Thursday, April 29, 2010

எழுத்தும் இயக்கமும்...


written & Directed by

கல்லூரி நாட்களில் டைரி தொடங்கி கையில் சிக்கும் காகிதங்களில் எல்லாம் இப்படி தான் கிறுக்கியிருப்பேன்.சினிமா தவிர்த்த ஒரு எதிர்காலத்தை கற்பனை கூட செய்ததில்லை.எப்பொழுதும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் தான்.அடிஷனல் குவாலிஃபிகேஷனாக இருக்கட்டும் என்று அவ்வப்போது வகுப்பில் பெஞ்சை தட்டி டியூன் போட்டு பாட்டும் எழுதுவேன்.தோழிகள் டேய் காலையில குளிக்கும் போது ஒரு பாட்ட ஹம் பண்ணிட்டு இருந்தேன்டா.அப்புறம் தான் அது உன் பாட்டுன்
னே ஞாபகம் வந்தது என உசுப்பேற்றும் பொழுது கொஞ்சம் கிளுகிளுப்பாக தான் இருக்கும்.ஆனால் பசங்க மட்டும் தெளிவு.மறந்து போய் கூட அருகில் வர மாட்டார்கள்.தப்பி தவறி எவனாவது சிக்கினால் ஒரே அமுக்காக அமுக்கி வசனம் சகிதம் திரைக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவேன்.தமிழ் சினிமா கனவுகளில் இருந்ததாலோ என்னவோ இன்று வரை எதார்த்தம் கிலோ எவ்ளோ தான்.எந்த கதை சொன்னாலும் மச்சி இந்த கதை ஏற்கெனவே அந்த படத்துல வந்துடிச்சிடா என கடுப்பேத்துவான்கள்.அதனால் கதை சொல்ல நம் இலக்கு எப்பொழுதும் தோழிகள் தான்.கடலைக்கு கடலையும் ஆச்சு.மேலும் என் தோழிகள் எல்லாம் எலக்கிய மற்றும் சினிமா செனரல் நாலேஜில் பெரிய முட்டை சைபர் வாங்குபவர்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் கவலைப்படாமல் அவிழ்த்து விடலாம்.எப்படி தான் இவ்வளவு சகிப்பு தன்மை இவர்களுக்கு உள்ளதோ.

கனவுகளாலான கல்லூரி நாட்கள் கனவை போலவே திடுமென முடிந்த நாளில் எதார்த்தம் பூதம் போல் கோர முகம் காட்டி நின்றது.எனினும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக நான் முயன்று கொண்டிருந்தேன்.நண்பர்கள் வேலைக்கு மனு போட்டு கொண்டிருந்த பொழுது,நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்தேன்.கே.ஏ குணசேகரனை ஒரு முறை பாண்டியில் சந்திக்க நேர்ந்தது.அவர் நாடகம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.(அழகி படம் பார்த்து தங்கர் பச்சான் மேல் ஒரு அபிப்ராயம் இருந்தது.)தங்கர் பச்சானிடம் சேர சிபாரிசு கேக்கலாமா என அனுகினேன்.'தம்பி,இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அதெல்லாம் உங்களுக்கு சுத்தப்படாது.ரொம்ப மோசமான ஃபீல்டு.எதிர்காலத்தை வீணா பணயம் வெக்காதீங்க என அறிவுரை கூறினார்.வேனுமின்னா நம்ம நாடகத்துல அப்பப்போ வந்து கலந்துக்குங்க என தொடர்பு எண்ணெல்லாம் கொடுத்து சென்றார்.அருமை தெரியாமல் அப்பொழுது விட்டு விட்டேன்.பிறகு நாசர் தொடங்கி சிலரும் இதே பதிலை கூறிய பொழுது சோர்வாக இருந்தது.
பொறியியல் விரும்பி படித்ததல்ல.ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்க்க சொல்லி வீட்டில் பிடித்த அடம் ஒன்றும் பலிக்கவில்லை.நாலு எரும வாங்கி வேனா தரேன்.நெதம் நாலு படி பால் கறக்கும்.சினிமா கினிமான்னு கெளம்புனா சோறு கெடைக்காது பாத்துக்க என தந்தைகுலம் கை விரித்து விட்டதால் வேறு வழியின்றி சேர்ந்ததுதான்.

விரும்பிய வாழ்வெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்ற யதார்த்த விதிக்கு மிக மோசமாக பலியான பின் வேலை தேடுதல்,அலைச்சல் என கனவுகள் எல்லாம் காலாவதியானது.உலக சினிமா,இலக்கியம் என கொஞ்சம் மனசை திருப்பிய பிறகு அப்படியொன்றும் இழக்க கூடாததை இழந்து விட வில்லை என்றும் தோன்றியது.தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சினிமா ஆசையோ அரசியலில் புகும் எண்ணமோ இருக்கிறது.முதலீடு இல்லாமல் குறுகிய காலத்தில் லாபம்/புகழை ஈட்டி தரும் வணிகமாக இவை தானே இருக்கின்றன.லட்சியம்,வெற்றி போன்ற மோஸ்தர்களை விட்டு விலகி வந்து விட்ட பிறகு, நம் வாரமலர்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் எவ்வளவு அபத்தமான ஒரு
மேடையை கவர்ச்சிகரமாக நமக்கு காட்டுகின்றன என்பதை உணர முடிகிறது.கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆக விரும்பிய நானாக இப்பொழுது இல்லை நான்.இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு ஆக வேண்டிய நானை பற்றிய எவ்வித கனவுகளும் இல்லை இப்பொழுது.நேதி நேதி என எதையும் நிராகரிக்க பழகிய பிறகு வாழ்வு இலகுவாகவும் சுலபமாகவும் தெரிகிறது.எல்லா அலைவுகளுக்கும் வலிகளுக்கும் பின்னால் இருப்பது என்ன? பிரபலமாகும் ஆசை என்பது அப்படியொன்றும் சுலபமாக விலக்கி செல்ல கூடிய ஒன்றல்ல.ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் தன்முனைப்பு எதை தேடி என உணர்வது சுவாரஸ்யமான அனுபவம்.ஒன்றை உண்டு மற்றொன்று வாழும் ஓலம்.எந்த உரிமையில் நான் என என்னை இங்கு முன் வைக்கிறேன் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.

பின்னர் இந்த சினிமா குறித்த அலட்டல்களிலிருந்து ஒரு சினிமாவே மீட்டெடுக்கவும் உதவியது.The Star maker என்றொரு படம்.சினிமாவில் நடிக்க ஆள் எடுப்பதாக கூறி ஊர் ஊராக சென்று சபலப்படுபவர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவனை பற்றிய மிக சுவாரஸ்யமான படம்.காலணா இன்றி இந்த சினிமாவை நம்பி பஸ் ஏறிய சொற்ப பிரபலங்களின் அடியொற்றி வாழ்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.இன்று இருக்கும் குறைந்த பட்ச சினிமா புரிதல்கள் எதுவுமின்றி ஒருவேளை சினிமாவுக்கு சென்றிருந்தால் என்ன விதமான படங்கள் செய்திருப்பேன் என்ற கற்பனை சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.இப்பொழுது எல்லாம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறன.விரும்பினால் ஒரு சில வருடங்களுக்குள்ளாக ஒரு படம் செய்து விட முடியும் தூரம் தான்.எனினும் தொலைந்து போன அந்த நானை தேடுவது இனி சிரமம்.திருமணம் முடிந்தால் கதம் கதம்.நண்பர் கதிர் மிஷ்கின் பற்றி சொன்ன போது விளையாட்டாக கூறினேன்.நீங்க படம் எடுத்தா நான் தான் வில்லன் என்று.

புத்தகங்களோடு திரு.பவா அவர்கள் அனுப்பியிருந்த பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுந்தகட்டில் பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி' சிறுகதை படமாக்கப்பட்டிருந்தது.கதை படித்தவர்களுக்கு மேலே உள்ள ஃபிளாஷ்பேக் ஏன் என புரிந்திருக்கும்.சினிமா என்ற மையத்தை சுற்றி வாழும் கனவுஜீவிகளின் கதை.படம் பார்த்து முடித்தவுடன் கதையையும் வாசித்தேன்.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதையை வாசித்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.படம் பார்க்காது இருந்திருந்தால் முதல் வாசிப்போடு எளிதாக கடந்திருக்க கூடிய ஒன்றாகவே பட்டது.எளிய கதை.அக்கதையின் முன்னும் பின்னும் நுண்ணுணர்வோடு நகர்ந்து கதையின் உயிரை ஸ்பஷ்டமாக 'பூ' வாக வெளி கொணர்ந்திருந்த இயக்குனர் சசியின் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.அந்த அனுபவத்திலேயே பா.மகேந்திராவின் கதைநேரத்தையும் அனுகினேன்.ஒரு கதை எப்படி படமாக்கப்படுகிறது மற்றும் திரைக்கதை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் அளிக்க கூடிய ஒன்று இந்த குறும்பட தொகுப்பு.பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி ' கதை எழுதப்பட்ட காலத்தில் உச்சத்திலிருந்த அமலா,நதியாவெல்லாம் படமாக்கப்பட்ட பொழுது சிம்ரனாகவும்,தேவயானியாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள்.நடப்பில் சிம்ரனும் தேவயானியும் ஃபீல்ட் அவுட் ஆகி விட்ட பிறகும் சினிமா மோகத்தில் பஸ் ஏறியவர்களும்,ஏறி கொண்டிருப்பவர்களும்,கனவுகளும்,ஏமாற்றங்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றன என்ற உண்மை சுள்ளென அறைகிறது.

ஜெயந்தனின் 'காயம்' என்ற கதையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.வாசிக்கலாம் என்றால் கைவசம் தொகுப்பு இல்லை.சுஜாதாவின் 'நிலம்' சுமாராக இருந்தது.சு.ரா வின் பிரசாதம் சிறுகதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.ஜீனியர் பாலையா அற்புதமாக நடித்திருக்கிறார்.மேல்பார்வை என்ற சு.ரா வின் சிறுகதை தொகுப்பு வீட்டில் கிடக்கிறது.கதைகள் இப்பொழுது மறந்தும் போய்விட்டது.சு.சமுத்திரத்தின் கதை 'காத்திருப்பு' அவரது மற்ற கதைகளை தேடும் ஆர்வத்தை தந்திருக்கிறது.திலகவதியின் ஒரு முக்கோண காதல் கதையும் நன்றாகவேயிருந்தது.பட்ஜெட் மற்றும் அதிகம் வசன வாய்ப்புள்ள கதையாகவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தோன்றியது.எல்லோருக்கும் அப்படி தோன்றும் என்பதில்லை.தற்பொழுது ஒரு தொகுதி மட்டுமே வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.பிறவற்றையும் பார்க்க வேண்டும்.நல்ல படைப்புகளை தேடி தேடி வெளியிடும் வம்சிக்கு நன்றி.

சு.ராவின் சன்னல் என்ற சிறுகதை வாசித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.மிகவும் பாதித்த அந்த கதையை படமாக்கி பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.கொஞ்சம் சவாலானதும் கூட.ஒரு பயிற்சியாக குறும்படமாக எடுக்க முயல வேண்டும்.மனோஜின் கச்சை என்ற சிறுகதை,ஜே.பி சாணக்யாவின் பெயர் மறந்து போன ஒரு கதை..இப்படி இந்த குறுந்தகடு பார்க்கும் முன்னாக படமாக்க தோன்றிய பல கதைகள் இப்பொழுது படம் செய்து பார்க்க ஆசையூட்டுகின்றன.பார்க்கலாம்.

இரண்டாம் முறையாக சிரமம் பார்க்காமல் புத்தகம் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி வைத்த திரு.பவா அவர்களுக்கும் கதிருக்கும் என் நன்றியும் அன்பும்.

9 comments:

said...

ரசித்து வாசித்தேன். மின்னஞ்சல் அனுப்புகிறேன் நண்பரே.

said...

பேசுவோம் ரௌத்ரன்

மீட்டெடுக்க முடியாத காலத்தின் மீதான நனவிலி போதை நிரவிக் கொள்வது புத்தகங்கள் சார்ந்த திரையின் மனிதர்கள் மூலம்தான்

கசியவும் களி கூறவுமான படங்கள் கலைஞனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது ஒரு காயத்தை போல அல்லது மர்ம பாகத்தின் ஈரம் போல

நல்ல பகிர்வு

said...

some thing says you are gonna go places .

all the best .

கனவு மெய்ப்படட்டும்

said...

நீங்க‌ளும் ஜித்தாவில் தான் இருக்கிறீர்க‌ளா?... ச‌ர‌வ‌ண‌ குமார் சார் சொன்னார்க‌ள்.. முத‌ல் முறையாக‌ உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ருகிறேன். நானும் ஜித்தாவில் உள்ள‌ ராபிக்யில் இருக்கிறேன். உங்க‌ள் க‌ன‌வுக‌ள் விரைவில் நிறைவேற‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்... முடிந்தால் உங்க‌ள் அலைபேசி எண்ணை கொடுங்க‌ள்..

ந‌ட்புட‌ன்
ஸ்டீப‌ன்

said...

நன்றி சரவணன்..பேசுவோம்.

//ஒரு காயத்தை போல அல்லது மர்ம பாகத்தின் ஈரம் போல //

தெய்வமே :))

நன்றி நேசன்.

நன்றி பத்மா :)

வருகைக்கு நன்றி ஸ்டீபன்...ஒருமுறை ஜித்தா வாங்க :)

said...

நல்ல பகிர்வு.

said...

நன்றி அக்பர்...

said...

யார் பின்னூட்டம் இட்டாலும், பின்தொடர்ந்து போய்ப் பார்த்துவிடுவது... இன்று உங்கள் பக்கத்திற்கு வந்து சேர்ந்தேன். சினிமா என்ற மாயமானைத் துரத்தும் ஒரு மிக நெருங்கிய நண்பர் எனக்கு உண்டு. கடைசியில் அவரும் இவ்விடத்தை வந்தடைவார் என்று நினைக்கிறேன். என்ன செய்வது..? பட்டுத்தான் தெளியும்போலும் இந்த மயக்கம்...:)))

said...

வருகைக்கு நன்றி தமிழ்நதி..

உங்கள் நண்பருக்கு அந்த மாயமான் வசப்பட என் வாழ்த்துகளை சொல்லுங்கள் :)

உங்கள் மாயக்குதிரை சிறுகதையை கூட குறும்படமாக எடுக்கலாம்.உங்கள் நண்பரை ஒரு பயிற்சியாக முயற்சிக்க சொல்லுங்கள்.