Saturday, August 11, 2012

நாஸ்டால்ஜியா...

''ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...''

வசந்தி படத்தில் வரும் இப்பாடலை முதன் முதலாக ரேடியோவில் கேட்ட பொழுது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருந்திருக்கலாம்.ஒருமுறையே கேட்டதாக நினைவு.ஆனால் அந்த வரிகளும் மென்மையான மெட்டும் அப்படியே ஆழ புதைந்து போயுள்ளன போலும்.எதேச்சையாக சற்றுமுன் அப்பாடலை கேட்க நேர்ந்தது.தொலைக்காட்சிகளில் கூட இப்பாடலை நான் இதுவரை கண்டதில்லை.

அந்நாட்களில் என் தெருவில் வாசிம் வீட்டில் மட்டும் தான் நிரந்தரமாக தொலைக்காட்சி இருந்தது.வாசிமின் அத்தா சிங்கப்பூரில் சொந்த கடை வைத்திருந்தார்.என் வீட்டில் அப்பா விடுமுறையில் வரும் நாட்களில் தொலைக்காட்சி மற்றும் கேசட் ப்ளேயர் எடுத்து வருவார்.அவ்வப்போது வாசலில் வைத்து ஏதேனும் படங்கள் போடுவார்.தெருவே அமர்ந்து பார்க்கும்.போகும் பொழுது விற்று விட்டு போய் விடுவார்.படிப்பு கெட்டு விடும் என்ற நொள்ளை சாக்கு.இல்லாவிட்டாலும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள் வாசலிலேயே நின்று நச்சரித்து வாங்கி சென்று விடுவார்கள்.

கோவில் திருவிழா,அல்லது ஏதேனும் கல்யாண விஷேஷம் போன்ற நாட்களில் வாடகைக்கு டிவி எடுத்து தெருவில் விடிய விடிய படம் போடுவது அந்நாட்களில் பொதுவான வழக்கம்.டிவி இல்லாத நாட்களில் ரேடியோ தான் ஆறுதல்.என் வீட்டில் ஒரு சிறிய BPL ரேடியோ இருந்தது.இன்னமும் இருக்கிறது.ஏதோ செண்டிமெண்ட்,அம்மா இன்னமும் அதை பத்திரமாக பாதுகாக்கிறார்.காரைக்கால் பண்பலைவரிசை,விவித் பாரதி என்று ஏதேதோ ஓடிக்கொண்டிருக்கும்.மாமா என் வாக்மேனில் ஆம்பிளிஃபயரை இணைத்து இரண்டு மண்சட்டிகளில் ஸ்பீக்கரை கவிழ்த்து வைத்திருப்பார்.பாடல்கள் பதிவு செய்து வந்து போட்டு விடுவார்.'மாடி வீட்டு மைனர் இவரு தானுங்க..மீச மேல மண்ணிருக்கு பாருங்க'..'அடியே மனம் நில்லுனா நிக்காதடி..கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி'..கடலோர கவிதைகள்..இன்னும் ஏதேதோ துள்ளிசை பாடல்கள்..மற்றும் சோகப்பாடல்கள்.

மாமா டி.ராஜேந்தரின் மிக தீவிர விசிறி..''ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்''..''சமைச்சு வெச்ச மீனு கொழம்ப நீயும் சலிக்காம தின்ன போதே''..போன்ற பாடல்களை சலிக்காமல் மீண்டும் மீண்டும் ரீவைண்டடித்து கடுப்பேற்றுவார்.சில சமயம் வீட்டிலேயே வைத்து தச்சு வேலைகள் நடக்கும் பொழுது ''என் தங்கை கல்யாணி''..''கரகாட்டக்காரன்'' போன்ற படங்களின் ஒலிச்சித்திரம் போட்டு விடுவார்.தாத்தாவுக்கு வேலை நேரத்தில் நொய் நொய் என சத்தம் வந்தால் பிடிக்காது.அதனால் மாமா வரும் முன் Fuse Carrier ஐ பிடுங்கி எங்காவது ஒளிய வைத்து விடுவார்.அதை துப்பறிந்து எடுத்து வரும் வேளை என்னுடையது.

தாத்தாவோடு வயல்வெளி சுற்றுவது,மாமாவோடு வாரம் ஒருமுறை ஏதேனும் டப்பா தியேட்டரில் டப்பா படம் பார்க்க சைக்கிளில் செல்வது,ஞாயிற்று கிழமைகளில் வாசிம் வீட்டில் டிவி பார்ப்பது.பள்ளி..நண்பர்கள்..விளையாட்டு..எல்லா சிறுவர்களையும் போலவே இவ்வளவு தான் அந்நாட்களில் என் உலகமும்.அதொரு மழை நாள் ஞாயிறு.வாசிம் வீடு பூட்டியிருந்ததால்..வகுப்பு தோழன் கோபி வீடு இருந்த வடக்கு தெருவிற்கு படம் பார்க்க சென்று விட்டேன்.மழை விடுவதாக இல்லை.ஒரே கும்மிருட்டு.நான் எங்கிருக்கிறேன் என மாமாவும் தாத்தாவும் தேடி நான் அகப்படாததால் அம்மாவும் அந்த மழையில் வீடு வீடாக சென்று தேடியிருக்கிறார்கள்.

தெருதெருவாக தேடி கடைசியாக அம்மா கோபி வீட்டு வாசலுக்கு வந்த பொழுது தாழ்வாரத்தில் மழை சாரலில் நான் நடுங்கி கொண்டு நின்றேன்.வடக்கு தெரு தவிர வேறு எங்கும் மின்சாரம் இல்லை.மழை வேறு பிழி பிழியென்று பிழிந்து கொண்டிருந்தது.தெருவே தெரியாமல் கரேலென கிடந்தது பாதை.வீடு போய் சேரும் வரை அம்மா ஒன்றும் பேசவில்லை.அதுவே அடிவயிற்றை பிசைந்தது.அடி உண்டா இல்லையா என்ற கலவரத்தோடே நான் பின்னி பின்னி நடந்து கொண்டிருந்தேன்.வீடு வந்தவுடன் தாத்தாவும் மாமாவும் லேசாக என்னை ஏசி விட்டு அம்மாவிடம் அடிக்க வேண்டாம் என்று சொல்லி சென்றார்கள்.நினைத்தது போல் அம்மா அடிக்கவில்லை.ஆனால் எதிர்பாராத விதமாய்..''இந்த கண்ணு தானே..இந்த கண்ணு தானே என கேட்டபடி வெங்காயத்தை எடுத்து வந்து என் கண்களில் கரகரவென்று தேய்த்து விட்டார்கள்.ஒரே எரிச்சல் ரொம்ப நேரம் அரற்றி கொண்டே இருந்ததாக ஞாபகம்..

அடுத்த நாள் மாலையே வீட்டிற்கு ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் டிவி வந்தது.அம்மாவின் விரலில் பறவை மோதிரம் பதித்திருந்த இடம் வெள்ளையாக இருந்தது.

4 comments:

said...

உங்க‌ளைக் காணாம‌ல் ப‌ட்ட‌துய‌ரின் அட‌ர்த்தி, ப‌றவை மோதிர‌த்தைவிட‌ வ‌லிமையான‌தாய்.

said...

நன்றி வாசன் :)

said...

wow , super post nanba

said...

நன்றி பாலா :)