Tuesday, March 30, 2010

புத்தன் மிதக்கும் இசைவெளி - 2

நேற்றிரவு அவள் வீட்டிலிருந்து திரும்பும் வழியில் மீண்டுமொரு பறவையின் சடலம் பார்த்தேன்.எந்த கண்டத்திற்கு சொந்தமானதோ.குலைந்து கிடந்த உலர்ந்த சிறகுகள் அதீத பதட்டமடையச் செய்தது.சமீப நாட்களாகவே பறவையின் சடலங்கள் அடிக்கடி தென்படுகின்றன.சில நாட்களாக மீண்டும் மீண்டும் தோன்றுகிறது முடிவற்று ஆழியொன்றுள் மூழ்கும் ஒரு கொடுங்கனவு.கனவுக்கும் தட்டுப்படும் இப்பறவைகளின் சடலத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ? தெரியவில்லை.அறை திரும்பும் எண்ணத்தை கைவிட்டு ஒரு டாக்ஸியை நிறுத்தி ஏறி கொண்டேன்.எங்கே செல்ல வேண்டும் என்ற அவன் கேள்விக்கு எங்காவது..வெகு தூரமாய்... என்ற என் பதில் விநோதமாக இருந்திருக்க கூடும்.

இந்தியா?

ம்ம்...

ஆம்..நான் அவளை நேசிக்கிறேன்.இதை அவளிடம் சொன்ன பொழுது என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள்.அந்த குறுகுறு கண்களை எப்பொழுதும் என்னால் எதிர் கொள்ள முடிந்ததில்லை.வெகு குறும்பாக 'நேசிக்கிறேன்...இதை தமிழில் சொல்' என்றாள்.குற்ற உணர்வும் எங்கிருந்தோ வந்து தொலைத்த குருட்டு வெட்கமும் பிடுங்க நின்றேன்.ஏன் சொற்கள் இப்படி அபத்தமாகி விட்டன.தேய்ந்து போன அந்த சொற்றொடரின் இயலாமையை நானே முன்பு அவளுக்கு தந்திருந்தேன்.அவள் வெகு நிதானமாக என் பதட்டங்களை ரசிப்பவளாக இருந்தாள்.

"என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்திய குடும்பம் இருக்கிறது.ரொம்ப நல்லவர்கள்.நான் அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்."(இதே கதையை கடந்த 90 நாட்களில் பதிமூன்றாவது முறையாக சொல்லும் எட்டாவது பாகிஸ்தானி இவன்)

ம்ம்...

'முஸல்மான் ஹோ?'

ம்ஹீம்.

'ஓ..அவர்களும் உங்கள்...'.

ம்ம்...

'ஏதாவது பேசேன்...'

இழைந்து கொண்டிருந்த பாடலின் ஒலியை கொஞ்சம் துரிதப்படுத்தினேன்.சினுங்கிய குளிரூட்டியை சற்றே முடுக்கினேன்.நுஸ்ரத் ஃபத்தே அலி கான் உருகி கொண்டிருந்தார்.அவன் புன்னகைத்தான்.எதை பேசுவது?எப்படி பேசுவது? ஒவ்வொரு முறையும் நான் உன் எதிரியல்ல என நிரூபிக்க முயலும் துயரங்களை சகிக்க முடியவில்லை.தேவதச்சனின் கவிதையொன்று நினைவு வந்தது.

"இந்த சொல்..இந்த கனத்திற்கானது...உன் தத்துவங்களை இதில் திணிக்காதே"

பின் வெகு நிதானமாக என்னை நெருங்கினாள்.முத்தமிடுமுன் ''என்ன பர்ஃயூம் யூஸ் பண்ற''? என்ற அவள் கேள்விக்கு விடையளிக்கும் நிலையில் நான் இல்லை.இயல்பான தருணங்களிலிருந்தும் சட்டென எல்லை மீறும் என் சுபாவம் அவளை கவர்ந்திருந்தது.மோசமான தருணங்களிலும் சமநிலையில் இருக்கும் அவளை எனக்கு பிடித்திருந்தது.எதற்கு இந்த எல்லைகள்.உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.எல்லைகளால் பிரிக்கப்பட்ட எல்லாம் அதனதன் எல்லைக்குள் நிற்கின்றனவா.

"நவீனா,நீ வாழ லாயக்கற்றவன்.வாழ்க்கை விதவித ர்ங்ள் உடையது.அவைகளைத் தாண்டி நீ ஒரு ஐக்கியம் நாடுகையில் தான் எல்லாம் மறைந்து ஏக வெண்மை புலப்படும்."

அது சரி போல தான் படுகிறது.சரியில்லாதது போலவும்.அவளிடம் கேட்டால்...''உன்சரி என்தவறு என்சரி உன்தவறு எல்லாந்தப்பு தண்டா/தாண்டா
எல்லாஞ்சர்தான்டா..நீ போய் குடி ஜிகிர்தாண்டா " இப்படி பதில் வரலாம்.வேண்டாம்.

".....பின் ஏன் இந்த ராஜேஷ் உடன் மட்டும் இப்படி...சில மனிதர்களுடன் சில பரிமாற்றங்கள்...அவ்வளவே... ஆமா, இந்த பரிவு...வலிகளைப் புரிதல் என்பதெல்லாம்...விலங்குகள்..மரம் செடிகளிடம் மட்டும்தானா...எனக்கெல்லாம் இல்லையா...? உங்கள் பரிவையும் நட்பையும் பெற...நானும் மரம்,செடி,பூனையாகத்தான் இருக்கவேண்டுமா...அப்படினா நானும் உங்க Pet(புச்சி/பப்பி) மாறட்டுமா? "

வண்ணங்கள் மிதக்கும் சாலை கனவின் வரைபடமென பின்னால் விரைந்து கொண்டிருந்தது.இந்த நகரம் இரவில் ஏன் இவ்வளவு அழகாகி விடுகிறது.கடற்கரையில் இறங்கி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.அவளை இந்த கடற்கரையில் தான் முதலில் சந்தித்தேன்.அலைகளேயில்லாத கரையில் அவள் தனித்திருந்தாள்.ஒரு பரஸ்பர புன்னகை.முகத்தில் ஒட்டியிருந்த ஊரின் முகவரி போதுமானதாக இருந்தது இயல்பான ஒரு உரையாடலை தொடங்க.தத்துபித்து வசனங்கள் கூடிய ரசம் பூசிய சொற்களில் கொஞ்சமும் விருப்பமில்லை அவளுக்கு.பிரிந்து வந்த பிறகுதான் உறைத்தது.மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித முஸ்தீபுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கவில்லை.குறைந்தது பரஸ்பரம் பெயர்களை கூட பரிமாறி கொண்டிருக்கவில்லை.பிறகான சந்திப்புகள் திட்டமிட்டவையே எனினும் அதை தற்செயல் என்றே நாங்கள் நம்பிக்கொண்டோம்.

எதிரே நடந்து வந்த ஒரு அரபி இளைஞன் என்னை சற்றே நிறுத்தி லைட்டர் கேட்டான்.கொளுத்தி கொண்டு தன் போக்கில் நடையை கட்டியவனிடம் ஏனோ கேட்க தோன்றவில்லை.இரண்டடி எடுத்து வைத்ததும் மீண்டும் தோளை தொட்டு திரும்ப கொடுத்தான்.கண்சிமிட்டி சிரித்து சென்றான்.கன நேர குறும்பு.லேசான ஒரு புன்னகையில் ஏதோவென்று இளகியது.

இதுபோன்ற தருணங்களில் வாசிக்க நகுலன் தான் லாயக்கு.குத்துமதிப்பாக புரட்டினேன்.61 ம் பக்கத்தில் இப்படி இருந்தது.மூடிவிட்டேன்.இன்னும் கொஞ்சம் மது அருந்தலாம்...அவளை இன்னொரு புணர்ச்சிக்கு வற்புறுத்தலாம்...இருப்பின் அவஸ்தை வேறென்ன செய்ய... மா/ம/யக்கம/து வேண்டுவன இவை 'தான்' அறிதல் அர்த்தம் ஹம்பக்.ஓ..சீர்திருத்த சிகாமணிகளே...எழுத்தாளர்களே...எழவு வாயில் நுழையா பெயர் கொண்ட வஸ்தாதுகளே..வாருங்கள்.வாழ விரும்புகிறேன் நான்.

'பெயரற்ற உன் முகவரிக்கு இந்த இசை குறிப்புகளை எழுதியனுப்புகிறது ஆஷ்ட்ரேயில் கசியும் சிகரெட் துண்டு...'


''இந்த கடற்கரையில் மல்லாந்து படுத்து நிலா பார்க்க கொள்ளை அழகாக இருக்கிறது.''

"பாலை வெளியில் இன்னும் அழகாக இருக்கும்"

''ஓ..இப்பொழுது அருகில் நீ இருந்தால்...........''

"......................."

'ஆயிரம் முத்தங்களுடன்'

இன்று வந்த இக்கடிதத்தை திரும்ப வாசித்து கொண்டிருக்கிறேன்.இப்பொழுதெல்லாம் நிறைய கடிதங்கள் வருகின்றன.பெயரெற்ற முகவரியற்ற கடிதங்கள்.என் இந்த எழுத்தை
போல் பசப்பாத பூச்சுக்கள் இல்லாத...ஏனோ பதில் எழுத தோன்றுவதில்லை.யாருக்கும் ஒரு பதிலோ..புன்னகையோ..முத்தமோ போதுமானதாக இருக்க போவதில்லை.

''ஏதாவது சொல்..''

''ஏதாவது...''

''உனக்கு அலுத்து போய்ட்டேன் இல்ல''

''.............''


ஒவ்வொரு முறையும் ஏன் அன்பை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.அவளது சின்ன சின்ன கரிசனங்களில்,மெல்லிய அசைவுகளில் இந்த அன்பென்ற வன்முறையை என் மீது செலுத்தியபடியே இருப்பாள்.உன் முடிவற்ற அன்பின் சுமைகளால் எடை கூடி தவிக்கிறதென் இதயம்.கொஞ்சம் விட்டு விடேன் ப்ளீஸ்.தப்பி பிழைக்கட்டும் அந்த பட்டாம்பூச்சியென கெஞ்ச தொடங்குவேன்.சொற்கள் கூடி வரும் சில மாய கணங்களில் சிமிட்டி கொண்டு விரியும் அவள் பெரிய கண்களில் கிறங்கி தொலைவதை தவிர்க்க முடிந்ததில்லை.உன் திரவப்பரப்பிலொரு பூவென எனை மிதக்க அனுமதி.தீர்ந்து போவேன் நான்.வலியின்றி...நிழலின்றி...விம்மி விகசித்து எல்லையற்று விரியும் இத்தருணங்களை எப்படி சேமிக்கவென இறைஞ்சும் என்னை ஒரு பூனை குட்டியென அள்ளி தன் மடியில் இட்டு கொள்வாள்.இந்த இதம்,இந்த தலை கோதல் எப்பொழுதும் சாத்தியமா என்பேன்.நிச்சயம்,உனக்கு வழுக்கையே விழாதென நீ உத்தரவாதம் தருவாயெனில்' இதை அவள் சிரிக்காமல் சொல்வாள்.சொற்கள் கொண்டு அவள் திறக்கும் என் மனசீசாவிலிருந்து வெளியேறி, வதைபட்ட பூதமென வாய்பிளக்கும் என்னிடம் மிச்சமின்றி அவள் தன்னை ஒப்படைக்கும் கணங்கள்,தலையொருக்காத சிசுவை முதல் முறையாய் ஏந்தும் சிறுவனென மாற்றிவிடும் என்னை.

அன்புள்ள இவளே...

வேறென்ன சொல்ல?

'இது தரப்படுவதாக இல்லாததால்
பெறப்படுவதாகவும் இல்லை...ஆமென்!'

8 comments:

said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ். ஒரு தேர்ந்த எழுத்தாளரை வாசிப்பதுபோல் இருக்கிறது. நிறைய எழுதுங்கள் நண்பா.

said...

எதார்த்தத்தை மாய சூழலில் நிறுவுவது போலான இவ்வாக்கம்
ஒரு போதையை தருகிறது நண்பரே

Anonymous said...

நல்லா எழுதிறீங்க நண்பா...

said...

ரௌத்ரன்

நூதனமான பித்து நிலை ,புணர்வும் குவி மையம் சிதறும் நிகழ்வடுக்குகளும் நெக்கு விட்டு திமிரும் சொற்கள் மற்றும் மனம்

said...

// ஒரு தேர்ந்த எழுத்தாளரை வாசிப்பதுபோல் இருக்கிறது//

தேர்ந்த எழுத்தாளரைத்தான் வாசிக்கிறீர்கள். அதிலென்ன சந்தேகம்?

ரொம்ப நல்லாயிருக்கு ராஜேஷ்.

சொற்களாலேயே சாராயம் வடிப்பீர்கள் போல :-)

நெக்ஸ்ட் டைம், ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ் :-)

said...

நன்றி சரவணன்.ரொம்ப நாள் ஆச்சு பேசி...சுகமா?

நன்றி பாலா..போதையில் எழுதியதால் இருக்குமோ :))

நன்றி இந்திராகிசரவணன்...

நன்றி நேசன்...ஒரு முடிவுக்கு வந்துட்டீங்கன்னு மட்டும் தெரியுது :))

வாங்க முபாரக்..

//சொற்களாலேயே சாராயம் வடிப்பீர்கள் போல//

நிஜ சாராயம் வடிச்சு சௌதி சிறையில் களி திங்க பயந்து தான் இப்டி :))

//நெக்ஸ்ட் டைம்//

எண்ட தெய்வமே :))

மிக்க நன்றி முபாரக்...

said...

ரௌத்ரன் உங்கள் எழுத்து இன்று நான் படிக்க நிச்சயம் கொடுத்து வைத்திருக்கவேண்டும் .சின்ன சின்ன வரிகளில் பெரிய பெரிய சிந்தனைகளை தூண்டி விடுகிறீர்கள் .திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் வாசிப்பனுபவமாய் இருக்கிறது.சில எழுத்துக்கள் தான் இவ்வாறு மனதை வருடி விட்டு செல்லும் .தாய் மடி தேடும் கன்னுக்குட்டி போல் மீண்டும் மீண்டும் வந்து வாசித்து விட்டு செல்கிறேன் நான்

said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி பத்மா..நானும் இன்று மதியம் தான் உங்கள் வலைப்பக்கம் வந்து வாசித்து கொண்டிருந்தேன் எதேச்சையாக :)