கரைந்து கொண்டிருந்த சிகரெட் கங்கு விரல்களை சுட்டதும் திடுக்கென நினைவு வந்தவனாக மணியை பார்த்தான்.இன்னும் நாழியிருந்தது.ராவெல்லாம் உறங்காமல் கிடந்தது கண்களை எரித்தது.மலையை குடைந்து சாலை அமைக்கும் பணி என்பதால் எந்த வாரம் எங்கே இருப்போம் என்றே சொல்ல முடியாது.மாதத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ தான் பஜார் போக முடியும்.அதிலும் பத்து பனிரெண்டு பேருக்கு மட்டுமே கம்பெணி வண்டியில் இடம் இருக்குமென்பதால் சக பாடிகள் மாதா மாதம் முறை வைத்து போய் கொள்வது தான்.
அமுதாவிடம் பேசி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.இறுதியாக சோஹார் கேம்பில் இருந்த பொழுது மாமனார் தவறிய செய்தி வந்தது.அப்பொழுது பேசியது தான்.தொடர்ந்து இடம் மாறுவதால் ஊரிலிருந்து வரும் கடிதங்களும் தலைமை அலுவலகத்திலேயே தங்கிவிடும்..யாராவது கேம்பிற்கு வரும் பொழுது மொத்தமாக எடுத்து வருவார்கள்.காலண்டரை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.நாளுங்கிழமை எல்லாம் ஒன்றுமில்லை.டீச்சர் வீட்டில் மட்டும் கோவிலுக்கோ வெளியூருக்கோ எங்கும் போயிருக்க கூடாது என மனம் வேண்டி கொண்டது.வெள்ளி கிழமை என்பதால் அமுதா வீட்டில் தான் இருப்பாள்.சுந்தர் உடண் இருந்தால் பேசலாம்.பள்ளிக்கு போயிருப்பான்.இந்த வருசம் தான் பால்வாடியில் போட்டது.
ஊருக்கு போய் விட்டு வந்த தனபால் தான் தலைமை அலுவலகத்திலேயே தேங்கி கிடந்த ஆறு மாத கடிதங்களையும் கொண்டு வந்தான்.ஒரு கவரில் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவும் இருந்தது.கணேசனுடைய டேப் ரிக்கார்டரில் ஓட விட்டு கேட்டு கொண்டிருந்தான்.அமுதாவின் குரல் அப்படி கம்மி கிடந்தது..அமைந்து அமைந்து பேசினாள்..இடையிடையே டீச்சர் அவரது பிள்ளைகளை விரட்டும் குரல்..வாசலில் கூவி கொண்டிருந்த பெல்லாரி வெங்காயம் என கலவையாக சத்தங்கள் ஒலித்து கொண்டிருந்தது.
கடந்த முறை ஊருக்கு செல்லும் பொழுது ரத்தச்சிவப்பில் பானாசோனிக்கில் ஒரு டேப்ரிக்கார்ட் வாங்கி சென்றான் தான்.ஊரிலிருந்து பார்க்க வந்த தங்கை ஆசையாக கேட்டதால் அப்படியே தூக்கி கொடுத்து விட்டான்.இல்லாவிட்டாலும் வெளி நாட்டு சாமான்களை வாங்கி விற்கும் இந்த தரகர்கள் விடுவதில்லை.கழுகுக்கு வேர்த்தது போல் வீட்டிற்குள் நுழையும் முன்பே வந்து நின்று விடுவான்கள்..செண்டிலிருந்து லங்கோடு வரை எதையும் உறுவி கொண்டு தான் மறுவேளை.
டிரைவர் சரியாக 11.00 மணிக்கு ரூவி பேரூந்து நிலையத்திற்கு அனைவரும் திரும்பி விட வேண்டும் என சொல்லி இறக்கி விட்டான்.இவன் வேகு வேகென்று நடந்து ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான்.பிரிண்ட் போடும்படி சொல்லிவிட்டு தஞ்சாவூர் இட்லிக்கடையருகே உள்ள தொலைபேசி நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினான்..வெள்ளிக்கிழமையாதலால் கூட்ட வரிசை கணிசமாக இருக்கும் என்று நினைத்தான்.நல்லவேளை தொழுகை நேரம் என்பதால் 10 பேர் தான் நின்றார்கள்.நைனா இவனுக்கு கை காட்டியபடியே வரிசையில் நிற்பவருக்கு கால் போட்டு கொடுத்து கொண்டிருந்தார்.
டீச்சர் வீட்டுக்கு தொலைபேசி வந்தது எவ்வளவு சௌகரியமாக போய்விட்டது.இல்லையென்றால் நல்லது கெட்டது எதுவென்றாலும் காகிதம் தான்.அம்புரோஸ் இங்கு மாரடைப்பில் செத்த போது தாக்கல் சொல்ல கூட அவர் ஊரில் யாரிடமும் தொலைபேசி இல்லை.தந்தி தந்து அதை அவர்கள் பெறுவதற்குள் இங்கே காரியமே முடிந்து விட்டது.பிணத்தை பெற உறவுகளிடமிருந்து ஒரு வார காலம் விண்ணப்பம் வராததால்இ்ங்கேயே காரியம் முடிக்க வேண்டியதாகி விட்டது.
இந்த சபர் கூத்து எல்லாம் தெரிந்தும் எம பயலுக்கு இப்படியும் புத்தி வேலை செய்யுமா.யோசிக்க யோசிக்க சுர்ரென்று ரத்தம் மண்டைக்கு ஏறியது.இன்னொருக்கா கண்டா சங்க கடிச்சி துப்பனும் தாயோலி என தன்னிச்சையாக வாய் முனுமுனுத்தது.போன வருசம் வேலை முடிந்து ஓய்வெடுத்த ஒரு ராத்திரியில் சேக்காளிகளுடன் வழமை போல் சீட்டாடும் பொழுது மணியன் தான் ஆரம்பித்தான்.எப்பொழுதும் ஏவிடியம் பேசும் வாய் துடுக்கு தான்.இருந்தாலும் அன்று கொஞ்சம் திரவம் அதிகம் போன தண்டம்.போகிற போக்கில் இங்க நமக்கு சிவராத்திரி ஊருல இருக்குறவளுவோளுக்கு யார் கூட ...திரியோ..என அவன் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் அருகில் அமர்ந்திருந்த இவனுக்கு சல்ல கடுப்பாகி சலுப்பென அறைந்து விட்டான்.கட்டி புரண்டு சேக்காளிகள் விலக்கி விட்டார்கள்.விடிந்ததும் கை நீட்டியதற்காக மாப்பு கேட்டான் தான்.எனினும் வன்மம் தீரவில்லை அவனுக்கு.பார்க்கும் பொழுதெல்லாம் கருவி கிடந்தான்.
முதல் கடிதத்தை வாசிக்க தொடங்கும் பொழுதே புரிந்து விட்டது.நெஞ்சு படபடக்க கேசட்டை ஓட விட்டான்..தீனமாக அமுதாவின் குரல்..
''மாமா..நல்லாருக்கீங்ளா..மெல்ல விசும்பும் குரலினூடாக..காயிதமுலாம் கெடச்சுதுங்ளா..எங்க இருக்கீங்ளோ என்னமா இருக்கீங்ளோனு கெடந்து அல்லாடுறேன் மாமா..நாலு மாசம் முந்தி ஒங்க சேக்காளினு ஒருத்தர் வந்து சொன்னாப்டி..அந்தாளு சொன்னதுலாம் நெசமா பொய்யான்னு இன்னும் புரியாம இப்புடி தெகைச்சு கெடக்கேன்..அந்தாளு சொன்ன மணிகிராமத்துல திரும்ப தேடி போனப்போ அப்படி யாருமில்லன்னு சொல்லிட்டாங்க..நீங்க அப்புடி செய்யுறவரா..எனக்கு தெரியாதா..தேம்ப தொடங்கி வெடித்து வரும் அழுகையை சேலை நுனியை வாய்க்குள் திணித்து விக்கும் ஓசை தான் வெகுநேரம் கேட்டது..பின்னால் டீச்சர் ஆறுதலாக பேசு பேசு அழுவாத ஒன்னும் ஆயிருக்காது என சமதானம் செய்யும் குரல்..நீங்க எப்புடி இருந்தாலும் சீக்கிரம் வந்திருங்க..நாலு வீட்ல வேலை செஞ்ச்சாச்சு நான் பாத்துக்குவே ஒங்கள..''
தாயோலி..தேடி ஊருக்கு போயி நான் எங்கேயோ திருடி மாட்டி ஜெயில்ல இருக்கறதா இவகிட்ட கோலு சொல்லீருக்கான்..அரபு நாட்லலாம் திருடினா மாறுகால் மாறு கை வாங்கிருவாங்க என்னய என்ன செய்ய போறாங்ளோனு வேற பயமுறுத்தி போயிருக்கான்'' என்ன சென்மம்டா நீயெல்லாம்.மனசு குமைந்தது..அதனால் தான் போட்டோ எடுக்கும் பொழுது கூட விரல்கள் எல்லாம் நன்றாக தெரியும் படி விரித்து கொண்டு நின்றான்.பார்த்தால் வாரி கட்டி கொள்வாள் என எண்ணிய பொழுது அவனையறியாமலேயே வெட்கப்பட்டான்.
வரிசையில் இவன் முறை வந்த பொழுது என்ன பேச வேண்டும் என சேகரித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி கொண்டான்.நைனா பொதுவாக குசலம் விசாரித்தபடியே டீச்சர் வீட்டுக்கு எண்களை சுழற்றினார்.அவன் அவன் அங்கு வந்த பொழுதே அமுதாவை வர சொல்லும் படி டீச்சர் வீட்டுக்கு போனில் சொல்லியிருந்தார்.
இவன் நடுங்கும் விரல்களால் ரிசீவரை பற்றினான்..மறுமுனையில் அமுதாவின் குரல் கேட்ட பொழுது எல்லாவற்றையும் மறந்து விட்டான்.அமுதா என அவன் வெடித்தழ..கண்களை துடைத்தபடியே நைனா எழுந்து வெளியே போனார்.
---------
மலையாள FM ஒன்றில் காரில் போகும் பொழுது கேட்டதாக நண்பர் சேகர் சொன்ன சில வருடங்களுக்கு முன் ஒரு அரபு நாட்டில் நடந்த உண்மை சம்பவம் இது.