Friday, August 8, 2008

கவிதை குறித்த மழையொன்று...

நேற்றிரவு மழைபொழிந்த தாழங்காட்டில்
நட்சத்திரங்கள்
சேகரிப்போம் வாவென்கிறாய்...

பசிய இலையூறும் கூட்டுப்புழுக்களின்
றெக்கை நிறங்குறித்து கனவு பொறுத்தி
நகரும் நத்தையோடுகளில்
கால் பாவாது
முட்புதர்கள் தாண்டுகிறாய்
மின்னல்களை கசியவிட்டு...

திவலைகள் துளிர்த்திருக்கும்
சிலந்தி வலை இடைவெளியின்
வெர்னியர் துல்லியத்தில்
அதிசயிக்கிறாய்
வெகுதூரத்து கிளையொன்றில்
கு கூவெனும்
உன்னினத்திற்கு செவியிருத்தபடி...

நிரம்பி சுரக்கும்
குறுஞ்சுனையின் கெண்டையென
பின்னோடுகிறேன் நானும்
தாகத்திற்கு கொஞ்சம்
வெயிலருந்தியவனாய்...

2 comments:

said...

உங்கள் உணர்வுலகம் ஆழமானது. உங்கள் வெளிப்பாடுகளில் இருந்து நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

said...

நன்றி நர்மதா...