச்ச ஒல்லிப்பிச்சான் பொஸ்தவங்கள் மீது அமர்ந்து அமுக்கி கொண்டு நோஞ்சானை மல்லுக்கு கூப்பிடும் பெயில்வானாய் வாசிக்க வெகு நாளாக எனை அழைத்து கொண்டிருந்தது. அதன் தோரணை தந்த தொந்தரவு பொறுக்காது,கர்வ நாஸக் என உருவி கட்டிலுக்கடியில் போடிருந்தேன் சில நாள்.இரவில் தலையனைக்கடியிலும் பகலில் கட்டிலிலுமாக கிடந்து உழன்று உழைத்து ஓடாய் தேய்ந்த அந்த பொஸ் தவத்தை ஒருவழியாக கையில் எடுத்தாகிவிட்டது.அதன் இடத்தை அசடன் பிடித்து கொண்டது இப்போது.அதற்கு எப்பொழுது விமோசனமோ...

''அதனால் தான் நான் சிந்திப்பதை காலையில் மலம் கழிக்கும் பொழுது வைத்து கொள்கிறேன்.எப்படியோ ஞானத்தை பழிவாங்கி விட்டதாக நினைப்பு''. என்று பீதாம்பரம் மாமா சொல்லும் இடத்தில், அடடா தப்பா நெனச்சுட்டோமோ என்றிருந்தது.பொதுவாக இதன் ஆசிரியரை வாசிக்க மனத்தடையை உருவாக்குவது நல்ல எழுத்தினூடாக அவர் புகுந்து வைக்கும் ஞான ஒப்பாரி தான்.இத்தாந்தண்டி பொக்கா வேறு அதை போட்டால் என்னதான் செய்வான் மனுசன்.கழுதய கட்டிகினு ஒதைக்கிதேன்னா,எண்ணி துணிஞ்சு வாங்கிட்டு  பொலம்பாத ராசாவென சொந்த சமாதானத்தில் முக்கி முக்கி 100 பக்கங்களை ஓட்டியாகி விட்டது.


பத்து பக்கங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பண்டாரம் சிப்லாக்கட்டையோடு வந்து வைக்கும் ஞானிக்கு மட்டுமே கோபுர உச்சி தெரியும்...ஞானிக்கு மட்டுமே சோனா மீட்டும் எட்டாம் சுரம் கேட்கும்...ஞானிக்கு மட்டுமே விஷ்னுபுரத்தில் உச்சா கக்கூஸ்லாம் போகும் அதிகாரம் உண்டு ப்ளா ப்ளா பிலாக்கணங்கள் தாண்டி சில காட்சி விஸ்தரிப்புகள் மிக அழகாக இருக்கின்றன.வீரன் என்ற யானை தேர்காலில் தும்பிக்கை மாட்டி படும் வேதனையும் பிறகு பைரவன் என்ற நரசிங்கரின் யானையால் கொல்லப்படுவதும்..என்னவோ போலிருக்கவே அத்தோடு மூடி வைத்தேன்.

திருவடி,பிங்கலன்,பீதாம்பரம் என பாத்திரங்கள் விஷ்னுபுர ராஜகோபுர தேனீக்களாய் வந்து கொண்டேயிருக்கின்றன.திருவிழாவிற்கு விஷ்னுபுரம் வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் அப்பத்திற்கு ஆணை கட்டி மாவிடிக்கும் லெவலுக்கு ஷங்கர்த்தனமான ஓர் ஜைஜாண்டிக் ஊர்.பயமுறுத்தும் தத்துவம் கித்துவம் ஏதும் வந்து இதுவரை மண்டையை பிராண்டவில்லை.அல்லது இது தான் தத்துவம் என்று கூட அறிய முடியாத அளவுக்கு தான் நம் வாசிப்பின் லட்சனமோ என்ற வகையில் மேலதிக தொந்தரவு ஏதுமின்றி பக்கங்கள் நகர்கின்றன.ஏனோ ஊடாக தமிழவனின் ஜி.கே எழுதிய மர்ம நாவலையும் வாசித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.யாரிடமிருந்து அதை நான் ஆட்டையை போட்டது.என்னிடமிருந்து அதை யார் ஆட்டையை போட்டது.அது சரி.இன்று உன்னுடையது.நாளை என்னுடையதாகிறது.மற்றொரு நாளும் என்னுடையதாகவே ஆக வேண்டும்.Never Mind.


ரெண்டையும் ஒட்டுக்கா வாசிச்சா என்னாகும்.சுருங்கை நகரில் பீதாம்பரம் மாமா திருவடியோடு தாம்பூலத்தை புளிச்சி கொண்டிருக்க,தேவேந்திரரும் பிங்கலனும் சோனா நதிக்கரையில் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அரையநாதர் அரைக்கண்ணால் சுருங்கையையும் விஷ்னுபுரத்தையும் வேவு பார்த்து கொண்டிருப்பார் என் கனவில்.ஆச்சா.சொச்சத்த வாசிப்போம்.பொறவு பேசிப்போம்.

Tuesday, September 13, 2011

சாட்சி...

நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.

கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது''
என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.

நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.