Thursday, November 26, 2009

புத்தன் மிதக்கும் இசைவெளி...

என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்.பேச யாருமற்ற பின்னிரவுகளில் அம்மரத்தோடு பேசத் தொடங்கியிருந்தேன்.திக்கி திக்கித் தான் பேச வரும் எனக்கு தேவ மொழி.அம்மரத்திற்கு என்னையும் என் திக்கு மொழியும் மிகவும் பிடித்து போனது.என் மோசமான ஜோக்குகளுக்கும் கூட அம்மரம் குலுங்கி குலுங்கி சிரித்தது.

ஏங்கி விரவும் என் நேசத்தின் ஆக்டோபஸ் விரல்கள் கானும் பொருண்மைகளை கபளீகரம் செய்கிறது.ராத்திரியின் ரணங்களை,என் கேவல்களை பகிர்ந்து கொள்ள தோழியற்ற இப்பாலை நிலத்தில் அம்மரத்தின் ஸ்நேகம் ஆசுவாசமளித்தது.மெல்ல என் நட்பின் ஸ்திரத்தை மரத்திடம் நிறுவிக் கொண்டேன்.அவ்வப்போது வெளியை துழாவும் அதன் விரல்களை முத்தமிடுவேன்.வெட்கத்தில் பூரிக்குமது.

பார்க்க சொரசொரப்பாய்,கடினமாய் தடித்திருக்கும் அதன் தோலுக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கும் உயிர் வெள்ளத்தை உணரத் தொடங்கினேன்.நிகழின் கொடுங்கனவுகள் சருகைப் போல் என்னை புரட்டும் பொழுதெல்லாம் அம்மரத்தடிக்கு சென்று விடுவேன்.தாய்மையோடு என் தலைகோதுமது.

இப்பரந்த பிரபஞ்சத்தில் தன் மூதாதையர் வசித்த அநாதி காலங்களையும்,நிலவெளிகளையும்,கானகங்களையும் குறித்த தீரா கதைகளை மிக உவப்போடு கூறுமது.ஓரிரவில் தூர தேசமொன்றில் வசிக்கும் தன் காதலன் குறித்து நாணத்தோடு கூறியது.பறவைகள் மூலம் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்றது.

விதையாய் ஒரு பறவையின் வயிற்றில் தான் பறந்தலைந்த பொழுதையும்,மண்ணில் விழுந்து உயிர் தரித்த நிகழ்வையும்,இங்கு நடப்பட்ட நாளையும்,இவ்வெப்ப பிரதேசத்தில் தான் வேர் கொள்ளும் வரை நீரூற்றி காத்த அரபிக்கிழவனையும் வாஞ்சையோடு நினைவு கூர்ந்தது.

காலம்,இடம்,திசை,வடிவம் என தீர்மானிக்கும் பேரிறையின் கருணையை நன்றியோடு பாடியது.நான் என் மனித சுபாவத்தோடு நின்ற இடத்திலேயே நிற்கிறாயே, அலுப்பாக இல்லையா? தனிமையை எப்படி எதிர்கொள்கிறாய்? எனக்கேட்டேன்.

முட்டாளே,உலகில் யாரும் தனியில்லை.நீயும் நானும் ஒன்று தான்.உனக்கு முடி உதிர்கிறது,எனக்கு இலை உதிர்கிறது.அவ்வளவுதான் என கூறி சிரித்தது.

"அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீயும் புத்தனாகலாம்.புத்தன் உன்னைப்போல் புலம்புவதில்லை" என்றது.

"நீ மரமானதற்கும்,நான் மனிதனானதற்கும் தேவை என்ன?" என்றேன் அது அடக்க மாட்டாமல் சிரித்தது.பிறகு,

"சிருஷ்டி" என்றது.

புரியவில்லை என்றேன்.

"நீ மறதியில் இருக்கிறாய்,நினைவு கொள்ளும் தருணமொன்றில் நீயும் என்னைப் போல் சிரிப்பாய்" என்றது.அதன் பூடக பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.புரியாத போதும்.உறக்கம் அழைக்கும் வரை மரத்தோடு பேசி சிரிக்கும் என்னை பைத்தியம் என்றனர் நண்பர்கள்.அதை மரத்திடமே கூறி சிரித்தேன்.

"மனிதர்களை நேசம் கொள்,மனிதன் மட்டுமே புத்தனாகலாம்,பிரபஞ்சம் புத்தர்களுக்காக காத்திருக்கிறது" என்றது மரம்.

"ஏன் மனிதன் புத்தனாக வேண்டும்?" என்றேன்.

"புத்தன் பிரபஞ்சத்தின் கண்ணாடி.பிரபஞ்சம் புத்தனின் கண்ணாடி.ஆனால் அதில் இடவல மயக்கங்கள் இருக்காது.

யாருமற்ற உன் அறைக்குள்
யாரை பார்க்கிறதுன்
கண்ணாடி?

யோசி...யோசி..." என்றது.

இப்படியாக இந்த ஆறு மாதங்களில் நான் அம்மரத்தோடு பேசாத இரவுகளே இல்லை.

அன்று அலுவலகம் செல்லும் முன்,வழக்கம் போல மரத்திடம் கையசைத்தேன்.நேரவிருக்கும் அசம்பாவிதம் அறியாமல்.குழப்பமாக கையசைத்தான் விடுதியை பராமரிக்கும் ஜசிம்,என் மரத்தடியில் நின்று கொண்டு.மாலை திரும்பி வரும் பொழுது என் மரத்தின் கிளைகள் துண்டாடப்பட்டு ஒரு மூலையில் அடுக்கப்பட்டிருந்தது.என் கால்கள் பலமிழந்து விட்டன.கண்கள் இருட்டி கொண்டு வந்தது.

"அய்யோ..யார்? யாருன்னை..? என்று கதறலாக குழறினேன்.

தன் சோர்ந்த விரல்களால் என் விழி துடைத்தது கிளை இலைகள்.கனன்று உக்கிரமேறிய என் கண்ணெதிரே குறுக்கும் நெடுக்குமாக கோடாரியோடு அலைந்து கொண்டிருந்தான் ஜசீம்.மரக்கிளைகளை வெட்ட அவனுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம்.அவனை வெட்ட எனக்கு வேறு காரணங்கள் தேவைப்படவில்லை.காட்டுமிராண்டி போல் அவன் மீது பாய்ந்தேன்.பாகல்..பாகல் என அலறியபடி ஓடியவனை துரத்தி துரத்தி நையப்புடைத்தேன்.

அவன் மொட்டையடித்திருந்த என் மரத்தடியில் விழுந்து சில்லு மூக்குடைந்து கோரமாக காட்சியளித்தான்.கிளைகளை இழந்து துயரத்தில் நின்றிருந்த என் மரத்திடமிருந்து பிசிரான தொனியில் வந்தது அந்த அசரீரீ.

"வாழும் எவ்வுயிர்க்கும் உயிர் பொது.வலி பொது..விடு".

விட்டுவிட்டேன்.கழிப்பறைக்குள் சென்று தாழிட்டு கொண்டு அழுது தீர்த்தேன்.மீண்டும் என்னை தனிமைக்கு தின்ன கொடுத்தேன்.மௌனமாய் நின்ற மரத்தை காண சகிக்காமல் மரம் இருந்த திசையையே தவிர்த்தேன்.

ஆயிற்று சில நாட்கள்.இரவு பூராணாய் குறுகுறுத்த ஒரு தருணத்தில் காற்றில் மிதந்து வந்தது அந்த குரல்.அது என் மரத்தின் குரல்.ஓடிச் சென்று பார்த்தேன்.இயற்கையெனும் பெருமுலைக்காரி கருணையோடு சுரக்கும் பச்சை தத்துவம்.ஈரத்தின் துளிர்ப்பு.கொத்து கொத்தாய் பசும் இலைகள் துளிர்த்திருந்தன.கண்கள் ஈரம் கோர்த்துக் கொள்ள என் மரத்தை இறுகத் தழுவிக் கொண்டேன்.சொற்கள் கரைந்து சாரமாக மனசுக்குள் ஓடியது மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்று. ஆம்,கவிதைகள் சொற்களற்றவை.

9 comments:

said...

வெகு அருமை.. :)))))

//என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்.பேச யாருமற்ற பின்னிரவுகளில் அம்மரத்தோடு பேசத் தொடங்கியிருந்தேன்.திக்கி திக்கித் தான் பேச வரும் எனக்கு தேவ மொழி.அம்மரத்திற்கு என்னையும் என் திக்கு மொழியும் மிகவும் பிடித்து போனது.என் மோசமான ஜோக்குகளுக்கும் கூட அம்மரம் குலுங்கி குலுங்கி சிரித்தது.//

கட்டிப்போட்ட வார்த்தைகள் நிறைய.. கொஞ்சம் நீங்கள் அறிய... :)) ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு வீட்டில் நடப்பட்டிருக்கிறேன். இப்படி தான் படித்தேன் முதலிரு வரிகளை...

said...

ரொம்ப பிடிச்சிருக்கு..
நண்பரே அருமையிலும் அருமையான பதிவு .

said...

wow wow

said...

வைரமுத்து அவர் வீட்டு வேப்பமரம் பற்றி எழுதி இருந்தது ஞாபகம் வருகிறது நண்பரே
நல்ல நடை அதோடு அழுத்தமும் கூட சுவாரஸ்யமும்
ரொம்ப ரசித்தேன்

said...

அற்புதமான படைப்பு தலைவரே..

said...

///என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்///
அருமையான வார்ப்பு.அப்படியொரு சூழ்நிலையில்தான் நானும்.
மிக அருமையான பதிவு ரௌத்ரன்!

said...

நன்றி ஸ்ரீமதி :))

வேறொரு வீடோ நாடோ வேர் பிடுங்கப்படும் வலி எல்லா மரங்களுக்கும் ஒன்று தானே...யோசித்தால் பிரமிப்பாகத் தான் இருக்கிறது..எப்படித்தான் வேறொரு வீட்டில் வசிக்க பழகுகிறார்கள் என்று :))

நன்றி நேசன்.தொடர்ந்து ஊக்க மூட்டுகிறது உங்கள் வருகையும் வாழ்த்தும் :))

வருகைக்கு நன்றி பாலா...ரொம்ப காலமாச்சு வைரமுத்து வாசிச்சு :)

வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர் :)

நன்றி இளவட்டம் :)

said...

///அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீயும் புத்தனாகலாம்////

True, Thanks.

said...

நன்றி செல்வநாயகி.