Sunday, November 22, 2009

பிறை மூக்குத்திக்காரிக்கு தந்த முத்தங்களும் சில கொலைகளும்...

கறுப்பு சிறகணிந்து தேவதைகள் பறக்கும் இவ்வானத்தில் மேகங்களே இல்லை.சொட்ட சொட்ட நனைந்து நிற்கும் என் தாய்மொழியான ஜிப்பரிஷ் யாருக்கும் புரிவதில்லை.எனை தினம் கூடும் ராட்சஷி இன்று பிறை மூக்குத்தி அணிந்திருந்தாள்.

'
தருணத்தின் தருணி
மோன தர்சினி
...' **

என இவளைத்தான் வருணித்தானோ அவன்.இழுத்தணைத்து எத்தனை முத்தமிட்டும் அவள் கன்னம் சிவக்காததில் உலர்ந்து திரும்பி கொண்டிருந்தேன்.வழியில் 'பறவைகள் எங்கே சென்று மரிக்கின்றன' என்ற கவிதையொன்று காலில் இடறியது. அதன் பழுப்பு நிற இறகிலொன்றை பிடுங்கி வெளியில் எழுதினேன்.சவம்..தவம்...சூன்யம்.

அறை திரும்பி சோர்ந்து அமர்கிறேன்.படபடக்கின்றன என் டைரியின் நிர்வாண பக்கங்கள்.ஒவ்வொரு முறை பிரிக்கும் பொழுதும் எழுதப்பட்ட சில பக்கங்களை கிழித்தெறிகிறேன்.துருத்தி நிற்கும் இச்சொற்களை சகிக்க முடிவதில்லை.குளிப்பாட்டி,உடைமாற்றி,சீவி,சிங்காரித்து யார் மெச்ச இந்த ஆட்டமெல்லாம்.ஊற்றுக்கண் உடையும் வரை கொப்பளிப்பது சேறும் சகதியும் தான்.இதை மேடையேற்றுவானேன்?

பக்கங்களை போல் நினைவுகளையும் கிழித்தெறிய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெண்ணி பேனாவின் கொப்பியை உருவுகிறேன்.உறை விட்டெழும் வாளென அமைதியாகின்றன தாள்கள்.நிச்சயம் நிகழப்போவது கொலை தான்...

இதுவரை முன்னூற்றி இருபத்தியிரண்டு சொற்கள் எழுதி அடித்த பிறகும் கிடைக்கவில்லை ஒரு சொல்.எழுதப்படும் சொல்லுக்கும் அடிக்கப்படும் சொல்லுக்கும் நடுவிலிருந்து நழுவி நழுவிச் செல்கிறது சொல்ல நினைக்கும் சொல்.

சொற்கள் சொற்களாக சேர்ந்து என் மேசையை அடைத்து கொண்டிருக்கும் புத்தகங்கள் மெல்ல புன்னகைக்கின்றன.எத்தனை சொற்களை தின்றுமிழ்கிறான் புனைவாளன்.கடைத்தெரு செல்லுமுன் லேசாய் புடவை தலைப்பை சரி செய்து கொள்ளும் யுவதியென சில சொற்கள்.திட்டு திட்டாய் உதட்டு சாயம் பூசிய விடலையாய் சில சொற்கள்.அலங்கார தளுக்கிகளாய் சில சொற்கள்.நான் வாசித்த புத்தகங்கள்...எனை வாசித்த புத்தகங்கள்...அய்யோஓஓஓஒ... யாரேனும் எனை இந்த சொற்களிடமிருந்து காப்பாற்றுங்கள்.

பூட்டி விஷ வாயு செலுத்தப்பட்ட அறைக்குள்ளிருந்து வெளிப்படும் கூக்குரலாய் புத்தகங்களிலிருந்து கேட்க தொடங்குகின்றன சப்தங்கள்.எல்லா புத்தகங்களையும் கொட்டி கவிழ்த்து சிறைப்பட்ட சொற்களை விடுவிக்கிறேன்.வண்ணத்து பூச்சிகளென அவை சிறகடிக்கின்றன.சில முத்தமிடுகின்றன.முதிரா கூட்டு புழுக்கள் சில என் மேலூர்ந்து துவாரங்களுள் புக எத்தனிக்கின்றன.சடசடவென வௌவாலாய் ஈஷியபடி எனைக் கடிக்க தொடங்கும் சில சொற்களை துவம்சம் செய்ய தொடங்குகிறேன்.எழுத்துக்களாய் சிதைந்து அவை மோதி விழும் சுவரில் வழிகின்றது பல வண்ண நிற குருதி.

யூமாவின் ஓவியத்தில் அப்பி கொண்ட பூச்சியொன்று நகராமல் சண்டி செய்கிறது.அறை முழுவதும் வீசும் குருதி கவிச்சையில் குடல் புரட்டுகிறது.கருப்பு வெள்ளை கவிதையொன்றுக்குள் கிடத்தப்பட்ட பியானோ மீது நடந்து செல்லும் பூனை பிரேதா-மியாவ்...பிரேதன்-மியாவ் என என் மீது பாய்கிறது.துழாவலுக்கு அகப்பட்ட மாயாண்டி கொத்தனின் ரசமட்டத்தை அதன் நடுமண்டையில் பிரயோகிக்கிறேன்.அலறியபடி அது புத்தன் தியானிக்கும் குளத்தாழ நிலவில் குதித்து விட்டது.'சுசீலா சுசீலா'..'எனக்கு யாருமில்லை' என பிதற்றியபடி சுவர் மூலையில் ஒண்டுமொரு சொல்லை உணர்வு கொம்பால் நிமிண்டி பார்க்கிறது கரப்பானாய் உருமாறிய இன்னொரு சொல்.

கிழிந்த அட்டைகள் இறந்த புறாக்களென றெக்கை பரப்பி கிடக்கும் அறையில் சுழல்கிறது மின்விசிறி.வட்டம்..மாயவட்டம்...சடக்கென நிறுத்திவிடலாம்.என் வட்டம் விட்டு வெளியேறிவிடலாம்.குற்றுயிராய் கிடக்கும் சொற்களையெல்லாம் திரட்டி கோணியொன்றுள் அடைத்து கொண்டு நடக்கிறேன்.வெளி சலனமற்றிருக்கிறது.வழி தவறிய மானொன்று மருண்டு பார்க்கிறது.இவற்றை எரிப்பதா புதைப்பதா என்ற குழப்பத்தினூடே நான்.பின் தொடரும் என் சுவடுகளை பாலைக்காற்று மூடிக்கொண்டு வருகிறது.



**லா.ச.ரா


குறிப்பு:

புத்தகங்கள் வேண்டுமென கேட்டவுடன் திருவண்ணாமலை வரை அலைந்து வாங்கி அனுப்பிய கதிருக்கும்,சிரமம் பார்க்காமல் புத்தகங்களை திரட்டி தந்த பவா அவர்களுக்கும்,எடுத்து வந்த முபாரக்கிற்கும் மிக்க நன்றி நன்றி.

14 comments:

said...

அழகாய் வார்த்தைகளை அடுக்கியுள்ளிர்கள்.
நன்றாக வந்துள்ளது.

said...

ரொம்ப நல்லா வந்திருக்குங்க

:)

கொலாஜ் வானவில்

said...

//இதுவரை முன்னூற்றி இருபத்தியிரண்டு சொற்கள் எழுதி அடித்த பிறகும் கிடைக்கவில்லை ஒரு சொல்.எழுதப்படும் சொல்லுக்கும் அடிக்கப்படும் சொல்லுக்கும் நடுவிலிருந்து நழுவி நழுவிச் செல்கிறது சொல்ல நினைக்கும் சொல்...//

ரெளத்ரன்,

ம்ம்ம்.கவிதை நடையில் ஒரு சுய குறிப்பு.அழகான வடிவமைப்பில்...!

said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ராஜேஷ்.

said...

இரண்டு முறை வாசித்துவிட்டேன் ராஜேஷ். இருந்தும் வெளியில் வர முடியவில்லை. பிரமிப்பா இருக்கு.

said...

வருகைக்கு நன்றி இளவட்டம்...உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது...இளந்தாரி இளவட்டம்னு ஊர் நெனப்பு தான் வருது..

நன்றி நேசன்...

நன்றி சத்ரியன்...

நன்றி சரவணன்...

நன்றி நவாஸீதீன்...

said...

//நிர்வான//

நிர்வாண??

said...

//இதுவரை முன்னூற்றி இருபத்தியிரண்டு சொற்கள் எழுதி அடித்த பிறகும் கிடைக்கவில்லை ஒரு சொல்.எழுதப்படும் சொல்லுக்கும் அடிக்கப்படும் சொல்லுக்கும் நடுவிலிருந்து நழுவி நழுவிச் செல்கிறது சொல்ல நினைக்கும் சொல்.//

வாவ் :))))))))))))))))

said...

//ஒவ்வொரு முறை பிரிக்கும் பொழுதும் எழுதப்பட்ட சில பக்கங்களை கிழித்தெறிகிறேன்.துருத்தி நிற்கும் இச்சொற்களை சகிக்க முடிவதில்லை.குளிப்பாட்டி,உடைமாற்றி,சீவி,சிங்காரித்து யார் மெச்ச இந்த ஆட்டமெல்லாம்.ஊற்றுக்கண் உடையும் வரை கொப்பளிப்பது சேறும் சகதியும் தான்.இதை மேடையேற்றுவானேன்?//

மிக அருமை....

said...

பிரம்மிப்பு அடங்கவில்லை... :)))))))))

said...

நன்றி ஸ்ரீமதி :))

'நிர்வாண' தான் மாற்றி விடுகிறேன்...

அடுக்கடுக்காக பின்னூட்ட மழை பொழிந்து என்னை பிரமிக்க வைத்து விட்டீர்கள் :))

மிகவும் நன்றி...

said...

//அடுக்கடுக்காக பின்னூட்ட மழை பொழிந்து என்னை பிரமிக்க வைத்து விட்டீர்கள் :))//

சாரி கொஞ்ச நாளாக வர முடியவில்லை இந்த பக்கம். மற்றபடி நான் உங்கள் தொடர் வாசகி தான்.. :)) தமிழ் தெரியாத என் தோழிக்கு இந்த இடுகையை வாசித்து(மொழிபெயர்த்து) காண்பித்தேன். அவள் சொன்னது "WoW". :)))

said...

பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லி பயமுறுத்தாதீர்கள் :)))

காலம் தாழ்த்தியேனும் இந்த பக்கத்திற்கு வருகை தருவதே மகிழ்ச்சிதான்.

தமிழ் தெரியாத உங்கள் தோழிக்கு வாசித்து காட்டியமைக்கு நன்றி ஸ்ரீமதி.

உங்கள் தோழிக்கும் என் நன்றியை தெரிவியுங்கள் :)

said...

அப்பா...என்ன மாதிரி எழுத்து இது...ஒரு வரிகளிலிருந்து அடுத்த வரிகளுக்கு போக முடியவில்லை ...முதல் வாசித்த வரிகளிலேயே சிக்கி கிடக்கிறது மனது...படிக்கும் போதே உடம்பு முழுவதும் சிலிர்கிறது...இதை போன்ற அபூர்வமான படைப்புகளை படிப்பது மிக அரிது...வாழ்த்துக்கள்...