Friday, October 2, 2009

குருட்ஜீஃப்...சூஃபிஸம்....சில திரைப்படங்கள்...

ரமலான் விடுமுறைகளில் ஒரு நாளை அழகாக்கிச் சென்றது 'In to the wild' திரைப்படம்.ஒரு சாமானியனின் அகத்தேடல்.அதன் பொருட்டு அவன் மேற்கொள்ளும் நீண்ட பயணம்.சந்திக்கும் மனிதர்கள்...வெகு சிலரால் மட்டுமே செக்குமாட்டு வாழ்வின் நுகத்தடியிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள முடிகிறது.ரத்தமும் சதையுமாய் வாழ்வின் நறுமணங்களை நுகரத் துடித்த ஒரு இளைஞனின் நாட்குறிப்பு இப்படம்.வெகு நாட்களுக்கு பிறகு ஆழமான அகநெகிழ்வு தந்த ஒரு அற்புதமான திரைப்படம்.இறுதி காட்சிகள் வெறுமைக்குள் துப்பி விட ஏதும் செய்ய தோன்றாமல் வெகு நேரம் உட்கார வைத்து விட்டது.


சூஃபிகள் குறித்து இணையத்தில் தேடிக்கொண்டிருந்த பொழுது ஏதேச்சையாக சிக்கியது குருட்ஜீஃப் ன் 'Meetings with Remarkable Men' என்ற திரைப்படம்.ஓஷோவின் 'Books I have Loved' ல் இப்புத்தகமும் ஒன்று.மின்னூலாக வெகுநாள் கைவசம் இருந்தும் வாசித்திருக்க வில்லை.அப்புத்தகமே திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது.மர்மங்கள் நிறைந்த ஒரு சாகச நாவலை போன்று சுவாரஸ்யமாய் இருந்தது படம்.


பள்ளி வயது மாணவனான குருட்ஜீஃப் தன்னை சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளையும் அதிசயிக்கிறார்.கேள்விகளால் நிரம்பி வழிகிறது அவர் மனம்.விடையளிப்போர் யாருமில்லை.அளிக்கப்படும் விடைகள் அவருக்கு போதுமானதாக இல்லை.



20 வருடங்களுக்கு ஒரு முறை அக்கிராமத்தின் மலையடிவாரத்தில் 'Ashoks' என்றழைக்கப்படும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடுகிறார்கள்.அங்கே ஒரு போட்டி நிகழ்த்தப்படுகிறது.எல்லா இசைக்கலைஞர்களும் தனித்தனியே தம் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.யாருடைய இசையை மலைகள் எதிரொலிக்கின்றனவோ அவரே வென்றவர்.பலரும் தமது இசைக்கருவிகளை இசைக்கின்றனர்.இறுதியாக ஒரு புல்லாங்குழல் கலைஞருடைய இசையை மலைகள் எதிரொலிக்கின்றன.('Masaru Emoto' என்ற ஒரு சப்பை மூக்கு காரரின் 'Messages from water' என்ற நூல் இருக்கிறது.சப்தங்கள் தண்ணீரை அதன் மூலக்கூறுகளை எந்த அளவுக்கு பாதிக்கின்றன என்பது குறித்த சுவாரஸ்யமான ஆய்வு நூல் அது.தகவல் உபயம்-நித்யானந்த பரமஹம்சர்)குருட்ஜீஃப் தன் தந்தையை, தன் மீது பிரியம் கொண்டுள்ள ஆசிரியரை கேள்விகளால் குடைகிறார்.பதில்களால் அவரை திருப்தி செய்ய முடிவதில்லை.

காகாசியன் நாடோடிகள் சூழ்ந்த அப்பிராந்தியத்தில் குருட்ஜீஃப் பயமற்றவராக வளர்கிறார்.வலிமையானவராகவும்.ஒருமுறை ஒரு சிறுவன் சிறிய வட்டம் ஒன்றிலிருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டிருப்பதை பார்க்கிறார்.சாக்பீஸால் வரையப்பட்டது போன்ற அவ்வட்டத்தை yezide circle என்று கூறுகிறார்கள்.(காகாசிய நாடோடிகள் ஹிப்னாடிசம் போன்ற தந்திர வித்தைகள் பல அறிந்திருந்தனர்.அவர்களுடைய வாழ்வு முறை புதிர்களும் விசித்திரங்களும் நிறைந்தவை என்று ஓஷோ குறிப்பிடுகிறார்) குருட்ஜீஃப் அவ்வட்டத்தை அழித்து விட அச்சிறுவன் ஓடிவிடுகிறான்.குருட்ஜீஃப் அவ்வட்டம் குறித்து தம் ஆசிரியர்களிடம் கேட்கிறார்.அவர்களுடைய பதில்களும் அவருக்கு சமாதானம் தருவதில்லை.

மற்றொருமுறை புதைக்கப்பட்ட ஒருவரின் சிதை மறுபடியும் பிணக்குழிவிட்டு வெளியே வந்து கிடக்கிறது.பிறகு சடங்குகள் நிகழ்கின்றன.இது போன்ற விசித்திர நிகழ்வுகள் அவரை தொடர்ந்து அலை கழிக்கின்றன.இளைஞனாகும் குருட்ஜீஃப் கூலித்தொழிலாளியாக தம் வாழ்வை தொடர்ந்தபடி ஒத்த அலைவரிசை உடைய சில நண்பர்களோடு தம் தேடலை தொடர்கிறார்.ஒருமுறை அவர்களுக்கு ஒரு புதை பொருள் கிடைக்கிறது.அதில் ஒரு துறவியின் கடிதம் இருக்கிறது.அதில் சார்மோங் சகோதரர்கள் பற்றிய குறிப்பு இருக்கின்றன.கிறிஸ்துவுக்கு 2500 வருடங்கள் முந்தைய பாபிலோனில் இருந்த ஒரு ரகசிய பள்ளி அது.சார்மோங் சகோதரர்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே ஒரு பழைய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிகிறார்கள்.மேலும் சார்மோங் சகோதரர்களின் பள்ளி இன்றும் இருப்பதாகவும் எங்கேயென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய புரட்சியின் பின்னணியில் பல அபாயங்களோடு தன் நண்பருடன் எகிப்தை நோக்கி பயணப்படுகிறார் குருட்ஜீஃப்.வழியில் குறிப்பிடத்தகுந்த பலரது நட்பும்,எதிர்பாராத உதவிகளும் அவருக்கு கிடைக்கின்றன.இறுதியாக பல முயற்சிகளுக்கு பின் அவரது வாழ்நாள் கேள்விகளுக்கு விடையளிக்கப்போகும் சார்மோங் சகோதரர்களை அவர் சந்திப்பதோடு படம் முடிகிறது.

இங்கிருந்து தான் குருட்ஜீஃப் 'Sufis Whirling', நடன கலையையும் மற்றும் பல ஆன்ம சாதனாக்களையும் கற்றுக் கொள்கிறார்.சூஃபிகளால் ரகசியமாகவே பரிமாறிக் கொள்ளப்படும் ஞான மரபை பின்னாட்களில் குருட்ஜீஃப் உலகறியச் செய்ததில் சூஃபிகளுக்கு இவர் மீது கசப்பிருந்ததாக ஓஷோ குறிப்பிட்டிருக்கிறார்.மிகப்பழமையான இத்தியான முறை பரவலாக எல்லா ஞான மரபுகளாலும் பின்பற்றப்பட்டுள்ளது.சிவ சூத்திரம் எனப்படும் தந்த்ராவில் இந்த சுலோகமும் இருக்கிறது.('நிறுத்து' என்ற உத்தி).ஈஸாவில் நானும் இத்தியான முறைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.ஆக கருவிகள் தான் வேறுபடுகின்றன.தேடப்படும் இசை எங்கும் ஒன்றே தான்.

குருட்ஜீஃப் தன் தேடலின் பொருட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு சுற்றியலைந்திருக்கிறார்.பின்னாட்களில் இவருடைய சீடர்களுள் ஒருவரான PD Ouspensky எழுதிய 'In search of the Miraculous' என்ற புத்தகமே குருட்ஜீஃப் ஐ உலகறியச் செய்திருக்கிறது.

கலை,இலக்கியம்,விஞ்ஞானமென அசுர கதியில் உலகம் சுழலும் இவ்வேளையில் குருட்ஜீஃப் போன்ற Mystic களை பற்றி வாசிப்பதும் எழுதுவதும் ஒரு Fantacy போல் தோன்றுகிறது.எனினும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அக ஆழத்தில் படிந்து கிடக்கும் இந்த உணர்வை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது என்பதே என் அனுபவம்.ஆழமான புரிதலில் வாழ்வின் பரிமாணங்கள் விளங்கக்கூடும்.சூழ்ந்திருக்கும் விரோத மேகங்கள் விலகக்கூடும்.தேவையெல்லாம் சரியான புரிதல் மட்டுமே.இப்படம் Nomads,Yezides என பல தளங்களுக்கு அழைத்து சென்றது.விளைவாக Bab'Aziz என்ற படத்தையும் பார்க்க முடிந்தது.ஒரு சூஃபி ஃபக்கீர் பற்றிய அழகான படமது.அப்படத்தில் வரும் ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

மூன்று வண்ணத்து பூச்சிகள்

மெழுகொளிக்கு வந்தன...

ஒன்று ஒளியருகே வந்து

அன்பை கண்டேன் என்றது..

மற்றொன்று இன்னும் அருகே வந்து

லேசாய் சிறகை பொசுக்கி கொண்டது...

மூன்றாம் வண்ணத்து பூச்சி

தீபம் நடுவே புகுந்தது

ஒளியில் கரைந்தது...

அது ஒன்றே அன்பை அறிந்தது...

(தகவல்களுக்கு நன்றி-விக்கிபீடியா)

14 comments:

said...

நல்லப் பதிவு புதிய கருப்பொருள்கள் உள்விதைத்துள்ள இத்தகவல்கள்
நன்று .உங்கள் நடையும் வசீகரிக்கிறது

நன்றி

said...

நன்றி நேசமித்ரன்...

said...

//கலை,இலக்கியம்,விஞ்ஞானமென அசுர கதியில் உலகம் சுழலும் இவ்வேளையில் குருட்ஜீஃப் போன்ற Mystic களை பற்றி வாசிப்பதும் எழுதுவதும் ஒரு Fantacy போல் தோன்றுகிறது.//

எனக்கு இப்ப அப்படி தான் இருக்கு... முழுவதும் நான் உள்வாங்கலன்னு நினைக்கிறேன்.. நிறைய இருக்கு கத்துக்கன்னு மறுபடியும் மண்டைல அடிச்சு சொன்ன பதிவு(?!ஹி ஹி).

said...

வாங்க ஸ்ரீமதி..

ஆகா..மறுபடியும் பதிவா :)

தேவை ஏற்படும் போது நம்மை அறியாமலேயே பல விஷயங்களை தெரிந்து கொள்ள தொடங்கி விடுவோம்.

அய்யய்யோ..எப்டி இருந்த நான் :))

said...

//விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அக ஆழத்தில் படிந்து கிடக்கும் இந்த உணர்வை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது என்பதே என் அனுபவம்.

//

உண்மைதான்.

said...

வாங்க அப்துல்லா...

உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது :)

said...

குருட்ஜிஃப் எனக்கு புதிய ஆச்சர்யம்!

பார்க்கனும் என ஆவல் அதிகறிக்கிறது

said...

வாங்க வால்பையன்...

கிடைத்தால் பாருங்கள்..டாரண்ட்ல கிடைக்குது..

said...

//வாங்க அப்துல்லா...

உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது :)

//

நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.நீங்கள்,அனுஜன்யா அண்ணன்,அய்யனார்,சரவணகுமார் போன்ற சிலரிடம் பின்னூட்டமிடாது நைஸா ஓடிருவேன் :)

said...

//நான் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.நீங்கள்,அனுஜன்யா அண்ணன்,அய்யனார்,சரவணகுமார் போன்ற சிலரிடம் பின்னூட்டமிடாது நைஸா ஓடிருவேன் //

:))

அதுசரி...வாசிப்பதே மகிழ்ச்சி தான் அப்துல்லா.

நன்றி!

said...

தல நல்ல விமர்சனம்
ஆனா புரிஞ்சிக்க சிரமமா இருக்கு
மறுபடியும் படிக்கனும்
படம் பாத்துட்டு :-))
பகிர்வுக்கு நன்றி

said...

வாங்க கார்த்திக்...

என்னது புரியலையா?அவ்வளவு கஷ்டமாவா எழுதியிருக்கேன்..படம் பாருங்க..ஆனா வெறுமனே படம் பார்த்தால் எல்லாருக்கும் பிடிக்குமானு தெரியாது..ஏற்கெனவே குருட்ஜீஃப் பத்தி கொஞ்சம் மேஞ்சிருந்ததால எனக்கு பிடிச்சிருந்தது..மேலும் சில காட்சிகளுக்கு விளக்கம் இருக்காது.உதாரணத்துக்கு அதில் வரும் ஒரு மந்திர வட்டம்.அந்த வட்டத்த பத்தி அவர் எழுதுன புத்தகத்த படிச்சு தான் தெரிஞ்சுக்கனும்..படம் பார்த்துட்டு பின்னால திட்டாதீங்க :)

நன்றி கார்த்திக்...

said...

அட இந்த பதிவை நான் முன்னாடி படிக்கலையே...

said...

யோவ் கறுப்பி..என்னமோ இதுக்கு முன்னாடி எல்லா பதிவையும் படிச்சுட்டு தான் மறுவேலை பாக்குறவருங்கற மாதிரில கமெண்டு போடுறீரு :)