Saturday, August 11, 2012

அட்ட கத்தியும் ஒரு அசல் கத்தியும்...




மிக விநோத அதி சந்தோஷ மனநிலையில் இருக்கிறேன்...

எதேச்சையாக என் நண்பன் மணிக்கு தொலைபேசிய பொழுது கூறினான்.சந்தோஷ் மியூசிக் டைரக்டர் ஆகிட்டான்டா.படம் பேர் அட்டகத்தி..பாட்டெல்லாம் நல்லாருக்குடா.

சந்தோஷ் என் கல்லூரி தோழன்.ஸ்ரீரங்கத்தில் அவன் வீட்டிலும் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா ரூமிலுமாக பழியாக கிடந்து என் பாடலுக்கு அவன் மெட்டு இடுவதும் அவன் மெட்டுக்கு நான் பாட்டெழுதுவதும் கனவுகளுமாக  கிடந்திருக்கிறோம் என்பதை சொல்லும் பொழுது ஒரு விளக்க முடியாத அவஸ்தை கலந்த மகிழ்ச்சி இப்பொழுது.அவனது 10 வருட போராட்டம்.உழைப்பு..சந்தோஷ் வைதீக வாசி.ஒரே மகன்.கல்லூரி ஆர்கெஸ்ட்ராவின் பிரதான கீபோர்ட் பிளேயர்.கூடவே புல்லாங்குழலும் வாசிப்பவன்.ஏதோ ஒரு ஆசை,வெறி.. கதை,இசை,இயக்கம் என இடைவிடாமல் எங்களை இயக்கி கொண்டேயிருந்தது.கொஞ்சமும் நிம்மதியற்று பரபரத்த நாட்கள் அவை.

உறையூரிலிருந்து இருப்பு கொள்ளாமல் நான் அலைந்த பல இடங்களில் அவன் வீடும் ஒன்றாக இருந்தது.சந்தோஷ் இத்தகைய பரபரப்புகளில்லாதவன்.தனது எதிர்காலம் குறித்த திட்ட வட்டமான ஒரு வரைபடம் அவனிடம் இருந்தது என்றே நினைக்கிறேன்.தன் விதியை தானே எழுத வாய்க்கப் பெற்ற அவன் சூழல் சிலவேளைகளில் என்னை பொறாமை கொள்ள செய்திருக்கிறது.இவ்வளவு போராட்டங்களை கடந்து இன்று தன் கனவை நனவாக்கிய ஒருவனை தன் கனவுகளை நிறைவேற்ற முடியாத அல்லது நொண்டி காரணங்கள் கூறி ஆட்டத்திலிருந்து விலகி கொண்ட ஒருவன் என் நண்பன் என் நண்பன் என பீற்றி கொள்வதில் இருக்கிறது அந்த அவஸ்தை.எனினும் சுகமான அவஸ்தை தான்.

கல்லூரிக்கு பிறகு முற்றிலுமாக கைவிடப்பட்ட ஒரு உலகத்தில் நான் உழன்று கொண்டிருந்திருக்கிறேன்.கைவிடப்பட்ட உலகம் என்பது.கனவு கண்ட உலகத்தில் அல்லாது வேறொரு உலகத்தில் அல்லது வேறொருவருடைய கனவில் ஒட்டுதலின்றி உழன்றது.உலகமே கொண்டாடும் ஒரு இசைஞனின் பாடல்களில் ஒன்று என எண்ணி இருந்த ஒன்று சந்தோஷின் மெட்டு என்று அறிந்த நாளில் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடியிருக்கிறேன்.

சினிமா..பாடல்கள்..இன்றைய என் நாட்கள் ஒரு சராசரி தமிழ் சினிமா பார்வையாளனின் சராசரி அறிதல்கள் கூட அற்றது.குறைந்த பட்சம் கடந்த சில வருடங்களில் வந்த பல படங்களின் பெயர்கள்..பாடல்கள்..கூட தெரியாது எனக்கு.தொடர்ந்த இடமாற்றம் மற்றும் கடுமையான சுயவெறுப்பு என நாட்கள் கடந்திருக்கின்றன.மிகையல்ல.தொலைக்காட்சி பார்க்கும் வழக்கமும் இல்லாமலான இவ்விலகலை என்னவென்று சொல்வது.நம்ப முடியவில்லை..ஏதோ ஒரு அரபு நாட்டில் அமர்ந்து இந்த அர்த்த ராத்திரியில் இப்படி பதிவு எழுதும் ஒருவனை நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் ஏதும் இல்லை.

சந்தோஷ் நாராயணின் அட்டைக்கத்தி பாடல்களை கேட்ட பொழுது ஒரு சிறிய நெருடல்.இப்பாடல்களல்ல அவனது உயரம்.கடந்த வருடம் தேசிய விருது பெற்ற அத்வைதம் என்ற படத்திற்கு இசையமைத்தவன் அவன்.மென்பொருளோடு கீபோர்டும் இணைக்கப்பட்ட அவன் கணிணியில் தாளம்..பிறகு வரிசையாக நூலில் மணிபோல் கோர்க்கப்படும் இதர இசைக்கருவிகளின் கோவைகள் இவற்றை அருகில் அமர்ந்து பார்த்ததால் நேர்ந்திருக்கலாம் பொதுவாக பாடல்கள் மீதான என் இன்றைய விலகல்.பெரும்பாலும் அவனது இசைக்கோர்வையில் கிடார் அதிகம்  பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இப்பட பாடல்களிலும் அதை கேட்க முடிகிறது.அங்கங்கே குழலிசையை மென்தூவியாக கலப்பான்.ஒரு சமையல் கலை வல்லுநனை போல் கலந்தும் குறைத்தும் நடக்கும் அவன் பாடல்களை உருவாக்கும் விதம்.ஒரே தருணத்தில் தரையில் கால் பாவி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும் அவன் மனம்.இசைக்கோர்ப்பு பொறுமையை வெகுவாக சோதிக்கும் விடயம் எனக்கு.பாடலை எழுதி கொடுத்தால் முடிந்தவரை சீக்கிரம் கிளம்பி விடுவேன்.அது ஒரு முழுமையான பாடலாகி கேட்கும் தருணத்தில் விவரிக்க இயலாத கிளர்வு தோன்றி அவனை கட்டி கொள்வேன்.அந்நாட்களிலேயே ஏதோ ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது அவனுக்கு.எனினும் ஏதோ காரணங்களால் அப்படம் நின்று போனது.இவ்வளவு வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தாடியும் தொப்பையுமாய்..ரொம்ப சந்தோஷம்டா மச்சான்.

இப்படத்தின் பாடல்களில் ஆசை ஓர் புல்வெளி,பொடி வெச்சு புடிப்பேன்,வழி பார்த்திருந்தேன் மூன்றும் அவன் ஸ்டைல் பாடல்கள்.மூன்றும் மிக நன்றாக இருக்கிறது.இருந்தும் எல்லா பாடல்களிலும் ஏதோ வேண்டுமென்றே தெளிக்கப்பட்ட ஒரு அசிரத்தையை உணர முடிகிறது.அல்லது கதை சூழல் இந்த அசிரத்தையை வேண்டுகிறதோ என்னவோ...மற்ற மூன்று பாடல்கள் கானா ரகம்.அவையும் மிக நன்றாகவே இருக்கின்றன.பாடல்களோடு படமும் நல்ல வெற்றியடைய மேலும் மேலும் இசை வாய்ப்புகள் அவனுக்கு குவிய வேண்டி மனம் வாழ்த்துகிறது.



நாஸ்டால்ஜியா...

''ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...''

வசந்தி படத்தில் வரும் இப்பாடலை முதன் முதலாக ரேடியோவில் கேட்ட பொழுது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது இருந்திருக்கலாம்.ஒருமுறையே கேட்டதாக நினைவு.ஆனால் அந்த வரிகளும் மென்மையான மெட்டும் அப்படியே ஆழ புதைந்து போயுள்ளன போலும்.எதேச்சையாக சற்றுமுன் அப்பாடலை கேட்க நேர்ந்தது.தொலைக்காட்சிகளில் கூட இப்பாடலை நான் இதுவரை கண்டதில்லை.

அந்நாட்களில் என் தெருவில் வாசிம் வீட்டில் மட்டும் தான் நிரந்தரமாக தொலைக்காட்சி இருந்தது.வாசிமின் அத்தா சிங்கப்பூரில் சொந்த கடை வைத்திருந்தார்.என் வீட்டில் அப்பா விடுமுறையில் வரும் நாட்களில் தொலைக்காட்சி மற்றும் கேசட் ப்ளேயர் எடுத்து வருவார்.அவ்வப்போது வாசலில் வைத்து ஏதேனும் படங்கள் போடுவார்.தெருவே அமர்ந்து பார்க்கும்.போகும் பொழுது விற்று விட்டு போய் விடுவார்.படிப்பு கெட்டு விடும் என்ற நொள்ளை சாக்கு.இல்லாவிட்டாலும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள் வாசலிலேயே நின்று நச்சரித்து வாங்கி சென்று விடுவார்கள்.

கோவில் திருவிழா,அல்லது ஏதேனும் கல்யாண விஷேஷம் போன்ற நாட்களில் வாடகைக்கு டிவி எடுத்து தெருவில் விடிய விடிய படம் போடுவது அந்நாட்களில் பொதுவான வழக்கம்.டிவி இல்லாத நாட்களில் ரேடியோ தான் ஆறுதல்.என் வீட்டில் ஒரு சிறிய BPL ரேடியோ இருந்தது.இன்னமும் இருக்கிறது.ஏதோ செண்டிமெண்ட்,அம்மா இன்னமும் அதை பத்திரமாக பாதுகாக்கிறார்.காரைக்கால் பண்பலைவரிசை,விவித் பாரதி என்று ஏதேதோ ஓடிக்கொண்டிருக்கும்.மாமா என் வாக்மேனில் ஆம்பிளிஃபயரை இணைத்து இரண்டு மண்சட்டிகளில் ஸ்பீக்கரை கவிழ்த்து வைத்திருப்பார்.பாடல்கள் பதிவு செய்து வந்து போட்டு விடுவார்.'மாடி வீட்டு மைனர் இவரு தானுங்க..மீச மேல மண்ணிருக்கு பாருங்க'..'அடியே மனம் நில்லுனா நிக்காதடி..கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி'..கடலோர கவிதைகள்..இன்னும் ஏதேதோ துள்ளிசை பாடல்கள்..மற்றும் சோகப்பாடல்கள்.

மாமா டி.ராஜேந்தரின் மிக தீவிர விசிறி..''ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்''..''சமைச்சு வெச்ச மீனு கொழம்ப நீயும் சலிக்காம தின்ன போதே''..போன்ற பாடல்களை சலிக்காமல் மீண்டும் மீண்டும் ரீவைண்டடித்து கடுப்பேற்றுவார்.சில சமயம் வீட்டிலேயே வைத்து தச்சு வேலைகள் நடக்கும் பொழுது ''என் தங்கை கல்யாணி''..''கரகாட்டக்காரன்'' போன்ற படங்களின் ஒலிச்சித்திரம் போட்டு விடுவார்.தாத்தாவுக்கு வேலை நேரத்தில் நொய் நொய் என சத்தம் வந்தால் பிடிக்காது.அதனால் மாமா வரும் முன் Fuse Carrier ஐ பிடுங்கி எங்காவது ஒளிய வைத்து விடுவார்.அதை துப்பறிந்து எடுத்து வரும் வேளை என்னுடையது.

தாத்தாவோடு வயல்வெளி சுற்றுவது,மாமாவோடு வாரம் ஒருமுறை ஏதேனும் டப்பா தியேட்டரில் டப்பா படம் பார்க்க சைக்கிளில் செல்வது,ஞாயிற்று கிழமைகளில் வாசிம் வீட்டில் டிவி பார்ப்பது.பள்ளி..நண்பர்கள்..விளையாட்டு..எல்லா சிறுவர்களையும் போலவே இவ்வளவு தான் அந்நாட்களில் என் உலகமும்.அதொரு மழை நாள் ஞாயிறு.வாசிம் வீடு பூட்டியிருந்ததால்..வகுப்பு தோழன் கோபி வீடு இருந்த வடக்கு தெருவிற்கு படம் பார்க்க சென்று விட்டேன்.மழை விடுவதாக இல்லை.ஒரே கும்மிருட்டு.நான் எங்கிருக்கிறேன் என மாமாவும் தாத்தாவும் தேடி நான் அகப்படாததால் அம்மாவும் அந்த மழையில் வீடு வீடாக சென்று தேடியிருக்கிறார்கள்.

தெருதெருவாக தேடி கடைசியாக அம்மா கோபி வீட்டு வாசலுக்கு வந்த பொழுது தாழ்வாரத்தில் மழை சாரலில் நான் நடுங்கி கொண்டு நின்றேன்.வடக்கு தெரு தவிர வேறு எங்கும் மின்சாரம் இல்லை.மழை வேறு பிழி பிழியென்று பிழிந்து கொண்டிருந்தது.தெருவே தெரியாமல் கரேலென கிடந்தது பாதை.வீடு போய் சேரும் வரை அம்மா ஒன்றும் பேசவில்லை.அதுவே அடிவயிற்றை பிசைந்தது.அடி உண்டா இல்லையா என்ற கலவரத்தோடே நான் பின்னி பின்னி நடந்து கொண்டிருந்தேன்.வீடு வந்தவுடன் தாத்தாவும் மாமாவும் லேசாக என்னை ஏசி விட்டு அம்மாவிடம் அடிக்க வேண்டாம் என்று சொல்லி சென்றார்கள்.நினைத்தது போல் அம்மா அடிக்கவில்லை.ஆனால் எதிர்பாராத விதமாய்..''இந்த கண்ணு தானே..இந்த கண்ணு தானே என கேட்டபடி வெங்காயத்தை எடுத்து வந்து என் கண்களில் கரகரவென்று தேய்த்து விட்டார்கள்.ஒரே எரிச்சல் ரொம்ப நேரம் அரற்றி கொண்டே இருந்ததாக ஞாபகம்..

அடுத்த நாள் மாலையே வீட்டிற்கு ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் டிவி வந்தது.அம்மாவின் விரலில் பறவை மோதிரம் பதித்திருந்த இடம் வெள்ளையாக இருந்தது.

Monday, August 6, 2012

வார்டு எண் 325 - நாஞ்சில் நாடனின் இந்நாட்டு மன்னர்




Directed by Madonne Ashwin
Camera by P.V Shankar
Edited by Abhinav Sunder Nayak
Music by William John Britto

நாஞ்சில் நாடனின் சிறுகதை - இந்நாட்டு மன்னர்


அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’  என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் 2.nanjil nadanபட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப்  போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. ‘உருளை’ சின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும்,  ‘பூசணிக்காய்’ சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும் உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட - அதுவும் எல்லோருக்கும் தெரிந்த அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோலகல்லோலப் படும் வேளையில் தான் ஒரு புறவெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மன வருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்படுவதில் ஒரு எரிச்சல்.

    ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும்
ஏமாற்றம்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது ராஜாங்கம் நடத்தும் தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன்தான். எனவே அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலாமென்றாலும், “அதெல்லாம் இப்ப என்னத்துக்கு போத்தி...? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?” என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரில் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று!

    அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள்
இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த ‘பூசணிக்காய்’ ஆதரவளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அது அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்திரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.

    ‘கோச்ச நல்லூர்’ என்று வழக்கமாகவும், ‘கோச்சடையநல்லூர்’ என்று இலக்கண சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில், உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும்.நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்புமுறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தெண்டனிட்டுச் சொல்லிக் கொள்கிறேன்). ‘கிராமம்’ என்றும் ’பிராமணக்குடி’ என்றும் அழைக்கப்படுகிற ‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும்’ வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லோரும் ‘ஐயர்கள்’ என்ற நினைப்பே வேளாளர்களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்கள் ’ஒற்றுமை’யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு போல -நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.

    இவை நீங்கலாக, தான் இந்துவா கிறிஸ்துவனா இல்லை இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப் பேச்சி, இசக்கி அம்மன், தேரடி மாடன், புலை மாடன், முத்துப் பட்டன், கழு மாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப் பிடாரி, சந்தனமாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலை விட இது பெரிது.

    மேற்சொன்னவர் அனைவரும் இந்து கடவுளன்களும் கடவுளச்சிகளும்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிறுவுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள்தான். ‘ஏ’யானது ‘பி’க்குச் சமம். ‘பி’ஆனது ‘சி’க்குச் சமம். எனவே ‘ஏ’
= ‘சி’ என்ற கணித விதியை இஞ்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுளன் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுளன்களும் கடவுளச்சிகளும் இந்துக்கள்: எனவே இவர்களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்து விடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும் பல தெய்வங்களும் பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை ‘இந்தியா’ என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவீதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களையும் உள்ளடக்கித்தான்.

    இப்படி ‘ராம ராஜ்ய’ யோக்கியதைகள் பல கோச்சநல்லூருக்கு இருந்தாலும்
ஊராட்சித் தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில் ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்.குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள்.எனவே காரசாரமான போட்டி இருந்தாலும், வகுப்புக் கலவரங்களாவது  இல்லாமல் இருந்தது. ஊரு முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடுகளைத் தவிரவும் பச்சைப்பாசி படர்ந்த தெப்பக்குளமும் அதன் கரையில் செயலிழந்த சாத்தாங்கோயிலும் சில சில்லறைப் பீடங்களும் ஒரு பாழடைந்த மண்டபமும் இரவு ஏழு மணிக்குமேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான ‘தண்ணீர்ப் பந்த’லும் சுக்குக்காப்பிக் கடையும் வெற்றிலைபாக்கு முதல் ‘டாம் டாம்’ டானிக் ஈறாக விற்கும் பலசரக்குக் கடையும் ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும் இருபது களங்களும் சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர சங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாது போனது கூட ஒரு சௌகரியம்தான். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.

    இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும் எங்கு பார்த்தாலும் நீக்கமற இருந்தது. ‘பூசணிக்காய்’ வேட்பாளரின் தங்கைக்கு இந்த ஊரில் ஒரு ஓட்டு இருப்பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில் இருந்து அவள் வந்தாயிற்று. இதை அறிந்த ‘உருளை’ வேட்பாளர் சும்மா இருப்பாரா?புளியங்குடியில் வேலை பார்த்த அவர் தம்பிக்கு தந்தியே போயிற்று. மனைவியை அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக்காயின் தங்கை. (வசதி கருதி இங்கு தொட்டு சின்னம் வேட்பாளரைக் குறிக்கிறது.) என்னதான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள் பூசணிக்காய்க்குப் போட்டு விட்டால்? இங்கு ஒரு ஓட்டுக்கூடி அங்கும் ஒரு ஓட்டுக்
கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்து விடலாமே!

    கூட்டிக் கழித்து, வகுத்துப்பார்க்கையில் யாரு வென்றாலும் பத்து
வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்று நோக்கர்கள் கணித்தனர்.தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காப்பி, வடை,சீட்டுக்கட்டுகள் செலவு ஜீயாமெட்ரிக் புரகிரஷனில் வளர்ந்தது. நாளை காலை தேர்தல் என்ற நிலையில் இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு    விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.

    இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க தான் கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள் வைத்தியனேதான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத் தெரியும்.

    சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பிக்கும் போதே ‘சதக்’கென்று சிந்தனை எதனையோ மிதித்தது. நேர் வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன் இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே செய்யும்? அதுவும் ‘உருளை’ ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால், துப்புத் துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் குடிமோசம் வந்து சேருமே! தன்மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்?

    சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோசனையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்கு சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழிமடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழிநடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளைகட்ட ஆரம்பித்தது.

    கோயில் முகப்புக்கு வந்தான். பனிமாதம் ஆகையால் அங்கே ஒரு குருவியைக் காணோம். ஈசானமூலையில், சுவரை அணைத்துக்கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி கை நடுங்க ஆரம்பித்து, காதுகளின் ஓரத்தில் தன்னறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கை விட்டுப் போனபிறகு, நிரந்தரமாக அந்த மூலை வைத்தியனின் இடமாகி விட்டிருந்தது.

    மணி ஒன்பதைத் தாண்டி விட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்திற்கொரு முறை, நானும் இருக்கிறேன் என்ற காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்
கொண்டிருக்கும்போது, இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?

    வைத்தியனைப் பார்த்து சன்னமாகக் குரல் கொடுத்தான்.

    ”வைத்தியா.. ஏ வைத்தியா....!”

    பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால்
கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும் புடைக்காமலும் எழுந்து உட்கார்ந்த அவன், நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்து திருதிருவென்று விழித்தான்.

    ”ஏம் போத்தி...? வீட்டிலே யாராவது....”

    அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்ற சமயமாக இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்று அந்த ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.

    ”அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...”

    வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில்
தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்....

    ”உன் பேரு அணஞ்சபெருமாளா?” வைத்தியன் முகத்தில் ஒருவித பிரமிப்பு.

    ”அட... இதென்ன விண்ணாணம்...? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப் புடிக்கேரு...”

    ”பேரு அதானா சொல்லு...?”

    ”உமக்கு யாரு சொல்லீட்டா...? நானே அயத்துப் போனதுல்லா.. இப்ப என்ன
வந்திட்டு அதுக்கு..?”

    ”யார்கிட்டேயும் மூச்சுக்காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு..
நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன்.. காப்பி சாப்பாடு எல்லாம் உண்டு... உருளைக்காரப் பயக்கோ வந்து கோட்டா இல்லேண்ணு சொல்லீரு.. ஆமா...!”

    தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா
மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் -தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு வைத்தியனுக்கு புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.

    ”நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக்கார ஆளுக சொன்னாளே..

இதுவரை நீ சேத்தவன் ஓட்டையும் ஊரைவிட்டு ஓடினவன் ஓட்டையும் போட்டே... சரி... ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே... பொறகு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திருவோம். அப்படீண்ணூல்லா சொன்னா... நானும் அதாலா கம்முண்ணு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இண்ணைக்கு அடிச்சுக்கிடுவாங்க.... நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போலாம் வாடிண்ணூ கழுத்தைக் கெட்டிக்கிட்டு அழுவாங்க... நமக்கு என்னத்துக்கு இந்தப் பொல்லாப்புண்ணுதாலா சலம்பாமல் கிடக்கேன். இப்பம் நம்ம பேரும் லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..”

    ”இது இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ... நான்தான்
கண்டுபிடிச்சேன்! முன்னாலேயே ஒம் பேரு இருந்திருக்கும்.. ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா..? அதுகிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும் வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற என்கூட வந்து இட்டிலி திண்ணு போட்டு,புதுத்துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான் சொல்லித்தாறேன்... ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே... என்னா..?”

    ”இனி நான் சொல்லுவேனா.. நீங்க இம்புட்டு சொன்னதுக்கப்புறமு...”

    வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து தன் சாதனையை நினைத்து மார்பு விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.

    அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். மங்களாவில் நடுநாயகமாகப் பூசணிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்தப்பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. வந்து வந்து தன் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள் இரண்டு மூன்று ஆங்காங்கே ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக்காப்பி அண்டா. அந்த நூறு வீட்டு ஊரின் இரதவீதிகளைச் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலை காலைக் காப்பிக்கான ஆயத்தங்கள்.

    இட்டிலிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் ‘கொர்’ என்ற சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆனபடியால், பூசணிக்காய் சாம்பாருக்காக அரிந்து பனையோலைப் பாய்மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுகள் இடத்தை அடைத்துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால் வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்புவதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    பூசணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்ற பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூச்ணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல்.

    நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு
வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி, உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.

    இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக்களே இரு நூற்று எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது
வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும் நான்கு வாடகைக் கார்களும். அது மட்டுமல்ல வாக்கெடுப்பு நடக்கப் போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி, ஊரில் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டுசெல்வது?

    மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததைத் தல்லிப் பழுக்க வைப்பது போன்றும் சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதித்திருந்தால் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதட்டமும்.

    ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள்.
அதைத்தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து, புதிய வேட்டியும் துவர்த்தும் உடுத்து வெண்ணீறு பூசி ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரே புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்.

    பத்து மணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெறலாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக்காளைகள் குடங்குடமாகப் பீய்ச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும்போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி, சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது?

    இரண்டு வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் பிரசன்னமாயிருந்தார்கள்.
அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்மசிரத்தையோடு கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், லாத்தியுடன். வெள்ளாளனுக்கு லாத்தியே அதிகம் என்று துப்பாக்கி கொண்டுவரவில்லை.

    வைத்தியன் என்ற அணஞ்சபெருமாளை பெருமாள் வாக்குச்சாவடி முன் காரில் கொண்டுவந்து இறக்கிய போது எல்லோர் கண்களும் நெற்றி மேல் ஏறின. வெள்ளையும் சொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.

    ”நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இண்ணைக்கு உள்ளூர் எலக்‌ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும்...ம்...வரட்டும்.”

    கறுவினார் உருளை.

    மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து
வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.

    இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையை விட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்து விட்டது என்று புருவக்கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். ‘என் எதிரில, எனக்கு விரோதமாகக் கள்ள ஓட்டுப் போட வந்திருவானாக்கும்...’ என்ற பாவனையில் மீசை மீது கை போட்டு இளக்காரத்துடன் பூசணிக்காயைப் பார்த்தார் உருளை.

    வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின்தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.

    ”கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா ஓடுகே...?”

    ”அட சத்தம் போடாதேயும் போத்தி... இன்னா வந்திட்டேன்...” வைத்தியனின்
குரலில் அவசரம்.

    ”அதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்.. பிரி களந்திட்டோவ்?”

    ”இரியும் போத்தி... ஒரு நிமிட்லே வந்திருகேன்.”

    ”ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேங்கேன்.”

    ”அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு.... காலம்பற முகத்தைக் கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன்... வயசான காலத்திலே செமிக்கவா செய்யி... சித்த நிண்ணுக்கிடும்.. இன்னா ஒரு எட்டிலே போயிட்டு வந்திருகேன்...”

    வைத்தியன் குளத்தங்கரையோரம் போய் கால்கழுவி வருவதற்குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்று கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சாப்பாடு போட்டு முதல் ஆளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில், முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான். இடைவேளைக்குப் பிறகு, வாக்கெடுப்பு தொடங்கியது கையில் வைத்திருந்த ‘அணஞ்சபெருமாள்’ சீட்டுடன் வாக்கு சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாரம் படிப்பித்துத்தான் அனுப்ப வேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் போலிங் ஆபிசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன்.

    உருளை ஒரு உறுமல் உறுமினார்.

    ”ஏ வைத்தியா.. உனக்கு ஓட்டு இருக்கா?”

    சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.

    ”இருக்கு போத்தியோ.. இன்னா நீரே பாருமே...”

    அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்கு கொஞ்சம் மலைப்பு. அவர் மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.

    ”அணஞ்ச பெருமாளா உன் பேரு..?”

    ”ஆமா போத்தி.. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?”

    உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர் முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்தில் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.

    ”இதுவரைக்கும் கள்ள ஓட்டுப் போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப்போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?”

    ”இல்லை போத்தி.. என் பேரு அணஞ்சபெருமாளுதான்... நான் பொய்யா சொல்லுகேன்...”

    ”அட உன் பேரு அணஞ்சபெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம்
இருந்திட்டுப்போகு... ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளையிண்ணுல்லா
போட்டிருக்கு....”

    ”என்னது? பொம்பிளையா?”

    ”பின்னே என்ன? நல்லாக் கண்ணை முழிச்சிப்பாரு.. அது நம்ம கொழும்புப் பிள்ளை பாட்டாக்கு அக்காயில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே.... ஓட்டா போட வந்தே ஓட்டு... வெறுவாக்கட்ட மூதி.. போ அந்தாலே ஒழிஞ்சு....”

    வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்று
விடுவதைப் போல அவர் அவனைப் பார்த்து விழித்தார்.


*****

நன்றி: கணையாழி, ஜனவரி - 1977 , அழியாச்சுடர்கள் தளம்.



Monday, July 30, 2012

ரொம்ப நாளாயிட்டுது இந்த பக்கம் வந்து...


வாங்கி மாதங்களாகியும் பிரிக்கப்படாமல் கிடந்த விஷ்னுபுரத்தை ஓமனில் ஏதேனும் ஒரு உலர் போதில் வாசிக்க கூடலாம் என தூக்கி வந்தேன்.வந்தே 6 மாதங்களாகி விட்டது.சொச்ச மிச்ச ஒல்லிப்பிச்சான் பொஸ்தவங்கள் மீது அமர்ந்து அமுக்கி கொண்டு நோஞ்சானை மல்லுக்கு கூப்பிடும் பெயில்வானாய் வாசிக்க வெகு நாளாக எனை அழைத்து கொண்டிருந்தது. அதன் தோரணை தந்த தொந்தரவு பொறுக்காது,கர்வ நாஸக் என உருவி கட்டிலுக்கடியில் போடிருந்தேன் சில நாள்.இரவில் தலையனைக்கடியிலும் பகலில் கட்டிலிலுமாக கிடந்து உழன்று உழைத்து ஓடாய் தேய்ந்த அந்த பொஸ் தவத்தை ஒருவழியாக கையில் எடுத்தாகிவிட்டது.அதன் இடத்தை அசடன் பிடித்து கொண்டது இப்போது.அதற்கு எப்பொழுது விமோசனமோ...

''அதனால் தான் நான் சிந்திப்பதை காலையில் மலம் கழிக்கும் பொழுது வைத்து கொள்கிறேன்.எப்படியோ ஞானத்தை பழிவாங்கி விட்டதாக நினைப்பு''. என்று பீதாம்பரம் மாமா சொல்லும் இடத்தில், அடடா தப்பா நெனச்சுட்டோமோ என்றிருந்தது.பொதுவாக இதன் ஆசிரியரை வாசிக்க மனத்தடையை உருவாக்குவது நல்ல எழுத்தினூடாக அவர் புகுந்து வைக்கும் ஞான ஒப்பாரி தான்.இத்தாந்தண்டி பொக்கா வேறு அதை போட்டால் என்னதான் செய்வான் மனுசன்.கழுதய கட்டிகினு ஒதைக்கிதேன்னா,எண்ணி துணிஞ்சு வாங்கிட்டு  பொலம்பாத ராசாவென சொந்த சமாதானத்தில் முக்கி முக்கி 100 பக்கங்களை ஓட்டியாகி விட்டது.


பத்து பக்கங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பண்டாரம் சிப்லாக்கட்டையோடு வந்து வைக்கும் ஞானிக்கு மட்டுமே கோபுர உச்சி தெரியும்...ஞானிக்கு மட்டுமே சோனா மீட்டும் எட்டாம் சுரம் கேட்கும்...ஞானிக்கு மட்டுமே விஷ்னுபுரத்தில் உச்சா கக்கூஸ்லாம் போகும் அதிகாரம் உண்டு ப்ளா ப்ளா பிலாக்கணங்கள் தாண்டி சில காட்சி விஸ்தரிப்புகள் மிக அழகாக இருக்கின்றன.வீரன் என்ற யானை தேர்காலில் தும்பிக்கை மாட்டி படும் வேதனையும் பிறகு பைரவன் என்ற நரசிங்கரின் யானையால் கொல்லப்படுவதும்..என்னவோ போலிருக்கவே அத்தோடு மூடி வைத்தேன்.

திருவடி,பிங்கலன்,பீதாம்பரம் என பாத்திரங்கள் விஷ்னுபுர ராஜகோபுர தேனீக்களாய் வந்து கொண்டேயிருக்கின்றன.திருவிழாவிற்கு விஷ்னுபுரம் வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் அப்பத்திற்கு ஆணை கட்டி மாவிடிக்கும் லெவலுக்கு ஷங்கர்த்தனமான ஓர் ஜைஜாண்டிக் ஊர்.பயமுறுத்தும் தத்துவம் கித்துவம் ஏதும் வந்து இதுவரை மண்டையை பிராண்டவில்லை.அல்லது இது தான் தத்துவம் என்று கூட அறிய முடியாத அளவுக்கு தான் நம் வாசிப்பின் லட்சனமோ என்ற வகையில் மேலதிக தொந்தரவு ஏதுமின்றி பக்கங்கள் நகர்கின்றன.ஏனோ ஊடாக தமிழவனின் ஜி.கே எழுதிய மர்ம நாவலையும் வாசித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.யாரிடமிருந்து அதை நான் ஆட்டையை போட்டது.என்னிடமிருந்து அதை யார் ஆட்டையை போட்டது.அது சரி.இன்று உன்னுடையது.நாளை என்னுடையதாகிறது.மற்றொரு நாளும் என்னுடையதாகவே ஆக வேண்டும்.Never Mind.


ரெண்டையும் ஒட்டுக்கா வாசிச்சா என்னாகும்.சுருங்கை நகரில் பீதாம்பரம் மாமா திருவடியோடு தாம்பூலத்தை புளிச்சி கொண்டிருக்க,தேவேந்திரரும் பிங்கலனும் சோனா நதிக்கரையில் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அரையநாதர் அரைக்கண்ணால் சுருங்கையையும் விஷ்னுபுரத்தையும் வேவு பார்த்து கொண்டிருப்பார் என் கனவில்.ஆச்சா.சொச்சத்த வாசிப்போம்.பொறவு பேசிப்போம்.

Tuesday, September 27, 2011

Chitti Aayi Hai - Pankaj Udhas



 

 Chitti Aayi Hai Vatan Se Chitti Aayi Hai
The letter has come from motherland
Bade Dinon Ke Baad Hum Bevatnon Ko Yaad
After a long time they remembered us who are away from home
Vatan Ki Mitti Aayi Hai Chitti Aayi Hai
The letter has come with the soil of motherland
Upar Mera Naam Likha Hai
My name is written on the top
Andar Ye Paigham Likha Hai
With this message inside
Oh Pardes Ko Jaanewale
Those who goes abroad
Laut Ke Phir Na Aanewale
And who never come back
Saat Samundar Paar Gaya Tu
You have crossed seven seas
Humko Zinda Maar Gaya Tu
By killing us alive
Khoon Ke Rishte Todd Gaya Tu
By breaking the bond of blood
Aankh Mein Aansoo Chod Gaya Tu
And left tears in eyes
Kam Khaate Hain Kam Sote Hain
We eat less, sleep less
Bahut Zyaada Hum Rote Hain
But cry a lot
Sooni Ho Gayi Shehar Ki Galiyaan
The streets of the town feels empty
Kaante Ban Gayi Baag Ki Kaliyaan
The flowers of our garden feels like thorns
Kehte Hain Saawan Ke Jhule
The spring tells us
Bhool Gaya Tu Hum Nahin Bhoole
You've forgotten us, but we haven't
Tere Bin Jab Aayi Diwali
In Diwali without you
Deep Nahin Dil Jale Hain Khaali
It's not the lamp, our heart burns empty
Tere Bin Jab Aayi Holi
In Holi without you
Pichkaari Se Chooti Goli
The water-guns shoots bullet
Peepal Soona Panghat Soona
The shade is empty, so is the pond
Ghar Shamshaan Ka Bana Namoona
Home feels like grave
Fasal Kati Aayi Baisakhi
Harvest is over, and the festival has come
Tera Aana Reh Gaya Baaki
Awaiting your return now
Pehle Jab Tu Khat Likhta Tha
When you used to write earlier
Kaagaz Mein Chehra Dikhta Tha
I could see your face in the paper
Bandh Hua Yeh Mel Bhi Ab To
It has stopped now
Khatam Hua Yeh Khel Bhi Ab To
This game is over now
Doli Mein Jab Baitti Behna
When your sister was leaving to husband's home
Rasta Dekh Rahe The Naina
Her eyes were longing for you
Mein To Baap Hoon Mera Kya Hai
I am dad, don't bother about me
Teri Maa Ka Haal Bura Hai
But your mom is disappointed
Teri Biwi Karti Hai Seva
Your wife is doing her work
Soorat Se Lagti Hai Bewa
She looks like a widow now
Tune Paisa Bahut Kamaaya
You have earned a lot
Iss Paise Ne Desh Chudaaya
This money has taken you away from home
Desh Paraayaa Chhod Ke Aajaa
Leave the strange country and come home
Panchhi Pinjra Todh Ke Aaja
Break the cage and come home
Aajaa Umar Bahut Hai Chotti
Come back, you are still young
Apane Ghar Mein Bhi Hain Roti
We are doing good at home too

Thanks :  http://dreamy-songs.blogspot.com

Tuesday, September 13, 2011

சாட்சி...

நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.

கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது''
என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.

நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.


Sunday, August 7, 2011

Harry Belafonte - Banana Boat



Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home

Work all night on a drink of rum
Daylight come and me wan' go home
Stack banana till de morning come
Daylight come and me wan' go home

Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home

Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home

Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home

Beautiful bunch of ripe banana
Daylight come and me wan' go home
Hide the deadly black tarantula
Daylight come and me wan' go home
Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home

Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day....ay-ay-o
Daylight come and me wan' go home


http://en.wikipedia.org/wiki/Harry_Belafonte