Friday, January 28, 2011

ஓரிரவில்...

உலகில் பாவங்கள் பெருகி மனிதர்கள் கயமையும் பேராசையும் கொண்டவர்களாக மாறிய பொழுது, இறைவன் 40 நாட்கள் பெருமழை பொழிவித்து உலகை அழித்தான்.பிறகு புதிய உலகை படைத்தான் என ஆதி வெள்ளப்பெருக்கு குறித்து வாசித்திருக்கிறேன்.அப்பொழுது நகைப்பாக இருந்தது.40 நாட்கள் அல்ல தொடர்ந்து 40 மணி நேரம் மழை பொழிந்தால் சௌதி என்ற நாடே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் என இப்பொழுது தோன்றுகிறது.

நேற்று காலை தொடங்கி இரண்டு மணி நேரம் பெய்த மழையில் ஜித்தா நகரமே ஸ்தம்பித்து போனது.மழையே இல்லாத தேசம் என்பதால் வடிகால்கள் குறித்து கிஞ்சித்தும் பிரக்ஞையற்ற சாலையமைப்பு கொண்ட நகரம் இது.அலுவலகத்திற்கு விடுப்பு விட என் நிறுவனர் ஒரு மணி நேரம் தாமதித்ததன் விளைவு நாள் முழுக்க அலுவலகத்திலேயே நாங்கள் அவதிப்பட நேர்ந்தது.

சாலையெங்கும் சுழித்தோடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் காகித கப்பல்களை போல் மிதந்து சென்ற காட்சியை நான் வேறெங்கும் கண்டதில்லை.கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி சாலை போக்குவரத்து சுத்தமாக ஸ்தம்பித்ததில் எங்களை அழைத்து செல்ல அனுப்பப்பட்ட வாகனங்கள் எங்கெங்கோ சிக்கி கொண்டதாக தகவல் வந்தது.

இணைய இணைப்பும் சட்டென துண்டித்து போன பிறகு நேரம் நத்தையைப் போல் நகர தொடங்கியது.இருந்த இரண்டு படங்களை அலுவலகத்தில் அமர்ந்து பார்த்து முடித்த பொழுது பசி பிராண்ட தொடங்கியது.ஒரு நாளைக்கான லாஹிரி கையிருப்பும் தீர்ந்து விட்டதில் ஒரு ஓசி சிகரெட்டின் உன்னதம் புரிந்தது.

மேலாளர்,கணக்காளர் பொறியாளர் எல்லாம் நேரம் செல்ல செல்ல மனிதர்களாக மாறி கொண்டிருந்தனர்.நாளையும் வெளியேற முடியாவிட்டால் நிலமை என்னாவது என்ற கவலை ஒருவருக்கு,ஒரு நாள் உறங்காவிட்டால் உடல் கெட்டு விடுமாம் இன்னொருவருக்கு,ஏதோ அசம்பாவிதம் நிகழ போகிறதென காலையிலேயே தோன்றியதாம் மற்றொருவருக்கு.மனிதன் எவ்வளவு பலவீனமான பிராணி என தோன்றியது.பசி,தலைவலி,சிகரெட்,தினமும் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரை என தனித்தனியாய் வெளியேறிய முனகல்கள் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

நேற்று முன் தினம் வேறொரு நகரத்தில் நிகழ்ந்த கட்டிட பணி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பங்களாதேஷ் பணியாளர்கள் நசுங்கி செத்திருந்தனர்.சௌதியில் இறக்கும் பணியாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.உடல் சொந்த நாட்டிற்கு செல்ல மாதக்கணக்காகிவிடும்.சௌதிகளை போன்ற சோம்பேறிகளை,மோடு முட்டிகளை வேறெங்கும் காண முடியாது.அவர்களது இற்று போன சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கூட.இதில் கள்ளத்தனமாக பணிபுரிந்தவர்களின் உடல் நிச்சயம் வீடு போய் சேராது.தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இல்லையென்றால் இறந்து போயிருக்க கூடும் என அவர்களது குடும்பத்தினர் எண்ணி கொள்ள வேண்டியது தான்.

மதிய உணவும் சரியாக உண்ணாததால் நான் அலுவலகத்தில் இருண்ட மூலையொன்றை தேர்ந்து நித்திரா தேவியை அணைத்து உறங்கி போனேன்.அதிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் எழுப்பி வெளியே அழைத்து சென்றனர்.எங்களை அழைத்து செல்ல ஒரு பெரிய லாரி வந்திருந்தது.ஏறி நின்று கொண்டோம்.லாரி நெடுஞ்சாலைக்கு வந்த பொழுது தலை சுற்ற தொடங்கி விட்டது.நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.எங்கள் லாரியை ஓட்டியவன் ஒரு சௌதி.எங்கள் கேம்பில் இரவு நேர செக்யூரிட்டி.அவனுக்கு லைசென்ஸ் வேறு இல்லை என்றார்கள்.சாலையில் கேட்பாரற்று நின்ற சில வாகனங்களை முட்டி தள்ளி கொண்டு காட்டுத்தனமாக ஓட்டி கொண்டிருந்தான்.ஆங்காங்கே போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடை மாற்றி கொண்டிருந்தனர்.

சாலையோர பிளாட்பார்ம்களில் சௌதி இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.சிலர் உற்சாகமாக குரலெழுப்பி கையசைத்தனர்.பூட்டி கிடந்த ஒரு ஷோரூமுக்குள் கதவை மெல்லமாக திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தான் ஒருவன்.ஆளில்லாத ஒரு காரிலிருந்து பாம் என ஹாரன் மட்டும் அலறி கொண்டிருந்தது ஒரு புறம்.உலகமே இடிந்து விழுந்தாலும் கடையை திறப்பேன் என ஒரு மல்லு சிகரெட் விநியோகித்து கொண்டிருந்தான் இன்னொருபுறம்.

எப்பொழுதோ பார்த்த ஒரு திரைப்படம்,ஒரு நகரத்தில் பாம் வைக்கப்பட்டிருக்கும்.நகர மக்கள் யாவரும் நகரத்தை காலி செய்து கொண்டு போய் விடுவார்கள்.அந்நகரில் ஒரு மனநோய் விடுதி இருக்கும்.நகரமே புலம் பெயர்ந்த பிறகு பைத்தியக்காரர்கள் விடுதியிலிருந்து தப்பித்து நகரத்திற்குள் வந்து விடுவார்கள்.ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும்,ஒருவன் சலூன் கடைக்குள் நுழைந்து எல்லோருக்கும் இலவசமாக முடிவெட்டி விட்டு காசும் கொடுத்து அனுப்புவான்.ஒருவன் நான் தான் நகர பிரஜை என்பான்,ஒரு அழகி வாடிக்கையாளர்களை கூப்பிடுவாள்.இன்னொருத்தி ராணி போல் சிங்காரித்து கொண்டிருபாள்.ஆளுக்கொரு வேஷம்.பைத்தியக்காரர்களை காப்பாற்ற ஒரு ரானுவ வீரன் மட்டும் அந்நகருக்குள் வருவான்...

உலகம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வெடிகுண்டை எல்லா நொடிகளிலும் தன் இடுப்பில் ஒளித்து வைத்தேயிருக்கிறது.பைத்தியக்காரர்கள் எப்பொழுதும் அந்த வெடிகுண்டு குறித்த பிரக்ஞையற்றே சிரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.பிடித்த வேஷத்தை புனைந்து வெளுத்து வாங்குகின்றனர்.ஏதேனுமொரு ரானுவ வீரன் இந்த பைத்தியங்களை காப்பாற்ற நகரங்களுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கிறான்.பிலிப்பினோ,பாகிஸ்தானி,பங்களாதேசி,இந்தியன் அதில் சில தமிழன் என லாரியில் நாங்கள் நின்றோம்.எல்லாம் எதற்கு என ஒரு கணம் இருப்பு கணத்தது.திடுமென ஒற்றை கண் தஜாலாகி வெளி சிரித்தது.சற்றே தலையுயர்த்தி கிழக்கை வெறித்தேன்.சிறகை விரித்து எந்த தேவ குமாரனும் இறங்காத வானம் கறுப்பாகவே இருந்தது.
எங்கள் வாகனம் நகரத்தை கடந்து சாலையில் விரைந்தது.

6 comments:

said...

இயற்கை இப்படி தான். எதிர்ப்பார்ப்புக்கு அப்பாற்பட்டது!

said...

எந்த மனநிலையில் இதை எழுதினீர்களோ அதை அப்படியே உணர முடிந்தது ராஜேஷ். மிக நல்ல பகிர்வு. இங்கே நானிருக்கும் பாலைவனப்பகுதியிலும் இதே நிலைமைதான் எனினும் நகரம் ஸ்தம்பித்துப்போகவில்லை. ஜெத்தா நகரின் வெள்ளம் பற்றி நண்பர் அக்பரோடு இன்று பேசிக்கொண்டிருந்தேன்.

தொடர்ந்த 40 மணிநேர மழை இந்த நகரத்தை, நாட்டை முடிவுக்குகொண்டுவரும் என்பது கொஞ்சம் விசித்திரமாக இருந்தாலும் சத்தியமான உண்மை அதுதானே நண்பா.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் எழுத்தை வாசிப்பதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு கஷ்டமான சூழல் பற்றி எழுதப்பட்டிருப்பினும் உங்கள் எழுத்து எனக்கு மகிழ்ச்சியே. தொடர்ந்து எழுதலாமே நண்பா.

said...

ரௌத்ரன் இப்படி எழுத இன்னொரு மழையும் வரட்டும், ஆமீன்!

said...

Nicely written... One Suggession, Can u please increae the font size..?

My wishes..!

said...

இது போன்ற மழை நாட்கள் பலவற்றை மும்பையில் அனுபவித்திருக்கிறேன். குவைத்திலும் இரண்டுமுறை இதே போன்ற மழை பெய்தது. ஆனால் இந்த முறை ஏனோ மழை மிகவும் குறைவாகவே பெய்தது.

said...

நீண்ட நாட்களாயிற்று ரௌத்ரன் :)