மிக விநோத அதி சந்தோஷ மனநிலையில் இருக்கிறேன்...
எதேச்சையாக என் நண்பன் மணிக்கு தொலைபேசிய பொழுது கூறினான்.சந்தோஷ் மியூசிக் டைரக்டர் ஆகிட்டான்டா.படம் பேர் அட்டகத்தி..பாட்டெல்லாம் நல்லாருக்குடா.
சந்தோஷ் என் கல்லூரி தோழன்.ஸ்ரீரங்கத்தில் அவன் வீட்டிலும் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா ரூமிலுமாக பழியாக கிடந்து என் பாடலுக்கு அவன் மெட்டு இடுவதும் அவன் மெட்டுக்கு நான் பாட்டெழுதுவதும் கனவுகளுமாக கிடந்திருக்கிறோம் என்பதை சொல்லும் பொழுது ஒரு விளக்க முடியாத அவஸ்தை கலந்த மகிழ்ச்சி இப்பொழுது.அவனது 10 வருட போராட்டம்.உழைப்பு..சந்தோஷ் வைதீக வாசி.ஒரே மகன்.கல்லூரி ஆர்கெஸ்ட்ராவின் பிரதான கீபோர்ட் பிளேயர்.கூடவே புல்லாங்குழலும் வாசிப்பவன்.ஏதோ ஒரு ஆசை,வெறி.. கதை,இசை,இயக்கம் என இடைவிடாமல் எங்களை இயக்கி கொண்டேயிருந்தது.கொஞ்சமும் நிம்மதியற்று பரபரத்த நாட்கள் அவை.
உறையூரிலிருந்து இருப்பு கொள்ளாமல் நான் அலைந்த பல இடங்களில் அவன் வீடும் ஒன்றாக இருந்தது.சந்தோஷ் இத்தகைய பரபரப்புகளில்லாதவன்.தனது எதிர்காலம் குறித்த திட்ட வட்டமான ஒரு வரைபடம் அவனிடம் இருந்தது என்றே நினைக்கிறேன்.தன் விதியை தானே எழுத வாய்க்கப் பெற்ற அவன் சூழல் சிலவேளைகளில் என்னை பொறாமை கொள்ள செய்திருக்கிறது.இவ்வளவு போராட்டங்களை கடந்து இன்று தன் கனவை நனவாக்கிய ஒருவனை தன் கனவுகளை நிறைவேற்ற முடியாத அல்லது நொண்டி காரணங்கள் கூறி ஆட்டத்திலிருந்து விலகி கொண்ட ஒருவன் என் நண்பன் என் நண்பன் என பீற்றி கொள்வதில் இருக்கிறது அந்த அவஸ்தை.எனினும் சுகமான அவஸ்தை தான்.
கல்லூரிக்கு பிறகு முற்றிலுமாக கைவிடப்பட்ட ஒரு உலகத்தில் நான் உழன்று கொண்டிருந்திருக்கிறேன்.கைவிடப்பட்ட உலகம் என்பது.கனவு கண்ட உலகத்தில் அல்லாது வேறொரு உலகத்தில் அல்லது வேறொருவருடைய கனவில் ஒட்டுதலின்றி உழன்றது.உலகமே கொண்டாடும் ஒரு இசைஞனின் பாடல்களில் ஒன்று என எண்ணி இருந்த ஒன்று சந்தோஷின் மெட்டு என்று அறிந்த நாளில் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடியிருக்கிறேன்.
சினிமா..பாடல்கள்..இன்றைய என் நாட்கள் ஒரு சராசரி தமிழ் சினிமா பார்வையாளனின் சராசரி அறிதல்கள் கூட அற்றது.குறைந்த பட்சம் கடந்த சில வருடங்களில் வந்த பல படங்களின் பெயர்கள்..பாடல்கள்..கூட தெரியாது எனக்கு.தொடர்ந்த இடமாற்றம் மற்றும் கடுமையான சுயவெறுப்பு என நாட்கள் கடந்திருக்கின்றன.மிகையல்ல.தொலைக்காட்சி பார்க்கும் வழக்கமும் இல்லாமலான இவ்விலகலை என்னவென்று சொல்வது.நம்ப முடியவில்லை..ஏதோ ஒரு அரபு நாட்டில் அமர்ந்து இந்த அர்த்த ராத்திரியில் இப்படி பதிவு எழுதும் ஒருவனை நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் ஏதும் இல்லை.
சந்தோஷ் நாராயணின் அட்டைக்கத்தி பாடல்களை கேட்ட பொழுது ஒரு சிறிய நெருடல்.இப்பாடல்களல்ல அவனது உயரம்.கடந்த வருடம் தேசிய விருது பெற்ற அத்வைதம் என்ற படத்திற்கு இசையமைத்தவன் அவன்.மென்பொருளோடு கீபோர்டும் இணைக்கப்பட்ட அவன் கணிணியில் தாளம்..பிறகு வரிசையாக நூலில் மணிபோல் கோர்க்கப்படும் இதர இசைக்கருவிகளின் கோவைகள் இவற்றை அருகில் அமர்ந்து பார்த்ததால் நேர்ந்திருக்கலாம் பொதுவாக பாடல்கள் மீதான என் இன்றைய விலகல்.பெரும்பாலும் அவனது இசைக்கோர்வையில் கிடார் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
இப்பட பாடல்களிலும் அதை கேட்க முடிகிறது.அங்கங்கே குழலிசையை மென்தூவியாக கலப்பான்.ஒரு சமையல் கலை வல்லுநனை போல் கலந்தும் குறைத்தும் நடக்கும் அவன் பாடல்களை உருவாக்கும் விதம்.ஒரே தருணத்தில் தரையில் கால் பாவி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அவன் மனம்.இசைக்கோர்ப்பு பொறுமையை வெகுவாக சோதிக்கும் விடயம் எனக்கு.பாடலை எழுதி கொடுத்தால் முடிந்தவரை சீக்கிரம் கிளம்பி விடுவேன்.அது ஒரு முழுமையான பாடலாகி கேட்கும் தருணத்தில் விவரிக்க இயலாத கிளர்வு தோன்றி அவனை கட்டி கொள்வேன்.அந்நாட்களிலேயே ஏதோ ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது அவனுக்கு.எனினும் ஏதோ காரணங்களால் அப்படம் நின்று போனது.இவ்வளவு வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தாடியும் தொப்பையுமாய்..ரொம்ப சந்தோஷம்டா மச்சான்.
இப்படத்தின் பாடல்களில் ஆசை ஓர் புல்வெளி,பொடி வெச்சு புடிப்பேன்,வழி பார்த்திருந்தேன் மூன்றும் அவன் ஸ்டைல் பாடல்கள்.மூன்றும் மிக நன்றாக இருக்கிறது.இருந்தும் எல்லா பாடல்களிலும் ஏதோ வேண்டுமென்றே தெளிக்கப்பட்ட ஒரு அசிரத்தையை உணர முடிகிறது.அல்லது கதை சூழல் இந்த அசிரத்தையை வேண்டுகிறதோ என்னவோ...மற்ற மூன்று பாடல்கள் கானா ரகம்.அவையும் மிக நன்றாகவே இருக்கின்றன.பாடல்களோடு படமும் நல்ல வெற்றியடைய மேலும் மேலும் இசை வாய்ப்புகள் அவனுக்கு குவிய வேண்டி மனம் வாழ்த்துகிறது.
4 comments:
Valthukkal
படிக்க மிக்க மகிழ்வாய் இருக்கிறது
அவர் தொடர்ந்து இசை அமைக்கவும் உச்சம் தொடவும்
மனமாற வாழ்த்துகிறேன்
கவித்துவமான நடையில் தங்கள் பதிவைப்
படிக்க சந்தோஷமாக இருந்தது
தொடர வாழ்த்துக்கள்
ஒரு நிலைக்கு மேல் நட்பை கொண்டாடாத மரத்த நிலைக்கு வாழ்வு பழக்கிவிடுகிறது ,
இன்னும் ஈரத்தின் பிசுபிசுப்பு இருப்பதே ஆச்சரியமும் , மகிழ்வும் ஆன ஒன்று.
வாழ்த்தை பகிரவும்
நன்றி கவி அழகன்...
நன்றி ரமணி...
நன்றி பாலா :)
Post a Comment