Saturday, February 6, 2010

நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராமன்


தி.ஜா,கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி,மௌனி,கரிச்சான் குஞ்சு என தொடங்கி தமிழின் சில முக்கிய இலக்கிய மாயாவிகளை உருவாக்கியதில் கும்பகோணத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.என் ஊரிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தொலைவே கும்பகோணம்.அவ்வூரின் மீது ஒரு ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.இவர்களின் வரிசையில் எம்.வி.வி என அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனும் இருக்கிறார் என நித்யகன்னி நாவலை திறக்கும் போது தான் தெரிந்தது.அவரை ஏதோ கன்னட எழுத்தாளர் என்று குழப்பி கொண்டிருந்திருக்கிறேன்.
வியாச முனியின் மகாபாரத பெருஞ்சுரங்கத்திலிருந்து நித்யகன்னி என்ற சிறு பாத்திரத்தை எடுத்து கொண்டு கன்னிமை என்ற பரப்புக்குள் நீந்தி எழுந்திருக்கிறார் ஆசிரியர்.யாரையும் போல் எனக்கும் மகாபாரதம் மிகுதியும் செவி வழி கதை தான்.சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த நாட்களில் அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து சில நாட்கள் பாரத வியாக்கியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது.கர்ண கொடூரமான ஒலி பெறுக்கி இம்சையையும் மீறி அந்த வியாக்கியானம் உள்ளே ஏறி கொண்டேயிருந்தது.இதுபோல் அவ்வப்போது கேட்க வாசிக்க நேரிடும் பாரத கதாபாத்திரங்களும்,பாத்திர சூழ்நிலைகளும்,அக கொந்தளிப்புகளும் பாரதத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிய வண்ணமேயிருக்கிறது.
இன்று வரை நவீன தத்துவங்கள் மற்றும் உளவியல் தீண்டியதும் தீண்டாததுமான பல்வேறு தளங்களை உணர்வு நிலைகளின் பல்வேறு அடுக்குகளை சிகரங்களை அநாயசமாக தீண்டியும் தாண்டியிருக்கும் இப்பெருங்கதையாடல் சமகாலம் வரை ஒரு சராசரி இந்தியனின் அன்றாட வாழ்வையும் போக்கையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது சுலபமாக தவிர்த்து விடக்கூடிய ஒன்றல்ல.மேலும் பாரத வாசிப்பு வெறுமனே கதையின்பத்திற்கானது மட்டும் அல்ல.உலக தத்துவங்களும் விஞ்ஞானமும் காலமெல்லாம் தேடி வரும் மனித இருப்பின் அர்த்தங்களை ஆராயும் ஆய்வு நூல் என்றும் இந்திய நவீன மனதை கட்டமைத்திருக்கும் தொன்ம நினைவின் சத்தும் சாரங்களும் நிரம்பியது என்றும் கூறப்படுகிறது.

கன்னிமை என்றால் என்ன? ஏன் அதன் மீதான கதையாடல்கள் இவ்வளவு நிகழ்ந்திருக்கிறது.வெட்டுதல்,ஒட்டுதல்,கிழித்தல்,தைத்தல் என சரித்திர தையல்காரனின் எந்திரத்தில் நசுங்காத பெண்ணுடல்கள் எத்தனை? புனிதம் என்பது ஏன் பெண்குறியின் நுன் திரையால் நெய்யப்பட்டிருக்கிறது? உலகையே ரட்சிக்க பிறந்தவன் என்பவனை கூட அவனது தாய் ஒரு கன்னி என்ற கதையாடல் மூலம் மட்டுமே நிறுவ முடிகிறது.மேரி எப்படி ஒரு சராசரி பெண்ணை போல் ஆடவனோடு கூடி குலவியொரு ரட்சகனை ஈன்றெடுக்க முடியும்.ரட்சகனை ஈன்று தருபவள் புனிதமானவளாக,ஆளப்படாதவளாக,களங்கப்படாதவளாக,கன்னி மேரியாக மட்டுமே இருக்க முடியும்.புனித ஆவியால் புணரப்பட்டே ரட்சகன் அவதரிக்க முடியும்.அவனை மட்டுமே நம்மால் சிலுவையிலும் அறைய முடியும்.இங்மார் பெர்க்மன் இயக்கிய Virgin Spring கன்னிமையை மையங்கொண்டு கடவுள் விசாரணையாக விரியும் ஒரு அற்புதமான திரைப்படம்.
இதன் உளவியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.கன்னிமையை அதன் மீதான புனித கற்பிதங்களை புராணங்களும் இதிகாசங்களும் ஒவ்வொரு விதமாய் ஸ்திரமாய் நிறுவியிருக்கிறது.இதில் பாரத பெருங்கதையாடலின் போக்கை ஆசிரியர் அவதானித்துள்ளார்.அதன் ஓட்டத்தில் நிரடும் சிடுக்கிலொன்றை தெரிவு செய்கிறார்.அவள் நித்யகன்னி.நித்யகன்னி என்றும் பதினாறாய் சிவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மார்கண்டேயன் போல் என்றென்றும் கன்னியாக இருக்க தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.அவளொரு ஆடவனை கூடலாம்.கரு தரிக்கலாம்.ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவள் கன்னியாகவே மாறி விடுவாள்.அவள்
ஒரு போதும் தன் சிசுவுக்கு முலை ஈன முடியாது.ஒரு போதும் அவள் தாய்மையை அடைய முடியாது.அவள் நிரந்தர-நித்ய கன்னி.எனில் இது வரமா ? சாபமா ?

குறிப்பு: நாவலை வாசிக்காதவர்கள் வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் மூன்று பத்திகளை தவிர்த்து நான்காம் பத்திக்கு தாவி விடவும்.

காலவ முனிவன் விசுவாமித்திரரின் மாணவன்.குருதட்சனையாக அவர் கேட்கும் ஒரு காது மட்டும் கறுப்பாக உள்ள 800 வெள்ளை குதிரைகளை யாசகம் பெற வேண்டி தர்ம ரூபி யயாதியிடம் செல்கிறான்.நித்யகன்னியான மாதவி அவன் நோக்கம் அறியாமலே அவன் மீது காதல் கொள்கிறாள்.குதிரைகளை யாசகம் தர முடியாத யயாதி காலவனிடம் தன் மகளை தர உறுதியளிக்கிறார்.இவளை கொண்டு உன் குதிரைகளை சம்பாதித்து கொள் எனக்கூறி விடுகிறார்.தான் தேடி வந்த நித்யகன்னி மாதவி என அறியாமலேயே காலவனும் மாதவி மீது காதல் கொண்டு விடுகிறான்.மூன்று மன்னர்களிடம் உள்ள 600 குதிரைகளை பெற வேண்டி அவளை அவர்களுக்கு மணம் செய்வித்து ஒரு குழந்தை பிறந்ததும் அவளை மீட்டு மணம் செய்து கொள்ளும் உத்தேசத்தோடு பயணம் செய்யும் காலவன் மற்றும் மாதவியின் உணர்வுகளை பகடையாக உருட்டியிருக்கிறார் ஆசிரியர்.
குதிரைகளை பெற வேண்டி அவள் மணம் செய்யும் மூன்று கணவர்களில் ஒருவன் சம்போக பிரியன்,மற்றொருவன் தத்துவ வியாக்கியானன்,மூன்றாமவன் மட்டுமே அவளை உள்ளும் புறமுமாக நேசிப்பவன்.உசீநரன் அழகின் உபாசகனாக இருக்கிறான்.நித்யகன்னியின் உடலே நித்ய சௌந்தர்யத்தில் இருக்கிறது.மனோ ரீதியில் அவள் சௌந்தர்யம் இழந்து கொண்டிருப்பவள் என்பதை அவன் மட்டுமே கண்டு கொள்கிறான்.தர்மம் பேனும் யயாதியை,காலவனை,விஸ்வாமித்திரரை என அறத்தின் தர்மத்தின் மனசாட்சியை உலுக்கும் நவீன மனமாக உசீநரன் உருக்கொள்கிறான்.பிறகு அவள் பொருட்டே அவன் கொலையும் செய்யப்படுகிறான்.

இதில் நித்யகன்னியான மாதவியின் நிலை என்ன? மனதில் ஒருவனை காதலனாக வரித்த பிறகும் மூன்று மன்னர்களை மணக்கும் அவள் மன நிலை என்ன? கன்னிமை மீண்டும் கிடைத்து விடும் என்றில்லாத நிலையில் அவளை பிற ஆடவனோடு மணம் செய்விக்கும் எண்ணம் காலவனுக்கோ,யயாதிக்கோ தோன்றுமா? அல்லது மன்னர்கள் தான் அவளை மணப்பார்களா? எனில் கன்னித்தன்மை என்பது வெறும் உடல் சம்மந்தப்பட்டதா? இதை ஒரு கட்டத்தில் மீத குதிரைகளுக்காக விஸ்வாமித்திரரே அவளை மணம் செது கொள்ளும் இடத்தில் ஆழமாக்குகிறார் ஆசிரியர்.மாதவி நீராடுகையில் ரிஷி குல பெண்கள் தெளிவாகவே அதை கூறி விடுகின்றனர்.மாதவிக்கு சித்த பிரமை ஏற்படும் நேரத்தில் வெளிப்படும் அவளது ஆழ் மன உரையாடல்கள் அல்லது உளறல்கள் மூலம் நம்மை உரசுகிறார் ஆசிரியர்.எது அறம்? எது தர்மம் ?

இந்நாவல் உருக்கொண்ட காலமும் சுணங்காத எழுத்தின் வீச்சும் கிளர்வை தந்தது.கன்னிமை குறித்த பிறிதொரு விசாரணையாக ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் இருக்கிறது.காதலித்த பெண் கண்ணெதிரே வேறு ஆடவர்களால் சூறையாடப் பட்ட பின்னர் அவ்வுடல் மீது தோன்றும் அசூயையை மையமாக கொண்டது அந்நாவல்.உடல் மீதான மனம் கொள்ளும் உரிமை அதன் மீதான அதிகாரம் விளைவான அரசியல் என்பதெல்லாம் சுலபமாக சிதைவு கொண்டு விடாது என்பதாலேயே நித்யகன்னி கிளாசிக்காக இருக்கிறது போலும்.இவருடைய பிரசித்தி பெற்ற மற்றொரு நாவல் காதுகள்.அதை தேடி வாசிக்கும் ஆவலை உருவாக்கியிருக்கிறது இந்நாவல்.
நாவல் முன் வைக்கும் கேள்விகள் நுட்பமானவை .நாட்பட்டு புரையோடிய முள்ளாய் இருந்து வலி தர வல்லவை.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூ

6 comments:

said...

நிறைவான இடுகை இது நண்பரே
இட்டு நிரப்பிக்கொள்ள பிடித்திருக்கிறது

said...

அருமையான பகிரல் ராஜேஷ்.

said...

மிக அருமையாக எழுதப்பட்ட இடுகை ராஜேஷ். நித்யகன்னி அவசியம் வாசிக்கவேண்டிய நாவல் என உணர்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

said...

நித்தியக்கன்னி படித்துவிட்டேன். அது ஒரு முக்கியமான நாவல். தொன்மத்தை மறுவாசிப்பு செய்யும் ஒரு பிரதி. உங்கள் வாசிப்பும் நன்றாக உள்ளது.

அறம், தர்மம் மற்றும் பெண்உடலின் கன்னிமை என்கிற 3 தளங்களில் விரியும் இந்த நாவலின் தளத்தை உங்கள் பார்வை சரியாகவே பிடித்துள்ளது.

நிறைய எழுதுங்கள்.

அன்புடன்
ஜமாலன்.

said...

நன்றி நேசன்...

நன்றி ராஜா சார்...

நன்றி சரவணன்..

வருகைக்கு மிக்க நன்றி ஜமாலன் சார்...

said...

எம்.வி. வெங்கட்ராம் – விக்கிபீடியா

***

ரௌத்ரனின் (பெயரை மாத்துங்க சார், பயமா இருக்கு!) பார்வை : ’நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராமன்

1 மறுமொழி

1.மஜீத் சொன்னது,
மே 20, 2011 இல் 12:45 மாலை

கொத்துக் கொத்தாக நெகிழ்வுகள்;

எம்‌வி‌வி அவர்களையே நேரில் பார்த்தாற்போல் உணர்வேற்படுத்தும் அற்புதமான பேட்டி.

எந்தவித போலித்தனமில்லாத, தனக்கிருக்கும் மரியாதையை advantageous ஆக எடுத்துக்கொள்ளாமல், தனது எழுத்தை, தான் எழுதிய தருணத்தில் இருந்த நிலையிலேயே, வகைப்படுத்தும் பெருந்தன்மை – இதுதான் ஒரு ஜாம்பவானின் அடையாளம்

இதைவிட, தன்னை அடையாளம் காட்டாது, நேர்காணல் தருபவரின் அடையாளத்தை முடிந்தவரை காட்ட முயற்சிக்கும் ரவி சுப்ரமணியன் அவர்களின் நேர்மையும் பாராட்டத்தக்கது.

அப்போது படிக்கவாய்க்காத என் போன்றோர்க்கு இந்த இடுகை தந்தது நிறையவே!

நன்றி ஆபிதீன் ஐயா, நன்றி!

மேலும்,
//புனிதம் என்பது ஏன் பெண்குறியின் நுன் திரையால் நெய்யப்பட்டிருக்கிறது? //
//உலகையே ரட்சிக்க பிறந்தவன் என்பவனை கூட அவனது தாய் ஒரு கன்னி என்ற கதையாடல் மூலம் மட்டுமே நிறுவ முடிகிறது//

இதெல்லாம் “ரௌத்திரம்” வந்தால்தானே வெளிவரும்?
அவர் பெயர் சரிதான்.

பதில்